வெள்ளி, 11 அக்டோபர், 2013

உழவு எந்திரன்

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாசி !

"ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்." - பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள, ‘உலக புத்தாக்கப் போட்டி’க்காக விவசாயம்செய்யும் ரோபோவை வடிவமைப்பதில் மூழ்கியிருக்கும் பாலாஜி ஓர் அசலான கிராமத்து இளைஞர். விழுப்புரம் அருகே உள்ள கண்டாச்சிபுரம்தான் இவரது சொந்த ஊர்.

"விவசாய நாடான இந்தியாவுல, 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயம்செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் என்னோட தற்போதைய லட்சியம்" என்னும் பாலாஜி, ரோபோ காதல் காரணமாக, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.டெக். ரோபோடிக்ஸ் பாடப் பிரிவை எடுத்துப் படித்து வருகிறார். ரோபோ படிப்பை எடுத்துப் படிப்பதற்குச் சிறு வயதிலேயே ரோபோ மீது ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம் என்கிறார் இவர்.

"பள்ளியில படிக்கும்போது பத்திரிகைகளில் வரும் ரோபோ படங்களைப் பார்த்து அட்டைகளில் விளையாட்டா ரோபோ செய்ய ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ரோபோ மீது ஆசையைத் தூண்டியது. 9ஆம் வகுப்பு படிச்சபோது மினியேச்சர் புல்டோசர் செய்தேன். அதை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தபோது, எனது படைப்பைப் பாராட்டி இளம் விஞ்ஞானி விருது கொடுத்தாங்க. இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது" என்று தன் ரோபோக் காதலுக்கான காரணம் கூறுகிறார் பாலாஜி.

பள்ளிப் பருவத்திலேயே ஆளில்லா விமானம் உள்பட குட்டி ரோபோக்களைச் செய்து அசத்தியுள்ளார் பாலாஜி. பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு, தச்சுத் தொழிலாளியான அவரது தந்தையால் இவரை உடனடியாக மேல்படிப்பு படிக்கு அனுப்ப முடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகே மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் சேர முடிந்தது. படித்தது இயந்திரவியல் என்றாலும், இந்தக் கால கட்டத்திலும் உளவு பார்க்கும் ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி., வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ரோபோ எனப் பலவற்றை செய்து இயக்கியும் காட்டியுள்ளார் பாலாஜி.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. ரோபோ மீது பாலாஜிக்கு இருந்த பேராவலைக் கண்ட அக்கல்லூரி நிர்வாகம், பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிக்க அனுப்பியது.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் தெரியாமலேயே அசத்திக்கொண்டிருந்த பாலாஜி, இன்று ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றைக் கச்சிதமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டி வரும் பாலாஜிக்கு, வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் சிறந்த ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை...
Like · ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக