திங்கள், 24 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : மக்கார்த்தியம்” தொடர்ச்சி)

திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

அன்பர் சிபி கேட்கிறார்…

திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? 

தாழி விடை:

“திராவிடம் என்றால் என்ன?”

என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன்.

’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச்சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

`திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும். `தமிழ்` என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே (Exonym) `திராவிடம்` என்பதுமாகும்.

இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்:

இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].

திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்து கொள்ள நாம் அதற்கு எதிரான `ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு / துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள்.

ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய (arya) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது [ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்]. ஆரியர் (Arya) என்ற சொல் இரிக்கு வேதத்தில் 36 தடவைகள் இடம்பெற்றுள்ளது. இரிக்கு வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்போர் / உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இரிக்கு வேதக் காலத்தில் சைவ-வைணவ மதங்களோ / இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே  [இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரை கூறியுள்ளார்கள். எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என இரிக்கு வேதம் கூறுகின்றது. நமது பழந்தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

ஆரியர் அலற தாக்கி பேர் இசை

தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து

வெம் சின வேந்தரை பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப்பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.

மாரி அம்பின் மழை தோல் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே.

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்து கிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல் காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது. இன்னமும் பல சங்கக் காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப் படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன [நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398,…]. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் நோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் காலுடுவெல் (Robert Caldwell) அடிகள் ஆவார். அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ / தொல்காப்பியமோ கண்டு பிடிக்கப் பட்டிருக்காமையால், அவர் தவறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார். அதனைக் காலுடுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல் திரிந்தது என நிறுவியவர் பாவாணரே ஆவார். பாவாணர் `திரவிடத் தாய்` எனும் நூலில் எட்டாம் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருப்பார்.

தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்.

பவளம்” என்பது ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம் (தமிழ்) என்னுஞ்சொல் த்ரமிளம்த்ரமிடம்த்ரவிடம் என்றாகிபின் தமிழில் வந்து வழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும்ஆகையால் தமிழினின்றே திராவிடம்” எனுஞ் சொல் தோன்றிற்று“.  (சான்று- திராவிடத்தாய்பக்கம் 8).

பாவாணர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறிய முதல் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதற்கு முன்னரே சில கருத்துகள் தமிழும் திராவிடமும் ஒன்றே எனக் காட்டும்.

தமிழ் குறித்த திசைச் சொல்லே `திராவிடம்` என்றோம். தமிழ் குறித்த திரிபுச் சொல் முதன்முதலில் கிடைப்பது `அத்திக்கும்பா` கல்வெட்டில் (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) ஆகும். அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் [BCE 2nd cent] பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டின் 13ஆவது வரியில்  1,300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது. இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்ரமிர தேக சங்காத்தம்’ [Dramira] பயன்படுத்தப்படுகின்றது. அதே போலக் கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica` எனக் குறிக்கப்படுகின்றது. இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும். `தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` [Dravida]  எனலாம்.

பவுத்த நூலான இலலிதாவசுத்திர ` Lalitavistara`  (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` (Dravidalipi) என அழைக்கின்றது. இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும். ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த சமயவங்கா (“Samavayanga Sutta”) என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை. அதில் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் (Kamil Zvelebil) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி`, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம்பெற்றிருந்தன. எனவே `திராவிடம்` என்பது சமற்கிருதச் சொல் அன்று என்பது தெளிவாகின்றது.

காலத்தால் திராவிடத்துக்கான அடுத்த சான்றாக, சமண முனிவரான வச்சிரநந்தி அவர்களால் பொது ஆண்டு 470 இல் [CE470] ஏற்படுத்தப்பட்ட `திராவிட சங்கம்` என்பதனைக் கூறலாம். வச்சிர நந்தி நிறுவிய சங்கத்திலும் தமிழ் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டிருந்தன (இவை சங்க கால நூல்களன்று, அவற்றுக்குப் பின்னரானவை), இதனால் இந்த திராவிட சங்கத்தினை `தமிழ்ச் சங்கம்` என்றும் அழைப்பர் [சங்ககாலச் சங்கம் வேறு, இது வேறு]. எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது.

இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ஆம் நூற்றாண்டில் எழுதிய `மீமாம்சா சுலோக வார்த்திகம்` என்ற நூலில் திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு பாவாணர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. தெலுங்கு ஒழித்த ஏனைய மொழிகளையே (கன்னடம், துளு, தமிழ் ஆகியவற்றினையே – மலையாளம் குமாரிலபட்டர் காலத்தில் பிரிந்து போகவில்லை) குமாரிலபட்டர் `திராவிடம்` எனக் குறிப்பிடுகின்றார் எனப் பாவாணர் கூறுகின்றார். இங்கு தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்து அதிக தூரம் சென்றமையாலேயே பாவாணர் தெலுங்கினைத் திராவிடத்துக்குள் உள்ளடக்கவில்லை. எனவேதான் திராவிடம் என்பது தெலுங்கினைக் குறிப்பது என்ற பொய்ப் பரப்புரை இங்கு அடிபட்டுப் போகின்றது. “தெலுங்கினையும் சேர்த்துக் குறிக்க ` ஆந்திர திரவிட பாசை’ என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார்” எனவும் பாவாணர் திராவிடத்தாய் எனும் நூலின் 15ஆவது பக்கத்தில் குறிப்பிடுகின்றார் {ஆந்திர= தெலுங்கு, திராவிட= தமிழ்+கன்னடம்+துளு}.

அடுத்ததாகத் திருஞான சம்பந்தரினைத் `திராவிட சிசு` என ஆதிசங்கரர் அழைத்த நிகழ்வினைக் குறிப்பிடலாம். இதனைக் கொண்டே, திராவிடர் என்பது தென்னிந்திய பிராமணரைக் குறிக்கும் எனச் சிலர் சொல்லுகின்றார்கள்; அது உண்மையில் தவறு. சம்பந்தர் தமிழில் பாடி இறைவனை வழிபட்டிருந்தமையாலும், உருவ வழிபாடு செய்தமையாலும்தான் ஆதிசங்கரர் அவரினைத் `திராவிட சிசு` என அழைத்திருந்தார். எனவே இங்கும் `திராவிட` என்ற சொல் தமிழ் குறித்தே பயன்படுத்தப்படுகின்றது. தாயுமானவர் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.

வடமொழியிலே

வல்லா னொருத்தன் வரவுந் திராவிடத்திலே

வந்ததா விவகரிப்பேன்;

வல்ல தமிழறிஞர் வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன்

மேலுள்ள பாடலிலும் தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்ற பொருளினைக் காணலாம். சிங்களத்தில் `திராவிட பாசா` எனத் தமிழ் மொழியினை அழைப்பார்கள். எனவே `திராவிடர்` என்பது தமிழரையே ஆதி காலத்தில் முற்று முழுதாகக் குறித்தது. இன்று தமிழர் உட்பட மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் போன்ற பிற திராவிட மொழியினர் எல்லாரையும் குறிப்பிட்டாலும்; இன்றும் சிறப்பாகத் தமிழரையும் குறிக்கும் { காலப்போக்கில் பிற மொழிகளும் தமிழிலிருந்து பிரிந்துவிட்டமையால் இன்று தெலுங்கும் திராவிடம் என்ற வகைக்குள் வந்துவிட்டது}.

பின்னரான ஆங்கிலேயர் ஆட்சிக் காலப்பகுதியில் பார்ப்பனர்கள் பிறரினைச் `சூத்திரர்` என இழிவு செய்தமையால், அவர்களது ஆதிக்கத்தினை எதிர்க்க `பார்ப்பனரல்லாதோர்` என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் `பார்ப்பனரல்லாதோர்` என்ற எதிர்மறைச் சொல்லுக்குப் பதிலாகத் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாற்றத்தினை அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் போன்றோர் தொடக்கி வைத்திருந்தார்கள்.

இப்போது `திராவிடர்`என்பது தமிழர் உட்பட்டத் தென்னிந்தியர் எனப் புவியியல் வகையிலும், மொழிக் குடும்பம் என்ற வகையிலும், சமூக நீதிச் சொல் என்றும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டாலும்; அதன் அடிவேர் தமிழேயாகும். மேலும் அச்சொல் மேலே குறிப்பிட்டவாறு வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு திசைச் சொல்லேயாகும். முடிவாக, `திராவிடம்` என்பது `தமிழ்` என்பதன் ஒரு திசைச் சொல்லாகும். எனவே குறுகிய வாக்குப் பொறுக்கும் அரசியலுக்காகத் தமிழரை `டம்ளர்` எனக் கொச்சைப்படுத்துவதும், திராவிடம் என்பதனை `திருட்டுத் திராவிடம்` என்பதும் நமது கண்ணை நாமே குத்துகின்ற செயலினை ஒத்த செயலாகும்.          (நன்றி – இனியொரு, 07.04.2021).

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 175

ஞாயிறு, 23 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்”

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 – தொடர்ச்சி)

அன்பர் தமிழ்க்கதிர் கேட்கிறார்

இன்றைய தாழி (172) மடலில் பொதுமை, குமுகியம், குடியாட்சியம், தேசியம் என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த கட்டுரையில் – மக்கார்த்தியம் போன்ற பொதுமை வெறுப்புக் கொள்கைகள் எப்படிக் குடியாட்சியத்தை ஒடுக்க முயன்றன என்பது ஒரு வரலாற்றுப் பாடம் என்றுள்ளீர்கள்.

“மக்கார்த்தியம்” என்றால் என்ன தோழர்?

தாழி விடை:

சோசப்பு மக்கார்த்தி என்றோர் அமெரிக்கப் பேரவையினர் (செனட்டர்)  1950 பிப்பிரவரியில் குண்டு போடுவது போல் ஒரு செய்தி வெளியிட்டார், அமெரிக்க அயலுறவுத் துறையில் 205 பொதுவுடைமையர் வேலை செய்வதாக! அத்தனைப் பேரும் உறுப்பினர் அட்டை வைத்துள்ள பொதுமைக் கட்சியினர் என்றார்!

இதிலிருந்து அவர் பரப்பிய சிவப்பு பீதி அமெரிக்காவில் பொதுமைக் கொள்கைக்கும் கொள்கையருக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு வழிகோலிற்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத்து ஒன்றியம் பெற்ற வெற்றியும், அடுத்துப் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாற்றமும், 1949 சீனப் புரட்சியின் வெற்றியும், 1950இல் வெடித்த கொரியப் போரும், சோவியத்து அணுகுண்டுச் சோதனையும், பல நாடுகளில் செவ்வியக்க வளர்ச்சியும்… முதலமை (முதலாளித்துவ) நாடுகளில் பொதுமைப் புரட்சி பற்றிய அச்சத்தைத் தோற்றுவித்தன.

பனிப்போர்க் காலம் தொடங்கி விட்டது. சிவப்பு ஊடுருவல் பற்றிய அச்சம் அமெரிக்காவிலும் பரவியதைத்தான் மக்கார்த்தியம் குறித்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் மக்கார்த்தியர்களின் கண்ணுக்கு எல்லாமே சிவப்பாய்த் தெரிந்து அச்சுறுத்தின.

மக்கார்த்திய பீதியைப் பயன்படுத்திக் கொண்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசுப் பணியாளர்கள், அறிவுத்துறையினர் இடையிலான இடதுசாரிகளை அமெரிக்க அரசு ஒடுக்கியது. சிறையிலடைக்கபட்டவர்கள் சிலர், நாடுகடத்தப்பட்டவர்கள் சிலர். விசாரணை என்று அலைக்கழிக்கப்பட்டவ்ர்கள் சிலர்.

அனைத்துக்கும் உச்சமாக, அணுகுண்டு இரகசியங்களை சோவியத்துக்கு விற்ற குற்றச்சாற்றில் 1950இல் தளைப்படுத்தப்பட்ட சூலியசு உரோசன்பர்க்கு, ஈத்தல் உரோசன்பர்க்கு இணையர் மீதான கொலைத் தண்டனை 1953இல் நிறைவேற்றப்பட்டது. அவர்களின் உயிர் காக்க உலகெங்கும் நடந்த போராட்டங்களை மதிக்காமல் அவர்களை மின்சார நாற்காலியில் அமர்த்திக் கொன்றது அமெரிக்க வல்லரசியம்.  

மக்கார்த்தியம் மக்கார்த்தியோடு மறைந்து விடவும் இல்லை. அமெரிக்க எல்லைகளோடு நின்று விடவும் இல்லை. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பீமா கொரேகான் வழக்கு கூட (‘அருபன் நக்சல்’ குற்றச்சாட்டு) இந்திய மக்கார்த்தியத்தின் வெளிப்பாடுதான்! கருத்து வேறுபாடுகளைப் பேசும் போது இது சீனச் சார்பு, இவர் சீன முகவர் என்று முத்திரையிட்டு உள்நோக்கம் கற்பிக்கும் அணுகுமுறையும் மக்கார்த்திய மனப்போக்குதான்! பொதுமை வெறுப்பைச் சொல்லிக் குடியாட்சிய உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் மக்கார்த்தியம் தலைதூக்குகிறது.      

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174

சனி, 22 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 1 தொடர்ச்சி)

காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

தமிழ்ப் பிரசார சபாவுக்கு இந்திய அரசு ஒதுக்கும் சொற்ப நிதியும் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் இந்துத்துவப் பரப்புரைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும்தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஆர்எசுஎசு ஆட்கள்தாம் இந்த சபாக்களை மேலாண்மை செய்வார்கள். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிதான் நோக்கம் என்றால் பிரசார சபா என்ற இந்திப் பெயர் எதற்கு?

இந்தியைப் பரப்ப காந்தியார் நிறுவிய அமைப்புக்கு இந்திப் பிரசார சபா என்று இந்தியில் பெயரிட்டார். தமிழ் வளர்ச்சிக்கான அமைப்புக்கு ஏன் இந்தியில் பெயரிட வேண்டும்? தமிழ்ப் பரப்புரை மன்றம் என்றோ தமிழ் வளர்ச்சிக் கழகம் என்றோ பெயரிடக் கூடாதா? மாஃபா பண்டியராசனைக் கேட்டிருக்கலாமே? காந்தியார் தாம் தொடங்கிய அமைப்புக்கு இந்தி புரொப்பகேசன் சொசைட்டி என்றா பெயர் வைத்தார்?

தமிழ்ப் பிராசார சபா என்ற பெயரே மோதியின் உள்நோக்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக உள்ளது. 2022 நவம்பர் 19ஆம் நாள் மோதி தொடங்கி வைத்த ஒரு மாதக் கால காசி தமிழ்ச் சங்கமத்தில் நடந்தது என்ன? தமிழ் எதனோடு சங்கமித்தது? ஏக் பாரத் சிரேசுட்ட பாரத்(து) (ஒரே பாரதம் உன்னத பாரதம்)! இதுதான் தமிழ்ச் சங்கமத்தின் மந்திர முழக்கம்! தமிழ்ப் பிரசார சபாவும் இப்படித்தான் இந்துத்துவப் பிரசார சபாவாக மாற்றப்படும். திருவள்ளுவருக்குக் காவி உடுத்தியவர்கள் தமிழன்னைக்கும் காவி உடுத்தி விடுவார்கள்.

காந்தி நிறுவிய இந்திப் பிரசார சபாவையும் மோதி நிறுவப் போவதாகச் சொல்லும் தமிழ்ப் பிரசார சபாவையும் எதிர்நிறுத்தி ஒப்புநோக்கினால் சில உண்மைகள் புலப்படும். 1918ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கிலம் எல்லா வகையிலும் கோலோச்சிய போது இந்தியத் தேசிய இயக்கத்தின் உறுப்பாக இந்தி் பிரசார சபாவை காந்தியார் நிறுவினார். இந்தியை இந்திய நாட்டின் பொதுமொழியாக வளர்த்தெடுத்து இந்தியத் தேசிய இயக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டும் என்பது காந்தியாரின் வேணவா.

அன்று இந்தி ஆட்சிமொழி இல்லை. இன்று அரசமைப்புச் சட்டத்தின் படி அதுதான் முதன்மை ஆட்சிமொழி. இந்திய அரசமைப்பில் தமிழ் ஆட்சிமொழியில்லை, நீதிமொழியில்லை. நடைமுறையில் அது கல்விமொழியும் இல்லை. தமிழ்நாட்டளவில் கூட அது அரைகுறை ஆட்சிமொழி மட்டுமே. தமிழ்நாட்டை விலக்கிப் பேசுவோம். மோதி இந்திய நாடெங்கும் தமிழ் பிரசார சபா தொடங்குவதால் தமிழ் ஆட்சிமொழியாகுமா? நீதிமொழியாகுமா? கல்விமொழியாகுமா? அப்போதும் தமிழ் ஆளும் மொழி ஆகாது, அடிமை மொழியாகவே நீடிக்கும். அடிமைமொழியைக் கற்பதில் எத்தனைப் பேருக்கு ஆர்வம் வரும்?

இந்திப் பிரசார சபா தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டின் பல மாநிலங்களிலும் ஏராளமானோர் இந்தி படிக்க உதவியது. நான் இந்திப் பிரசார சபையில் படித்தவன். ஆளப்படும் மொழியான போதிலும் இந்தியத் தேசிய உணர்வு சார்ந்து பலரும் இந்தி படித்தனர். விடுமை (சுதந்திரம்) என்னும் அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், குறிப்பாக அரசமைப்பு இயற்றப்பட்ட பின் இந்தியக் குடியரசு இந்திக் குடியரசாகி விட்டது. அஃதாவது இந்தி ஆளும் மொழியாகி விட்டது. இந்தி கற்பதற்குச் சிறப்பு ஊக்கம் ஏதும் தேவைப்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாடு நீங்கலாக இந்தியாவெங்கிலும் மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாயமாகவே கற்பிக்கப்படுகிறது.

குடியேற்ற(காலனி)ஆதிக்கக் காலத்திலேயே பயில்மொழியாக இந்தி திணிக்கப்படுவதைத் தமிழ்நாடு எதிர்த்தது (1937-38). ஆனால் இன்று தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்துக்கு வெளியே இந்தி கட்டயாமாகவே கற்பிக்கப்படுகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழேயும் கூடத் தனியார் பதின்மப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன்) இந்தி கற்பிக்கப்படவே செய்கிறது. பிராசார சபா வழியாகத்தான் இந்தி கற்க வேண்டும் என்ற தேவை பெரும்பாலும் அற்றுப் போய் விட்டது. காந்தி நிறுவிய இந்தி பிரசார சபா கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்து விட்டது.

சரி, தமிழ்ப் பிரசார சபா தொடங்கப்படும் வரலாற்றுப் பகைப் புலம் என்ன? தமிழ்த் தேசிய உணர்வின் பாற்பட்டு தமிழ் கற்கும் ஆர்வம் ஓங்கி மிளிரும் அளவுக்கு தமிழ்நாட்டு இறைமை மீட்பு இயக்கம் வலுப்பெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டு அடையாளத் தன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான் தாய்த் தமிழ் கல்விப் பணி. அது வளர வேண்டிய அளவுக்கு வளரவில்லை என்பதே மெய்.

2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே காணப்பட்ட தமிழ் கற்கும் ஆர்வத்தைப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோடு ஒப்புநோக்குவது கருத்துக்குரியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களாகவே கணக்கில் கொள்கிறேன்.

இந்தப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே தமிழார்வத்தை விதைக்க அங்கங்கே தமிழார்வலர்கள் தனிப்பட்ட முறையிலும் சங்கம் வைத்தும் செய்து வரும் முயற்சிகள் இருப்பினும், குழந்தைகளிடையே தமிழ் கற்கப் பெரிதாக ஆர்வம் இல்லை என்பதே உண்மை. புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கிடையிலும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழ் கற்கும் ஆர்வம் குறைந்திருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நான் 1994 அமெரிக்கப் பயணத்தின் போது சிக்காகோவில் ஒரு தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்காக அங்குள்ள பாலாசி கோயிலுக்குப் போயிருந்தேன். பாலாசி கோயிலில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழும் இந்தியும் கற்றுக் கொடுப்பதற்கான தனித்தனி வகுப்புகள் நடக்கின்றன. தமிழ்க் குழந்தைகள் தமிழை விடவும் இந்தி கற்பதிலேயே கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஒரு குழந்தையின் பெற்றோர் எனக்கு விளக்கமளித்தார்:

“இந்திய அரசோடு தொடர்பு கொள்ள இந்தி வசதியாக உள்ளது. அரசிடமிருந்து இந்தியில் விடையும் கிடைக்கிறது. இந்திய அரசின் ஊக்கமும் கிடைக்கிறது. தமிழக அரசோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே போதுமானதாக உள்ளது. நாம் தமிழில் விண்ணப்பம் அனுப்பினால், அரசிடமிருந்து  விடை வராது, வந்தாலும் ஆங்கிலத்தில்தான் வரும்.”

தமிழர்கள்தான் இப்படி என்றால் மற்ற மொழிக்கரர்களின் நிலை என்ன? நம்மைப் போலவே மொழிப்பற்றுள்ள வங்காளிகள் எப்படி? வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய வங்காளி ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார்:

“வங்கதேச விடுதலைக்கு முன்பு எங்கள் மக்களில் பெரும்பாலார் வங்காளி கற்பதால் என்ன பயன்? என்றுதான் கேட்பார்கள். உருது மொழி கற்பதில் ஆர்வமாய் இருப்பார்கள். அது பாக்கித்தானின் ஆட்சிமொழி. விடுதலைக்குப் பின் வங்காளி கற்க ஆர்வம் வளர்ந்துள்ளது.”

நானறிந்த இன்னொரு செய்தி: அமெரிக்காவில் குடியேறிய தமிழர் ஒருவர் அங்கு பிறந்து வளர்ந்த தன் மகளைத் தமிழ் படிக்கச் செய்யப் படாத பாடு பட்டார். தமிழின் அருமையை உணர்த்துவதற்காக ஒரு முறை மகளைத் தமிழ்நாட்டுக்கே அழைத்து வந்தார். ஒரு முழு நாள் சென்னையைச் சுற்றிப் பார்த்த பின் மகள் சொன்னாராம்:

“நான் இவ்வளவு காலமும் அமெரிக்காவில் தமிழ் தேவையில்லை என்றுதான்  நினைத்திருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன், தமிழ்நாட்டிலும் தமிழ் தேவையில்லை என்பதை!”  

தமிழ் ஆளும் மொழியாக இருக்க வேண்டும், அல்லது ஆட்சியைப் பிடிக்கப் போராடும் நிலையிலாவது இருக்க வேண்டும். இல்லையேல் தமிழ் படிக்கும் ஆர்வம் தமிழ்நாட்டுக்கு வெளியே பொங்கி வராது; தமிழ்நாட்டிலும் மங்கிப் போகும்.

மோதியின் தமிழ் பிரசார சபா என்ன செய்யப் போகிறது? தமிழை ஆளும் மொழியாக்கப் போகிறதா? அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தப் போகிறதா? திருத்தக் கோரிப் போராடப் போகிறதா? பிறகெப்படித் தமிழ் கற்கும் ஆர்வம் பெருகப் போகிறது? தமிழ் பிரச்சார சபா திறந்தும் யாரும் படிக்க வரவில்லை என்று இழுத்து மூட வேண்டியதுதான்! அல்லது தமிழ்ப் பிரசாரம் என்ற பெயரில் இராமாயணம், மகாபாரதம், பகவத்(து) கீதை படிக்க வேண்டியதுதான்! ஆர்எசுஎசு நோக்கம் நிறைவேறும்.

தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழ் ஆள வேண்டும். இந்தியக் கட்டமைப்பு இப்போதுள்ள வடிவிலோ, மோதியின் பேரவாப்படி இன்னும் மோசமான வடிவிலோ நீடித்துள்ள வரை தமிழ் ஆளப் போவதுமில்லை! வாழப் போவதுமில்லை.

சற்றே உற்றுநோக்குங்கள்! ஊடுருவிப் பாருங்கள்! மெல்லத் தமிழ் கொல்லப்படுவதைக் காண்பீர்கள்! இந்தியாவில் – குறிப்பாக மோதியின் இந்தியாவில் – தமிழ் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மொழியழிப்புக்கு அடிப்படை இந்தியக் கட்டமைப்பில் தமிழர்கள் அடிமைகளாக இருப்பதே! அடிமையின் மொழியைக் காப்பற்ற வேண்டுமானால் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்! அல்லது அந்த அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அடிமைகள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். ஆண்டைகளின் தயவில் வாழலாம், அடிமைகளாகவே!

மோதியின் தமிழ்ப் பிரசார சபா – இந்திய இந்துத்துவ அரசு தமிழ் மொழியழிப்பு செய்வதை மறைக்கும் திரையே தவிர வேறல்ல!

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174

தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி தொடர்ச்சி)

காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

 

இனிய அன்பர்களே!

வாயால் வடை சுடுவதில் வல்லவரான இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி புதிதாக ஒரு வடை சுட்டிருக்கிறார். அதுதான் ‘தமிழ்ப் பிரசார சபா’.

இந்தி மொழியைப் பரப்ப 1918ஆம் ஆண்டு காந்தியார் தென்னிந்திய இந்திப் பிரசார சபை (தட்சிண் பாரத் இந்தி பிரசார சபா) அமைத்தது போல் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாடெங்கும் தமிழ்ப் பிரசார சபா அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். மாநிலத் தலைநகரங்களில் தமிழ் பிரசார சபைக்குக் கிளைகள் அமைக்கப்படும் என்றும், இவை தமிழறிஞர்களின் பொறுப்பில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் பிரசார சபைகளில் தமிழ் கற்றுத் தேர்ச்சி பெறுவோர்க்கு சான்றிதழும் பட்டயமும் வழங்கப்படுமாம்!

மோதியின் அறிவிப்பில் இந்தத் தமிழ் பிரசார சபைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அஇஅதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் இதே போன்ற தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைக்க இந்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியதாகவும், ஆனால் இந்திய அரசு நிதி வழங்காமையால் அத்திட்டம் கருக்கலைந்து போனதாகவும் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராசன் சொல்கிறார்.

மோதி திருக்குறள் சொல்வார், பாரதியார் என்பார், புறநானூறு, அகநானூறு எல்லாம் பேசுவார், தமக்குத் தமிழ் தெரியவில்லையே என்று வருந்துவார், தமிழ்தான் உலகிலேயே பழமையான மொழி என்றெல்லாம் பெருமை பீற்றுவார். சமற்கிருதத்தை விடவும் தமிழ் பழமையானது என்று சொல்லுமளவுக்குக் கூட செல்வார். இப்போது தமிழ் பிரசார சபை என்றும் தம்பட்டம் அடிப்பார். ஆனால் இதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மட்டும் ஊமையாக இருந்து கொள்வார் என்றால், எப்படி இவரது தமிழ்க் காதலை நம்புவது?

தமிழ்ப் பிரசார சபைக்கு நாளைக்கே இந்திய அரசு ஒரு தொகை ஒதுக்கக் கூடும். அது எவ்வளவு என்பதும், எப்படிச் செலவிடப்படும் என்பதும்தான் முகன்மைக் கேள்விகள். இது வரைக்குமான பட்டறிவு என்ன? இந்திக்கும், சமற்கிருதத்துக்கும் இந்திய அரசால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? தமிழுக்கு எவ்வளவு? இப்போது மோதி இதில் பெரிய மாற்றம் செய்யப் போகிறாரா?

இந்தியக் குடியரசு அமைந்த காலத்திலிருந்து இந்தி, வடமொழி (சமற்கிருதம்) தவிர வேறு எந்த மொழி வளர்ச்சிக்காகவும் நடுவண் அரசு நிதி ஒதுக்கியதில்லை. அப்போது இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்ற போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும் மட்டுமே இந்திய அரசின் காசு செலவிடப்பட்டது. இப்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ள போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும்தான் சிறப்புச் சலுகையாகக் கொழுத்த செலவு!

1977க்குப் பின் வடமொழி செம்மொழி என்று சொல்லி அதற்கென இந்திய அரசு வழக்கத்துக்கு மேல் சிறப்பு ஒதுக்கீடு செய்தது. செம்மொழிகள் என்ற வகையில் அரபு, பாரசீக மொழிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்தது.

நான் 1994ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மாநாட்டுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது சிக்காகோவில் திரு பாபு அவர்களின் இல்லத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் “தமிழைச் செம்மொழியாக ஐநா அறிந்தேற்கச் செய்ய வேண்டும்” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.

“நாங்கள் ஏற்கெனவே ஐநா அமைப்பான யுனெசுகோ-வை அணுகி வருகிறோம். ஆனால் அரசு வழியாக இந்தக் கோரிக்கை வந்தால்தான் எடுபடும். இந்திய அரசிடம் இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறோம். தமிழ் அமைப்புகள் இதற்கு முன்முயற்சி எடுத்தால் வெற்றி பெற முடியும்.”

யாரும் அறிந்தேற்றாலும், இல்லையென்றாலும் தமிழ் எல்லா வகையிலும் செவ்வியல் மொழிதான். செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழிதான்! பரிதிமாற் கலைஞர் முதல் முனைவர் வா.செ. குழந்தைச்சாமி வரை செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழியான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்ற கருத்தை நிறுவினார்கள். ஆனால் தமிழின் செம்மொழித் தகுதியை ஐநாவின் கல்வி பண்பாட்டு அமைப்பு அறிந்தேற்றால் பல வகையிலும் தமிழுக்கு வளம் சேர்க்க வழி பிறக்கும். இந்திய அரசு வடமொழிக்குச் செலவிடுவது போல் தமிழுக்கும் செலவிட வேண்டி வரும்.    

நான் என் ஐயத்தைச் சொன்னேன்: “தமிழை ஒரு தேசிய மொழியாகவே இந்திய அரசமைப்பு அறிந்தேற்கவில்லை. தமிழ்நாட்டிலேயே ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமொழி என்ற நிலைகளை முழுமையாக அடையப் போராட வேண்டியுள்ளது. செம்மொழி அறிந்தேற்பால் என்ன பெரிய பயன் விளைந்து விடப் போகிறது?”

“செம்மொழித் தகுதி என்பது தனி. அதற்கு அங்கீகாரம் பெறுவது தமிழுக்கான ஆக்கப் பணிகள் செய்ய உதவும். மற்றபடி உங்கள் போராட்டம் தொடர்வதில் சிக்கல் இல்லை.”       இதற்கிடையில் தமிழைச் செம்மொழியாக அறிந்தேற்கக் கோரி சாலை இளந்திரையன், சாலினியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும், புலவர் சுந்தரராசனைச் செயலாளராகக் கொண்ட தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டத்தாலும், விடா முயற்சியாலும் செம்மொழிக் கோரிக்கை வலுப்பெற்றது. செம்மொழிக் கோரிக்கைக்காகப் போராடத் தில்லி சென்றிருந்த போதுதான் சாலினியார் ஒரு சாலை நேர்ச்சியில் (விபத்து) உயிரிழந்தார்.

2004ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று மன்மோகன் சிங்கு தலைமையிலான அமைச்சரவையில் திமுகவும் இடம்பெற்று, தமிழ் செம்மொழி என்று அறிந்தேற்கப் பெற்றது. “அம்மா எனக்கும்” என்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியம் என்று ஒவ்வொரு மொழியாகக் கேட்ட போது எல்லாமே செம்மொழிதான் என்று அறிவிக்கப்பட்டது – தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்குவதைப் போலத்தான்! அல்லது கோயிலில் சுண்டல் வழங்குவதைப் போலத்தான்!

இப்போது, தமிழ், வடமொழி உட்பட 6 இந்திய மொழிகள் செம்மொழிகளாக அரசின் அறிந்தேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆறு மொழிகளுக்கும் இந்திய அரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டை ஒப்பாய்வு செய்தால் இந்திய அரசின் பாகுபாடான அணுகுமுறை தெட்டெனப் புலப்படும்.

2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்றாண்டுகளை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். மோதி ஆட்சிக்கு உட்பட்ட இந்த மூன்றாண்டுகளில் தெலுங்கு, கன்னட மொழிகள் ஒவ்வொன்றுக்கும் சம அளவில் முதலாண்டு ஒரு கோடியும், இரண்டாம் ஆண்டு 99 இலட்சமும், மூன்றாம் ஆண்டு 1.07 கோடியும் ஒதுக்கப்பட்டன. ஒடிய, மலையாள மொழிகளுக்கு வளர்ச்சி மையங்களும் அமைக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை.

அதேநேரத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் (CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL – CICT) தமிழுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19இல் ரூ.4.56 கோடியும், 2019-20இல் ரூ.7.7 கோடியும் ஒதுக்கப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் அரசு சார்பில் தரப்பட்ட தகவல்.

இதே மூன்றாண்டுகளில் வடமொழிக்கு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?   

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சிவசேனா உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் அளித்த விடையில், “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) இராசுட்டிரிய சமற்கிருத சன்சுதானத்தை நிறுவியதாகவும், அதற்காக கடந்த 3 ஆண்டுகளில் உரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. சன்சுதானுக்கு 2019-20-ஆம் ஆண்டில் உரூ.231.13 கோடியும், 2018-19இல் உரூ214.28 கோடியும், 2017-18இல் உரூ198.31 கோடியும் ஒதுக்கப்பட்டன” எனக் கூறப்பட்டது.

அதாவது மூன்றாண்டுக்கும் சேர்த்து ஏழு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு 22 கோடிக்கும் குறைவு. 2011ஆம் ஆண்டுக் கணக்குப்படி வெறும் 45 ஆயிரம் பேர் பேசும் வட மொழி சமற்கிருதத்துக்கு உரூ.643 கோடி! 45 ஆயிரம் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 643 கோடி! தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிப் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 22 கோடி!  

வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை! அது மக்கள் மொழியன்று, செத்த மொழி!  தமிழ்நாட்டில் அக்கிரகாரத்திலும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆண்டவனோடு அந்தரங்கம் பேசுவதற்கு மட்டும்தான் வடமொழி! அது இலத்தீன் போல் வெறும் சமயச் சடங்கு மொழி! அதற்கு ஏன் இவ்வளவு பெருந்தொகை செலவிட வேண்டும்? அந்த மொழியில்தான் புராணங்கள் உள்ளன, வேதங்கள் உள்ளன. வருண சாதிக் கட்டமைப்பைக் காத்து இந்துத்துவ அரசியலை ஊட்டி வளர்க்க வடமொழி தேவை.

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174

வெள்ளி, 21 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இந்த மடலின் முதல் தலைப்பில் காணப்படும் கலைச் சொற்கள் பலருக்கும் புதியனவாய் இருக்கக் கூடும். அவற்றை விளங்கச் செய்யும் நோக்கில் “சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி” என்ற தலைப்பில் ஏர் 2018 நவம்பர் 7 (புரட்சி நாள்) இதழில் இடம்பெற்ற என் கட்டுரையை இப்போதைய தேவை கருதி உங்களுடன் பகிர்கிறேன்.

 சொல்லடிப்போம் வாங்க!   

சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி

சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன்.  ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி வருகிறேன். 

இன்று உலகில் வெற்றி பெற்ற முதல் சோசலிசப் புரட்சி ஆகிய நவம்பர் புரட்சி நடைபெற்ற நாள். (முதல் பாட்டாளியப் புரட்சி ஆகிய பாரிசு கொம்யூனைக் கணக்கில் கொள்ளாமல் சொல்கிறேன்). அந்தப் புரட்சியின் சாதனைகளில் ஒன்று உலகெங்கும் சோசலிசச் சிந்தனைகளைப் பரவச் செய்ததாகும். சோசலிசச் சிந்தனைகளை நான் குமுகியச் சிந்தனைகள் என்கிறேன்.

சோசலிசம், கம்யூனிசம், மார்க்குசியம் என்ற கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நவம்பர் புரட்சியால் பரவின. இவற்றுக்கு இணையான தமிழ்ச் சமன்களை அப்போதே தேடத் தொடங்கினர். கம்யூனிசத்தைப் பொதுவுடைமை என்று பாரதியும் திரு.வி.கவும் அடுத்து வந்த தமிழறிஞர்களும் பெயர்த்தனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இதையே பொதுமை என்று சுருக்கினார். “பொதுமை நோக்கிச் செல்கின்றதிந்த வையம்!”

பொதுவுடைமையைக் காட்டிலும் பொதுமை பொருத்தமானது என்று கருதுகிறேன். இது குறித்துப் பிறகு பேசுவோம்.

இப்போது சோசலிசத்தை எடுத்துக் கொள்வோம். இராசகோபாலாச்சாரியார் (இராசாசி) முதலில் சோசலிசத்தை ’அபேதவாதம்’ (வேற்றுமையின்மை) என்று மொழிபெயர்த்தாராம். பேதமும் தமிழன்று, வாதமும் தமிழன்று என இப்போது சொல்லி விடலாம். ஆனால் அப்போது அது ஒரு நன்முயற்சி. அபேதவாதம் எதிர்மறையாக இருந்ததால் சோசலிசத்தை நேர்நிறையாகக் குறிப்பிட  ”சமதருமம்” என்ற சொல்லாட்சி புழக்கத்துக்கு வந்தது.

  சிங்காரவேலர், சீவா, பெரியார் தொடங்கி இன்றும் பலர் சோசலிசத்தை சமதருமம் என்று குறிப்பிடக் காண்கிறோம். மனுதருமம், வருணதருமம் என்பது போல் சமதருமம் இயல்பாக ஒட்ட மறுக்கிறது. சோசலிசத்தை வெறும் தருமமாகச் சுருக்குவதும் கோட்பாட்டில் பிழையானது.

அபேத வாதம், சம தருமம் இரண்டுமே தமிழல்ல என்பதால் தமிழ்ப்பற்றுமிக்க சோசலிசவாதிகள்  நிகரமை என்று குறிப்பிடத் தொடங்கினர். நிகர் என்றால் சமம், நிகர்மை என்றால் சமத்துவம், நிகரமை என்றால் சமதர்மம் / சோசலிசம் என்பது இவர்களின் பார்வை. அபேதவாதம், சமதர்மம் என்பவை தமிழல்ல, நிகரமை தமிழ்தான்.

ஆனால் அந்தத் தமிழல்லாத சொற்களைப் போலவே நிகரமையும் சோசலிசத்தின் உட்கருத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றியது. எனவேதான் சோசலிசம் என்றே தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன். இதனைத் தமிழுக்குக் கொண்டுவரும் தேடல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டேன். அந்த முயற்சியிலிருந்து விளைந்ததே குமுகியம் என்ற சொல்.

Socialism  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிச் சொல் society. Society என்றால் சமூகம். சமூகம் தமிழன்று என்பதால் பாவாணர் குமுகம் என்று சொல்லடித்துக் கொடுத்தார். சமூகம் குமுகம் ஆயிற்று, சமுதாயம் குமுகாயம் ஆயிற்று. குமுக அமைப்புகள் அவற்றின் பொருளாக்க உறவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. தொல் பொதுமை (புராதனப் பொதுவுடைமை), அடிமையுடைமை, நிலக் கிழாரியம் (பிரபுத்துவம்) முதலமை (முதலாளித்துவம்) இந்த ஒவ்வொரு குமுக வடிவமும் வெவ்வெறு பொருளியல் அடித்தளம் கொண்டவை. பொருளியல் அடித்தளத்தின் சாறம் (அல்லது சாரம்?) ஆக்கப் பொறிகளின் (உற்பத்திச் சாதனங்களின்) உடைமை…

 முன்சென்ற அமைப்புகளிலிருந்து சோசலிச அமைப்பை வேறுபடுத்தும் அடிப்படைத்தன்மை  ஆக்கப்பொறிகளின் உடைமைதான். சோசலிசத்தில் ஆக்கப் பொறிகள் அனைத்தும் சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை ஆகின்றன. இந்தக் கோணத்தில் சோசலிசத்தை சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை என்றழைப்பதில் பிழை இல்லை. ஆனால் பொருளியல் ஒரு குமுக அமைப்பின் அடிப்படையாக இருக்கும் போதே அரசியல், பண்பாடு போன்ற கூறுகளும் சேர்ந்ததுதான் குமுகம் ஆகும். பொதுவுடைமையை காட்டிலும் பொதுமை சிறப்பானது என்பது இதனால்தான். அதே போல் குமுகவுடைமை என்பதை விடக் குமுகமை சிறப்பானது என்ற முடிவுக்கு வந்தேன்; Socialist system என்பதைக் குமுக அமைப்பு என்போம்.

Socialism என்பது ஒரு குமுக அமைப்பின் பெயர் மட்டுமன்று. அது ஒரு கருத்தமைப்பின் பெயருமாகும். குமுக அமைப்பைக் குறிக்க குமுகமை எனலாம். கருத்தமைப்பைக் குறிக்க குமுகியம் எனலாம்.

வேறு மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் பார்த்தேன். இந்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் சமாசுவாத்(து) என்கிறார்கள். அதாவது சமூகவாதம், இதற்கான தூய தமிழ், குமுகியம்தானே?

நவம்பர் புரட்சி குமுகமைப் புரட்சி! குமுகமைக் குமுகம் படைப்பதற்கான புரட்சி! அறிவியல் குமுகியத்தின் வெற்றியை நிலைநாட்டிய குமுகியப்  புரட்சி!

தொடர்ந்து பேசுவோம்!

தோழர் தியாகு
தாழி மடல்
 173