ஆரியர் இயல்பு - பேராசிரியர் மு.வ
தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம்.
அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர்.
ஆரிய திராவிட நாகரிகம்.
இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை எனில், இந்தியாவிற்கு வந்த ஆரியர் அவற்றை அறிந்திருந்தது போலவே ஐரோப்பாவில் வாழ்ந்த ஆரியரும் அவற்றை அறிந்திருக்க வேண்டும். கிரேக்கரும் உரோமரும் மற்ற ஐரோப்பியர்களும் பழங்காலத்துப் பாரசீகர்களும் அவற்றை அறிந்திருக்க வேண்டும். எந்த எந்தப் பகுதிகள் ஐரோப்பிய ஆரியர் அறியாமல் இந்திய ஆரியர் மட்டும் அறிந்திருந்தனவாகக் கூறப்படுகின்றதோ அந்த அந்தப் பகுதிகள் ஆரியர்களுக்கு மட்டும் உரியன அல்ல என்றும், இந்திய நாட்டுத் திராவிடர்களுக்கும் உரியவை என்று கூறத்தகும் என்று கிரியர்சன் தமது இந்திய மொழி ஆராய்ச்சி என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளா்.
இவ்வாறு ஆராய்ந்தால் இன்று ஆரிய நாகரிகக் கூறுகளாக போற்றப்படும் இந்திய மருத்துவக்கலை, ஆடை அணிகள், உணவு, திருமணம், இல்வாழ்க்கை முறை முதலியவை ரோமரும் கிரேக்கரும் பாரசீகரும் மற்ற ஆரியரும் அறியாதவை. ஆகவே, அவைகள் திராவிடர்களுக்கே உரியவை என்று கருத நேர்கின்றது.
இவ்வாறே, மொழித்துறையிலும் சில ஒலிகளும் சொல்லமைப்பு முறை இலக்கணக் கூறுகளும் இலக்கியத் துறைகளும் ஆரியர் திராவிடரிடம் இருந்து கற்றவையே தவிர, ஆரியர்க்கு உரியன அல்ல.
ஆரியர் உரிமை என்று கருதப்படும் சமயத்துறையிலும், சார்லஸ் எலியடு என்பவர், இத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளார். இந்திய நாட்டுச் சமயம் என இன்று கருதப்படுவது ஆரியச் சமயம் என்பதைவிட திராவிடச் சமயம் என்று கூறுவதை மிகப் பொருந்தும் என்றும் ஒருபுறம் காணலாம். சிறிது நடுநிலை கொண்டு காணின், இந்த உண்மை விளங்கும் என்றும் அவர் கூறுகின்றார். பாரசீகத்திலோ கிரேக்க நாட்டிலோ வேறு ஆரிய நாடுகளிலோ இத்தகைய சமய நெறி இல்லாதிருத்தலை அவர் சான்றாக எடுத்துக் காட்டுகின்றார். (இந்துயிசம் புத்திசம் – ஒரு வரலாற்று வடிவம் என்னும் புத்தகத்தின் பார்க்கவும்)
இவ்வாறு ஆராயின், இன்று வடமொழியில் உள்ள பலவகை நூல்களையும் கொண்டு, அவை அனைத்தும் ஆரிய நாகரிகத்தின் பெருமையைக் காட்டுவனவாகக் கொள்ள இயலாது. அதற்கு மாறாக, அக்காலத்தில் வந்த மக்கள் இருந்த மக்களின் நாகரிக வாழ்வில் கற்றனவற்றை எல்லாம் கண்ணும் கருத்துமாகப் போற்றி பற்பல நூல்களாக எழுதி வைத்த முயற்சிச் சிறப்பையே போற்றுதல் வேண்டும்.
இவ்வாறு எழுத்து வடிவில் பல நூல்களைப் பெற்று வடமொழி சிறப்பெய்திய பிறகு, இருந்த திராவிட மக்களின் அறிஞராயினோரும் அவற்றை அம்மொழியிலேயே எழுதி வைத்துப் போற்றினர்.
எனவே, வந்த மக்களின் விடா முயற்சியையும் இருந்த மக்களின் கவலையற்ற பெருந்தன்மையினையும் போற்றுதல் வேண்டும்.
அன்றி, வடமொழியில் உள்ள நூற்பெருக்கைக் கண்டு, ஆரிய நாகரிகத்தின் பெருமையை அளத்தல் ஆகாது.
தரவு : ஆ.ரா.அமைதி ஆனந்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக