ஐ.நா. அவையும் இடைமாற்று நீதிக் கொள்கையும்
United Nations and Transitional Justice policy
ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம்
நியமித்த இலங்கை மீதான பன்னாட்டு உசாவல் குழுவின் (Report of the OHCHR
Investigation on Sri Lanka) பரிந்துரைகளில் முதலாவது பரிந்துரையாக
‘இலங்கையில் ஒரு முழுமையான இடைமாற்று நீதிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்’
என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது (Develop a comprehensive transitional
justice policy for addressing the human rights violations of the past 30
years and preventing their recurrence).
இதே கோரிக்கையானது ஐநா மனித உரிமைகள்
ஆணையரின் பரிந்துரைகளிலும் (HRC/30/61), ஐநா மனித உரிமைகள் பேரவைத்
தீர்மானத்திலும் (HRC/30/L.29) உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட
பலநாடுகளிலும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நீதி, அமைதிக்கான வழிமுறைகளைப்
படிப்பினையாகக் கொண்டு ஐநா அவை “இடைமாற்று நீதி” (transitional justice) என்கிற
அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. செருமனியில் நிகழ்ந்த யூத இனப்படுகொலை,
அருசென்டைனா, சிலி, பெரு, கம்போடியா, மொசாம்பிக்கு, (உ)ருவாண்டா, தென்
ஆப்பிரிக்கா, வியத்துநாம் முதலான நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நீதிமுறைமைகள்
அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி 08, 2034 / 24.09.2003 அன்று
கூடிய ஐநா பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் ‘மோதலுக்குப் பின்னாலான காலத்தில்
நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதில் ஐநா அவையின் பங்கு’
குறித்துத் தீர்மானிக்கும்படி ஐநா பொதுச்செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் ஆவணி 08. 2035 / 23.08.2004 ஆம் நாள் ஐநா பாதுகாப்பு
அவைக்கு ஐநா பொதுச்செயலார் அளித்த ‘மோதல் – மோதலுக்குப் பின்னாலான
சமூகங்களில் சட்டத்தின் ஆட்சியும் நிலைமாற்று நீதியும்’ எனும் அறிக்கையில்
“நிலைமாற்று நீதி” வழிமுறைகளைத் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு மார்ச்சு
மாதத்தில் நிலைமாற்று நீதி அணுகுமுறைக்கான ஐநா பொதுச்செயலர் வழிகாட்டு
குறிப்பினை ஐநா அவை வெளியிட்டது.
உள்நாட்டுப் போர் நடந்த
நாடுகளில் நிலைமாற்று நீதியைச் செயலாக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் அவை
அமைப்புச் சட்டத்தின் (the Charter of the United Nations) கீழ் ஒரு
நெறிசார்ந்த கடமை ஆகும். பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் (International
Human Rights Law), பன்னாட்டு மனிதநேயச் சட்டம் (International
Humanitarian Law), பன்னாட்டுக் குற்றவியல் சட்டம் (International Criminal
Law), பன்னாட்டு ஏதிலியர் சட்டம் (International Refugees Law) ஆகிய
நான்கு விதமான பன்னாட்டுச் சட்டங்களைச் சார்ந்து நிலைமாற்று நீதியைச்
செயல்படுத்த வேண்டும்.
1948 ஆம் ஆண்டின் இனப்படுகொலைத் தடுப்பு
உடன்படிக்கை (Genocide Convention), 1966 ஆம் ஆண்டின் குடியுரிமைகள் –
அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (CCPR), 1984 ஆம் ஆண்டின்
சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை (CAT), 2006 ஆம் ஆண்டின்
காணாமல் போகச்செய்வதை தடுப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கை (CED), மற்றும்
1949, 1977 ஆம் ஆண்டுகளின் போர்க்குற்றம் தொடர்பான செனீவா
உடன்படிக்கைகள் (Geneva Convention) ஆகிய பன்னாட்டுச் சட்டங்களின்
அடிப்படையில் “நிலைமாற்று நீதி” எனும் வழிமுறையை ஐநா அவை முன்வைக்கிறது.
பன்னாட்டுச் சட்டங்களின் கீழ்
உரிமைகளாகக் கருதப்படும் நீதிக்கான உரிமை, உண்மை அறியும் உரிமை,
இழப்பீட்டுக்கான உரிமை, வன்முறைகள் மீண்டும் நேராவண்ணம் தடுப்பதற்கான
பொறுப்புடைமை ஆகிய உரிமைகளின் மீது நிலைமாற்று நீதி கட்டப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித
குலத்துக்கு எதிரான குற்றங்கள் முதலான மிக மோசமான குற்றச்செயலில்
ஈடுபட்டோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பதும் நிலைமாற்று
நீதியின் அங்கம் ஆகும்.
நீதிமன்றம் சார்ந்த
வழிமுறைகளையும் (Judicial Mechanisms) நீதிமன்றம் சாராத
வழிமுறைகளையும் (Non-judicial Mechanisms) பின்பற்றி நிலைமாற்று நீதிக்கான
பின்வரும் குறிப்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- உண்மை அறியும் உரிமை(The right to truth):
இடைமாற்று நீதிக்கான செயல்முறையில்
முதலாவது, உண்மையை வெளிக்கொண்டுவருவது ஆகும். சட்டத்தின் மூலம்
ஏற்படுத்தப்படும் உண்மை ஆணையத்தின் (Truth Commission) மூலம்,
பாதிப்படைந்தோர், சான்றுகள், குற்றமிழைத்தோரிடம் சான்றுரைகளைப் பெற்றும்,
பிறதரவுகளை ஆராய்ந்தும் ‘கடந்த காலத்தில் நடந்த குற்றங்கள் குறித்த எல்லாத்
தகவல்களையும்’ உண்மை ஆணையம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள் தனிப்பட்ட குற்றங்களை
உசாவிக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக அமைக்கப்படுகின்றன. மிகப்பெரிய
அளவில் பன்னாட்டுக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட நாட்டில், எல்லா
குற்றங்களையும் உசாவி உடனுக்குடன் தீர்ப்பளிக்க இயலாது.
நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புவரை
காத்திருக்காமல், குற்றங்களின் வகைகளையும், அதில் குற்றமிழைத்தோர் மற்றும்
அரசாங்கத்தின் பங்களிப்பையும் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும்
நாட்டிற்கும் உலகத்திற்கும் உண்மையை அறிவிக்க உண்மை ஆணையம்
அமைக்கப்படுகிறது. உண்மை ஆணையங்களினால் கண்டறியப்படும் குற்றங்கள்,
நீதிஉசாவலுக்காக நீதிமன்ற வழக்காக மாற்றப்படும்.
குற்றம் நடந்தமைக்கான காரணங்களை
ஆராய்ந்து, அவை மீண்டும் நேராவண்ணம் தடுப்பதற்கான பரிந்துரைகளையும் உண்மை
ஆணையம் அளிக்க வேண்டும். உலகெங்கும் இதுவரை ஏறத்தாழ 30 நாடுகளின் உள்நாட்டு
மோதல்களுக்குப் பின்னர் உண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- நீதிக்கான உரிமை(The right to Justice):
இடைமாற்று நீதிக்கான செயல்முறையில் மிக
முதன்மையானது நீதியை நிலைநாட்டுவது ஆகும். இதற்காகச் சட்டப்படி சிறப்பு
நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றங்களை உள்ளடக்கிய
சட்டங்களும், மிகத் தகுதியான நீதிபதிகளும், முழுமையான நீதிஉசாரணையை
மேற்கொள்ளும் அளவிற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இந்தக்
குற்றவியல் நீதிஉசாரணை (Criminal prosecutions) முறைக்கு அவசியம் ஆகும்.
மிகப்பெரிய அளவில் பன்னாட்டுக்
குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட நாட்டில், எல்லாக் குற்றங்களையும் உசாவி
உடனுக்குடன் தீர்ப்பளிக்க இயலாது. எனவே, பெரிய அளவிலான குற்றங்கள்-மிக
முதன்மையான குற்றவாளிகளின் குற்றங்களை உசாவுவதே சிறப்பு நீதிமன்றத்தின்
பணி. அதாவது, குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களைவிடவும், அதற்கு ஆணையிட்ட
மேல்மட்டக் குற்றவாளிகளின் குற்றங்களை உசாவித் தீர்ப்பளிப்பது சிறப்பு
நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க பணியாகும்.
இத்தகைய குறிப்பிடத்தக்க பெரிய
குற்றங்கள், அதிகாரமிக்க குற்றவாளிகள் தவிர, மீதமுள்ள ஏராளமான குற்றங்கள்
இயல்பான உள்நாட்டு நீதிமன்ற முறையின் கீழ் உசாவிட நேரலாம்.
சிறப்பு நீதிமன்றங்களின் பணி
மிகப்பெரியதாக இருப்பதால், பெரும்பாலும் பன்னாட்டு நீதிபதிகள்,
வழக்குரைஞர்கள், புலனாய்வாளர்களை உள்ளடக்கியதாக இத்தகைய நீதிமன்றங்கள்
அமைக்கப்படுகின்றன. ஒருவேளை குற்றம் நடந்த நாடு இத்தகைய நீதிமன்றப்
பொறிமுறையை நம்பத்தகுந்த அளவில் அமைக்கத் தவறினால், பன்னாட்டு
நீதிமன்றத்தில் இத்தகைய வழக்குகள் நடத்தப்படுகின்றன.
மிக மோசமான பன்னாட்டுக் குற்றங்கள்
தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது பன்னாட்டுச் சட்டத்தின் கீழ்
கட்டாயமாகக் கருதப்படுவதால் – ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இத்தகை பன்னாட்டு
நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்படுவது தவிர்க்க இயலாததாகும்.
- இழப்பீட்டுக்கான உரிமை(The right to reparations):
இடைமாற்று நீதிக்கான செயல்முறையில்
பாதிக்கப்பட்டோருக்கான ஈடுசெய் உரிமை முதன்மை அங்கமாகும். பாதிக்கப்பட்ட
மக்களின் இழந்த உடைமைகளையும் நிலத்தையும் சொத்துகளையும் அவர்களுக்குத்
திருப்பி அளித்தல், பாதிப்புகளுக்கு ஈடுசெய்யும் வகையில் இழப்பீட்டுப் பணம்
அளித்தல், மருத்துவம், கல்வி, வேலை முதலான மறுவாழ்வு ஏற்பாடுகளைச்
செய்தல், போலியான வழக்குகளில் இருந்து விடுவித்தல் ஆகியன முதன்மையான
இழப்பீட்டு உரிமைகள் ஆகும்.
வெறுமனே பணமோ பொருளோ அளிப்பது மட்டும்
போதுமான ஈடுசெய் நீதி அல்ல. மாறாக, அரசாங்கம் மக்களுக்கு இழைத்த
கொடுமைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது மிக முதன்மையாகும். குறிப்பிட்ட
மக்கள் பிரிவுகளுக்கு எதிராக அரசாங்கமே இழைத்த கொடுமைகளை நினைவுச்
சின்னங்களாகவும் அருங்காட்சியகங்களாகவும் அமைத்தல், கொடுமைகள் நேர்ந்த
முதன்மையானநாட்களை நினைவு நாட்களாகக் கடைப்பிடித்தல் முதலானவை மிக
முதன்மையான ஈடுசெய் உரிமை ஆகும்.
- கொடுமைகள் மீண்டும் நேராவண்ணம் தடுப்பதற்கான பொறுப்பேற்பு/நிறுவனச் சீர்திருத்தம்(The guarantees of non-recurrence/Institutional reform and Vetting):
நடந்த தவறுகள் எதிர்காலத்தில் ஒருபோதும் மீளவும் நேராவண்ணம் தடுப்பதற்கான வழிமுறைகள் இடைமாற்று நீதியின் முக்கிய அங்கம் ஆகும்.
அரசாங்கமே குற்றம் இழைத்ததால், அரசின்
நிறுவனங்களையும் சட்டங்களையும் திருத்தியமைக்க வேண்டும். குறிப்பாகக்,
காவல்துறை, இராணுவம், புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை, சிறைத்துறை முதலான
அனைத்து அமைப்புகளிலும் உரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய
அமைப்புகளில் பணியாற்றுவோரில் நடந்த குற்றங்களுடன் தொடர்புடைய அலுவலர்கள்
அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் அரசுப்பணிகளிலோ பொதுவாழ்விலோ
பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்.
அரசியல் யாப்பு, அரசின் அனைத்துச்
சட்டங்களை முழுமையாக ஆராய்ந்து அவற்றில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், அந்தச்
சட்டங்கள் அனைத்தும் பன்னாட்டுச் சட்டங்களுக்கும் பன்னாட்டு
உடன்படிக்கைகளுக்கும் ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவை மட்டுமின்றி, பன்னாட்டுக் குற்றங்கள்
நடப்பதற்கான பின்னணிக் காரணங்கள் எவை என்று கண்டறிந்து, சிக்கலின்
ஆணிவேருக்குத் தீர்வு காண வேண்டும்
இவ்வாறாக, உண்மையை உலகமறியச்
செய்தல், குற்றமிழைத்த தனியாட்களைத் தண்டித்தல், பாதிக்கப்பட்டோருக்குக்
கழுவாய் செய்தல், அரசாங்கத்தின் சட்டங்களையும் நிறுவனங்களையும்
திருத்தியமைத்தல், குற்றத்தோடு தொடர்புடையவர்களை விலக்கி வைத்தல் – ஆகிய
பல்வேறு நடவடிக்கைகளை பன்னாட்டுக் குமுகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ள
வேண்டும் என்பதே இடைமாற்று நீதியை நிலைநாட்டும் வழி ஆகும்.
கூடவே, அனைத்து மக்கள் குமுகங்களுடனும்
பரந்துபட்ட அளவில் இதுகுறித்து கலந்துபேச வேண்டும் (National
Consultations). இந்த நடைமுறைகள் அனைத்திலும் பாதிக்கப்பட்ட குமுகங்களின்
நலனே தலைமையானதாகக் கொள்ளப்பட வேண்டும் (Ensure the centrality of
victims) என்கிறது ஐநா அவையின் “இடைமாற்று நீதிக் ” கொள்கை.
இர. அருள்
பசுமைத் தாயகம், தமிழ் நாடு
ஐ.நா. பொ.கு.அ. (UN ECOSOC) வின் தனிக் கலந்துரை நிலையுடை அ.சா.அ.(NGO)
[NGO in special consultative status with UN ECOSOC]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக