திங்கள், 7 செப்டம்பர், 2009

வன்னிச் சிறுவர்களுக்கு நியூசிலாந்து பால்மா கொடுக்க நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மறுப்பு
பிரசுரித்த திகதி : 06 Sep 2009

நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாடும் தமிழர்களின் மனிதாபிமான பிரச்சனைகளை உலகுக்கு வெளிக்காட்ட உதவி செய்ய வேண்டும் எனக் கேட்கப்பட்டனர்.

இதற்கு அவர்களும் அரசியல் சார்பானது தவிர மற்றவித நடவடிக்கைகளுக்கு தாம் உதவுவதாகவும் சம்மதித்திருந்தனர். எனவேதான் நியூசிலாந்து அணி இலங்கைக்கு சென்றபோது நியூசிலாந்தில் எதுவித எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெறவில்லை.

இந்தச் சந்திப்பின் முடிவாக ஃபொன்ரெரா, வேர்ல்ட் விஷன் மற்றும் நியூசிலாந்து தமிழ் அமைப்புகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முகாம்களிலுள்ள மக்களின் மனித உரிமை சிக்கல்களை வெளிப்படையாக, அடையாளப்படுத்திக் காட்டும் முகமாக அவர்களுக்கு விநியோகிப்பதற்கான பால் மாவை, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையிலுள்ள ஃபொன்ரெராவிலிருந்து வேர்ல்ட் விஷனுக்கு(WORLD VISION) கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மேலாளர் இந்நிகழ்வில் தமது அணியினரைப் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. தமது அணியினரின் உயிர் பாதுகாப்பு பயம் காரணமாகவே தாம் அதை மறுத்ததாக அவர் கூறுகிறார். இதனால் GPJA ஆனது நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட்டது என்ற மனோநிலையில் இருக்கின்ற நியூசிலாந்து தமிழ் அமைப்புக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக GPJA அறிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து, Aotea Square இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் GPJA உம் பங்குபற்றுகிறது. முள் வேலியால் அடைக்கப்பட்ட தடுப்பு முகாம் போன்ற மாதிரியொன்று குவீன் வீதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த முள்வேலி முகாமுக்கு வெளியே கிரிக்கெட் வீரர்கள் தமது வாய்களை ரேப்பினால் மூடி ஒட்டியபடி விளையாடுவதுபோல அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் நியூசிலாந்தில் தமிழர்கள் போராடுவார்கள் எனத் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக