73divorcee0273divorcee03

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன!

மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

  திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.
  வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி வருகிறார்கள். இதற்குச் சில அமைப்புகளும் உடந்தையாக இருப்பது இதற்குக் காரணம். இதனால் பல பெண்கள் வாழாவெட்டியாகத் தங்கள் வாழ்க்கையைக் கழித்துவருகிறார்கள். இதற்கு ஆதரவாகத் தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்களும் துணை போகின்றன.
  நாகப்பட்டினம், கடலூர், காயல்பட்டினம், கீழக்கரை பகுதிகளில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி என வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். அங்கு வேலை பார்த்துத் திரும்பிய உடன் அவசர கதியில் அயல்நாட்டுமாப்பிள்ளை என இவர்களைப் பெண்களைப் பெற்றவர் நாடுகின்றனர். திருமணம் முடிந்த இரண்டு, மூன்று மாதங்களில் மணமகன் வெளிநாடு சென்றுவிடுவார். அதன் பின்னர் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருவார். அதற்குள் மாமியார் – மருமகள் போர், வரன்கொடை கொடுமை, கொழுந்தனார் கொடுமை, மைத்துனர் கொடுமை எனப் பலவகைகளிலும் பெண்கள் பாதிப்படைவார்கள். தன்னுடைய மனித உரிமையை நிலைநாட்ட எண்ணிப் பல பெண்கள் போராடி இறுதியில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குக் கோபித்து வந்துவிடுவார்கள். வந்த சில நாள்களில் மணமகன் ஒரு சில அமைப்புகளுடன் தொடர்பு வைத்து அப்பெண்ணை மணவிலக்கு செய்துவிடுவார் இது ஒரு வகை.
  மற்றொரு வகை,  மனைவி இருக்கும்போது முதல்பெண்ணை மறைத்து இரண்டாவது திருமணம் முடிப்பார்கள். இதில் முதல்பெண் கைக்குழந்தையுடன் வாழாவெட்டியாக இருக்கும்;. இது கடற்கரை மாவட்டங்களில் தொடர்கதையாக வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த மாதிரி முறையீடுகள் வந்தால் மகளிர் காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏக மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் ஆண் அல்லது பெண் வீட்டாரின் பணத்தைக் கறந்துவிடுவது. வரன்கொடை வழக்கு போட்டால் 7 ஆண்டு சிறைத் தண்டனை என மிரட்டிப் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதே வேளையில் பெண்வீட்டார் பணம் தரவில்லை என்றால் உடனே முசுலிம் சட்டத்தைக் காண்பித்து, “ஓர் ஆண் எத்தனைத் திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். நீ யாரையாவது கூட்டிக்கொண்டு ஓடு” எனப் பெண்ணை மிரட்டி “நாங்கள் சொல்லிக்கொடுக்கின்ற இடத்தில் கையெழுத்துபோட்டு நடையைக் கட்டு” எனக்கூறி ‘தலாக்’ என்ற மணவிலக்கைப் பெற்றுத்தந்து பல இலட்சங்களைக் கறந்துவிடுவார்கள். சரி செய்திக்கு வருவோம்.
  கடந்த 8.3.2009 ஆம் ஆண்டு  புதுச்சேரி மாநிலம் , காரைக்கால் அருகே உள்ள நிரவியில் உள்ள மேல இராசவீதி 19 ஆவது வீட்டைச்சேர்ந்த முகமது சுல்தான், சகருவான் நாச்சியாருக்குப் பிறந்தவரான முகமது சபியுர் இரகுமானுக்கும் திட்டச்சேரியைச்சேர்ந்த மருசான் பருவீன் என்ற பெண்ணிற்கும் தமிழ்நாடு தவ்ஃகித்மு சமாஅத்து சார்பில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்தவுடன் பலவிதக் கனவுகளுடன் பருவீன் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். கூடவே 40 பவுன் நகைகளுடனும் பெண்ணுக்குச்சேரவேண்டிய சீர் வரிசைகளுடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் வரன்கொடை கேட்டு முகமது சபியுர்இரகுமான், ஃகாசா முகைதீன், தீனுல் ஃகதா, பாத்திமா கனி, அரபாத்து நிசா ஆகியோர் கொடுமைப் படுத்தியுள்ளர்கள். அதன் பின்னர் நாளுக்கு நாள் பசி, பட்டினியுடன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டி உள்ளார். இந்நிலையில் கணவன் வெளிநாடு சென்றுவிட்டார். இந்நிலையில் பருவீன் கருப்பமுற்றுள்ளார். கருப்பத்தைக் கலைப்பதற்குப் பல வகையான மாத்திரைகளையும் கொடுத்து கருப்பத்தைக் கலைக்கச்சொல்லி அடித்து உதைத்துள்ளனர். இதனைத் தன்னுடைய கணவனுக்குத் தெரிவிக்க முற்படுகையில் பருவீனிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கி வைத்துள்ளனர்.
  ஒரு வழியாக 3.1.2010 அன்று ஆண்மகன் பிறந்துள்ளான். காரைக்காலில் உள்ள புனித இராக்கி மருத்துவமனையில் பிள்ளையைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் பருவீன் தன்னுடைய தாய்வீடான திட்டச்சேரிக்கு வந்துள்ளார். அதன் பின்னர் பலமுறை கணவனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் முறையான மறுமொழி இல்லை. அதன் பின்னர் இருவரும்சேர்ந்து வாழ   பெண்வீட்டார் சார்பாகப் பலமுறை முயன்றும் அனைத்தையும் சபியுர் இரகுமான் வீட்டினர் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் தனக்கு நகை மற்றும் வரன்கொடை தந்தால் உடன் வாழ்வேன். இல்லையென்றால் உன்னை மணவிலக்கு செய்துவிடுவேன் என இரகுமான் மிரட்டி உள்ளார். இதனால் பருவீன் தந்தை பசுருதீன் தன்னுடைய மகள் வாழ்க்கையை எண்ணிப் படுத்த படுக்கையாகி விட்டார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சபியுர் இரகுமான் ஓர் இசுலாமிய அமைப்பில் முறையிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் 15.10.2011 அன்று 5.00 மணிக்குத் தலைமைக்கு வரவேண்டும் என்றும் வராவிட்டால் ஆண்களுக்குரிய உரிமைப்படி அவருக்கு முறையான மணவிலக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இக்கடிதம் 4.10.2011 அன்று நாளிடப்பட்டு 13.10.2011 அன்று கிடைத்துள்ளது. அப்பொழுது பருவீன் காரைக்கால் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் பணபலம், படைபலத்துடன் கூடிய சபியுர் இரகுமானுக்கு ஆதரவாக அப்பகுதி நிருவாகிகள் நடந்து,  ஒரு பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி அனுப்பி உள்ளார்கள். இதன் தொடர்பாகப் பருவீன் பானு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழக முதல்வர் எனப் பலருக்கும் பலமுறை மனுச்செய்துள்ளார். அம்மனுக்கள் அனைத்தும் மயக்க நிலையில் இருந்துள்ளன.
 இந்நிலையில் கணவனால் கைவிடப்பட்ட பருவீன் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமை வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கில் தன்னுடைய பேணுகைச் செலவு, மகனை வளர்க்க ஆகும் செலவு என 22,50,000 உரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கில் இதுவரை யாரும் முறைமன்றம் வரவில்லை. இந்நிலையில் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் எனப் பலவித கொலை மிரட்டல்கள் விடுத்து, அடியாட்களுடன் சென்றும் மிரட்டி உள்ளனர். இந்நிலையில் முதல்மனைவி இருக்கும்போது அவசர அவசரமாக 22.10.2011 அன்று செகினாசு பேகம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் முடித்துள்ளார். இதற்குக் காரைக்கால் மகளிர் காவல்நிலையம் ஆதரவளித்துள்ளதுதான் வேடிக்கை. இதனால் பதறிப்போன பருவீன் பானு மறுபடியும் நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறை, அனைத்து மகளிர் காவல்நிலையம் என அனைத்திலும் புகார் பதிவு செய்து வழக்கும் தொடர்ந்துள்ளார். வரன்கொடை கொடுமை மற்றும் உரிமையியல் வழக்கு அனைத்தும் சபியுர்இரகுமான் பணபலம், படைபலம் ஆகியவற்றுடன் தோற்றுப்போயின. இதன் தொடர்பாகத் துபாயில் மையத்தோட்டம்(சென்டர்கார்டன்) சேக் சாயத்து சாலையில் வசிக்கும் கணக்கராகப் பணிபுரியும் சபியுர்இரகுமானை 00971503682434 எண்ணில் தொடர்பு கொண்டோம். தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதாகவும், பெண்வீட்டாருடன் எந்த விதத் தொடர்பும் இல்லையென்றும், வரன்கொடை, நகை எதுவும் இல்லை எனவும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக விடையளித்தார். தன்னுடைய பணபலம், படைபலம், ஆள்பலத்தால் அப்பாவிப் பெண்ணை ஆதரவின்றித் தவிக்கவிட்டு நீதிமன்றத்தின்   அழைப்புஆணையையும் தூக்கியெறிந்துவிட்டு  வழக்கு நாளில் நீதிமன்றம் வராமல், கவலையின்றி வெளிநாட்டில் இருக்கும் சபியுர்இரகுமான் தண்டிக்கப்படவேண்டும் என்றும் சபியுர்இரகுமான் மற்றும் 5 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நாகப்பட்டினம் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளார் பருவீன். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
 இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இதன் தொடர்பாக மர்சான் பருவீன் கூறியதாவது, “எனக்கும், என்னுடைய குழந்தைக்கும் பராமரிப்புத்தொகை கேட்டு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கில் எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரர் வழக்குமன்றம் வராததால், கட்டாய வருகையாணை பிறப்பித்துள்ளார்கள். இந்நிலையில் கொடுத்த வழக்கைத் திரும்பப்பெறவேண்டும் என என்னைப் பலவழிகளில் மிரட்டி வருகின்றனர். என்னுடைய குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனத் திட்டச்சேரியில் வந்து மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன நான் நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், நிரவி சார்ஆய்வாளர் உள்பட பலருக்கும் 54 மனுக்கள் பதிவஞ்சலில் அனுப்பினேன். முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நான் மனம் தளராமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். அவ்வழக்கில் என்னைக்கொடுமைப்படுத்திய சபியுர் இரகுமான், அவரது அண்ணன் காசாமைதீன், சபியுர் இரகுமான் இரண்டவாது மனைவி சகனாசு பேகம், சவகர்நிசா, தீனுல்குதா, பாத்திமாகனி, அரபாத் நிசா, காரைக்காலைச்சேர்ந்த அப்துல்அக்கு ஆகியோர் மீது உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றத்தில் ஆணையும் பெற்றுள்ளேன்” என்றார்.
  இதன் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணி கூறியதாவது, “ஒரு பெண்ணை 5 ஆண்டுகாலமாக அலைக்கழித்துள்ளார்கள். அந்தப்பெண்ணிற்கு எந்த ஒரு பணஉதவியும் செய்யாமல் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்கள். அதனைத் தவிர்த்து அடியாட்களுடன் சென்று குழந்தையையும் அப்பெண்ணையும் கொல்ல முயன்றுள்ளனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். சென்னை உயர்நீதிமன்றம் காரைக்கால் காவல்துறை கண்காணிப்பாளர், நாகப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர், திட்டச்சேரி காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற ஆணையை அனுப்பி உள்ளார்கள். நீதிமன்ற ஆணையை இந்தியத் தூதரகம், துபாய் தூதரகம், கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன். இதன்மூலம் அவர்கள் தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம்” என்றார்.
 போராடித்தான் நீதி பெறவேண்டும் என்னும் நிலை மாறவேண்டும். அதே வேளையில் அரசு மற்றும் அதிகார வருக்கங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மனஉறுதி குலையாமல் இறுதி வரை போராடிக் கயவர்களை அம்பலப்படுத்தவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
73vaigaianeesu