

ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் எழுச்சிப் பேரணி |
| [வெள்ளிக்கிழமை, 22 மே 2009, 03:19 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கிய பேரணியில் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள், தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சென்னையில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். .. மேலும் இப்பேரணியில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன், ஏ.கே.மூர்த்தி, கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் தமிழீழத்துக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணிக்கு முன்னதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், பின்னர் தீயிட்டு கொளுத்தியும் தமது கண்டனத்தை தெரிவித்தனர். பேரணியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணியின் போது பல இடங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. பேரணியால் மன்றோ சிலை அருகே போக்குவரத்தினை காவல்துறையினர் தடை செய்தனர். மன்றோ சிலையில் இருந்து தொடங்கிய இப்பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக நிறைவடைந்தது.
|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக