வியாழன், 22 ஆகஸ்ட், 2013

கொள்ளிடம் ஆற்றைக் கைவிட்ட தமிழக அரசு


 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_785934.jpg

கொள்ளிடம் ஆற்றை க் கைவிட்ட தமிழக அரசு: மணலுக்காக க் கிடப்பில் போடப்பட்ட அரிய திட்டம்

கர்நாடகாவிடம் போராடி, பெறும் காவிரி நீர், கொள்ளிடம் வழியாக, கடலில் சென்று கலப்பதை தடுக்கும் திட்டங்களை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை மற்றும் கதவணைகளை கட்டுவதால், எந்த பலனும் இல்லை; பல நூறு கோடி ரூபாய் தான் வீணாகும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், "மணல் குவாரிகளுக்காக, நீர் சேமிப்பு திட்டம் புறக்கணிக்கப் படுகிறது' என, டெல்டா விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.வெள்ள வடிகால்:காவிரியின் வெள்ள வடிகாலாக, கொள்ளிடம் ஆறு உள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், முக்கொம்பில் இருந்து நேரடியாகவும், கல்லணையில் இருந்து, உள்ளாறு வழியாகவும், கொள்ளிடத்திற்கு நீர் அனுப்பப்படுகிறது.இவ்வாறு திறக்கப்படும் நீரில், சிறு பங்கு, கொள்ளிடத்தில் உள்ள கீழணையைத் தாண்டி, வீராணம் ஏரி உட்பட, சில ஏரிகளுக்கு செல்கிறது. பெரும்பாலான நீர், வங்கக் கடலில் கலந்து வீணாகிறது. இந்த வீணடிப்பைத் தடுக்க, கொள்ளிடம் ஆற்றில், மேலணையில் இருந்து கீழணை வரை, 109 கி.மீ., இடைவெளியில், ஏழு கதவணைகள் கட்ட, பல ஆண்டுகளுக்கு முன், பொதுப்பணித் துறை ஆலோசித்தது.
பலன்கள்:

அந்த திட்டத்தின் பலன்களாக - * ஏழு கதவணைகள் மூலம், 44 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். * நீர் வரத்து அதிகம் இருக்கும் ஜூன் முதல், ஜனவரி வரை, ஒவ்வொரு கதவணையிலும், 8 மெகா வாட் வீதம், 56 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
* கொள்ளிடத்தின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடைமடை வரை பாசன வசதி மேம்படும்.
* கீழணை, வீராணம், சேத்தியாதோப்பு அணைகளுக்கு, தொடர்ந்து நீர் வந்த வண்ணம் இருக்கும். இதனால், 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கதவணை கட்ட, நொச்சியம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமராசவல்லி, கோடாலி கருப்பூர், அணைக்கரை ஆகிய, ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஆனால், பொதுப்பணித் துறையில் ஒரு தரப்பினரின் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
எதிர்ப்புகள்:


அவர்கள் எழுப்பிய பிரச்னைகள்:
* தமிழகத்தில், காவிரி ஆறு பாயும் பகுதிகளில், மேட்டூர் மட்டுமே மேடான பகுதி. எனவே, அங்கு அணை கட்டப்பட்டு உள்ளது. மற்ற எந்த இடத்திலும், அணையோ, நீர் தேக்கமோ கட்ட முடியாது.
* அணைகள் கட்டுவதற்கு, 171 கி.மீ., தூரத்திற்கு, கொள்ளிடம் ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டும். இதற்கே, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.
* கரைகளை உயர்த்தினாலும், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரை, கொள்ளிடத்திற்கு கொண்டு வர முடியாது. இதனால், வெள்ளக் காலங்களில், ஆற்றில் இருந்து நீர்பிடிப்பு பகுதிக்கு நீர் செல்லவே வாய்ப்பு இருக்கும். இது, பல பகுதிகளை மூழ்கடித்து விடும்.
* கொள்ளிடம் ஆறு அகன்று விரிந்து இருந்தாலும், கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. அதனால், அணைகள் கட்டினாலும் அதிக நீரைச் சேமிக்க முடியாது.
* நிச்சயம் கட்டியே ஆக வேண்டும் என்றால், 70 தடுப்பணைகளை அருகருகே கட்ட வேண்டும். ஒரு கதவணை அல்லது தடுப்பணை கட்ட, 150 கோடி ரூபாய் வரை செலவாகும். 70 தடுப்பணை கட்ட, 10,500 கோடி ரூபாய் தேவை.
"நிச்சயம் சாத்தியம்':

காவிரி பாசனப் பகுதிகளில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்த பொதுப்பணித் துறை முன்னாள் மேற்பார்வை பொறியாளர், ஸ்ரீரங்கம் நடராஜன் கூறியதாவது: மேட்டூரில் இருந்து காவிரி ஆறுடன், கொல்லிமலையில் இருந்து வரும் ஐயாறு கலந்த பின், முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இதில் ஒன்று காவிரி; மற்றொன்று கொள்ளிடம்.எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இருப்பதால் தான், கொள்ளும் இடம் என பொருள் கொள்ளும் வகையில், "கொள்ளிடம்' என, அழைக்கப்படுகிறது. கடலை பொறுத்தவரை, 13 மணி, 26 நிமிடத்திற்கு ஒரு முறை நீர்மட்டம் உயரும்; குறையும். இதற்கு இடைப்பட்ட சராசரி அளவை வைத்தே, கடல் மட்ட அளவு கணிக்கப்படுகிறது. அந்த வகையில், முக்கொம்பில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றின் மேலணை, கடல் மட்டத்தில் இருந்து, 234 அடி உயரத்தில் உள்ளது; கீழணை, 34 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு இடையில் தான், கதவணைகள் கட்ட வேண்டும்.கீழணைக்கு பிறகு பாசனம் இல்லாததால், அந்த தண்ணீர் கடலில் சென்று கலந்தாலும், கவலை இல்லை. கடல் அலை, 34 அடி உயரத்திற்கு எழுப்பினால் தான், கீழணை பாதிக்கும்; கடல் அலை, 234 அடி உயரத்துக்கு எழும்பினால் தான், மேலணை பாதிக்கும்.இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகே, கதவணை கட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால், எதுவுமே தெரியாமல், "கொள்ளிடத்தில் கதவணை கட்ட முடியாது' என, அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை, எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார். இவ்வாறு, அவர் கூறினார்.
மணல் களஞ்சியம்:

நிலை இப்படி இருக்க, அணைகள் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது மணல் குவாரிகளால் தான் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:கொள்ளிடம் ஆற்றில், எட்டுக்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் உள்ளன. இவற்றில், வரைமுறை இன்றி மணல் அள்ளப்படுகிறது. அதை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.கொள்ளிடம் ஆறு, கடலில் கலக்கும் பழையாற்றில் இருந்து, 20 கி.மீ., தூரத்திற்கு, மணல் குவாரிகளால் கடல் நீர் உட்புகுந்து உள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும். அதுபோல, கொள்ளிடம் ஆற்றில், கதவணை கட்டும் திட்டத்திற்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். பணம் அதிகம் செலவாகும் எனக் கூறி, திட்டத்தை கிடப்பில் போடக் கூடாது.ஒரு முறை முதலீடு செய்தால், பல தலைமுறைகள் இதன் மூலம் பலன் அடையும். கதவணை அல்லது தடுப்பணை கட்டும் மாற்று திட்டம் குறித்து, அரசு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
கொள்ளிடம் ஆறு :

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே, மேலணை எனப்படும் முக்கொம்பில் துவங்கி, தஞ்சை, கடலூர் மாவட்டம் வழியாக, நாகை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில், வங்கக் கடலில் கலப்பதே கொள்ளிடம் ஆறு.முக்கொம்பில் இருந்து கல்லணை வரை, 27 கி.மீட்டர்; கல்லணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கீழணை வரை, 82 கி.மீட்டர்; கீழணையில் இருந்து வங்கக் கடலில் கலக்கும் பழையாறு வரை, 62 கி.மீட்டர் என, மொத்தம் 171 கி.மீ., தூரம் கொள்ளிடம் ஆறு பயணிக்கிறது.

-தினமலர்  செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக