ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-98:ஒப்பந்தம் கையெழுத்தானது!



ஒப்பந்தங்கள் போடுவது என்பது ஒரு நாட்டினது இயல்பு. இந்த ஒப்பந்தங்கள் மக்கள் நலன், நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் பிற இன குழுக்களின் மேலாதிக்கத்தால் முறியடிக்கப்படவும், நாட்டின் நலன் சார்ந்ததென்றால், ஏதேனும் ஒரு விதியைக் காரணம் காட்டி, அந்நாட்டின் ஆன்ம பலம் சிதறடிக்கப்படவுமான முயற்சிகளை இன்றுவரை உலகம் கண்டு வருகிறது.
இலங்கையில் 1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டற்ற வன்முறைகள் ஏவிவிடப்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கமே காரணம். இதன் உச்சம் 1983-இல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள். இதனை உலகமே கண்டித்தது. இலங்கையில் சிறுபான்மையினராக, பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செலுத்தியவராக, பிறிதொரு காலங்களில் சிங்கள ஆட்சிகளில் தலைமை நிர்வாகிகளாக இருந்தவர் தமிழர்கள் என்பதாலும்,
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழகம் என்பதாலும், இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும்போது அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. இதனைக் காரணமாகக் கொண்டு இந்தியா இவ்வினப் பிரச்னையில் தலையிட வேண்டியிருந்தது.
1983-இல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ் இலங்கை வந்தார்; பேசினார். பின்னர் அரசியல் ஆலோசகரான ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் இலங்கையுடன் பேசினர். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இலங்கையின் ஆளும் வர்க்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது நாளையே பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது போலத் தோற்றம் காட்டி, பின்னர் அதை நிராகரித்துவிடும். ஏமாற்றப்பட்டவர்களாக எப்போதும் தமிழர்களே இருந்தனர். வெளிச்சமும் இருட்டும் அவர்களது வாழ்வில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தன.
இலங்கையிலும் ஒப்பந்தங்கள் என்பது புதிதல்ல. பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் (1965) ஆகியவை ஏராளமான விளம்பர வெளிச்சங்களுடன் போடப்பட்டு பின்னர் அவை பொசுங்கிவிட்டன. ஒப்பந்தத்தில் ஈடுபடுகிற அரசாங்கங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டுவராதபடி காரியமாற்றும். இதற்குப் பேச்சுகளும், வன்முறைகளும், குடியேற்றங்களும், சட்டவடிவுகளும், சட்டங்கள் இயற்றுவதும் காரணமாக அமைந்துவிடும். தமிழர்களைக் கீழ்மைப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் காலாகாலமாகத் தொடர்ந்துகொண்டே வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ சம்பந்தப்படுத்தாமல், அவர்களின் விருப்பங்களையும் உரிமைகளையும் கண்டுகொள்ளாமல், போடப்படுகிற ஒப்பந்தமாக (ரோஹனா குணவர்த்தனா - இண்டியன் இண்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - நூலில் கூறியவாறு) இந்திய-இலங்கை ஒப்பந்தம்-1987, அமைந்தது.
ஜூலை 29-ஆம் நாள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரும் வரவேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். வற்புறுத்தவும் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ தனது உடல்நிலையைக் காரணம் காட்டித் தவிர்த்து விட்டார். ராஜீவ் காந்தியின் கட்டாயத்தின்பேரில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று முடிவாயிற்று.
இதே நேரம், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். புத்தபிக்குகளின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களை உசுப்பிவிட்டார். அவர்களும் தங்களது முழு எதிர்ப்பையும் காட்டுவது என்று தீர்மானித்தார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இந்தப் போக்கை உற்று கவனித்துக்கொண்டிருந்தன.
நகரெங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. உச்சகட்ட வன்முறை ஜூலை 27-ஆம் தேதியன்று தலைதூக்கியது. வன்முறையைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளில் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், நகர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலானது. இதற்கிடையே, தீட்சித் பறந்து வந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான இறுதிக்கட்ட வேலைகளைப் பார்வையிட்டார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை பிரபாகரன் உள்ளிட்டோர் அசோகா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை கொழும்பு புறப்பட்டார்.
கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு, அளிக்கப்பட்ட வரவேற்பு சம்பிரதாய ரீதியில் அமையவில்லை. குண்டு துளைக்காத காரில் அவரும் சோனியாவும் ஏறி வெளியே வந்தபோது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தபிக்குகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பெருமளவில் மக்கள் கூடினால், அது பெரும் வன்முறையில் முடியும் என அரசுகளும் நடவடிக்கை எடுக்கும். எனவே, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்க புத்தபிக்குகளைத் தயார்படுத்தி அனுப்பியிருந்தார் ஸ்ரீமாவோ. புத்தபிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது மதப் பிரச்னை ஆகிவிடும் என்று கருதப்பட்டு, அவர்களது ஆர்ப்பாட்டம் கலைக்கப்படவில்லை.
பிரதமர் ராஜீவ் காந்தி ஆளரவமற்ற சாலையில் பயணித்து, நிகழ்ச்சி நடைபெற இருந்த பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைச் சென்றடைந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை ஜெயவர்த்தனாவின் சொந்தக் கட்சியினரே புறக்கணித்தனர். பிரதமர் ஆர்.பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, விவசாய அமைச்சர் காமினி ஜெயசூரியா, விமல கன்னங்கர முதலியோர் அங்கு தலைகாட்டவே இல்லை.
முரண்பாடுகள் நிறைந்த, பிரச்னைகளின் வடிவிலான இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பிரதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டனர்.

நாளை: இந்திய - இலங்கை ஒப்பந்தம்!


கருத்துக்கள்

இந்த ஒப்பந்தம் சீரீ லங்கா அரசாங்கத்திர்க்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையில் இருந்திருக்க வேண்டும். இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மாற்றாக இந்தியாவும், சீரீ லங்காவும் கையெழுத்து ஈட்டது. இந்தியா எப்படி சீரீ லங்காவின் ஒரு பகுதிக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும் .ஈழம் இந்தியாவில் இல்லை அது சீரீ லங்காவில் உள்ளது. ராஜீவும், அவரை சார்ந்த கத்துக்குட்டிகளும் இது ஏதோ வீடீயோகேம் விளையாடுவதாக நினைத்து விட்டார்கள். அந்த சமயத்தில் இருந்த வெளிஉரவு செயலர் வெங்கடேசாஸ்வரன் ஒரு தமிழர் மிகவும் தரக்குறைவாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஏனென்றால் இந்த கத்துக்குட்டிகளின் அரை வேக்காட்டு செயல்களுக்கு அவர் ஒத்துக்க இல்லை. பழுத்த குள்ள நரி ஜெய வர்த்தெனே ராஜீவின் அரசியல் முதிர்ச்சி இல்லாமையை சீரீ லங்காவிர்க்கு சாதகமாக உபயோகப் படுத்தி விட்டார். விளைவு ராஜீவே கொல்லப்பட்டார்.மேலும் ஆயிரத்திர்க்கு மேலான இந்திய ராணுவவீரர்கள் உயிர் இழந்தார்கள். இவ்வளவுபேர் கொல்லப்பட்டும் இன்னும் ஈழ பிரச்சினை தீர இல்லை. இந்தியா இந்த அண்டை நாடான சுண்டைக்காய் சீரீ லங்காவை சமாலிக்க முடிய இல்லை. இந்த பிரச்சின

By Appan
9/6/2009 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக