சனி, 10 ஆகஸ்ட், 2013

உடலில் எரி வாயு வெளியாகும் குழந்தைக்குப் பண்டுவம்

( மு.கு. : எங்கும் பரவி வாய்த்துள்ளதால் காற்றுக்கு வாயு என்றும் பெயர்.)

உடலில் தீப்பற்றும் வாயு வெளியாவதே காரணம் : திண்டிவனம் குழந்தைக்கு  முனைப்பான பண்டுவம்
சென்னை : "உடலில் தீப்பற்றும் பாதிப்பு உள்ள குழந்தையின் உடலில் இருந்து, தீப்பற்றும் வாயு வெளியாவதே பிரச்னைக்கு காரணம்' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவர்கள் குழு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

திண்டிவனம், டி.பரங்கிணியைச் சேர்ந்தவர் கர்ணன்; கூலித்தொழிலாளி. இவரது, மூன்று மாத ஆண் குழந்தை ராகுல். ஒரு மாத்தில், நான்கு முறை குழந்தையின் உடலில், திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது; உடலில் தீக்காயங்களும் உள்ளன. பயந்துபோய் கர்ணன் குடும்பத்தினர், கோவில் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், குழந்தையை, நேற்று முன்தினம், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

நோய் பாதிப்பு குறித்து, மருத்துவர்கள் கூறியதாவது: குழந்தையின் உடலில் இருந்து, எளிதில் தீப்பற்றும் வாயு வெளி வருவதால் தான், தானாக உடலில் தீப்பிடிக்கும் நிகழ்வு நடக்கிறது. 300 ஆண்டுகளில், உலகம் முழுவதும் இது போன்று, 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 வயது வரை உள்ளோருக்கும், பாதிப்பு இருந்துள்ளது. அதே போன்ற பாதிப்பு தான், இந்த குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது. நான்கு முறை தீப்பிடித்ததால், 10 சதவீத தீக்காயம் உள்ளது. மருத்துவர்கள் குழு ஆய்வு நடத்தி, தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமடையும். இவ்வாறு, கூறினர்.

அதே நேரத்தில், "குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பிடிக்காது என, கூற முடியாது. எளிதில் தீப்பற்றாத உடைகள் அணிவதும், சமைக்கும் இடங்களுக்கு அருகே, தீப்பிடிக்க வாய்ப்புள்ள பகுதிகளுக்கு போகாமலும் குழந்தையை பார்த்துக் கொள்வது நல்லது' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக