கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்
நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது.
என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே, ஓலைச் சுவடி முதல் கையகச்
சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது.
நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக
வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு
இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள்
விடுத்திருந்தோம்.
இது குறித்துக்
கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய
இணையம் சார்பில் வேண்டுகோள் மடலும் விடுத்திருந்தோம். அவரிடம் அலைபேசி
வழியாகப்பேசி, வரிவடிவம் தொடர்பான ஆய்வுகளை உத்தமம் நிறுத்திவிட்டதையும்
அதையும் மீறி , சிங்கப்பூரில் நடைபெற்ற இணைய மாநாட்டில் வரிவடிவம் தொடர்பான
உரை இடம் பெறுவது அறிந்து உலகத்தமிழன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும்
நீக்கியதையும் சுட்டிக்காட்டி, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும்
வேண்டுகோளை ஏற்று, வரிவடிவச்சிதைவிற்கு வழிகோலும் அமர்வை நீக்கி
விட்டதையைும் எடுத்துரைத்துக் கணித்துறையில் தமிழை வளர்க்கும்
கணித்தமிழ்ச்சங்கம் தமிழ் வரிவடிவத் தோரணைபற்றித்தான் ஆராய வேண்டுமே தவிர,
நெடுங்கணக்கின் அமைப்புமுறை குறித்து ஆராயக்கூடாது என்றும் வேண்டினோம்.
குழுவினர் கூடி முடிவெடுப்பதாகக் கூறினார்.
மூன்று நாளுக்குப் பின்னர் அவரே தொடர்பு
கொண்டு எழுத்துருவியல் கருத்தரங்கத்தில் வடிவம்பற்றிய கருத்தாடல் நிகழாது
எனமகிழ்ச்சியான தகவலைத் தெரிவித்தார்.
மேலும், அவர் பின்வருமாறும் தெரிவித்தார்:
- யாரிடமும் கட்டுரை பெறவில்லை. ஆதலின் வரிவடிவம் குறித்த கட்டுரை இடம் பெறும் என்ற எண்ணம் எழத்தேவையில்லை.
- திரு உதயக்குமார் ஓலைச்சுவடி தொடங்கி இன்றைய கையகக் கணினி வரை தமிழ் எழுத்து வடிவங்களின் படிநிலை வளர்ச்சியைக்குறிப்பிடுகயைில் ஏதும் இதுபற்றிக் குறிப்பிட்டார் எனில் பேசி முடித்ததும் கருத்தைத் தெரிவிக்கலாம்.
- யாரேனும் விவாதங்களின் பொழுது வரிவடிவச் சீர்திருத்தம் எனச் சிதைவு முயற்சி பற்றி கூறக்கூடாது என முன்னரே தெரிவித்து விடுகிறோம்.
- அப்படி யாரேனும் அதையும் மீறித் தெரிவித்தால் அவர் உரையாடத் தடை விதித்துவிடுகிறோம்.
- முதல்நாள் மாலை தினமலர் ஆசிரியர் முனைவர் இரா.கிருட்டிணமூர்த்திக்குக் கணித்தமிழ் விருது வழங்குகிறோம். இவ்விருது அவரின் வரிவடிவக்கொள்கைக்கானது அல்ல. தொடக்கக்காலத்தில் கணிணி அச்சுத்துறையில் அவருடைய தமிழ் எழுத்து வடிவங்களின்பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும் தொல்காப்பியர் விருதினைப் பெற்றவகையிலும் வழங்கப்படுவது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டா.
- கணித்தமிழ்ச்சங்கம் எழுத்துவடிவச்சிதைவிற்கு எதிரானது. எனவே, இதே நிலையையே தொடர்ந்து கடைப்பிடிப்போம். மேலும் இது குறித்து நாங்கள் இறங்காமல் கணித்தமிழ் வளர்ச்சியில் மட்டும்தான் கருத்து செலுத்துவோம்
- நீங்கள் எங்களுக்கு எதிரானவர் அல்ல எனத் தெரியும். எனவேதான், உங்கள் கவலையைப் புரிந்து கொண்டு விளக்குகிறோம்.
இவை மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன.
நாணயவியல் மூலமும் சங்கத்தமிழ் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து வரும்
தினமலர் ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கத் தடை சொல்ல வில்லை என்று
தெரிவித்தோம். ஆனால், எழுத்துத் தோரணையில் இந்தி எழுத்துபோல் தமிழைத்
தூக்கு போட்டுத் தொங்கும் எழுது முறையையும் செங்குத்துக் கோட்டில்
தொடங்கும் ப, ம, ய, முதலான எழுத்துகளின் தொடக்கத்தில் வளைவுடன் தொடங்கும்
முறையையும் ஊக்கப்படுத்தவேண்டா எனவும் கேட்டுக் கொண்டோம். உரையரங்கத்தின்
பின்னர் எழுத்துத் தோரணை குறித்து முடிவெடுக்கையில் இது குறித்துக்
கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும் கட்டுரையாளர்களுக்கு
வாய்ப்பளிக்காமல் சொற்பொழிவுகளை மட்டும் நடத்தும் இதுபோன்ற நிகழ்வுகளைக்
கருத்தரங்கம் எனக் குறிப்பிடாமல் உரையரங்கம் எனக் குறிப்பிட வேண்டும்
என்றும் தெரிவித்தோம்.
தமிழ் வரிவடிவப்படிநிலை குறித்து உரையாற்றுபவர் உரூாயின் குறியீட்டிற்கு இந்தி எழுத்தைச் சார்ந்து வடிவமைத்தவர்.
எனவே, அதே போக்கில் தொடர்ந்து இருந்தார் எனில், தவறான கருத்துகளைத்
தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது. எனினும் இந்தியத் துணைக்கண்டத்தில் முதல்
முயற்சியாகத் தமிழ் மொழிக்கென இவ்வுரையங்கம் நடைபெறுவதால் தமிழ்க்காப்புக
கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ், தமிழகம் – புதுவைத்
தமிழ் இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியன இதனை வாழ்த்திப்
பாராட்டுகின்றன.
நம் கவலையை உணர்ந்து கொண்டு வரிவடிவச் சிதைவுபற்றிய உரைகளுக்குத் தடை விதிப்பதாகத் தெரிவித்தமையால், கணித்தமிழ்ச்சங்கத்திற்கும் இதன் தலைவர் திரு சொ. ஆனந்தனுக்கும் நன்றியையும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிக்கிறோம்.
அகரமுதல மின்னிதழ்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக