ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தமிழக சிலந்தி மனிதன் சோதிராசு அருவினை

தமிழக சிலந்தி மனிதன் சோதிராசு  900 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்: காயத்துடன்  மருத்துவ மனையில் சேர்ப்பு
 
தமிழக சிலந்தி மனிதன் ஜோதிராஜ் 900 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்: காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
பெங்களூர், ஏப்.7-

தமிழகத்தின் சிலந்தி மனிதன் ஜோதிராஜ், ஜோக் அருவி மலையில் 900 அடி ஏற முயன்றபோது, கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார்.

தமிழகத்தை சேர்ந்த சிலந்தி மனிதன் என்று புகழப்படுபவர் ஜோதிராஜ். 25 வயது ஆன அவர் மலை, உயரமான கட்டிடங்கள் போன்றவற்றில் எந்த பிடிமானமும் இல்லாமல், பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர்.

சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று சிலந்திபோல மலையில் ஏறி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறார்.

குறிப்பாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டை சுவர்களில் அவர் அடிக்கடி ஏறி சுற்றுலா பயணிகளை பரவசத்தில் மூழ்கடிப்பது உண்டு. ஜோதிராஜ், சிமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் அருவி அருகே உள்ள மலையில் சுமார் 900 அடி உயரம் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டார்.

இதற்காக நேற்று காலை ஜோக் அருவி மலைக்கு வந்தார். அவருடைய அண்ணன் பாலகிருஷ்ணாவும் உடன் வந்திருந்தார். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஜோதிராஜின் சாதனையை பார்க்க அங்கு திரண்டனர்.

எந்த பிடிப்பும் இல்லாத ஜோக் அருவி மலையில் ஜோதிராஜ் கிடுகிடுவென ஏறினார். வெறும் கைகளால் மலையை பிடித்தபடி சுமார் 400 அடி உயரம் வரை ஏறியபோது, அவரது பிடி நழுவியது. இதனால் அங்கிருந்து அவர் கீழே விழுந்தார்.

அவர் மின்னல் வேகத்தில் மலையில் ஏறியபோது கைதட்டி உற்சாகம் அடைந்த பொதுமக்கள், அவர் கீழே விழுந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர் கீழே விழுந்தபோது, மலையில் பெயர்ந்து இருந்த ஒரு கல் அவரது தலையின் பின் பகுதியில் வந்து மோதியது.

இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. என்றாலும் ரத்தம் சொட்டச்சொட்ட ஜோதிராஜ் எழுந்து தொடர்ந்து மலையேறினார். நிர்ணயிக்கப்பட்ட 900 அடியை அவர் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தார்.

பின்னர் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையின் பின் பகுதியில் தையல்கள் போடப்பட்டது. அவருடைய அண்ணன் பாலகிருஷ்ணா அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார்.

பாலகிருஷ்ணா கூறும்போது, ஜோதிராஜை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். அவர் நன்றாக இருக்கிறார் என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று சித்ரதுர்காவில் கோட்டை சுவர் மீது ஏறியபோது ஜோதிராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மீண்டும் தனது சாதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக