(சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50– தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53
- ?. 51. “நான் சனாதன தருமத்தை மதிக்கிறேன். நாம் கோவில்களுக்கு, மசூதிகளுக்கு, தேவாலயங் களுக்குச் செல்கிறோம். … வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று மமதா பானர்சி, தெரிவித் துள்ளாரே!
- வருணாசிரமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர் சனாதனம் என்பது இந்து மதம், இந்து மதத்திற்கு எதிராக எங்ஙனம் கூறலாம் என எண்ணுகிறார். சனாதனம் புகுந்த பொழுது இந்துமதம் என்பதே இல்லை. பின்னர் இந்து மதத்திற்குள் சனாதனத்தைப் புகுத்துவதை விட இந்து மதம்தான் சனாதனம்; சனாதனம்தான் இந்து மதம் என்றால் எளிதில் புகுத்தி விடலாமே என எண்ணி அவ்வாறு சொன்னார்கள். வாதத்திற்காக இரண்டும் ஒன்று எடுத்துக் கொண்டாலும், அதில் குறைபாடுகள் கண்டவிடத்து அதைக் களைவதுதானே முறை. மமதா தன் கட்சியில் யாரும் குறைகளைக் கண்டு தெரிவித்தால் அவற்றை நீக்குவாரா? இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவாரா? குறைகளைக் களைந்து நிறைகாணத்தானே விரும்புவார். அவ்வாறுதான் இதுவும். குறைகளை உணர்ந்தவர் களால்தான் மதங்களில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன என்பதை உணர வேண்டும. நம் நாட்டிற்கு வந்த ஆரியர் ஐயர், அந்தணர், பார்ப்பார் முதலான உயர் பொருள் தரும் சொற்களை எல்லாம் தங்களுக்குச் சூட்டிக் கொண்டார்களோ அதுபோல் இந்து மதம் என்பதைச் சனாதனம் என்று சொல்லிக் கொண்டனர்.
நச்சுப் பொருளையும் மருந்துப் பொருளையும் வேறுபடுத்தாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பது எவ்வளவு தவறோ அதுபோன்றதுதான் அவரது உரையும்.
- ? 52. மருதாசல அடிகளார் சனாதன மதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்கிறாரே!
- இறைப்பணியையும் தமிழ்ப்பணியையும் இணையாகக் கருதித் தொணடாற்றி வரும் மருதாசல அடிகளார், தமிழன்பர்களின் மதிப்பிற்குரியவர். ஆரியக் கதையை நம்பி இவ்வாறு கூறுகிறார். இறைவனால் தோற்றுவிக்ப்பட்டது என்றால் இறைவனால் படைக்கப்பட்ட மக்களிடையே சனாதனம் வேறுபாட்டையும் உயர்வு தாழ்வையும் கற்பிப்பது ஏன்? ஒரு பிரிவினரை மிக உயர்வாகவும் பிறரை இழிவாகவும் கூறுவது ஏன்? ஒரு பிரிவினர் எத்தகைய பெருங்குற்றம் செய்தாலும் குற்றமாகப் பார்க்கப்படக் கூடாது என்றும் பிறர் செய்யும் சிறு தவற்றையும பெருங் குற்றமாகப்பார்த்துத் தண்டிக்கச் சொல்வது ஏன்? எனவே அவர் நடுநிலையுடன் ஆய்ந்து சனாதனத்தை எதிர்க்க வேண்டும்.
- ? 53. “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை என்றும், அதற்கும் சாதிய படிநிலைகளா? அதற்கும் சாதியப்படிநிலைகளா் ஆன சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை;”
- “சனாதன தருமம் என்பது ஒரு பழமையான பண்பாடு, ஒரு வாழ்வியல் நெறிமுறை. தாய் தந்தையை மதிக்க வேண்டும், இறைவனை மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும்”;
- “சனாதனம் என்பது திருக்குறள் உட்பட பல்வேறு அறநெறி நூல்களில் உள்ளன; சனாதனத்தின் நீட்சி தான் இந்து மதம்;” என்றெல்லாம் மருதாசல அடிகளார் கூறியுள்ளாரே!
சனாதனம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல் சனாதனத்தைப்பற்றிய தவறாகக் கூறப்படும் உயர்வு கருத்துகளை நம்பி இவ்வாறு கூறுகிறார். இந்த இடத்தில் தருமம் என்பது செய்கையைக் குறிக்கிறது. செய்யப்படுவதையே சிலர் கடமையாக விளக்குகின்றனர். அறம் என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. சனாதன தருமம் என்றதும் தருமம் என்பதைப் பிறர்போல் அறம் என நம்பி இவ்வாறெல்லாம் தெரிவிக்கிறார். நன்கு ஆய்ந்து படிக்கும் அடிகளார் மூலத்தை அறியாமலேயே இவ்வாறு கூறியுள்ளது வருந்தத்தக்கது. இவையாவும் தவறே என்பதைப் பிற விடைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 79-81
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக