கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும்
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015
தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம்
தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம்
சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச்
சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 –
ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத்
தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய எழுத்துருவியல்
பட்டறிவுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், பிற இந்திய மொழிகளில் தற்போது
எடுக்கப்பட்டுவரும் முன்முயற்சிகளை அறிந்து கொள்ளவும், துறை
வல்லுநர்களையும், முன்னணி வடிவமைப்பாளர்களையும், கல்வியாளர்களையும்
ஒருங்கிணைத்து, தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்தை நடத்துவதில்
கணித்தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்
முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் இ. தொ.க./ஐஐடி தலைவருமான பேராசிரியர்
மு.ஆனந்தகிருட்டிணன் புரட்டாசி 30/அக்டோபர் 17 காலை 10 மணிக்குக்
கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்திய உரூபாயின் சின்னத்தை வடிவமைத்த
திரு.த.உதயக்குமார், ஆப்பிள் ஐஃபோன், ஐபேடு, மெக்கின்டோசு கணிணிகளில்
பயன்படும் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்த மலேசியாவைச் சேர்ந்த
திரு.முத்துநெடுமாறன், தமிழ் எழுத்துருவியல் வடிவமைப்பாளரும்,
கல்வியாளருமான மும்பை இ.தொ.க. /ஐஐடி பேராசிரியர் சீ.வி.சிரீகுமார் முதலான
பலர் பங்கேற்க உள்ளனர்.
ஓலைச்சுவடி தொடங்கி இன்றைய கையகக் கணினி
வரை தமிழ் எழுத்து வடிவங்களின் படிநிலை வளர்ச்சியை கௌஃகாத்தி இ. தொ.க./ஐஐடி
துணைப்பேராசிரியர் த.உதயக்குமார் எடுத்து விளக்குகிறார். தமிழ் வரிவடிவ
இலக்கணத்துக்குப் பங்கம் இல்லாமல், மேற்கத்தைய எழுத்து வடிவாக்கக்
கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு, தற்காலத் தமிழ் எழுத்துருக்களை
வடிவமைப்பதில், மேற்கத்தைய மற்றும் பிற இந்திய மொழி எழுத்துருவியல்
துறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்பற்றி, தேசிய வடிவாக்க
நிறுவனத்தில் வரைகலை வடிவாக்கம் இறுதியாண்டு பயிலும் மாணவர் திரு. ஆதர்சு
இராசன் அவர்கள் பேசுகிறார்.
வினைநலத்தீர்வுகள் (இசுமார்ட்டு
சொல்யூஷன்சு) நிறுவனத்தைச் சார்ந்த திரு. எம். எசு. சிரீதர், இன்றைய
எண்ணிமக் காலத்தில் தமிழ் எழுத்துருவியலின் அறைகூவல்கள்பற்றி, குறிப்பாக, ஆண்டிராய்டு, ஐஓஎசு, கிண்டில், விண்டோசு தளங்களிலும், மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் உள்ள தமிழ் எழுத்துரு தொடர்பான திரைக்காட்சிச் சிக்கல்கள் பற்றிப் பேசுகிறார்.
தமிழகத்தின் முன்னோடி ஓவியர்கள்
திரு. அமுதோன், திரு. மணியம் செல்வன் ஆகியோர், கடந்த பல பத்தாண்டுகளில்
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தோடு சேர்ந்து பயணித்த தமது ஓவியக்
கலைவடிவங்களை நினைவுகூர்ந்து, ‘ஓவியக் கலையும் எழுத்துருவியலும்’ என்னும்
தலைப்பில் பேசுகின்றனர்.
முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவாக, மத்திய
அரசின் ‘தொல்காப்பியர் விருது’ பெற்ற பத்திரிகையாளர், நாணயவியல்
ஆராய்ச்சியாளர், பண்டைய தமிழ் எழுத்து ஆராய்ச்சியாளர், தினமலர் ஆசிரியர்
முனைவர் இரா.கிருட்டிணமூர்த்தி 1980களில் கணினி அச்சுத் துறைக்கான
தொடக்ககாலத் தமிழ் எழுத்து வடிவங்களின் வளர்ச்சிக்கான பங்களிப்புக்காகச்
செய்த கணித்தமிழ்ச் சேவையை பாராட்டி, கணித்தமிழ்ச் சங்கம்
சார்பில் ‘‘கணித்தமிழ் விருது’’ வழங்கும் விழா மாலை 6.30மணிக்கு கருத்தரங்க
இடத்திலேயே நடைபெறும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து
கொள்ளலாம். பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
அக்டோபர் 18-ஆம் தேதி, கருத்தரங்கின்
இரண்டாவது நாள், 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் எழுத்துருவியலின்
தொடக்கநிலை பற்றிய விவாதத்திலிருந்து தொடங்கு கிறது. அடுத்து, திரு. முத்து
நெடுமாறன் அவர்கள், நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “ஆப்பிள், ஆண்டிராய்டு ஏந்துகளில்(சாதனங்களில்) தமிழ் எழுத்துருவியல் பட்டறிவுகள்” என்பதைப் பற்றிப் பேச இருக்கிறார்.
மும்பை இ. தொ.க./ஐஐடி-யில் தொழிலியல்
வடிவாக்கத் துறைப் பேராசிரியர் சீ.வி.சிரீகுமார், “இந்தியச் சூழலில்
வடிவாக்கத் துறைக் கல்வியும் எழுத்துருவியலும்” என்னும் தலைப்பில்
பேசுகிறார். வரைகலைத் தொழில்துறை வல்லுநரும், தினகரன் இதழின் தலைமை
வடிவமைப் பாளருமான திரு. வேதா அவர்கள், “அச்சு வெளியீட்டு வடிவமைப்பில்
எழுத்துருவியல் சவால்கள்” என்பதுபற்றிப் பேசுகிறார். எழுத்துரு
வடிவமைப்பாளர்கள், ஓவியக் கலைஞர்கள், கல்வியாளர்கள்,பொறியாளர்கள்
ஆகியோரிடையே நடைபெறவிருக்கும், ‘நவீனத் தமிழ் எழுத்துருவியலின்
சவால்களும் அவற்றை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் விதிகளையும்
உருவாக்குதலும்’ பற்றிய குழு விவாதம் கருத்தரங்கின் சிறப் பாகும்.
இந்தக் கருத்தரங்கம், தமிழ் அச்செழுத்து
வடிவமைப்பளர்கள், காட்சித் தொடர்பாடல் மாணவர்கள், (VISCOM
Students), புத்தக வெளியீட்டாளர்கள், நூல் உருவரை ஆக்குநர்கள், எழுத்துரு
வடிவமைப்பாளர்கள், வரைகலைக் கலைஞர்கள், மின்னூல்
வடிவமைப்பாளர்கள், திறன்பேசி கணியன்(மென்பொருள்) உருவாக்குநர்கள்,
தற்தொழில்புரியும் ஓவியக் கலைஞர்கள், இன்னபிறர் அனைவருக்கும் பயன்தரத்
தக்கதாகும்.
கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
முன்பதிவு செய்ய வேன்டும். இரண்டு நாள் கருத்தரங்குக்குப் பதிவுக் கட்டணம்
ஒருவர்க்கு ரூ.1500/-கணித்தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், உத்தமம்
உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணி புரிவோர், தமிழ்
ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு 50% சலுகையில்
ரூ.750/- கட்டணமாகும். உரிய அடையாளச் சான்று அளிக்க வேண்டும். உரிய அடையாள
அட்டையுடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.500/- மட்டுமே.
கணித்தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு, பதிவுக்கட்டணம் ரூ. 750 மட்டுமே.
ஆர்வமுள்ளோர்www.kanithamizh.in வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.
குறிப்பிட்ட இருக்கைகளே உள்ளமையால் உடனே பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய இறுதி நாள் 15–10–2015 .
கணித்தமிழ்ச் சங்கம் பற்றி
கணித்தமிழ்ச் சங்கம் தமிழ் மென்பொருள்
உருவாக்குநர்களின் சங்கமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழின்
வளர்ச்சிக்காகக் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு
அரசு, உலகத் தமிழ் இணைய மன்றம்(உத்தமம்) ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்
எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடுகள், தமிழ்க் கணியன்கள்(மென்பொருட்கள்)
ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் முன்னெடுப்புக்கும் தொடர்ந்து பணியாற்றி
வருகிறது.
தொடர்புக்கு:
சொ.ஆனந்தன், தலைவர், கணித்தமிழ்ச் சங்கம்
2ஆவது தளம், 421, அண்ணா சாலை, சென்னை – 600018.
தொ.பே: 24355564, செல்பேசி: 94440 75051
மின்வரி: tamiltypography@gmail.com
தங்கள் உண்மையுள்ள
சொ.ஆனந்தன்
தலைவர், கணித்தமிழ்ச் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக