செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பொதுநல மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்: விசயகாந்து

பொதுநல மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: விசயகாந்து






இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு திங்கள்கிழமை விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:
1974-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமை பறிபோய்விட்டது. கச்சத்தீவும் பறிபோய்விட்டது.
இதனால் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் துயரமாக இருந்து வருகிறது.
எனவே இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
1987-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்று கூறி, தமிழர்களுக்கு நிலம், போலீஸ் அதிகாரம் போன்றவற்றை இலங்கை அரசு வழங்க மறுக்கிறது.
அண்டை நாடான இலங்கையுடன் நல்லுறவு கடைப்பிடிப்பது அவசியம் என்ற அடிப்படையில் இந்தியா நடந்து வருகிறது. ஆனால் இலங்கை சுயநலபோக்குடன் செயல்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தனர்.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காக நடைபெறுவதாகும் காமன்வெல்த் மாநாடு.ஆனால் இதில் எந்த ஒன்றையும் இலங்கை பின்பற்றவில்லை.
இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக உலக சமுதாயத்தால் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என விஜயகாந்த் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக