ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

போராடி வென்றேன்! & தன் கையே தனக்கு உதவி!

சட்டத்தின்படிப‌் போராடி வென்றேன்!
மொத்தம், 668 ஆராய்ச்சி க‌் கட்டுரைகள் அள‌ித்தும், பெண் என்ற ஒரே காரணத்தால், பதவி உயர்வு மறுக்கப்பட்ட, உதவி பேராசிரியை வசந்தா: நான், சென்னையில் உள்ள, ஐ.ஐ.டி.,யில், உதவிப் பேராசிரியையாக பணியாற்றுகிறேன். இதுவரை மொத்தம், 668 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறேன். பல பிஎச்.டி., மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறேன். 2006ம் ஆண்டின், வீரதீர செயல்களுக்கான தமிழக அரசின், "கல்பனா சாவ்லா' விருது பெற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி, பல சாதனைகள் செய்தாலும், எனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டே வந்தது. ஆறு, ஏழு ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பித்த ஆண்கள், பேராசிரியர் எனும் தகுதி பெறும் போது, 668 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த நான், இன்னும் உதவிப் பேராசிரியையாகவே பணியாற்றுகிறேன். இதற்கு காரணம், நான் ஒரு பெண்.பெண் என்பவள், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற மனநிலையில் தான், இன்றளவும் இந்த சமூகம் இயங்கி வருகிறது. ஒரு பெண், இந்த அளவிற்கு தகுதிகளோடும், திறமையோடும் இருப்பதா என்ற வன்மமும், ஜாதி வெறியும், அவர்களிடம் இருக்கிறது. இதனால் தான், ஒரு பெண், மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருப்பதை, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறுக்கப்பட்ட பதவி உயர்வுக்காக, பல முறை முயற்சித்தும் பயன் கிடைக்காததால், 1995ல் வழக்கு தொடுத்தேன். 17 ஆண்டுகளுக்கு பின், எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்தது. அதில், 1996ம் ஆண்டில் இருந்து, எனக்கு பேராசிரியை பதவியும், அதற்கான பலன்களையும் வழங்க வேண்டும் என, நீதிபதி நாகமுத்து உத்தரவு பிறப்பித்தார். இத்தீர்ப்பு, பெண்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு, மரண அடி. சரியான நேரத்தில் பதவி உயர்வு கிடைத்திருந்தால், இன்று துணைவேந்தராக பணியாற்றியிருப்பேன். எனக்கு கிடைத்த தீர்ப்பின் எதிரொலியாக, ஐ.ஐ.டி., யில் பேராசிரியர் நியமனங்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் கையே தனக்கு உதவி!
மத்திய அரசின், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய, மாநில அரசிடமிருந்து விருது பெற்ற, சுகந்தி: நான், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில், கேரளத்தில் உள்ள செங்கல் பஞ்சாயத்தின், தலைவியாக இருக்கிறேன். நன்கு தமிழ் பேசுவேன். கேரளத்தில் தொழிற்சாலை இல்லாததால், வேலை வாய்ப்பு குறைவு. வேலை வாய்ப்பை அதிகரிக்க, 100 நாள் வேலை வாய்ப்பிற்கான கூலியில், எந்த கமிஷனும் எடுக்காமல், நாளுக்கு, 180 ரூபாய் வீதம், இரு வாரங்களுக்கு ஒரு முறை வங்கியில் செலுத்துவேன். இதனால், "மாஸ்டர் டிகிரி' படித்தவர்கள் என, அதிகமான பட்டதாரிகள் வேலை செய்ய முன்வந்தனர். முல்லை பெரியாறு பிரச்னையால், தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகள், முற்றிலும் தடைபட்டன. தன் கையே தனக்கு உதவி என்ற ரீதியில், 100 நாள் திட்டத்தில், காய்கறி பயிரிட்டோம். எங்கள் பஞ்சாயத்தில், 21 வார்டுகள் இருக்கின்றன. விவசாய வேலைக்கான சம்பளத்துடன், காய்கறி சாகுபடிக்கான விதைகளை, விவசாய துறை மூலம் இலவசமாக தருகிறேன். எந்த பணியாளரின் வயல்களில் வேலை உள்ளதோ, அந்த வார்டை சேர்ந்த பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து, விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல் என, ஒரு குழுவாக வேலை செய்வர். இன்று, காய்கறிகளுக்காக மற்றவர்களை நம்பியிராமல், நாங்களே உற்பத்தி செய்து சாதித்தோம். இதனால், இந்தியாவிலேயே முதல் முறையாக, 100 நாள் வேலை திட்டத்தில், விவசாயம் செய்யும் பஞ்சாயத்து என்ற பெருமையும், அதிக பட்டதாரிகள் வேலை செய்யும் பஞ்சாயத்து என்ற பெருமையும் பெற்றோம். இதற்காக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், 2012-13ம் ஆண்டுக்கான, "பெஸ்ட் பெர்பார்மன்ஸ்' விருதும்; கேரள அரசின், "மகாத்மா காந்தி புரஸ்கார்' விருதும் வழங்கியுள்ளது. கேரள முதல்வர், எங்கள் பஞ்சாயத்தை பாராட்டி, ஒவ்வொருவருக்கும், 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக