சனி, 14 ஜூன், 2014

பொலிவியா நாட்டினரே! நீங்கள் மாந்தர்தாமா? உறுப்பு நாட்டினரே! நீங்கள் அறிவும் பரிவும் உள்ளவர்தாமா?



பொலிவியா நாட்டினரே! நீங்கள் மாந்தர்தாமா?

உறுப்பு நாட்டினரே! நீங்கள் அறிவும் பரிவும் உள்ளவர்தாமா?
  சூன் 15, 1964  அன்று 77 வளர்நிலை நாடுகள் கூடி  அமைத்ததே 'வ - 77' (G-77)  என்னும் அமைப்பு. இப்பொழுது இவ்வமைப்பில் 133 நாடுகள் உள்ளன. இந்தியாவும் இவ்வமைப்பில் உள்ளது.  இதன் பொன்விழா மாநாடு தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் சாண்டாக்ரூசு நகரில் வரும் (சூன்) 14, 15 (2014)  நாள்களில்  நடக்க உள்ளது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களும்  உயர் மட்டச் சார்பாளர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்சே படுகொலைகளைத் தட்டிக் கேட்காமலும் தடுக்காமலும் மறைமுகமாக உதவிய ஐ.நா. அமைப்பின் செயலர் பான் கி மூன் முதலானவர்களும் கலந்து கொள்கின்றனர்.
  பொருளியல் வளர்ச்சிக்கான இவ்வமைப்பு அமைதிக்கான விருது வழங்குவதற்குரிய தகுதியற்றது. ஆனால், அமைதிக்கான விருதை அமைதியைக் குலைத்த படுகொலையாளி பக்சேவிற்கு இவ்வமைப்பு  கூடும் கூட்டத்தில் பொலிவியா நாடு வழங்குகிறது. இவ்வமைப்பின் தலைவராக இப்போது பொலிவியா அதிபர் உள்ளதால் அவர் இதனை முன்னெடுத்துள்ளார். பொலிவியா நாட்டின் 'அமைதி - மக்களாட்சிக்கான உயரிய விருதினை' மக்களாட்சிக்கு எதிரான பேரினப்  படுகொலையாளியான, உலக மனித நேயர்களும் அறவாணர்களும் மனிதஉரிமைக்கான போராளிகளும் தண்டிக்கக் காத்திருக்கும் வெறியன் பக்சேவிற்கு வழங்க உள்ளார். 
  நாம் சொன்னால் இந்திய அரசு கேட்கப் போவதில்லை என நாம் வாளாவில்லாமல் இவ்விழாவினைப் புறக்கணிக்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
  உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தத்தம் நாட்டினை இவ்வாறு விழாவைப் புறக்கணிக்க வலியுறுத்த வேண்டும். 
  நாளை காலம் மாறும்; பக்சேவிற்கு வழங்கப்படும் பொய்யான பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 'உலகக் கொடுங்கோலன்' என்று அழைக்கப்படுவான். எனினும் வெறும் நம்பிக்கையில் வாழாமல், நாம் இது போன்ற கொடுமையிலும் கொடுமையான நிகழ்வுகள் நடைபெறாமல்  தடுக்க  ஒல்லும் வகை பணியாற்றிட வேண்டும்.
'உற்றநோய் நோன்று உயிர்க்குறுகண் செய்யா தவர்க்கு' (குறள் 261) வழங்கப்பட வேண்டிய விருதை, பக்சேவிற்கு வழங்கி, பொலியவியா குடியரசு நாடு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது. அவ்விழாவில் பங்கேற்று வளர்நிலை நாடுகள் தங்களை இழிவுபடுத்திக் கொள்கின்றன.
  133 என்றால்  திருக்குறள் அதிகார எண்ணிக்கை நினைவிற்கு வரும் நமக்கு இனிமேல் 133 வளர்கொலைநாடுகளே நினைவிற்கு வரும். எனவே வளர்நிலை நாடுகளே
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின் (குறள் 272)
என உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் காட்ட முயலும் படுகொலையாளி பக்சேவிற்குத் துணை நிற்கலாமா?
கயமைக்குத்துணை நிற்பது கயமைத்தனம் இல்லையா?
வஞ்சகனைப் பாராட்டுவதும் வஞ்சகம் அல்லவா?
கொலையாளியைப் போற்றுவதும் கொலைச்செயல்தானே!
நீங்கள் அனைவரும் கயவர்களா? வஞ்சகர்களா? கொலையாளிகளா?
அல்லது
உயிர்கள் மீது நேயம் கொண்ட, துன்பத்தில் உழல்பவர்க்கு துணை  நிற்கும், அல்லல்பட்டு ஆற்றாது அழுவோர் கண்ணீரைத் துடைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்களா?
இனப்படுகொலையாளியைப் போற்றும் வஞ்சக நிகழ்வில் பங்கேற்பீர்களா?
அல்லது புறக்கணிப்பீர்களா?
என்பதைப் பொறுத்து உலகம் முடிவு செய்யும்!
உலகம் உங்களைக் கட்டியணைக்க வேண்டுமா? காறித் துப்ப வேண்டுமா என நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்!
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (குறள் 271)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக