செவ்வாய், 9 ஏப்ரல், 2013

வேளாண் பணியில் விறுவிறுப்பு காட்டும் பொறியியல் பட்டதாரி

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_685822.jpg

வேளாண் பணியில் விறுவிறுப்பு காட்டும் பொறியியல் பட்டதாரி

காரைக்குடி :விவசாயத்தை வேண்டாமென ஒதுக்கி வரும் நிலையில், இன்ஜினியரிங் பட்டம் பெற்றும், பாழ்பட்ட நிலத்தை பண்பட்டு உழுது, அறுவடை செய்து வருகிறார், காரைக்குடி முத்துப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காரைக்குடி முத்துப்பட்டிணத்தை சேர்ந்தவர் சிவபாண்டியன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர்,இன்ஜினியரிங் மெக்கானிக்கல் படிப்பை கடந்த 2010-ல் நிறைவு செய்தார். "ஒயிட் காலர்' வேலைக்காக, சென்னைக்கு பறக்காமல், தந்தை அமல்ராஜ் பார்த்த விவசாயத்தை பார்க்க முற்பட்டார். உடன் பிறந்த சகோதரர்கள் ஏழுபேர், சகோதரிகள் ஐந்து பேர்.காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில், இவர்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில், தற்போது கோடை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

பட்டதாரியான சிவபாண்டியன் கூறும்போது: விவசாயம் செய்வதால் மன நிறைவு பெறுகிறது. கடின உழைப்பு என்பதை, விவசாயத்தில் கற்று கொள்ளலாம். யாரிடமும் கை கட்டி வேலை பார்ப்பதை விடுத்து, நம்மால் 10 பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளதால், நடவு மிஷின், அறுவடை மிஷின், கதிரடிக்கும் மிஷின்என விவசாயத்தில் தற்போது வரை உள்ள, நவீன கருவிகள் வரை இயக்குவேன்.இயற்கை உரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, மாட்டுச்சாணம், மண்புழு உரம் ஆகியவற்றை மட்டுமே போட்டு வருகிறேன். வழக்கமாக முதல் போக அறுவடையில், ஏக்கருக்கு 40 மூடை நெல் கிடைக்கும். கடந்த முறை மழையின்மையால் 20 மூடை கிடைத்தது.தற்போது, இரண்டாம் போகமான கோடை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.கண்மாய் வெட்டுக்கு (நூறுநாள் வேலை) கூலியாட்கள் சென்று விடுவதால், நடவு உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.உழுதவன் கணக்கு பார்த்தால், உழவுக்கு கூட மிஞ்சாது, என்பது தற்போதைய நடைமுறையில் சாத்தியம். இருந்தாலும் மன நிறைவு, இந்த விவசாயத்தில் தான் உள்ளது,என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக