திங்கள், 10 ஜூலை, 2023

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

 

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!



11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

அரசுகளுக்கு வேண்டுகோள்.

ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று)  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி நிறுவன இணைவேந்தர் முனைவர் சோதி முருகன் சிறப்புரை ஆற்றினார். உலகத்தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவரும்  சடடக்கதிர் ஆசிரியருமான வி.ஆர.எசு.சம்பத்து, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நேற்றைய தலைவர் முனைவர் பொன்னவைக்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உ.த.ஆ.நிறுவனத்தின் இந்நாள் தலைவர் பொறி.அரசர் அருளாளர் நன்றி நவின்றார்.

தொடக்கத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை வழங்கினார்.

கருத்தரங்க அமர்வுரைகளின் தொகுப்பை முனைவர் முகிலை இராசபாண்டியன் தமிழில் வழங்கினார்; அடுத்து அதனை ஆங்கிலத்தில் முனைவர் வெ.முருகன் வழங்கினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் பின் வரும் இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

1. இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும்  உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2. தமிழ் நிறுவனங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை உரிய காலத்தில் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

பேராளர்களும் தமிழன்பர்களும் அடங்கிய அவையினர் கைகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆதரவு தந்தனர். உடன் முனைவர் பொன்னவைக்கோ இவற்றை வழி மொழிந்தார். இரு தீர்மானங்களும் மாநாட்டு அவையினரால் நிறைவேற்றப்பட்டன.

வரேவற்புரையின் பொழுது மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்த இடச்சிக்கல் வந்த பொழுது தன் வேண்டுகோளை ஏற்று ஆசியவியல் நிறுவன வளாகத்தை அளித்ததுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 11ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் சான் சாமுவேல் அவர்களைப் பாராட்டினார்.

சிறப்புரையின் பொழுது இணைவேந்தர் முனைவர் சோதிமுருகன் இனி நடத்த உள்ள கருத்தரங்கங்கள், மாநாடுகளில் தங்கள் வேல்சு நிறுவனமும் இணைந்து பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

முனைவர் சம்பத்து இம்மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அமைதியாக் கூடி அமர்ந்துள்ள அவையோரே சான்று எனப் பாராட்டினார்.

முனைவர் கிருட்டிணகுமார், முனைவர் தாமோதரன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

மாநாட்டின்பொழுது பறைஇசை, பிற நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகியற்றுடன்  சிலப்பதிகாரம் குறிக்கும் 11வகை ஆடல்கள் குறித்த நாட்டிய நாடகமும் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் நாடடிய நாடகமும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன.

மாநாட்டின் குறிப்பிடத்தகுந்த உலக அருவினையான(சாதனையான) சிறப்பு பேராளர்களின் 64 நூல்கள் வெளியிடப்பட்டமையாகும். நூலாசிரியர்கள் மட்டுமல்லாமல் பிறரும் இந்நிகழ்வை வெகுவாகப்பாராட்டினர்.

சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டதும். நிறைவாக. மாநாட்டின் பொழுது தொண்டாற்றிய சாரணர் இயக்கத்தினருக்கு முனைவர் சான்சாமுவேல் பாராட்டிதழ் வழங்கினார்.

திங்கள், 26 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி)

உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான ரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி அறை ஒன்றில் போய்த் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டுக் கொண்டார். பாரதிய சனதா கட்சித் தலைவர் பண்டாரு தத்துரேயாவின் தூண்டுதலால் கைப்பாவையான பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அடக்குமுறைக்கு எதிராகத்தான் உரோகித் வேமுலாவும் தோழர்களும் போராடினார்கள். ஐதராபாத்து பல்கலைக்கழக ஆட்சி உரோகித்து உள்ளிட்ட ஐந்து மாணவர் தலைவர்களை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போரட்டப் பின்னணியில்தான் உரோகித்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலையல்ல, படுகொலை என்று உரோகித்தின் மாணவத் தோழர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.        

உரோகித்து இளம் மார்க்குசிய ஒடுங்கியவர்(தலித்து)களில் ஒருவர், இந்துத்துவக் காலத்தில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் திறமான அரசியல் திட்டம் வகுத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருந்தவர்; அயரா உழைப்பாற்றலும் கொள்கைவழி அரசியல் தெளிவும், மாணவ ஒடுங்கிய (தலித்து) தலைவர்களிடையே திறந்த மனமும் கொண்டவராகத் திகழ்ந்தவர் என்று அவரின் தோழர்கள் சொல்கின்றார்கள்.  பலகலைக்கழக ஆட்சியால் உரோகித்தும் மற்றவர்களும் குறி வைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் முசுலிம்களுக்கு எதிரான பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் அம்பலமாக்கிப் பலவழிகளிலும்  இயக்கம் நடத்திக் கொண்டிருந்தார்கள், பல்கலை வளாகத்தில் ஒடுங்கியவர்(தலித்து)களையும் முசுலிம்களையும் ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டார்கள். இந்துத்துவ பாசிசத்துக்கு எதிரான  ஒடுங்கிய(தலித்து) மாணவர்களின் போராட்டம்தான் உரோகித்துக்கும் மற்றவர்களுக்கும் எதிரான அடக்குமுறைக்கு வழிகோலியது. 

உரோகித்தின் தற்கொலை முடிவை நம்புவது கடினமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள் சொல்கின்றார்கள்.  ஒடுங்கிய(தலித்து) மாணவர் தலைவர்களுக்கு எதிரான பொய் வழக்கும் அடக்குமுறையும் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்ற வருத்தம் உரோகித்து வேமுலாவுக்கு இருந்தது என்றும், தன்னுயிர் தந்தாவது மக்களின் உளச்சான்றினைத் தட்டியெழுப்ப அவர் எண்ணியிருக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் இழிவுக்காளாகும் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது புதிய செய்தியன்று என்றாலும் உரோகித்தைப் போன்ற ஒரு தலைவர் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சிக்குரியதே என்கிறார்கள்.

உரோகித்தின் மாணவத் தோழர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்:

“உரோகித்து போய் விட்டார் என்ற உண்மையை மனங்கொள்ள முடியவில்லை. எதுவும் சொல்ல இயலவில்லை. மாணவர் போராட்டம் தொடர்கிறது. ஐதரபாத்து பல்கலை மாணவர் போராட்டத்துக்கு ஆதரவும் தோழமையும் காட்டுவோம்.”

“பல்கலைவளாகங்களில் ஒடுங்கிய (தலித்து) மாணவர்கள் தற்கொலைக்கு இறுதித் தீர்வு சாதிப் பாகுபாட்டினை ஒழிப்பதுதான். இதற்கிடையில் தீண்டாமையால் இழிவுக்கு ஆளான மாணவர்கள் தங்கள் ஒடுங்கிய (தலித்து) ஓர்மையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒடுங்கியர் (தலித்து)களாகப் பெருமையுடன் போராட முன்வர வேண்டும். இதோ என் அருமை நண்பர், இனிய தோழர், நாடெங்கும் புகழ் பெற்ற மாணவர் தலைவர், பல வெற்றிகளை ஈட்டியவர், சுடர்மிகு அறிவாளர், ஒடுங்கிய (தலித்து) மார்க்குசியர். தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு விட்டார். தோழர் உரோகித்து வேமுலா! உங்கள் மறைவு வீண் போகவிடோம்!”

[உரோகித்து வேமுலா ‘நாட்குறிப்புகள்’ நாளைய தாழி மடலில்]

தோழர் தியாகு,

தாழி மடல் 111

ஞாயிறு, 25 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தமிழ்நாடு இனி தொடர் அரசியல் வகுப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறவரா நீங்கள்? அண்மையில் இந்த வகுப்பில் தமிழ்நாட்டில் அச்சுப் பணியின் முன்னோடிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் திரு சி.வை.தாமோதரம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நம் இணைய வகுப்பில் கலந்து கொள்கிறவரான அபுதாபியைச் சேர்ந்த முதுநிலைப் பொறியாளர் சிங்கை கவிதா சோலையப்பன் தாழி அன்பரும் ஆவார். அவர் திரு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை அனுப்பியுள்ளார். படியுங்கள் 

       செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்குப் புது வாழ்வு

(அ)

    நாம் மறந்த தமிழ் அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை  

– கவிதா சோலையப்பன்

தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய்த்தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய்ப் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய்க் கிடைக்கச் செய்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.  இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முறையாகப் பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்துப் புதுவாழ்வு தந்தவர் தாமோதரம் பிள்ளை. இன்று தமிழ்த் துறையில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெரும்துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ் நூல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும் பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார்.

தமிழகத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகப் பதிப்புத் துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்றால் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும் பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவி அம்மாள் இவர்களுக்கு மகனாக 1832இல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக் கொண்டார். பின்னர், கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாகப் படித்தார்.  மொழிப் பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன? எனக் கேள்விக்கணைகள் தொடுத்தவர்.

1853இல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறி விளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதே ஆண்டு தினவர்த்தமானி என்ற தமிழ் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க தாமோதரம் பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்பிற்கு உடன்பட்டு சென்னை வந்தார். ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ்மொழி கற்றுக் கொடுத்தார்.

ஏடுகளைத் தேடி இரவு பகல் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தேடுதலில் கிடைக்கும் ஓலைச் சுவடிகள், எடுக்கும் போதே ஓரம் ஒடிந்து விழும்; கட்டை அவிழ்க்கும் போதே துண்டு துண்டாய்க் கொட்டும்; இன்னும் எழுத்துகள் பாதி அழிந்தும் பாடல்கள் வரிசையின்றியும் இருக்கும். தமிழ் நம் தாய்; அவள் உருக்குலைந்து அழிகின்ற போது நமக்கு என்ன என்று நாம் இருக்க முடியாது என்றார். இப்படிச் சிதைவுற்ற ஓலைச் சுவடிகளைப் பிரித்து எடுத்து காகிதத்தில் அச்சிடுவது அவ்வளவு எளிமையான செயல் இல்லை.

முதலில் ஏடுகளை மிகக் கவனத்துடன் பிரித்தெடுக்க வேண்டும்; பின் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்கும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதற்கும் தனித்திறன் வேண்டும். அத்தகைய திறமையும் புலமையும் கொண்டிருந்தார் தாமோதரனார்.

19ஆம் நூற்றாண்டு ஐரோப்பியரின் தாக்கத்தால் உரைநடை வளர்ச்சி பெற்று செய்யுள் வடிவம் குறைந்திருந்த காலம். தமிழ் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் செய்யுள் வடிவிலான ஏடுகளைப் படித்து ஆய்வு செய்யும் போது தாமோதரம்பிள்ளைக்கு சில சந்தேகங்கள் தோன்றி விடும். அவற்றைத் தீர்க்கத் தக்கவர் இல்லாமல் வருந்தி மன உளைச்சலால் உணவின்றி உறக்கமின்றி இருப்பாராம்.

சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ் அறிஞராகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்று 1858இல் நடத்திய பி.ஏ தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவராகப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1868ஆம் ஆண்டு தனது முப்பத்தாறாம் வயதில் தொல்காப்பியச் சொல் அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டிய மன்னன் கைகளுக்குக் கிடைக்காமல் இழந்ததாய்க் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனது கடும் உழைப்பினால் கண்டு பிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார்.

இவரின் இலக்கிய மீள் கண்டுபிடிப்பு தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வினை வழங்கியது. ஈழத்து ஆறுமுக நாவலரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து பதிப்புப் பணியைச் சிறப்புடன் செய்து வந்தார். வீரசோழியம் (1881),திருத் தணிகைப் புராணம்,  இறையனார் அகப்பொருள்,  நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து,  பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கண விளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

 1871இல் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியால் பண்டைய இலக்கியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிக் கொணரப்பட்டன. 1887இல் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்குச் சீவக சிந்தாமணி ஏடுகளைக் கொடுத்துப் பதிப்பிட உதவினார். பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டார். கட்டளைக் கலித் துறை, சைவ மகத்துவம், சூளாமணி வசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார்.

 1896இல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய (இ)லீலாவதி, சுலோசனை என்ற இரண்டு நாடகங்களின் ஒரு பகுதியைச் சென்னை பல்கலைக் கழகப் பாடமாக அமைத்திட சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் அனுமதி பெற்றுத் தந்தார். தமிழ் நாடக நூல் ஒன்றைப் பல்கலைக்கழகப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை. இவரின் அரும் பணியால் இலக்கியப் படைப்புகள் அழிக்கப்பட முடியாதவையாயின. தனது அரும் பெரும் தமிழ்த் தொண்டினால் பரிதிமாற்கலைஞர், உ.வே. சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டினையும் பெற்றார். தமிழுக்கும் தமிழருக்கும் நலன்கள் பல செய்து பதிப்புத் துறைச் செம்மல் எனப் புகழ் பெற்ற தாமோதரம் பிள்ளை   1-1-1901 அன்று சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் தமிழருக்கு அருளிச் சென்ற செல்வக் களஞ்சியங்களான இலக்கிய நூல்கள் என்றும் மறையாதவை.

(தொடரும்)

தோழர் தியாகு,

தாழி மடல் 111

சனி, 24 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல் தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சென்ற ஆண்டு நான் பொள்ளாச்சியில் இருந்த போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. வளர்ந்து வந்து கொண்டிருந்த இளந்தோழர் ஒருவரைச் சாலை விபத்தில் இழந்தோம். சந்தோசு என்ற இயற்பெயர் கொண்ட தோழர் மகிழவனின் அந்தக் கொடிய இழப்பின் நினைவை அவருக்கு நெருங்கிய நண்பரான தோழர் ப. ஆறுச்சாமி பகிர்கிறார்…

மகிழவன் நினைவுகள்! கனவுகள்! – ப. ஆறுச்சாமி

22.02.2022 அன்று “நடக்கக் கூடாதது நடந்து விட்டது !”.

தந்தை பெரியாரின் இலக்கினை உயிர்மூச்சாக எடுத்துக்கொண்டு “தமிழ்நாடு தமிழுருக்கே” என்ற கொள்கையை நெஞ்சில் சுமந்து பயணித்த இளந்தோழர் இன்று நம்மோடு இல்லை! காலம் விரைவாக எடுத்துக் கொண்டது தோழர் மகிழவனை !.

காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது, ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும். தோழர் மகிழவனது நினைவுகள் இன்றும் மனதோடு மனதாகி பேசிக் கொண்டும், கண்ணீரோடு வந்து கொண்டும் இருக்கின்றன. வாழ்க்கை பொருளுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியவன் மகிழவன்.

தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் அனைத்தும் இவ்வுலகை விடப் பெரியவை! என்பதை நான் நன்கு அறிவேன்.

ஆனால் அந்த ஆசைகளை, கனவுகளைத் தூக்கிச் செல்ல நம் தோள்கள் அணியமாகி விட்டனவா? இல்லை, அணியமாகிக் கொண்டுள்ளனவா? என்பதை அவரவர் மனத்தில் போட்டுக் கொளுத்திக் கொள்ளுங்கள். “நானும் கொளுத்துகின்றேன் “!.

“உண்மைச் சுடர் போல… அதை என்ன முயன்றாலும் மறைத்து வைக்க முடியாது. சீறிக் கொண்டு வெளிச்சம் தரும். திலீபனும் வெல்வான், பிரபாகரனும்  வெல்வான்தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும்.” – தோழர் மகிழவன்

இந்த வரிகளை உணர்வோடு  நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள், மகிழ்ச்சி!

எல்லாவற்றையும் ஒதுக்கி நிதானித்து யோசித்துப் பாருங்கள். திலீபனும் வெல்வான், பிரபாகரனும் வெல்வான்.தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும். இந்த உறுதிதான் தோழர் மகிழவன்!

“வாருங்கள் தங்கைகளே, தோழர்களே! தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் ஆகியவற்றைச் சுமந்து கொண்டுபோய் உலகிற்கு விருந்தாக மாற்றுவோம் !”.

ப.ஆறுச்சாமி

22.02.2023

   தாழி மடல் 110

வெள்ளி, 23 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி)


இனிய அன்பர்களே!

·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;

        பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;

        தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;

        மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;

        வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும் அமைதிச் சூழலையும் சிதைத்தல்;

        இந்திய அரசமைப்பு வழிப்பட்ட மதச் சார்பின்மைக்கும், குடியாட்சியத்துக்கும், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கும், அறிவியல் வரலாற்றுப் பார்வைக்கும் எதிராக இந்துத்துவ வல்லாண்மைக் கருத்துகளைத் திணித்தல்.

இந்தியா எங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றிப் பார்ப்பனிய இந்துத்துவக் கோட்டைகளாக மற்ற நா.தொ.ச.(ஆர்எசுஎசு) தனது மாணவர் பிரிவான அ.இ.மா.ச. (ஏபிவிபி) வழியாக முரட்டுத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் சிலருடன் கல்லூரி, பல்கலைக்கழக ஆட்சிகள் சிலவும் கூட இதற்கு உடந்தையாக இயங்கி வருகின்றன. இந்தப் போக்கின் ஒரு வெளிப்பாடுதான் தில்லி ச.நே.ப. (J.N.U.)-இல் தமிழ்நாசர் மீதும் மற்ற மாணவர்கள் மீதும் நா.தொ.ச.(ஆர்எசுஎசு) குண்டர்கள் நடத்திய வன்செயல். கல்வி நிறுவனங்கள் மீதான நா.தொ.ச.(ஆர்எசுஎசு) வன்தாக்கிற்கு எதிராகப் பல்வேறு பலகலைக்கழக மாணவர் அமைப்புகளையும் இணையவழி ஒருங்கிணைக்கிற முயற்சி செய்து வருகிறோம். அதற்கான பரப்புரை இயக்கத்தின் தொடக்கமாக (உ)ரோகித் வேமுலாவின் இறுதி மடலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

(உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

வணக்கம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்னிடம் சினங்கொள்ளாதீர்கள். எனக்குத் தெரியும், உங்களில் சிலர் என்னிடம் மெய்யாகவே அக்கறைப்பட்டீர்கள், என்னை நேசித்தீர்கள், என்னை மிக நன்றாக நடத்தினீர்கள். எவர் மீதும் எனக்குக் குறைசொல்ல எதுவுமில்லை. எப்போதும் எனக்கு என்னிடத்திலேதான் சிக்கல்கள் இருந்தன. எனது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடைவெளி வளர்ந்து வருவதாக உணர்கிறேன். நான் பெரிய அசுரனாகி விட்டேன். எழுத்தாளன் ஆக வேண்டும் என்றுதான் எப்போதுமே விரும்பினேன். காரல் சாகனைப் போல் அறிவியல் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அறிவியலை, விண்மீன்களை, இயற்கையை நேசித்தேன். 

பிறகு மக்களை நேசித்தேன். மக்கள் நீண்ட காலமுன்பே இயற்கையை விட்டு விலகிப் போய் விட்டார்கள் என்று அறியாமல் மக்களை நேசித்தேன். நம் எண்ணங்கள் கைமாறி வரக்கூடியவை. நமது நேசம் கட்டி வளர்க்கப்படுவது. நமது நம்பிக்கைகள் வண்ணம் பூசியவை. நமது தனித்தன்மை செயற்கைக் கலையின் ஊடாகவே செல்லுபடியாகிறது. காயப்படாமல் நேசிப்பது மெய்யாகவே கடினமாகி விட்டது.

ஒரு மாந்தனின் மதிப்பு அவனது நேர் ஓர்மையும் மிக அண்மைய வாய்ப்புமாகச் சுருங்கி விட்டது. ஒரு வாக்காக. ஓர் எண்ணாக, ஏதோ ஒன்றாக. மாந்தன் ஒரு போதும் ஒரு மனமாக நடத்தப்படவில்லை. விண்மீன் தூளால் ஆன ஒரு புகழ்ப் பொருளாக. களத்தில், படிப்பில், தெருக்களில், அரசியலில், சாவதிலும் வாழ்வதிலும்.

 இவ்வகையான கடிதம் முதல் முறையாக எழுதுகிறேன். முதல் முறையாகக் கடைசிக் கடிதம். பொருள் விளங்க எழுதத் தெரியவில்லை என்றால் மன்னியுங்கள்.

நான் இத்துணைக் காலமும் உலகைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அன்பை, வழியை, வாழ்க்கையை, இறப்பைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் எப்போதும் விரைந்து கொண்டே இருந்தேன். வாழ்க்கை தொடங்கி விட வேண்டும் என்ற தவிப்பு. இத்துணைக் காலமும், சிலருக்கு வாழ்க்கையே சாவக்கேடு. என் பிறப்பு எனக்கு நேர்ந்த உயிர்பறிக்கும் விபத்து. குழந்தைப் பருவத் தனிமையிலிருந்து என்னால் மீள முடியவே இல்லை. கடந்த காலத்திலிருந்து வருவது என் மதிக்கப்படாத குழந்தைமை.

இந்த நேரம் நான் காயபப்படவில்லை. எனக்கு வருத்தமில்லை. வெறுமையாக இருக்கிறேன், அவ்வளவுதான். என்னைப் பற்றிக் கவலை இல்லை. 

அது  இரங்கத்தக்க நிலை. எனவேதான் இப்படிச் செய்கிறேன்.

கண்ணாடியில் தெரியும் பொருட்கள் அவை தோன்றுவதை விட நெருக்கத்தில் இருப்பது (ஒருபோதும் இல்லை.) (உரோகித்தின் முகநூல் பக்கத்திலிருந்து)

மக்கள் எண்னைக் கோழை எனலாம். நான் போன பின் தன்னலக்கரன் அல்லது முட்டாள் எனலாம். என்னை என்ன சொல்வார்கள் என்ற கவலை எனக்கில்லை. சாவுக்குப் பின் வாழ்வு, பிசாசுகள், ஆவிகள் பற்றிய கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏதாவது நம்புவதாக இருந்தால், விண் மீன்களுக்குப் பயணம் செய்யலாம் என்று நம்புகிறேன். வேறு உலகங்ளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கடிதத்தைப் படிக்கிற நீங்கள் எனக்காக ஏதேனும் செய்யக் கூடும் என்றால், எனக்கு 7 மாதக் கால ஆய்வுதவித் தொகை வர வேண்டியுள்ளது. இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் உரூபாய். என் குடும்பத்தினரிடம் அதைக் கொடுக்கச் செய்யுங்கள். இராம்சிக்குக் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கொடுக்க வேண்டும். அவர் அதைத் திருப்பிக் கேட்டதே இல்லை. ஆனால் அருள்கூர்ந்து அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள். என் இறுதி நிகழ்வு அமைதியாகவும் சரளமாகவும் நடக்கட்டும். வந்தேன் போனேன் என்பது போல் நடந்து கொள்ளுங்கள். எனக்காகக் கண்ணீர் உகுக்காதீர்கள். வாழ்வதை விடச் சாவது எனக்கு மகிழ்ச்சி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

“நிழல்களிலிருந்து விண்மீன்களுக்கு.”

உமா அண்ணா, இந்த வேலைக்கு உங்கள் அறையைப் பயன்படுத்த வருந்துகிறேன்.

அம்பேத்துகர் மாணவர் சங்கக் குடும்பத்தினருக்கு, உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளிப்பதற்காக வருந்துகிறேன். நீங்கள் என்னை மிகவும் நேசித்தீர்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

கடைசியாக ஒரு முறை, செய் பீம்!

சம்பிரதாயங்களை எழுத மறந்து விட்டேன். என்னை நானே மாய்த்துக் கொள்ளும் இந்தச் செயலுக்கு யாரும் பொறுப்பில்லை. தங்கள் செயல்களாலோ சொற்களாலோ யாரும் இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டவில்லை.

இது என் முடிவு. இதற்கு நானே பொறுப்பு.

நான் போன பிறகு இதற்காக என் நண்பர்களையோ பகைவர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள்!

[நாளைய தாழி மடலில்: ரோகித்து வேமுலா தற்கொலை ஏன்?]

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109

வியாழன், 22 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி)

 

தருசன் சோலங்கி!

மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி!

அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி.

வயது பதினெட்டு.  தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார்.

படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

கல்லூரி வளாகத்துக்குள் தொல்லைக்கு ஆளான பின் சோலங்கி உயிரை மாய்த்துக் கொண்டாராம்!

மும்பை இ.தொ.நு.(ஐஐடி)- இ ல் முதலாண்டு மாணவரான  பதினெட்டு வயதான சோலங்கியை ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்து சாதி சொல்லி இழிவு செய்ததே அவரைத் தற்கொலைக்குத் தள்ளியதாகச் செய்தி! அவர் ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்தவுடன் மற்றவர்கள் அவரோடு பேசுவதை நிறுத்தி விட்டனராம்! “ஓசியில் படிக்க வந்து விட்டதாக” அவரைக் கேலி செய்தனராம்! இதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சோலங்கி தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும் கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை மறுக்கும் பார்ப்பனிய முற்றாதிக்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவே கருத வேண்டும். கல்வி நிலையங்களில் இந்துத்துவப் பார்ப்பனியம் பலவாறு நடத்தி வரும் தொடர் தாக்குதலின் ஒரு வெளிப்பாடே இது. இதற்குப் பலியாகும் பி.வ. மற்றும் ப.வ. (பி.சி,எசு.சி.) பிரிவினரே ஆவர். இந்தக் கொடிய வதை மூலம் சூத்திர பஞ்சம மாணவர்களைத் திட்டமிட்டு மட்டம் தட்டி அவர்களில் பலரைத் தற்கொலைக்கும் தள்ளிவிடுபவர்கள் பார்ப்பனரும் பிற முன்னேறிய சாதியினரும்தான்.

பல இ.தொ.நு.(ஐ.ஐ.டி.)க்களில் பயிலும் ப.வ.-பி.வ.  (எசுசி-பிசி) மாணவர்கள் “அம்பேத்துகர்-பெரியார் கல்வி வட்டம்” எனும் அமைப்புகளை உருவாக்கி இந்தச் சித்திரவதைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.

மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி)- இல் அம்பேத்துகர்-பெரியார்-புலே கல்வி வட்டம் இயங்கி வருகிறது. சென்னை இ.தொ.நு. (ஐ.ஐ.டி.)-இலும் அம்பேத்கர்-பெரியார் கல்வி வட்டம் இயங்கி வருகிறது.

மறுபுறம் பார்ப்பனியத்தின் தரப்பிலும் இந்துத்துவப் பார்ப்பனிய மதவெறி மாணவர் அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதன் விளைவுகளைப் பார்த்தோம்.

தலித்திய ஆற்றல்கள் ஏனைய குடியாட்சிய ஆற்றல்களோடு இணைந்து நின்று இ.தொ.நு.(ஐ ஐ டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து பார்ப்பனியத்தைக் களைந்தெடுக்க அன்று (உ)ரோகித்து வெமுலா அழைத்தார்! இன்று தருசன் சோலங்கி அழைக்கிறார்!  

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109