ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை



nigazhvu_pannaattuneethiporimurai07

ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26)

ஒரு கூட்டறிக்கை

இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக –
திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை” எனும் தலைப்பிலான கருத்தரங்கில்  தமிழீழ மக்களின் இன்றைய நீதிப் போராட்டத்தில் தோழமை கொண்டுள்ள தமிழக இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுகிறோம்.
1)      கடந்த 2014 மார்ச்சில் ஐநா மனித உரிமை மன்றம் இயற்றிய தீர்மானத்தின் படி அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையை மனித உரிமை மன்ற உயர் ஆணையர் திரு சையது இராத்(து) அல் உசைன் கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் வெளியிட்டுள்ளார். சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசுக்கு எதிராக நாம் இதுகாறும் கூறி வந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தக்க சான்றுகள் இருப்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம். சட்டப் புறம்பான கொலைகள், வெள்ளை மூடுந்து(வேன்) கடத்தல், சித்திரவதை, ஆண் பெண் இருபாலருக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை, உணவும் மருந்தும் கிடைக்க விடாமல் தடுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள்வழி மனித உரிமை மீறல், உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களைத் தமிழர் என்ற இன அடையாளத்திற்காகவே முகாம்களில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துதல், பாதுகாப்பு வளையங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் ஆகிய கொடுஞ்குற்றங்களில் சிறிலங்கா அரசும் படையினரும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டுவதோடு, இந்தக் குற்றங்களை அமைப்புசார் குற்றங்கள் என்றும் புலனாய்வு அறிக்கை வகைப்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம்.
2)      எந்த மன்றத்தில் இலங்கை அரசு போர் நடத்திய விதத்தைப் பாராட்டிக் கடந்த 2009 மே மாதம் தீர்மானம் இயற்றப்பட்டதோ, அதே மன்றத்தில் இலங்கை அரசு போர்க்குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் புரிந்திருப்பதாகச் சொல்லும் அறிக்கை இப்போது முன்வைக்கப்பட்டிருப்பது உலகத் தமிழர்களின் அயரா உழைப்புக்கும் உறுதியான போராட்டத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி என்று உணர்கிறோம். எமது முயற்சிக்குத் துணைநின்ற உலகளாவிய மனித உரிமை ஆற்றல்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வல்லரசுகளின் புவிசார் அரசியல் சூதாட்டங்களை எல்லாம் மீறி, தப்பிளின் தீர்ப்பாயம், ஐநா மூவல்லுநர் குழு, சார்லசு பெற்றியின் ஐநா உள்ளகத் தணிக்கை, அப்போதைய மனித உரிமை மன்ற உயர் ஆணையர் நவநீதம்(பிள்ளையின்) அறிக்கை, பிரேமன் தீர்ப்பாயம் … இவை எல்லாம் பாதை அமைத்துக் கொடுக்க, எமது நீதிக்கான பயணத்தில் இந்த எல்லைக்கல்லை அடைந்துள்ளோம் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
3)      நடந்திருப்பவை அமைப்புசார் குற்றங்கள், அதிகாரப் படிவரிசையில் இருப்பவர்கள் செய்த குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டு நோக்குடன் செய்த குற்றங்கள் என்றெல்லாம் புலனாய்வு அறிக்கை அறுதியிட்டுரைப்பது இலங்கையில் நடந்ததும் நடப்பதும் தமிழினப் படுகொலை என்பதையே காட்டுவதாக நம்புகிறோம். இனக்கொலைக் குற்றம் நடந்துள்ளது என்று புலனாய்வு அறிக்கை வரையறுக்காமல் விட்டது ஒரு குறைதான் என்றாலும், இனக்கொலை என்பதை இவ்வறிக்கை மறுக்கவில்லை என்பதும், அப்படி வரையறுப்பதற்கு மேலும் புலனாய்வு தேவை என்று உயர் ஆணையர் கூறியிருப்பதும் இந்த அறிக்கையின் அடிப்படையில் நாம் தொடர வேண்டிய நீதிப் போராட்டத்துக்கு ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்.
4)      சான்றுரைஞர்களுக்குப் பாதுகாப்பின்மை, பெருமளவிலான பன்னாட்டுச் சட்ட மீறல் குற்றங்களை உசாவுவதற்கு இலங்கையில் சட்டதிட்டங்கள் இல்லாமை, இலங்கை நீதிக் கட்டமைப்பின் நம்பகத் தன்மையற்ற நிலை ஆகிய காரணங்களால் உள்நாட்டு நீதிப் பொறிமுறை போதாது என்று கூறி சிறிலங்கா அரசின் கோரிக்கையை ஐநா மனித உரிமை மன்ற உயர் ஆணையர் மறுதலித்திருப்பதை வரவேற்கிறோம். அதே போது இதற்கென்று தனியாக ஒரு கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு சிறிலங்காவைக் கேட்டுக்கொள்ளும் உயர் ஆணையரின் நிலைப்பாட்டை ஏற்பதற்கில்லை. நடந்துள்ள மனித உரிமைப் புலனாய்வைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வு செய்வதற்கும், குற்றவியல் நீதிமன்றத்தில் உசாவல் (வழக்கு விசாரணை) நடத்துவதற்கும் பன்னாட்டுப் பொறிமுறைதான் தேவை, அது அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமாகவோ, இலங்கை தொடர்பான தனித் தீர்ப்பாயமாகவோ இருக்கலாம். பன்னாட்டு நீதிப் பொறிமுறைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாக முன்னெடுப்பது தவிர உலகத் தமிழினத்துக்கு வேறு வழி இல்லை என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
5)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வுக்கு எவ்வகையிலும் ஒத்துழைக்காத சிறிலங்கா அரசிடமே கலப்பு நீதிமன்றம் அமைக்கும் பொறுப்பைத் தருவது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போன்ற நிலைப்பாடே தவிர வேறன்று. இலங்கை சொல்லும் உள்நாட்டுப் பொறிமுறைக்கும், உயர் ஆணையர் அவ்வரசின் பொறுப்பில் அமைக்கச் சொல்லும் கலப்புப் பொறிமுறைக்கும் விளைவளவில் வேறுபாடில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
6)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்வேறு கடுங்குற்றங்கள் புரிந்ததாகப் பட்டியலிடுகிறது. ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ள இனக் கொலைகார அரசின் நடவடிக்கைகளையும், இனக் கொலையிலிருந்து தம் மக்களின் உயிரும் உடைமையும் காக்க ஆயுதமெடுத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளையும் ஒரே துலாக்கோலில் நிறுத்துப் பார்க்க இயலாது என்ற வரலாற்றுப் பாடத்தை நினைவூட்ட விரும்புகிறோம்.
7)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையில் இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் கணக்கில் கொள்ளும் புவிசார் அரசியல் அழுத்தங்கள் தென்பட்ட போதிலும், இவ்வறிக்கை உறையிலிட்ட கூர்வாள் போன்றது, தமிழ் மக்களின் போராட்டம் வளர்ந்து செல்லும் போது இந்தக் கூர்வாள் இலங்கையை இரண்டாகக் கூறு போட்டு ஈழத்தை வென்றெடுக்கும் அற வலிமையை நமக்குத் தரக் கூடியது என்பதைக் காலம் மெய்ப்பிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
8)      ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையை ஒதுக்கித் தள்ளி விட்டு, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவின் அறிக்கையில் சிற்சில மாற்றங்கள் செய்து, வழமையான முன்னொட்டும் பின்னொட்டும் சேர்த்து வண்ணந்தீட்டித் தீர்மானம்’கொண்டுவந்துள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் வஞ்சனையை வன்மையாகக் கண்டிக்கிறோம். புலனாய்வு அறிக்கை வெளிவருமுன்பே, இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப் போகிறோம் என்று கொழும்பில் வைத்தே அமெரிக்க அமைச்சர் அறிவித்து விட்ட நிலையில் அமெரிக்காவின் கழுத்தறுப்பு எதிர்பார்த்த ஒன்றே.
9)      மனித உரிமை மன்ற உயர் ஆணையரின் அறிக்கையை வரவேற்பதாகவும், அவ்வறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா செயலாக்க வேண்டுமெனக் கோருவதாகவும் தீர்மானத்தின் முதல் வரைவில் எழுதியதைக் கூட இரண்டாம் வரைவில் மாற்றி எழுதும் அளவுக்கு இலங்கை அரசை மட்டுமின்றி, அந்நாட்டின் சிங்களக் கட்சிகளையும் அரவணைக்க முற்பட்டுள்ளது அமெரிக்கா. அதேபோது புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய தேவையை அறிந்தேற்பதாகப் புதிய தீர்மான வரைவில் ஒரு தனிப் பத்தியை சேர்த்திருப்பதை… தமிழர்களின் அரசியல் பெருவிருப்பங்களைக் கொச்சைப்படுத்தி இனக்கொலை இலங்கைக்கு முட்டுக் கொடுக்கும் அமெரிக்க முயற்சி என்றே பார்க்க வேண்டியுள்ளது.
10)   இலங்கையின் வட மாகாண அவை சென்ற பிப்பிரவரியில் இனக் கொலை குறித்து இயற்றிய தீர்மானத்தையும் அண்மையில் பன்னாட்டுப் புலனாய்வு கோரி இயற்றிய தீர்மானத்தையும் உளமார வரவேற்கிறோம். இதற்காக வட மாகாண முதல்வர் மாண்புமிகு விக்னேசுவரன் அவர்களையும் வட மாகாண சபை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.
11)   ஈழத் தமிழர் துயரம் குறித்துத் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவை இதற்கு முன் இயற்றியுள்ள தீர்மானங்களையும், பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தி அண்மையில் இயற்றிய தீர்மானத்தையும் உளமார வரவேற்கிறோம். இதற்காகத் தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்களையும் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.
12)   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண அவையும் தமிழகச் சட்டப் பேரவையும் இயற்றியுள்ள தீர்மானங்களை மதித்து இனக்கொலைக்கு நீதிசெய்யப் பன்னாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தும் படியும், இதற்காக மனித உரிமை மன்றத்தின் இந்த அமர்விலேயே பொருத்தமான ஒரு தீர்மானம் கொண்டுவரும் படியும், இனக்கொலை இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும் படியும் இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.
13)   சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றும் படி சிங்கள வன்கவர்வில்(ஆக்கிரமிப்பில்) உள்ள தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை இலட்சம் மக்களும், உலக அளவில் 14 இலட்சம் மக்களும் கையொப்பமிட்டு அளித்துள்ள விண்ணப்பத்தை ஏற்று ஆவன செய்யும் படி ஐநா மனித உரிமை மன்றத்தையும், பொதுப் பேரவையையும், பாதுகாப்பு மன்றத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.
14)   இலங்கை தொடர்பாக இதுவரை நடந்துள்ள நீதி உசாவல், புலனாய்வு எதற்கும் சிறிலங்காவும் இந்தியாவும் ஒத்துழைப்பு நல்க வில்லை என்பதால், இவை முழுமை அடையவில்லை. ஆய்வுக்குரிய வரலாற்றுக் காலம் என்ற வகையிலும் இவை முழுமையற்றவையாகவே நிற்கின்றன. வட மாகாண அவைத் தீர்மானம் சுட்டியுள்ளவாறு கடந்த 1948 பிப்பிரவரி 4 தொடங்கி இன்று வரை தொடரும் இனக் கொலை குறித்து ஒரு முழுமையான பன்னாட்டுத் தற்சார்பு உசாரணை தேவை என்பதை ஓர் அடிப்படைக் கோரிக்கையாக வலியுறுத்த விரும்புகிறோம்.
15)   பன்னாட்டு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் போதே, இந்தியாவும் இலங்கையும் புலனாய்வைச் சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளையும் முறியடித்தாக வேண்டும் என்பதை மனித உரிமை மன்றமும் மற்ற அனைவரும் கவனத்தில் இருத்த வேண்டுகிறோம். .
16)   தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதில் இந்திய அரசு வகித்து வரும் பெரும் பங்கை நன்கறிந்தவர்கள் என்ற முறையில் இந்த முட்டுக்கட்டையை நீக்குவதில் தமிழக மக்களுக்குள்ள தலைமைப் பங்கைத் தெளிவாக நினைவிற்கொண்டுள்ளோம்.
17)   தமிழீழ மக்களின் இனச் சிக்கலுக்கு ஒரே தீர்வு தமிழீழ விடுதலையே என்பதுதான் வரலாறு கற்பிக்கும் பாடம். முள்ளிவாய்க்கால் பேரவலமும், அது முதல் ஈடுசெய் நீதிக்காக நடந்துள்ள போராட்டமும், அண்மைய புலனாய்வு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் வரையிலான ஐநா நிகழ்வுகளும்… இதே உண்மையை மேலதிக வலியோடு உணர்த்தியுள்ளன. இந்தத் தீர்வை அமைதியான முறையில் மக்கள்நாயக வழியில் அடைந்திடத் தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தும் படி ஐநாவை வலியுறுத்துகிறோம்.
18)   தமிழர்களுக்கு உரித்தான நீதியை உலகம் சட்ட வழியில் பெற்றுத் தர தவறுமானால், எவ்வழியிலும் அதனை அடையும் அறவுரிமை அவர்களுக்கு உண்டு என்பதைத் தொடர்புள்ள அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம். அப்போது திலீபனின் இறுதி முழக்கமே எமதுமாகும்: மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
உலகத் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!
கூட்டறிக்கையை ஏற்று கையொப்பமிட்ட தலைவர்கள்:
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தொல்.திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சே.. ஃகாசா கனி
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்
நிசாம் முகைதீன்
பொதுச் செயலாளர்
இந்தியச்சமதருமக் குடியாட்சிக் கட்சி
வே.பாரதி
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பாலன்
பொதுச் செயலாளர்
பொதுவுடைமைக் கட்சி (மா-இலெ) மக்கள் விடுதலை
தோழர் தியாகு
ஆசிரியர்
தமிழ்த்தேசம்
தமிழ்நேயன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேச மக்கள் கட்சி
நாகை திருவள்ளுவன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் புலிகள்
செந்தில்
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழகம் இயக்கம்
அன்பு தனசேகரன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்
திராவிடர் விடுதலைக் கழகம்
ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர்
மக்கள் இணையம்
தெய்வமணி
அமைப்பாளர்
அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
சௌ.சுந்தரமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் விடுதலைக் கழகம்
மா.சேகர்
ஒருங்கிணைப்பாளர்
குமுக விடுதலைத் தொழிலாளர்கள்

http://tamilthesam.org/?p=1010

பெரிதாகக் காணப் படத்தை அழுத்துக!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக