திங்கள், 18 மார்ச், 2013

தொடர்ந்து முயன்றேன்








தொடர்ந்து முயற்சித்தேன்!  முயன்றேன்

மனம் தளராமல் முயற்சித்து, சினிமா துறையில் வெற்றி பெற்றுள்ள நடிகர், இமான்: நான், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள, திருவழுதி நாடார் விளை கிராமத்தை சார்ந்தவன். என், 12 வயதிலேயே அப்பா இறந்ததால், வறுமையில் தவித்தேன். வருமானத்திற்காக, மளிகைக் கடையில் வேலை பார்த்தேன். சிறு வயதிலேயே, நாடகம் மீது ஆசை வந்தது.ஊரில் நாடகம் போட்டா, முதல் ஆளா நிற்பேன். "காமராஜர்' என்ற பெயரில் நாடகக் குழு ஒன்றை ஏற்படுத்தி, ஊர் பெரியோரிடம் கெஞ்சி கூத்தாடி, திருவிழாக்களில் நாடகம் போட்டேன். "உன் நாடகம் நல்லா இருக்குடா...' என, ஊரார் என்னை சூடேற்றினர். இனி நாடகம் தான் இலக்கு என, முடிவு செய்தேன்.மளிகைக் கடையின், 500 ரூபாய் சம்பளத்தை வைத்து, 1984ம் ஆண்டு நாடகத்தில் நடிக்க, சென்னை வந்தேன். ரயில் கட்டணம், 35 ரூபாய் மட்டுமே என்பதால், கையில் பணம் இருந்தால், உடனே சென்னைக்கு வந்து விடுவேன். முயற்சிகள் பல எடுத்தாலும், நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பின், சென்னையிலேயே தங்கினேன். சினிமா நிறுவனங்களில் கார் கழுவுதல், சாப்பாடு வாங்க, வீட்டு வேலை செய்தல் என, பல எடுபிடி வேலைகள் செய்தாலும், பலன் இல்லை. அண்ணனிடம் பணம் வாங்கி, மனம் தளறாமல், இன்றைய கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில், காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்தேன். 2002ல், திருமணம் நடந்தது. மனைவியின் தாலி முதல், அனைத்தும் அடகு கடைக்கு போனது.
"கலக்க போவது யாரு' என்ற, "டிவி' நிகழ்ச்சியில், நெல்லை பேச்சு வழக்கில் பேசியது அனைவரையும் கவர்ந்து, இமான் அண்ணாச்சி என, அங்கீகாரமும் கிடைத்தது. என் திறமையை அறிந்து, "கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் சேட்டை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வாய்ப்பு தந்தனர்.அட்ட கறுப்பா இருக்கிற என்னை, நிகழ்ச்சி நடத்தும் நடுவரா தமிழக மக்கள் ஏத்துக்குவாங்களா என, சிந்தித்த நேரத்தில், "உங்களால் முடியும்' என, நம்பிக்கை தந்தனர். இன்று, படிப்படியாக முன்னேறி, படங்களில் நடிக்கிறேன். மக்கள் என்னை திரையில் பார்த்தாலே சிரிப்பு வரணும்... அதை இலக்காக வைத்து என் பயணங்கள் தொடர்கின்றன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக