புதன், 7 ஏப்ரல், 2010

சரியான, முறையான, செவ்வையான, தேவையான கருத்துகள். ஆனால் ஆட்சிமொழிச் சட்டத்தை மாற்றிப் புதிய சட்டம் பிற்ப்பிக்காமல் எந்தத் துறையாலும் ஒன்றும் செய்ய இயலாது. அதிகாரமற்ற தமிழ் வளர்ச்சித்துறையும் கைகட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எனினும் சிறப்புச் செய்தியாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Front page news and headlines today

செம்மொழித் தமிழ் மாநாட்டுப் பணிகள் தமிழக அரசால், அனல் பறக்கும் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், தமிழக அரசு, தமிழ் மொழியை தனது ஆட்சிப் பணிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, சரியாக கையாள்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.


கடந்த 1956ம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 1957 ஜனவரி 19ல் கவர்னரின் ஒப்புதலைப் பெற்று, அதே மாதம் 23ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின் படி, தமிழகத்தின் ஆட்சி மொழியாக தமிழ், மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். இதைத் தொடர்ந்து, 1978 ஜூன் 21ல் தமிழக அரசாணை எண் 1134ன் படி, 'தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்!' இன்னொரு உத்தரவு, 'அரசு ஊழியர்கள், தங்கள் இனிஷியலையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்' என்கிறது. இந்த உத்தரவுகள் நடைமுறையிலேயே இல்லை என்பது, அரசு அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்காத குழந்தைக்குக் கூட தெரியும். அப்படியானால், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்தாத, அரசுப் பணியாளர்களை கட்டுப்படுத்த எந்த அரசாணையும் இல்லையா? இருக்கிறது.


அதுபற்றி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது: கடந்த 1982 ஜனவரி 6ல் அரசாணை எண் 24ன்படி, தமிழ் ஆட்சி மொழித் திட்டம், சார்நிலை அலுவலகங்களில் செம்மையாக அமல்படுத்தப்படாவிட்டால், அதை, துறைத் தலைவர்களின் கவனத்துக்கு இயக்குனர் கொண்டு வரலாம். நிலைமையைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, துறைத் தலைவர்களைச் சார்ந்தது. துறைத் தலைவர் அலுவலகங்களில் இத்திட்டத்தின் நிலைமை திருப்திகரமாக இல்லாவிட்டால், அதை இயக்குனர், தலைமைச் செயலகத்தில் உள்ள, துறைச் செயலர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, செயலர்களைச் சேரும். இந்த அரசாணை, தற்போது வரை நடைமுறையில் இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை தெரிவிக்கிறது. அப்படியானால், அரசு அலுவலகங்களில் முழுமையாக தமிழைக் கையாளாத ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 'எந்த நடவடிக்கையும் இல்லை' என்று தான் பதில் கிடைக்கிறது.


இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அளித்த பதில்: தமிழை முழுமையாகக் கையாளாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. துறைத் தலைமை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட சார்நிலை அலுவலகங்களில் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்களாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் அடிப்படையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழின் பயன்பாடு குறித்து அந்தந்த துறைத் தலைவர்கள் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி, குறைகள் சரிசெய்யப்பட அறிவுரைகளும், பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்குனர் பதிலளித்துள்ளார்.


அதாவது, தமிழ் மொழி தொடர்பான அரசாணைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழில் மட்டும் தான் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்பட வேண்டும் என்ற உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் செம்மொழி மாநாடு தேவையா; தமிழ் வளர்ச்சிக்கு என ஒரு துறை தேவை தானா எனும் கேள்வி தான் எழுகிறது. தமிழகத்தில் தமிழ்ச் செம்மொழி வளர்ச்சிக்கு கட்டமைப்பு சரியான முறையில் அமைக்கப்படவும் இல்லை; செயல்படவும் இல்லை என்பது, இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறினார்.


'டாஸ்மாக்' தமிழா? ஆங்கிலமா? 'வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தங்கள் பெயரை தமிழ் எழுத்துக்கள் பிரதானமாகத் தெரியும் படி எழுத வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவு உள்ளது. சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தில், சென்னை மாநகராட்சியும் இந்த உத்தரவை மறு உறுதிப்படுத்தி, 'அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் வியாபித்துள்ள அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் பெயர்ப் பலகைகளில், ஆங்கிலம் தான் பிரதானமாக இருக்கிறது என்பது, தமிழ்க் குடிமகன்கள் அனைவரும் அறிந்த விஷயம். ஒருவேளை, இந்த உத்தரவுகள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்குத் தான் பொருந்துமோ; அரசு நிறுவனங்களுக்கு பொருந்தாதோ, என்னவோ!


திருவள்ளுவர் ஆண்டு எங்கே? கோவையில் நடக்க உள்ள செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய விளம்பரங்கள், மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2010' எனக் குறிப்பிடப்படுகிறது. இதில், 2010 என்பது ஆங்கில ஆண்டு கணக்கு தானே. தமிழக அரசு நடத்தும், உலகத் தமிழ் மாநாட்டில் கூட ஆங்கில ஆண்டைத் தான் குறிப்பிட வேண்டுமா? திருவள்ளுவர் ஆண்டு என்ன ஆயிற்று? திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி இது, 2041. நியாயப்படி, 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2041' என்று தானே விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். போதாத குறைக்கு, பஸ்களிலும், பொது இடங்களிலும், செம்மொழி மாநாட்டின் இலச்சினையுடன் கூடிய விளம்பரத்தில், 'சூன் 23 - 27' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிது நேரம் யோசித்த பிறகே, அது, ஜூன் 23 - 27 எனப் புரிகிறது. இந்த காமெடி எப்போது தான் ஓயுமென்றே தெரியவில்லை. ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவதானால், அதை அதன் உச்சரிப்பிலேயே பயன்படுத்துவது தான் நியாயம். அவ்வாறில்லாமல், அதை அப்படியே தமிழ்ப்படுத்தி, தமிழையும் படுத்தி, ஆங்கிலத்தையும் படுத்துவது அநியாயம். தமிழக அரசே, 'ஆனி 9 - 13' என தமிழ்த் தேதியைக் குறிப்பிடாவிட்டால், வேறு யார் தான் அதைப் பயன்படுத்துவது?


- நமது சிறப்பு நிருபர் -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக