பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!
ஆண்டுதோறும் தணிக்கை செய்ய
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில்
நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை,
தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம்
இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது
போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி
பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு.
பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள
பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர்
வழங்கல் பிரிவில் பழுதான குழாய்இணைப்பு, மின் எந்திரம், அதரி(valve),
அடிகுழாய் போன்றவை அமைக்கப்பட்டு இருக்கும். ஏற்கெனவே இருக்கும் குழாய்
இணைப்புகளைத் தோண்டியும், பழைய மின் எந்திரங்களை எடுத்துப் புதிய மின்
எந்திரம்போல் வண்ணம் பூசி புதிய மின் எந்திரம் வாங்கியதாக மூன்றுவித
ஒப்பந்தங்களைப் போலியாக உருவாக்கி அதில் குறைந்த அளவு உள்ள
விலைப்புள்ளியைக் காண்பித்து மின் எந்திரம் வாங்கியதாகக் கணக்கு
எழுதுகின்றனர். மேலும் பழைய அதரி(valve), அடி குழாய்களைச் சீரமைத்ததுபோலக்
கணக்கு எழுதிக்கொள்கின்றனர். இதன் மூலம் ஏறத்தாழ 2 இலட்சம் உரூபாய் கையாடல்
நடைபெறுகிறது.
பொது நல்வாழ்வுப்பிரிவில் பொதுமக்களுக்கு
நோய்கள் பரவாமல் தடுக்க சுன்னப்பாசகை(bleaching powder) வாங்கியதாகக்
கணக்கு எழுதியும், சுண்ணாம்பு, கழுவுநீர் போன்றவற்றின் மூலம் தூய்மை
செய்ததாகக் கணக்கு எழுதிக்கொள்கின்றனர். மேலும் பொதுக்கழிப்பிடங்களில்
தூய்மை செய்ய ஒப்பந்தப்புள்ளி மூலம் தனியாருக்கு விடுகின்றனர். இவ்வாறு
ஒப்பந்தம் விடப்பட்ட பொதுக்கழிப்பிடங்களைத் தூய்மை செய்ததாகக் கணக்கு எழுதி
ஏமாற்றுகின்றனர். துப்புரவு செய்வதற்குரிய நல்வாழ்வுப் பணியாளர்களுக்குக்
கையுறை, தரமுள்ள காலணிகள் வாங்கியதாக ஆவணங்கள் உருவாக்குகின்றனர். இவற்றின்
மூலமும் பணம் கையாடல் நடைபெறுகிறது. அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர்,
தற்காலிகப் பணியாளர்கள், வரித்தண்டலர்கள்(bill collectors0 ஆகியவர்களுக்கு
மாதமாதம் வழங்ககூடிய பயணப்படியைப் பணமாக வங்கியில் எடுத்து அந்தப்பணத்தைக்
கொடுக்காமல் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பார்க்க வேண்டும் எனக்கூறிச்
செயல் அலுவலர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் எடுத்துக்கொள்கின்றனர்.
இவற்றைத்தவிர, தன்உதவிக்குழுக்களின்
மூலம் நல்வாழ்வுப்பணிகளுக்கு நாள்கூலி அடிப்படையில் ஏதாவது ஒரு
தொண்டுநிறுவனத்தின் மூலமாக ஆள் ஒன்றுக்கு உரூ.300 வரையறுத்துத்
துப்புரவாளர்களுக்குச் சில பேரூராட்சிகளில் 130 உரூபாய் தருகின்றனர் மற்ற
பேரூராட்சிகளில் அந்த அளவு ஊதியமும் கொடுப்பதில்லை. இதில் பேரூராட்சிகளில்
பணியே செய்யாதவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துள்ளதாகக் கணக்கு
எழுதிக்கொள்கின்றனர். மேலும் தெருக்களில் வாங்காத மின்விளக்கு,
குழாய்விளக்கு, ஆவி விளக்கு, ஒளி முடுக்கி(starter), பிடிப்பி, மின்கம்பி,
முதலானவை வாங்கியதாகப் பேரூராட்சிகளின் இயக்குநர் அங்கீகரிக்காத கடைகளில்
போலியான விலைப்பட்டிகளை உருவாக்கி அந்தப்பொருட்களை வாங்கியதாகவும் இருப்பு
உள்ளதாகவும் காண்பித்து விடுகிறார்கள். வாங்கிய கடைகளின் பெயரில் போலி
ஆவணம் தயாரித்து வணிகவரித்துறைக்குச் செலுத்தவேண்டிய பணத்தை மட்டும்
செலுத்தி அந்தப்பணத்தை கழித்து பணத்தைக் கையாடல் செய்கின்றனர். இவ்வாறான
போலி ஆவணங்கள் மூலம் மாதம் ஒன்றிற்குச் செயல் அலுவலர், தலைவர், செயலாளர்
ஆகியோர் கூட்டணி அமைத்து ஒவ்வொருவரும் உரூ.1இலட்சம் வீதம்வரை
கொள்ளையடிக்கின்றனர்.
திட்டச்சேரி பேரூராட்சி நிலத்தை விற்பனை செய்யும் செயல் அலுவலர் தங்கையன்-இடைத்தரகராகச் செயல்படும் துணைத்தலைவர் சுல்தான் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி
பேரூராட்சியை விற்பனை செய்வதாக அழைத்ததன் பேரில் நாம் அங்கு சென்றோம்.
திட்டச்சேரியைப் பொருத்தவரை அதிக அளவில் வெளிநாடுகளில் சம்பாதிப்பவர்கள்.
பெரும்பாலும் திருமணம் முதலான மங்களநிகழ்வுகளுக்கு மட்டும் வந்துவிட்டு
மீண்டும் வெளிநாடு சென்றுவிடுவார்கள். இதனைப்பயன்படுத்தி வெளிநாட்டில்
இருப்பவர்களின் நிலங்களையும், வருவாய்த்துறை நிலங்களையும், பேரூராட்சி
நிலங்களையும் இடைத்தரகர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த இதழில் நாம் சுட்டிக்காட்டிய
பேரூராட்சித்துணைத்தலைவர் சுல்தான், செயல்அலுவலர் தங்கையன், இசட்.710
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் ஆகியோர் கூட்டணி
அமைத்து விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு
முன்னர் திட்டச்சேரி பேரூராட்சியில் நிலக்கவர்வுகள்(ஆக்கிரமிப்புகள்)
அகற்றப்பட்டன. அப்போது பேரூராட்சியில் நிலக்கவர்வு செய்த இடங்களை
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நிலக்கவர்வுகளை அகற்றினார்கள். இதில்
பணமுதலைகள், அரசியல் பின்புலம் வாய்ந்தவர்கள் செய்த நிலக்கவர்வுகளை
அகற்றவில்லை. திட்டச்சேரி சமாஅத் தலைவராக இருப்பவர் பசீர். இவர் பசீர் வணிக
வளாகம் என ஒன்றைத் திட்டச்சேரி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தைக் கவர்ந்து
கட்டியுள்ளார். அவருடைய வணிக வளாகம் கவர்ந்து கட்டப்பட்டது என்று
தெரிந்தும் செயல் அலுவலர் தங்கையன், துணைத்தலைவர் சுல்தான் ஆகியோர்
அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
இதன் பின்னணியில் நாம் விசாரித்தபோது
திட்டச்சேரி சமாஅத் தலைவர் பசீர் என்பவரிடம் திட்டச்சேரி பேரூராட்சிக்குச்
சொந்தமாக உள்ள நிலத்தை 1 இலட்சம் உரூபாய் பெற்றுக்கொண்டு பேரூராட்சி
நிலத்தை விற்பனை செய்துள்ளார்கள். கடந்த 15.01.2015 அன்று நிலக்கவர்வுகள்
அகற்றம் என்ற பெயரில் திட்டச்சேரி பேரூராட்சியில் 90% கடைகள்
அப்புறப்படுத்தப்பட்டன. இதில் சமாஅத் தலைவர் பசீருடைய கடையை இடிக்கவில்லை.
இதே போல இசட்.719.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவராக இருப்பவர்
சையது இபுராகிம். இவரை இப்பகுதி மக்கள் பொட்டி என அழைப்பது வழக்கம். காரணம்
இப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்; அவர் ஆக்கிரமிப்பு செய்த பெட்டிக்
கடையையும் அப்புறப்படுத்தவில்லை. மேலும் கடை அருகில் உள்ள மற்றொரு கடையைக்
கட்ட துணைத்தலைவர் சுல்தானின் தம்பி பட்டாமணியார் தம்பி மரைக்காயர் வசம்
ஒப்படைத்துள்ளனர். இதனால் யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை.
நிலக்கவர்வுகளை அகற்றுவதில் பாகுபாடு உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் தமிழக
முதல்வருக்கு மனுக்களை அனுப்பி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக