தேவதானப்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன்கோவிலில்
10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் திருட்டு!
செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க
இறையன்பர்கள் வலியுறுத்தல்
தேவதானப்பட்டி அருகே உள்ள அருள்மிகு
காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்குத் தனியாகச் செயல் அலுவலர்
நியமிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோவிலில் தற்பொழுது
திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் மின்அலங்காரம், கோயிலைச்சுற்றியுள்ள
கடைகளுக்கு மின்சாரம் கொக்கி மூலம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு 10க்கும்
மேற்பட்ட இடங்களில் மின்சாரம் கொக்கி போட்டுதிருடப்படுகிறது. மேலும்
இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் இருந்து கடைகளுக்கு மின்விளக்கு,
குழல் விளக்கு, இதள்(மெர்குரி) விளக்கு என
ஒவ்வொரு விளக்குவகைக்கும் ஒவ்வொரு வகையாக வாடகை பெறப்படுகிறது. குழல்
விளக்கிற்கு நாள்தோறும் 50 உரூபாயும்,இதள், பிற விளக்குகளுக்கு 100
உரூபாயும், தண்கலன் போன்ற மின்சாதனங்களுக்கு 150 உரூபாய் முதல் 200 உரூபாய்
வரையும் பெறப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மின்சாரத்தால் அப்பகுதியில்
உள்ள வீடுகள், விடுதிகள் ஆகியவற்றில் மின்கட்டணம் கூடுதலாக அமைகிறது.
மேலும் ஏதாவது எதர்பாராத்துயர நிகழ்வுகளோ மின்சாரம் மூலம் திடீர் எனத் தீப்
பற்றலோ ஏற்பட்டால் கோயிலுக்கு வரும் இறையன்பர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும் பேரூராட்சிக்குற்பட்ட பகுதி என்பதால் இவ்வாறு எடுக்கப்படும்
மின்சாரத்தால் பேரூராட்சிக்கு கட்டணம் உயர வாய்ப்புள்ளது. எனவே செயல்
அலுவலரின் கீழ் இயங்கும் இக்கோயிலில் மின்சாரத்தை கொக்கி போட்டு எடுக்க
வாய்மொழி உத்தரவிட்ட அதிகாரி மீது துறை வழியிலான நடவடிக்கையும், அதற்கு
உடந்தையாக இருந்து வரும் மின்ஊழியர்கள் மீதும் துறைவழியிலான நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் எனவும் இறையன்பர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக