திங்கள், 13 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.1)

நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்

[நக்குசலைட்டு வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘சமூகநீதி தமிழ்த் தேசம்’ இதழின் ஆசிரியர். மூன்று அமர்வுகளாக அவருடன் நடத்திய நேர்காணலிருந்து…]

உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்:

என்னுடைய பூர்விகம் சந்திரசேகரபுரம் அருகில் உள்ள நல்லம்பூர் என்கிற சிறிய ஊர். என்னுடைய தாத்தா காலத்திலேயே அங்கிருந்து பிழைப்புத் தேடி திருவாரூர் வந்து விட்டார்கள். அதனால் நான் பிறந்தது படித்தது எல்லாமே திருவாரூரில்தான். என்னுடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்ததும் என்னுடைய அம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் எட்டுப் பிள்ளைகள். என்னுடைய அப்பா திருவாரூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதே பள்ளியில் தான் நானும் படித்தேன். கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில் தொடர்ந்தது.

இதில் அரசியல் ஈடுபாடு எப்போது, எப்படி ஏற்பட்டது?

அப்போது திருவாரூர் கீழ வீதியிலே நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பத்து வயதிலேயே அதை எல்லாம் மிக ஆர்வமாகக் கேட்பேன். என் அப்பாதான் அழைத்துச் செல்வார். பெரியார், அண்ணா, காமராசர், சீவானந்தம், கலைஞர் போன்ற எல்லாத் தலைவர்களும் அங்குப் பேசுவார்கள். ஒப்பீட்டளவில் அங்குப் பொதுவுடைமைக்கட்சிக் கூட்டங்கள் குறைவாகத்தான் நடக்கும். 62 தேர்தல் நடைபெறும் போது என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்போது அரசியல் அறிவு இருந்தது.

1962 இந்திய-சீன எல்லைப் போரின் போது சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணா அது குறித்துத் திருவாரூர் தேரடி பொதுக் கூட்டத்தில் பேசினார். அந்தப் பேச்சு எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாமும் இதே போல் பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் ‘படிக்காத மேதை’, ‘கல்வித் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்’ என்ற வகையில் காமராசரின் மீது எனக்குத் தனி மரியாதை இருந்தது.

திருவாரூரில் அப்போது ஏராளமான படிப்பகங்கள் இருந்தன. தி.மு.க. ஒரு படிப்பகம் ஆரம்பித்தால் மறுநாளே அதன் பக்கத்தில் தமிழ்த் தேசியக் கட்சி ஒரு படிப்பகம் ஆரம்பிக்கும் அளவுக்குப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தி.மு.க. சார்பில் முரசொலி, நம்நாடு, திராவிடநாடு, காஞ்சி என ஏராளமான பத்திரிகைகள் கிடைக்கும். கண்ணதாசன் தென்றல் திரை நடத்திக் கொண்டிருந்தார். காங்கிரசில் நவசக்தி வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு என்ற பத்திரிகை, மா.பொ.சி. நடத்திய செங்கோல் பத்திரிகை என ஏராளமான பத்திரிகைகள் படிப்பகங்களில் படிக்கக் கிடைக்கும். இவற்றை விடாமல் வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது.

என்னுடைய பள்ளிப் படிப்பு முடியும்போது என்னுடைய வயது மிகக் குறைவாக இருந்தது. 14 வயதில் பதினோராம் வகுப்பு முடித்திருந்தேன். அதனால் உடனடியாகக் கல்லூரியில் சேர முடியவில்லை. எனவே 65ஆம் வருடம் முழுவதும் படிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆண்டு அது. திருவாரூரில் அப்போது கல்லூரி எதுவும் இல்லாததாலும், வேறு சில காரணங்களாலும் அப்பா தன்னுடைய வேலையை வலங்கைமானுக்கு மாற்றினார். நாங்கள் வலங்கைமானுக்கு குடிபெயர்ந்தோம். அந்த ஓராண்டில் தான் என் வாழ்க்கையின் பாதை திசைமாறியது.

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு எனப் பல்வேறுபட்டவற்றில் எனக்குத் தெளிவு கிடைத்தது. அதே நேரத்தில் நிறைய கேள்விகளும் எழுந்தன. இதனால் நான் ஏதாவது கட்சியில் சேர்ந்து விடுவேனோ என்று பயந்து போன என் அப்பா இந்தியாவில் இருக்கிற எல்லாக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எனக்காக விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்னைத் தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விட்டார். என்னுடைய பாதை திசைமாறி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத் தட்டச்சுப் பள்ளியில் இரண்டு மடங்கு காசு கொடுத்து அதிக நேரம் நான் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

அந்தத் தட்டச்சுப் பயிற்சி பள்ளி நடந்த இடம் வலங்கைமான் கம்பிக்காரத் தெருவில் ஒரு வீடு. வீட்டுக்கு உரிமையாளர் அமீர்சான். அவரோடு நட்பு ஏற்பட்டது. அவர் உறுதியான சாதி, சமய மறுப்பாளர். என்னுடைய கேள்விகளை அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன். அவர்தான் என்னை நாத்திகனாக மாற்றினார். வீட்டின் வெளியே ஒரு பந்தல் போட்டு அதில் பத்திரிகைகள் வாங்கிப் போடுவார். அதற்கு ‘நாணய நிரூபண படிப்பகம்’ என்று பெயர் வைத்திருந்தார். இன்றைக்கும் இந்தப் பணியை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். பலவித மருத்துவ முறைகளையும் கற்று ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ உதவிகளும் செய்து வந்தார். சமகாலச் சிக்கல்கள் குறித்து நிறைய துண்டறிக்கைகள் வெளியிடுவார். அவர் எனக்குள் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினார். அதன் விளைவாக நடை, உடை, உணவு என எல்லாவற்றிலும் அவரைப் போலவே மாறினேன்.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 294

ஞாயிறு, 12 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம்

நேற்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு அவர்களின் கீழ்வெண்மணி பற்றிய கட்டுரையை அன்பர் நலங்கிள்ளியின் தமிழாக்கத்தில் பகிர்ந்தேன். ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் திரும்பப் திரும்பப் படித்த போதும் சீர்மை செய்த போதும் இந்தக் கட்டுரையின் அருமையையும் சந்துரு அவர்களின் பெருமையையும் மீண்டும் புதிதாய் உணர்ந்தேன்.

தாழி அன்பர்கள் எதைப் படித்தாலும் படிக்கா விட்டாலும் சந்துருவின் இந்தக் கட்டுரையை ஆங்கிலம் அல்லது தமிழில் அல்லது இரு மொழிகளிலும் படிக்க வேண்டும் என்று அழுத்தமாக வேண்டிக் கொள்கிறேன். படித்து விட்டு உங்கள் பார்வைகளையும் வினாக்களையும் எழுதுங்கள். சந்துரு அவர்களின் கட்டுரை சட்ட நோக்கிலும் சமூகநீதி நோக்கிலும் மிகச் சிறந்த ஒளிவிளக்கம் என உறுதியாக நம்புகிறேன். இந்தக் கட்டுரையின் செய்திகளைப் பரவலாகக் கொண்டுசென்று, இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒரு நாள் சென்னை உயர்நீதி மன்றமும் இந்திய உச்ச நீதிமன்றமும் வெண்மணி ஈகியரிடம் மன்னிப்புக் கோரும் அழுத்தத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படி நடந்தால் அது சந்துருவின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சந்துரு அவர்களது கட்டுரையின் முகன்மைக் கூறுகளை எளிமையாக விளக்கி எழுதித் தாழியும் அந்த வெற்றியில் கொஞ்சத்தை ‘சுரண்டிக் கொள்ள’ வாய்ப்பளிபீர்களா?

—

இராம் புணியானி எழுதுகிறார்(Demanding a New Constitution: Why?)

(தமிழாக்கம்: சுதா காந்தி)

ஏன் வேண்டுமாம் புதிய அரசமைப்பு?

முனைவர் விவேக்கு தேவராய் இந்தியத் தலையமைச்சரின் பொருளியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார். பல வகையிலும் அதிகார மையங்களுக்கு மிக நெருக்கமானவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அவர் அண்மையில் (ஆகட்டு 15) முக்கியமான ஒரு செய்தித்தாளில் எழுதிய கட்டுரையில் இப்போதைய அரசமைப்பின் தொடர்ச்சி குறித்துக் கேள்வி எழுப்பினார். பல முறை திருத்தப்பட்டது எனபதால், அவரைப் பொறுத்த வரை இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே அரசமைப்பு அல்ல, அவரது கருத்துப்படி, நிருவாகத் துறை இதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாலும், அது தன் காலத்தைக் கடந்து விட்டதாலும், புதிய அரசமைப்பிற்கு நாம் அணியமாக வேண்டுமாம். மிக முக்கியமாக, இந்த அரசமைப்பு ஒரு குடியேற்ற(காலனிய) மரபாம்! அவர் அதன் பல்வேறு வழிவகைகளையும், குறிப்பாக குமுகியம் (சோசலிசம்), உலகியம் (மதச்சார்பின்மை), நீதி, நிகர்மை, தன்னுரிமை (சுதந்திரம்) ஆகிய விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். தேவராய் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து அதிகாரமுறைப்படி தலைமையமைச்சர் அலுவலகம் விலகி நிற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசமைப்பு குறித்து ஐயங்களும் எதிர்ப்பும் கிளப்பும் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

ஏற்கெனவே இந்து வலதுசாரிக் கருத்தியலர்களும் தலைவர்களும் இந்த அரசமைப்பு ஆங்கிலேயர்தம் 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் அடிப்படையில் குடியேற்ற வழிவந்தது என்றும், இது இந்திய விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வலதுசாரி இந்துத் தேசியவாதிகள் இந்த அரசமைப்பில் ஒருபோதும் ஆறுதலாக இருக்கவில்லை. உண்மையில் இது 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தின் தொடர்ச்சி அன்று, ஆனால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடினமான விவாதங்களுக்குப் பிறகு ஆக்கப்பெற்று, இந்திய அரசமைப்பின் வரைவுக் குழுத் தலைவர் முனைவர் அம்பேத்துகரால் செப்பமுற முன்வைக்கப்பட்டதாகும். அரசமைப்புப் பேரவையின் தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாதும், அரசமைப்புப் பேரவையின் (CA) பெரும்பாலான உறுப்பினர்களும் இந்திய மக்களின் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் இனங்காணப்பட்டவர்கள். ‘இந்தியா ஒரு தேசமாக’உருப்பெறுவதிலும் இந்தப் போராட்டம்தான் முகன்மைப் பங்காற்றியது.

பன்மைத் தன்மையும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் கொண்ட இந்தியத் தேசியத்திற்காக நின்றவர்களுக்கு மாறாக, மதவாதத் தேசியவாதிகள் இந்த மாபெரும் போராட்டத்திலிருந்து விலகி நின்றதோடு, இந்த வெகுமக்கள் இயக்கத்தில் மலர்ந்த விழுமியங்களையும் எதிர்த்தனர். அரசமைப்புப் பேரவை இந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றி மூன்று நாள் கழித்து, 1949 நவம்பர் 30ஆம் நாள், அதிகாரமுறையல்லாத ஆர்எசுஎசு ஊதுகுழலாகிய ஆர்கனைசர் தனது ஆசிரியவுரையில் அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்து, மனுசுமிருதியை அரசமைப்பாக்குமாறு கோரியது. அது கூறியது: “ஆனால் நமது அரசமைப்பில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசமைப்புசார் வளர்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுவின் சட்டங்கள் சுபார்டாவின் லைகர்கசு அல்லது பாரசீகத்தின் சோலோனுக்கு முன்பே எழுதப்பட்டவை. மனுசுமிருதியில் கூறப்பட்டுள்ள அவரது சட்டங்களை இன்று வரை உலகம் வியந்து போற்றுகிறது. அவற்றுக்கு விரும்பியே கீழ்ப்படிவதையும் ஏற்று நடப்பதையும் காணலாம். ஆனால் நம் அரசமைப்புப் பண்டிதர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டன்று.“

இந்து வலதுசாரியின் எழுச்சியுடன் அரசமைப்பிற்கான எதிர்ப்பு மிகவும் கடுமையாக வெளிப்படத் தொடங்கியது. 1998இல் அடல் பிகாரி வாசுபாய் அரசு பதவிக்கு வந்ததும், அரசமைப்பை மீளாய்வு செய்ய வெங்கடாசலையா ஆணையத்தை அமர்த்தியது. ஆணையத்துக்குக் கிளம்பிய வலுவான எதிர்ப்பு பாஜக தலைமையிலான கூட்டணி அதைச் செயலாக்குவதற்கு ஊறாயிற்று.

அரசமைப்புச் சட்டத்துக்கு இந்த எதிர்ப்பு என்பது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. கே. சுதர்சன் ஆர்எசுஎசுஇன் சற்சங்கச்சலக்கு (உச்ச சர்வாதிகாரி) ஆன போது, இந்திய அரசமைப்பு மேற்கத்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், மனுசுருதியைக் குறிக்கும் இந்தியப் புனித நூல்களின் அடிப்படையில் அதனை மாற்ற வேண்டும் என்றும் வெளிப்படையாக அறிவித்தார். “அரசமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்றுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை, ஏற்கெனவே நூறு முறை திருத்தம் செய்துள்ளோம்,” என்று அவர் வலியுறுத்தினார், மேலும் பிரான்சு நான்கு முறை திருத்தம் செய்துள்ளது. இதில் புனிதம் எனக் கருத எதுவும் இல்லை. உண்மையில், நாட்டின் பெரும்பாலான நலிவுகளுக்கு இதுவே வேர்க் காரணம்.”

மீண்டும் மீண்டும் இதே கதைதான். பாசக-ஆர்எசுஎசு தரப்பிலிருந்து யாராவது ஒரு பிரமுகர் இப்படிப் பேசுவது வாடிக்கை ஆகி விட்டது. அண்மையில் ஐ.என்.டி.ஐ.ஏ. (இந்தியா) என்ற எதிர்க்கட்சிக் கூட்டணி உருவான போது, இந்த அரசியலிலிருந்து பலரும் ஆங்கிலேயர் கொடுத்த சொல் என்ற அடிப்படையில் அதை எதிர்த்து வந்தனர். பாசக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நரேசு பன்சால், அரசமைப்பில் இந்தியா என்ற சொல் இடம்பெறுவதையே அடிமைத்தனத்தின் அடையாளம் என்று சொல்லிக் கேள்விக்குள்ளாக்கினார்.

ஆர்எசுஎசு பொதுச் செயலாளர் தத்தத்துரேயா ஃகொசாபலே சொல்வது போல், இது மனங்களைக் குடியேற்ற நீக்கம் செய்வது என்ற அவர்களின் கருத்தோடும் தொடர்புடையதாகுமாம்! “ஐரோப்பிய மையச் சிந்தனைகளும், கருத்தியல்களும், நடைமுறைகளும், மேற்கத்திய உலகக் கண்ணோட்டமும் பல பத்தண்டுகளாக நம்மை ஆண்டு வந்தன. சுதந்திர தேசம் அவற்றை முற்றாகக் கைவிடவில்லை.

தேவராயும் ஆர்எசுஎசு கும்பலும் அரசமைப்பை எதிர்க்கும் புள்ளியில் இணைந்தனர். ஆர்எசுஎசு கூட்டம் அரசமைப்பின் மேற்கத்தியத் தன்மையில் கூடுதலாகக் கவனம் குவிக்கும் அதே நேரத்தில், தேவராய் தன்னுரிமை (சுதந்திரம்), நிகர்மை (சமத்துவம்), உலகியம் (மதச்சார்பின்மை) போன்ற விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும் போது, குட்டு வெளிப்பட்டு விடுகிறது. குடியேற்ற வழிவந்த மரபு என்ற வாதுரை மேற்கு ஆசிய நாடுகளின் ‘முசுலிம் சகோதரத்துவம்’ போன்ற அமைப்புகளின் கருத்தை ஒத்ததாகும். இந்தக் கருத்து தன்னுரிமை, நிகர்மை ஆகிய விழுமியங்களை அவை மேற்கத்திய விழுமியங்கள் என்று சொல்லி எதிர்க்கிறது. இப்போதுள்ள ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் தேவராய் போனறவர்கள் நிகர்மை எனும் கருத்தால், பல்வேறு மதங்கள், சாதிகள், பாலினங்களைச் சேர்ந்த மக்களிடையே நிகர்மை எனும் கருத்தால் கருத்தாக்கத்தால் கலக்கமடைந்துள்ளனர்.

மனுசுமிருதியின் ஊழியைக் கடந்து போன பொற்காலம் என்று ஆர்.எசு.எசு கூட்டம் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏனெனில் அக்காலத்தில் சாதி, பாலினப் படிநிலையமைப்பு சமூகத்தின் மையமாக இருந்தது. மெய்தான், குடியேற்றம் சமூகக் கட்டமைப்பை மிக ஆழமாக மாற்றுவதற்கான பாதையைத் திறந்து விட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சாதி, பாலினப் படிநிலையமைப்பின் பிடி தளரத் தொடங்கியது, இந்தக் காலகட்டத்தில்தான் தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடிந்தது (நாராயண் மேகாசி லோகண்டே, தோழர் சிங்கர்வேலர்). இந்தக் காலக்கட்டத்தில்தான் பகத்து சிங்கு போன்றவர்கள் ஆளும் வருக்கத்தின் சுரண்டலை வெளிப்படுத்தி அதனை ஒழிக்க வேண்டும் என்றார்கள்.

குடியேற்றக் காலத்தைக் கருப்பு வெள்ளையாகப் பார்க்க முடியாது. அது சாம்பல் நிறச் சாயல்களையும் கொண்டிருந்தது. குடியேற்ற ஆற்றல்கள் நமது செல்வத்தைச் சூறையாடிய போதே, அவர்கள் திறந்து விட்ட நிறுவனங்கள் “மனித (ஆண் பெண்)” நிகர்மையைத் தெளிவாக முன்வைத்தன. ஆனால் ஆர்எசுஎசு கூட்டத்தாரும் தலைமையமைச்ச்சரின் ஆலோசகரும் இந்த அரசமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு வெவ்வேறான வாதங்களை முன்வைத்து வருகின்றனர்; அடிப்படையில் அவர்கள் நிகர்மையை எதிர்க்கிறார்கள், பகத்து சிங்கு போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விழுமியங்களும், அம்பேத்துகரும் பொதுவான தேசிய இயக்கமும் தொடுத்த போராட்டங்களும் இலட்சியச் சின்னமாகப் பொறித்துக் கொண்ட நிகர்மையை எதிர்க்கின்றார்கள்.

1990கள் வரை நாடு நிகர்மைக்கான போராட்டப் பாதையைத் தொடர முயன்றது. இந்திய அரசமைப்பை அச்சாணியாகக் கொண்டு நேருவின் புதுமக்காலக் கொள்கைகள் செயல்புரிந்தன. இப்போது நாம் பின்னோக்கி நகர்வது போல் தெரிகிறது. கோயிலும் பசுவும் அரங்கை ஆளும் நிலையில், பழங்கால விழுமியங்களையும் (நாகரிக விழுமியங்கள் என்ற முத்திரையோடு) கடந்த காலம் பற்றிய பிராமணிய விளக்கங்களையும் துணைக்கொண்டு ஏற்றத்தாழ்வு நோக்கிய பாதை பாவப்படுகிறது. உலகின் ஆகப்பெரும் வெகுமக்கள் இயக்கமான ‘இந்திய விடுதலைப் போராட்டத்தின்’ ஊடாக நாம் சாதித்ததைக் குலைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

இந்திய அரசமைப்புக்கு எதிராகக் கிளப்பப்படும் எல்லா எதிர்ப்புகளுமே ஏற்றத்தாழ்வினை (சாதி, வர்க்க, பாலின ஏற்றத்தாழ்வினை) மதம் (பிராமணியம்) புனிதப்படுத்திய காலத்திற்கு நாட்டைப் பின்னுக்குத் தள்ளும் சூழ்ச்சியே தவிர வேறன்று.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 294

சனி, 11 நவம்பர், 2023

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

 

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?





அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள் ஆகியவற்றின் ஆசிரியர் பெயர், நூலின் பெயர், ஆண்டு, பதிப்பகப் பெயர், முகவரி, மின்வரி, அலைபேசி எண், நிலைபேசி எண் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

நூல்களின் ஐந்து படிகளைத் திருக்குறள் ஆய்வு நூல் வெளியீடு அல்லது திருக்குறள் ஆய்வு நூல் அறிமுகம் என நேர்விற்கேற்ப உரிய தலைப்பைக் குறிப்பிட்டுப் பின் வரும் முகவரியைக் குறிக்க வேண்டும். மே/பா இயக்குநர் ஆசியவியல் நிறுவனம் * INSTITUTE OF ASIAN STUDIES செம்மண்சேரி, சோழிங்க நல்லூர் சென்னை 600 119 தமிழ்நாடு. பேசி: 044-24501851, 24500831 பழைய நூல்களாயின் வரும் மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும் புதிய நூல்களாயின் வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024 ஆம் நாளுக்குள்ளும் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் நூலறிமுகத்திற்கும் வெளியீட்டிற்கும் அனுப்பும் நூல்களின் மின்வடிவுகளை உரைக்கோப்பு வடிவிலும் பொதிவுக்கோப்பு(பி.டி.எஃப்.) வடிவிலும் thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

வெளியிடப்படும் புதிய நூல்களின் அட்டைக்கு அடுத்துள்ள முதல் பக்கத்தில் இந்நூல், சிகாகோ நகரில், சிகாகோ தமிழ்ச்சங்கம், ஆசியவியல் நிறுவனம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா ஆகியன இணைந்து பங்குனி 23-25, 2055 /ஏப்பிரல் 5-7, 2024 ஆகிய நாள்களில் நடத்திய ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் போது வெளியிடப்பெற்றது/அறிமுகப்படுத்தப் பெற்றது என நேர்விற்கேற்பக் குறிக்கப்பெறுவது சிறப்பாகும்.

5 ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டில் இதற்கென ஓர் அமர்வு ஒதுக்கி வைக்கப்படும். மாநாட்டிற்கு வருபவர்கள் நுழைமம்(விசா) பெறுவதற்காகத் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், நிலைபேசி எண், கடவுச்சீட்டு எண், கடவுச்சீட்டு முடியும் நாள் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கும் contact@thirukkuralconference.org மின்வரிக்கும் தெரிவிப்பின் விழாக் குழுவினர் அழைப்பு மடலை அனுப்பி வைப்பர். வெளியீட்டாளர் அல்லது பதிப்கத்தாரும் பங்கேற்கலாம். நேரில் வர இயலாதவர்களும் நூல்களை உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்கலாம். மாநாட்டின் பொழுது உணவு, உறையுள், உள்ளூர்ப் போக்குவத்து முதலிவயவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். தத்தம் இருப்பிடங்களில் இருந்து சிகாக்கோ சென்று வர ஆகும் பயணக் கட்டணங்களை அவரவர் நிறுவனச் செலவில் அல்லது சொந்தச் செலவில் அல்லது வேறு வகையில் ஏற்க வேண்டும். மாநாட்டுப் பேராளர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு வழங்க விரும்புவோர் முன்னதாகத் தெரிவித்து விட்டு, மாநாட்டு வருகையின்போது கொணர வேண்டும்.

நூல் வெளியீட்டு அல்லது நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்க இருப்போர், நிகழ்நிரல் திட்டமிடுவதற்காக 30.11.23 ஆம் நாளுக்குள் தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் ,

நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு ‘

குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4

 


(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 3/4 – தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற

அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)

கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 4/4


“இந்தக் கால தாமதம் விசாரணை நீதிமன்றத்தில் புலனாய்வு ஆய்வாளரின் கவனத்துக்குக் குறிப்பாகக் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மையே. புலனாய்வு ஆய்வாளர் மேல்முறையீட்டில் வாதங்கள் நடைபெற்ற காலம் முழுதும் இந்த நீதிமன்றத்தில் இருந்த காரணத்தால், அவரிடம் மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கலந்தாலோசித்து, இந்த மிதமிஞ்சிய கால தாமதத்துக்கு அவருடைய பார்வையிலிருந்து காரணங்கள் என்னவென்று அறிந்து, எங்களிடம் தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம். புலனாய்வு அதிகாரியிடம் கலந்தாலோசித்த பிறகு மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கால தாமதத்துக்கு எங்களிடம் இரு விளக்கங்கள் கூறினார். முதல் சான்றாவனத்தை விரைவாக சார்-நடுவரிடம் கொடுக்க வேண்டுவது குறித்து விதிகள் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. என்பது முதல் விளக்கம். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“முதல் சான்றாவணம் கிடைத்ததாகச் சொல்லப்படும் இரவு 11 மணிக்கே சிறப்புத் தூதரை அனுப்பியிருந்தால், அவரால் அதனை நாகப்பட்டினத்துக்குப் பேருந்திலோ நடந்தோ சென்று, 26.12.1968 அதிகாலையில் சார்-நடுவரிடம் சேர்த்திருக்க முடியும். பெரும்பாலான உயரதிகாரிகள் 26.12.1968 காலை 09.30 மணியளவில் கிராமத்துக்கு வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குப் பிறகாவது புலனாய்வு அதிகாரி ஊரின் சட்ட ஒழுங்குச் சுமையிலிருந்து ஆசுவாசமாகி, விரைவு அறிக்கையை சார்-நடுவரிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும்.”

இயல்பாகக், குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது, புலனாய்வு அதிகாரியைச் சில கேள்விகளுடன் நீதிமன்றத்தில் இருக்கச் சொல்லி விட்டு, ஆணையில் அவரது மறுமொழிகளை நிராகரித்தது முறையன்று. இதேபோல், விசாரணை நீதிமன்றம் பெற்றுக் கொள்ளாத அந்த ஆவணத்தை எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் மேலமை நீதிமன்றம் பெற்றுக் கொள்வதும் பெரிதும் முறையற்றதே. இருநீதியராயம் 06.04.1973 அன்று பிறப்பித்த பொது ஆணையின் வழியாக கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்றவர்களும் செய்த மேல்முறையீட்டை ஏற்று, அரசு செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு அரசமைப்புச் சட்டம் உறுப்பு 132இன் பேரில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதற்குச் சான்றிதழ் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று, 1976இல்தான், அதாவது தீர்ப்புக்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கழித்துத்தான் மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டது. சிறப்பு அனுமதி விண்ணப்பத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் பின்வருமாறு ஆணையிட்டது:

“நாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு தஞ்சாவூர்ப் பிரிவு அமர்வு நீதியர் உடனடியாகவே மேலே குறிப்பிட்ட எதிர்விண்ணப்பர்களைப் கைது செய்யப் பிணை கிடைக்காத பிடியாணை பிறப்பித்திடுக.”
இந்நிலையில் கைது செய்யபப்டுவோம் என்றஞ்சி கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்ற எண்மரும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, தண்டனையை இடைநிறுத்தி வைக்கும்படிக் கேட்டனர். ஆனால் உயர் நீதிமன்றம் 03.02.1976 நாளிட்ட ஆணையில் இத்தகைய தீர்வு வழங்கும் அதிகாரமேதும் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி அம்மனுவை நிராகரித்து விட்டது. (காண்க: 1977 Cri L J 50).

இதனிடையே, கோபாலகிருட்டிண நாயுடு 14.12.1980 அன்று இரிஞ்சூர் ஊரில் கொலை செய்யப்பட்டார். இட(து) தீவிரவாதக் கருத்துகளில் நாட்டம் கொண்ட சிலர் இதை செய்ததாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி கோபாலகிருட்டிண நாயுடுவை முதல் எதிர்விண்ணப்பராகக் கொண்ட அரசின் மேல்முறையீடு நிலுவையிலிருந்த உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. கீழ்வெண்மணிக் கொலையை அனைவரும் மறந்து விட்டனர். எதிரிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

இறுதியாகத், தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீடு (Crl.A.17/1976) நீதிமன்றம்-7 முன்பு பட்டியலிடப்பட்டது. அங்கு இந்த வழக்கை நீதியர் எசு. இரங்கநாதன், நீதியர் கே. இராமசாமி ஆகியோர் விசாரித்தனர். நீதியர் இரங்கநாதன் வாழ்நாள் முழுதும் வருமான வரிப் பொருண்மைகளையே புழங்கி வந்தவர். அவர் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். உயர் நீதிமன்றத்திலிருந்த இந்தப் பதவிக் காலத்திலுங்கூட பெரும்பாலும் வருமான வரி வழக்குகளை மட்டுமே பார்த்துக் கொண்டவர். சமூக நீதிப் பொருண்மைகளில் தீர்ப்பு வழங்கிப் பெயர்பெற்ற நீதியர் கே. இராமசாமி அப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். அவர்தான் அந்த ஆயத்தில் இளையவராக இருந்தார்.
தமிழ்நாடு அரசு ஒரு மூத்த வழக்கறிஞரை அமர்த்தியிருந்த போதிலும், உள்ளபடியே தொடக்கத்தில் 31.10.1990 அன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, (பதிவுருப் படி) மாநில அரசு வழக்கறிஞர் திரு எம்.வி. கிருட்டிணமூர்த்தி கிட்டத்தட்ட 45 நிமிடம் வாதிட்டார். அடுத்த நாள் (01.11.1990) திரு யு.ஆர். இலலித்து ஏறத்தாழ 15 நிமிடம் வாதிட்டார். இதன் தொடர்ச்சியாக, எதிரியின் வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைத்து, பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். நீதிமன்றம் 01.11.1990 அன்று வெளியிட்ட நடவடிக்கைப் பதிவை எடுத்துக்காட்டுவது பயனுள்ளதாக இருக்கும்:-
“வழக்கறிஞர் வாதம் கேட்டு நீதிமன்றம் பிறப்பித்த ஆணை
வழக்கறிஞர் திரு வி. கிருட்டிணமூர்த்தி பிற்பகல் 03.15 மணிக்கு வாதிடத் தொடங்கி, நீதிமன்றம் வேலைநேரம் முடியும் 4 மணி வரை வாதத்தை முடிக்கவில்லை. பொருண்மை பகுதியளவு கேட்டதோடு நின்றது.
உருப்படி எண் 13 நீதிமன்ற எண் 6
31.10.1990 கோரம் மற்றும் முன்னிலை: விண்ணப்பருக்காக மூத்த வழக்குரைஞர்
திரு யுஆர். இலலித்து அவர்களின் வாதுரை
மதிப்பிற்குரிய வழக்குரைஞர் திரு யு.ஆர். இலலித்து தன் வாதுரையை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி, 12.15 மணிக்கு முடித்தார். பிறகு வழக்குரைஞர் திரு கே.ஆர். சவுத்ரி வாதிடத் தொடங்கி பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். விசாரணை முடிவுற்றது. நீதிமன்றம் ஒப்பமிட்டுக் கோப்பிலிட்ட ஆணையின் அடிப்படையில் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.”

இவ்வகையில் இறுதியாகப் பன்னாட்டளவில் செய்தியாகி, ஒவ்வொருவரின் மனச்சான்றையும் உலுக்கிய வழக்கை இரண்டு மணி நேரத்தில் மூன்று பக்க ஆணை எழுதி உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. அரசின் வாதங்கள் 10 வரிகளில் விவரிக்கப்பட்டன. எதிர்த்தரப்பு வாதங்கள் 14 வரிகளில் சுருக்கித் தரப்பட்டன. பார்த்துப் பார்த்து அலுத்துப் போன உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு சாதாரணக் குற்றவியல் மேல்முறையீட்டைப் போல் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சுருக்கமான ஆணையை எடுத்துக் காட்டத்தான் வேண்டும்: –

“நாங்கள் அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அளித்த விவரமான தீர்ப்புகள் நெடுகிலும் நடத்திச் செல்லப்பட்டுள்ளோம். நாங்கள் இரு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டோம். இந்த வழக்கு நடைபெற்ற சூழல்களுக்கு மதிப்பளித்து, அது பற்றி எங்களுக்குள்ள கருத்து என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் உறுப்பு 136இன் கீழ் இந்த முறையீட்டில் தலையிடுவதற்கு அடிப்படைகள் ஏதுமில்லை. எதிரிகளில் சிலருக்கு இதச 307, 326, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் அமர்வு நீதிமன்றம் குற்றத் தீர்ப்பு வழங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல், எதிரிகளை விடுவிப்பது தொடர்பாக இரு கீழமை நீதிமன்றங்களும் ஒரே மாதிரி முடிவுகளைக் கண்டடைந்துள்ள வழக்கு இது. திரு சவுத்திரி சரியாகக் குறிப்பிட்டது போல், அந்தக் கொடுநாளில் நடந்த சம்பவங்களை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், எதிரிகள் மேல் வைக்கப்பட்டிருக்கும் வழக்கில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்துக் கொண்டதில் தவறெதுவும் இருப்பதாகச் சொல்லி விட முடியாது. நாங்கள் சாட்சியங்களை விரிவாக அலசவில்லை. ஏனென்றால் தரவிலிருந்து இறுதியில் உண்மை என்ன என்று முடிவுக்கு வருவதுதான் இங்கு சிக்கலுக்குரியது. தரவுகளைக் கவனமாக ஆய்ந்து பார்த்த பிறகு, உயர் நீதிமன்றம் இட்ட விடுவிப்பு ஆணை பதிவேறிய தரவுகளால் உறுதி செய்யப்படவில்லை என நாங்கள் ஒப்புக் கொள்வது கடினம்.”

மேற்கண்டவாறு நீதிமன்றம் கண்டடைந்து சொன்னவற்றிலிருந்து, நிலக்கிழார்கள் 42 தணிந்த (தலித்து) மக்களைப் படுகொலை செய்த குற்றத்தை உயர் நீதிமன்றம் விசாரித்து அவர்களை விடுவித்துள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 22 ஆண்டு கழித்து ஒரு பூடகமான ஆணை மூலம் உறுதி செய்துள்ளது என்றும் யாருக்காவது தெரிய வருமா?

வரலாற்றில் நடந்த பெரிய பெரிய தவறுகளுக்குச் சில அரசாங்கங்களே நீண்ட காலத் தாழ்வுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளன. சாலியான்வாலாபாக்கு படுகொலைக்காக அது நடந்து ஒரு நூற்றாண்டு கழித்து பிரித்தானிய அரசு வருத்தம் தெரிவித்தது. சபல்பூர் ஏடிஎம் வழக்கில் (1978) ஆட்சித் துறை அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்துள்ளது என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது என்றாலும், அவ்வழக்கிலும் கூட ஓர் உச்ச நீதிமன்ற நீதியர் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். அடுத்து வந்த காலத்தில் 2018 ஆதார் அட்டை வழக்கில் அந்தத் தீர்ப்பே சட்டப்படி தவறு எனத் தீர்ப்பாயிற்று.

1968இல் கீழ்வெண்மணியைச் சேர்ந்த அப்பாவி தணிந்த(தலித்து) வேளாண் தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி இன்றளவும் களையப்படவில்லை. நீதிமன்றங்கள் தமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை மீட்டுக் கொள்ளவும் விரும்பினால், நிலக்கிழார்கள் தமது வருக்க வலிமையைக் கொண்டு தப்பித்து, நீதித்துறையை இருளில் தள்ளிய இவ்விரு மானக்கேடான தீர்ப்புகளுக்காகவும் வருத்தம் தெரிவித்து அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

தோழர் தியாகு
தாழி மடல் 293

வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் இணையம் 2023, மதுரை, நிறைவு விழா

 


மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மொழியியல் துறை
தமிழ் இணையக் கழகம்,இந்தியா
தமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கை
தமிழ் இதழ், கனடா
இணைந்து
தே.உ.க.[RUSA] திட்டம் 2 நிதி நல்கையுடன்
நடத்தும்
தமிழ் இணையம் 2023
இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிறைவு விழா
கா்த்திகை 01, 2054 வெள்ளி 17.11.2023







தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா

 


மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மொழியியல் துறை
தமிழ் இணையக் கழகம், இந்தியா
தமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கை
தமிழ் இதழ், கனடா
இணைந்து
தேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்
நடத்தும்
தமிழ் இணையம் 2023
இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தொடக்க விழா
ஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023








தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 3/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4 – தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)

கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 3/4


இந்த வழக்கில் முதல் எதிரியான கோபாலகிருட்டிண நாயுடு கையெழுத்திட்டு நெல் உற்பத்தியாளர் சங்கம் அனுப்பியதாகக் கருதப்படும் கடிதத்தை ஓர் ஆவணமாக வழக்கு விசாரணையின் போது அமர்வு நீதியர் முன்பு அரசு வழக்குரைஞரோ எதிர்த்தரப்பு வழக்குரைஞரோ அளிக்கவில்லை. இயல்பாக, சான்றாவணம் விசாரணை நீதிமன்றம் முன்பு அனிக்கப்படாத போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் கூடுதல் சான்று எடுத்துக் கொள்ள விரும்புமானால், அதற்கு 1898 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு நடைமுறை உள்ளது. (அந்த நேரத்தில் 1973ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் இல்லை.) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 428 கூடுதல் சான்று பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையைக் குறித்துரைக்கிறது. இருநீதியர் ஆயம் இப்படி எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்க வில்லை.

மறுபுறம், மேற்சொன்ன கடிதம் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு சார்பாக உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கப்பட்ட தட்டச்சுத் தொகுதியில் சேர்க்கப்பட்டது. அக்கடிதம் எப்படி, ஏன் கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது எனப் பதிவு கூட செய்யாமலே அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நீதியர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

எதிரியால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர் வாதத்துக்கு அடிப்படையாக அக்கடிதம் அமைந்தது. அது முதல் தடவையாக எதிரிக்கு ஆதரவான உருப்படியான சான்றாக அமைந்தது. இந்தக் கடிதம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டு, மார்க்குசியப் பொதுவுடைமைத் தலைமையிலான விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இருநீதியராயம் பின்வருமாறு உரைத்தது:

“நாகப்பட்டினம் வட்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான முதல் எதிரிக்கும் இட(து) பொதுவுடைமை உழவர்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். முதல் எதிரி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இட(து) பொதுவுடைமையினர் தன்னைக் குற்றத்தில் தவறாகச் சேர்ப்பதற்கு முயன்று கொண்டிருந்ததாகவும் கூறி அச்சம்பவத்துக்கு சில நாள் முன்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பிய மனுக்களையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஒருவர் இடையில் சந்தேகமும் பகைமையும் நிறைந்த இந்த மனநிலையில் இவ்வழக்கில் முதல் எதிரியை உட்படுத்தி, 42 அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதான மோசமான கொலைக் குற்றத்தையும், துப்பாக்கி, அருவாள், சுலுக்கி அல்லது கம்புகள் கொண்டு பலருக்கும் காயம் ஏற்படுத்திய குற்றத்தையும் அவர் மேல் சுமத்தலாம் என்ற ஆசை உழவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடைமையரின் மரணம் தொடர்பாகப் பக்கத்து ஊருக்குப் பல முக்கிய பொதுவுடைமைத் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கீழ்வெண்மணியில் நடைபெற்ற துயரம் தொடர்பாகப் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அந்தத் தலைவர்கள் காயமுற்றவர்களைச் சந்திக்கச் சென்றதை மெய்ப்பிக்கச் சான்று உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கிசான் இயக்கத்தின் முதல் பகைவரைக் குற்றத்தில் உட்படுத்துவதற்கு அரசுத் தரப்பு 5ஆம் சாட்சியால் முடியாமற் போனதால் கிசான் தலைவர்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் எல்லாக் கேடுகளுக்கும் முதல்வனாக முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடுவைக் குறிப்பிட்டு, அவரைத் தொடர்ந்து 30 – 40 பேரைப் பெயரின்றி விட்டுவிட்டு அநேகமாக 26.12.1968 மாலையில் முதல் சான்றாவணத்தைத் தயாரித்திருக்க வேண்டும்.”

நீதியர்கள் சொல்லும் ஏரணத்தின் படி, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகச் சில குற்றச்சாட்டுகள் கூறி முதலமைச்சருக்கு அனுப்பிய மனு வேதவாக்காக இருக்கும் போதே, துயரப்பட்டவர்கள் செய்த முறைப்பாடு துன்ப நிகழ்வுக்குப் பின் உடனே தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற மார்க்குசியத் தலைவர்களால் உள்நோக்கங்களுடன் திருத்தப்பட்டதாக இருக்க வேண்டுமாம். ஒருபுறம் முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு, மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் மறுபுறம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் பகைமை இருந்தது என்ற முடிவுக்கு நீதியரால் வர முடிந்தது என்னும் போதே, அவர்கள் குடிசைகளுக்குத் தீயிட்டதையும் தொழிலாளர்களைத் துப்பாக்கியால் சுட்டதையும் நேரில் கண்ட சாட்சிகள் இருந்த போதிலும் அவர்களின் சாட்சியத்தைப் புறந்தள்ளிய நீதியர் குற்றம் புரிதலில் நில உடைமையாளர்களுக்கு இருந்த கூட்டுக்குற்ற வகிபாகத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஒரு புதுக் கோட்பாட்டை வழங்கி, இவ்வாறு எழுதினர்:
“மேலும், இந்த வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ள 23 எதிரிகளுமே மிராசுதார்களாகவே இருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலார் விரிந்துபரந்த நிலபுலன்களுக்குச் சொந்தக்கரர்களான செல்வந்தர்கள். முதல் எதிரிக்குச் சொந்த வண்டி(கார்) இருப்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் இட(து) பொதுவுடைமை உழவர்களைப் பழிவாங்கும் ஆசை மிராசுதார்களுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், அவர்களாகவே நிகழ்விடத்துக்கு நேராக நடந்து சென்று எந்த வேலைக்காரர்கள் உதவியுமின்றி வீடுகளுக்குத் தீ வைத்தார்கள் என நம்புவது கடினமாக உள்ளது. பெரும் சொந்த நலன்கள் கொண்ட செல்வந்தர்கள் விரக்தியிலும் பசியிலும் உள்ள தொழிலாளர்களை விடப் பாதுகாப்பாகச் செயல்படவே விரும்புவார்கள். மிராசுதார்கள் பின்னணியில் ஒளிந்து கொண்டு, கூலிப் படையைப் பல குற்றங்கள் புரிவதற்கு ஏவி விட்டதாகத்தான் எவரும் எதிர்பார்க்க முடியும். ஆனால் இந்தக் குற்றங்களை மிராசுதாரர்களே நிகழ்விடத்துக்கு நேரடியாக வந்து செய்தததாக அரசுத் தரப்பு கூறுகிறது.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது.)

சென்னை உயர் நீதிமன்ற நீதியர்கள் கோபாலகிருட்டிண நாயுடு குடிசைகளுக்குத் தீ வைக்கவோ, துப்பாக்கியால் சுடவோ இல்லை என்று மட்டும் கூறவில்லை, அவர் சம்பவ இடத்தில் இல்லை என்பதற்களித்த வேற்றிடச் சான்றையும் ஏற்றுக் கொண்டனர். கோபாலகிருட்டிண நாயுடுவை வழக்கில் சேர்ப்பதற்கு மார்க்குசியத் தலைவர்கள் சான்றர்களைத் தூண்டி விட்டதாகவும் நீதியர்கள் கூறினர். ஆனால் இதற்கு நேர்மாறான ஒன்றே அப்போது நடந்தது. அனைத்து உள்ளூர்த் தலைவர்களும் கொச்சியில் 1968 திசம்பர் முடிவில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சான்றர்களின் கூற்றையும் அவர்களிடம் நடத்திய குறுக்கு விசாரணையையும் பதிவு செய்த அமர்வு நீதியர் முதல் எதிரி (A1) நாயுடு முன்வைத்த வேற்றிடச் சான்று என்னும் வாதத்தை நிராகரித்து, ஒவ்வொரு நிகழ்விலும் அவர் இருந்தார் என்றும், அதற்கு ஆதரவான சாட்சியத்தையும் மேற்கோளிட்டுக் காட்டினார். அவர் அனைத்து நில உடைமையாளர்களுக்கும் பத்தாண்டுக் கடுங்காவல் தண்டனையும் வழங்கினார். அவர் அதற்கான காரணங்களையும் கூறினார்:-

“எதிரிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிட்டுள்ளனர். தீ வைத்து மூன்று தெருக்களை அழித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு, இட(து) பொதுவுடைமைக்

கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் கொல்வதற்கும் முயன்றுள்ளனர். அவர்களுக்கு ஏராளமான காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஐயுறுவதற்குக் காரணம் ஏதுமில்லை. எதிரிகள் தீ வைத்ததன் காரணமாக, 42 அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.”


42 வேளாண் தொழிலாளர்கள் மாண்ட அந்தத் தீவைப்பு தவிர, பல முன்னணித் தொண்டர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பே சிறப்பு ஆயுதக் காவல் படையினர் அந்த ஊரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். இரு நாள் முன்பே கிசான் சபா தலைவர்கள் 500 கிமீ தள்ளியிருந்த கொச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சம்பவம் நடந்த உடனேயே காவல்துறைத் தலைமை ஆய்வாளர் (IG), காவல்துறைத் துணை ஆய்வாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அவ்விடத்தில் முகாமிட்டு, எவரையும் அந்த ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் குற்ற வழக்கில் கோபாலகிருட்டிண நாயுடுவைச் சேர்க்கும் நோக்கில் பொய் வாக்குமூலம் தரும்படித் தூண்டி விட்டிருப்பார்கள், அந்த வாக்குமூலத்தைக் காவல் துறையினர் தாமதமாகப் பதிவு செய்திருப்பார்கள் என்னும் இந்த இரு கண்டெடுப்புகளையும் எந்த அடிப்படையும் இல்லாமல் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேல்முறையீடுகள் குறித்த விசாரணையின் போது, இவ்வழக்கைப் புலனாய்வு செய்த காவல்துறை ஆய்வாளர் அரசுத் தரப்பு வழக்குரைஞருக்குத் துணைசெய்ய உயர் நீதிமன்றத்தில் இருந்தார். நீதியர்கள் அவரையும் விட்டுவைக்கவில்லை. மேல்முறையீட்டு விசாரணையின் போது அவரை அழைத்து அவரிடம் வினாத் தொடுத்தார்கள். அவரளித்த பதில்கள் நிறைவாக இல்லை எனக் கூறி, அதனைக் கீழ்க்காணும் ஆணையில் பதிவிட்டார்கள்:

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293