‘’ரோசா
தமிழ்ப்பெயரா? கலைஞரே!
ஏன் இந்தத் தடுமாற்றம்?’’ என்னும் தலைப்பில் கலைஞர் ஒரு குழந்தைக்கு ‘ரோசா’
என்னும் பெயர் வைத்தது குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக, என் கருத்துகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு நான், நடுநிலைமையாகவும் துணிவாகவும் உள்ளதை உள்ளபடித்
தெரிவிப்பவன் என்பதை அறிவார்கள்.
கலைஞரைப்பற்றி எழுதும் பொழுது, தி.மு.க. தோழர்கள்,
"நீங்கள் உண்மையைத்தான்
எழுதுகிறீர்கள். எங்களால் சொல்ல முடியவில்லை. என்றாலும் மென்மையாகக்
கண்டியுங்கள்" என்பார்கள். ஆனால், அன்பர் வேலுப்பிள்ளை தங்கவேலு,
"இப்படி கலைஞர் கருணாநிதி மீது பாய்ந்து பிராண்டும்
இலக்குவனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் முதலமைச்சர் செயலலிதா வட மொழிப் பெயர்களை வைப்பதைக் கண்டு
கொள்வதில்லை. அச்சம் காரணமாகவோ என்னவோ
செயல்லிதாவை யாரும் விமர்சிப்பதும் இல்லை. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்ற ஆண்டு (2013)
மார்ச் மாதத்தில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 புலிக்குட்டிகளுக்கு பெயரிட்டார். இவற்றில் 4 வெள்ளைப்புலிக்குட்டிகளுக்கு அர்ச்சுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், மற்ற 3 வங்காளப்
புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும் பெயர் வைத்தார். .. இந்தப் பெயர்கள்
எதுவும் தமிழில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு புலிக்குட்டிகளுக்கு அயற்பெயர்களைச்
சூட்டியபொழுது, ‘’முதல்வர் புலிக்குட்டிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டாமை’’ என்னும் தலைப்பில், "தமிழ்நாட்டின்
முதல்வராக இருப்பதாலும் தமிழ் மக்களின் கட்சித் தலைவராக இருப்பதாலும் தமிழ்ப்
பெயர்களை சூட்டுவதே தமக்கு அழகு என்பதை முதல்வர் உணர வேண்டும். அணுக்கத்தில்
இருப்போர் அதை உணர்த்த வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளேன்; செய்தி வந்த தினமணி இதழிலும் பதிந்துள்ளேன். அதுமட்டுமல்ல, ''தமிழ்க்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போதும்
செயசித்திரா, செயகுமாரி, செயவதனி என்ற வடமொழிப் பெயர்களைத்தான் செயலலிதா
வைக்கிறார்'' என்றும் அன்பர் வேலுப்பிள்ளை தங்கவேலு
குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வரிசையாக, அவர் ‘செய’ எனத் தொடங்கும் பெயரையும் ‘செயேந்திரர்’
என்னும் பெயரையும் சூட்டிய பொழுது
பண்பாளர் பெயர்களையும் தமிழ்ப்பெயர்களையும் வைக்க வேண்டும் என அவருக்கே மடல்
எழுதியுள்ளேன். அதன்பின் ‘செயேந்திரர்’ என்னும் பெயர் வைத்ததாகக் குறிப்புகள் இல்லை. ஆகவே, தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும்
பொருந்தும். எனவே, இதைச் சுட்டிக் காட்டுவதில் பாகுபாடு இல்லை. அதே நேரம், கலைஞர் ‘முத்தமிழறிஞர்’ என்பதாலும், ‘உலகத் தமிழினத்தலைவர்’ எனச் சொல்லிக் கொள்ள விரும்புவதாலும் தமிழ்ப்பெயர்
சூட்ட வேண்டிய அறக்கடமை அவருக்கு இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது. அவர் பதவியில் இருக்கும் பொழுதே, அவரது குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள்
தமிழில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி மக்கள் தொலைக்காட்சியில் பேசியுள்ளேன்; என்
வலைத்தளத்திலும் பதிந்துள்ளேன். எனவே, கலைஞர் பதவியில் இல்லை என்பதால் கூறுவதாகவும் தவறாக
எண்ணக்கூடாது. யாரையும் நான் பொதுவாக
விருப்பு வெறுப்பு அடிப்படையில் மதிப்பிடுவதில்லை. ஒவ்வொரு செயலிலும் உள்ள
தமிழ்சார் நலன் உள்ளமை அல்லது இன்மை அடிப்படையில்தான் கருத்து தெரிவிப்பேன்.
அந்த வகையில் கலைஞர் அயற்பெயர்
சூட்டியது - அதுவும் தமிழ்ப்பெயர்
சூட்டுவதாகக் கூறி அயற்பெயர் சூட்டியது
கண்டிக்கத்தக்கதே! அவரது முகநூலில்
தமிழ்ப்பெயர் சூட்டாமை குறித்த கருத்தைப் பதிந்துள்ளேன். நடுநிலையுடன் எதிர்ப்புக்
கருத்துகளையும் வெளியிடும் கலைஞர்
இப்பதிவையும் நீக்காமல் உள்ளார். நான் நடுநிலையாளன் என்பதைக் கலைஞரும் அறிவார். ஆதலின்
வேலுப்பிள்ளை தங்கவேலு, -
அவர் போல் யாரும் கருத்து கொண்டிருப்பின் அவர்களும் -
தம் கருத்தை மாற்றிக் கொண்டு தமிழ்ப்பெயர் சூட்டுமாறு கலைஞருக்குத் தெரிவிக்க
வேண்டுகின்றேன்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!
இனத்தைக் காப்போம்!/
காண்க :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக