புதன், 19 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 75: அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி)

அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக

அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு.

நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின் உச்சம்தான் அம்பேத்துகருக்குக் காவியுடுத்திக் கொட்டையும் பட்டையுமாகக் காட்டியுள்ள கொடுமை! இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்று சூளுரைத்து நான்கு நூறாயிரம் மக்களோடு பௌத்தம் தழுவிய அண்ணலுக்கு இந்துவாக வேடம் கட்டுவதை எதிர்த்துக் கொதித்தெழ வேண்டும்.

சாதியடிமைத்தனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் அம்பேத்கர் ஒடுக்குண்ட மக்களின் ஒளிவிளக்கம்! அவரது நினைவைப் போற்றுவோம்!

+++

தந்தை பெரியார்! தள்ளாத வயதிலும் தமிழினத்தின் தன்மான மீட்சிக்காகத் தளராது உழைத்தவர். “தமிழ்நாடு தமிழர்க்கே!” என்ற முழக்கத்தால் நம் விடுதலைப் பாதையில் வெளிச்சம் ஏற்றியவர்.

சாதி ஒழிப்பு! பெண் விடுதலை! பார்ப்பன எதிர்ப்பு! தில்லியாதிக்க எதிர்ப்பு! இந்த முழக்கங்களை நம் உடலியக்கத்தின் உயிர் மூச்சாக்கியவர். தமிழ்நாட்டு உரிமைகளுக்கும் பார்ப்பன-பனியா சுரண்டல் ஒழிப்புக்குமான தொடர்பைச் சுட்டிக்காட்டி விடுதலைக் கோரிக்கையைப் பொருள் பொதிந்ததாக்க வழிகாட்டியவர்.

இந்தியத் துணைக் கண்டமெங்கும் வளைத்து வாரிச் சுருட்டி வரும் பார்ப்பன பாசிச நச்சுச் சுழல் தமிழ்நாட்டில் தடைபட்டு வீழ்வதன் முதன்மைக் காரணம் இது பெரியார் மண் என்பதே! பெரியாரின் பெரும் பரப்புரை இந்த மண்ணில் விதைத்த இனமானச் சிந்தை வீண்போகவில்லை என்பதே!

பெரியாரின் கொள்கைத் தடியைத் தமிழர்கள் இப்போதும் சுழற்ற வேண்டிய தேவை உள்ளது. தில்லியின் கொட்டம் அடங்கவில்லை. சாதியாணவக் கொலைகள் இன்றும் தொடர்ந்து நிகழ்கின்றன. தமிழ்நாட்டின் மீது வடவர் ஆக்கிரமிப்பு ஒரு நூறு வழிகளில் தொடர்கிறது.

பெரியாரைத் தமிழ் மக்கள் நினைவுகூர்தல் போதாது. அவரது போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்க வேண்டும். அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை ஈட்டும் வரை!

+++

அண்ணல் அம்பேத் துகரையும் தந்தை பெரியாரையும் நாம் நினைவேந்தும் இதே திசம்பர் மாதத்தில்தான் 1968ஆம் ஆண்டு இயேசு கிறித்து பிறந்த அதே 25ஆம் நாள் வெண்மணி என்றொரு தமிழ்ச் சிற்றூரில் உழைக்கும் குலத்தின் கண்மணிகள் பெண்களும் குழந்தைகளும் உட்பட 44 பேர் சேரிக் குடிசையில் உயிருடன் எரிக்கப்பட்ட தீக்கொடுமை நிகழ்ந்தது.

வெண்மணி வெறும் கூலிப் போராட்டமா? இல்லை, சாதிய அடிமைத்தனத்துக்கு எதிரான சமூக விடுதலைப் போராட்டம்! வெண்மணியை எரித்த நெருப்பு இன்றளவும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அந்த நெருப்பை நெஞ்சிலேந்தி சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் எரித்துச் சாம்பலாக்கத் தொடர்ந்து போராடுவோம்!

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  48

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 74: நமக்கொரு 47 (!?)



(தோழர் தியாகு எழுதுகிறார் 73 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இது 47ஆம் தாழி மடல். 47! பெயர் போலவே எண்ணும் ஓர் அருவக் குறியீடு. பருப்பொருளின் இருத்தல் வடிவங்களில் ஒன்று. பொருண்மைக்கு அப்பால் அதற்கொரு பொருள் இல்லை. இது இராசி எண், இது இராசியில்லாத எண் என்பதெல்லாம் மூடத்தனம். 100 என்ற எண் அகவையைக் குறிக்கும் போது  முதுமையைக் குறிப்பதால் மருளச் செய்கிறது. மதிப்பெண்ணைக் குறிக்கும் போது வெற்றியைக் குறிப்பதால் மகிழச் செய்கிறது.

47 என்ற எண் ஆண்டைக் குறிக்கும் போது 1947! வரலாற்றில் முக்கிய ஆண்டுகளில் ஒன்று! இரவில் வாங்கினோம் விடியவே இல்லை என்ற நறுக்குக்கு இலக்கான இந்திய விடுமையைக் குறிப்பது.

47 ஆகட்டு 15ஆம் நாள் கிடைத்தது விடுதலையா? விடுமையா? கொடி மாற்றத்தால் குறிக்கப் பெற்ற அதிகாரக் கைமாற்றமா? அல்லது நள்ளிரவு நாடகம் மட்டும்தானா? வரலாற்றில் இந்த நாளைத் துக்க நாள் என்று குறித்த பெரியார் கருத்து சரியா? அல்லது அவரோடு மாறுபட்டு அண்ணா சொன்னதுதான் சரியா?

பொதுமை இயக்கக் கருத்தியல் விவாதங்களில் 47க்கு ஒரு மையமான இடம் உண்டு. மா-இலெ கட்சி உள்விவாதங்களில் 1947 குறித்த மாறுபாடுகளுக்கு முக்கிய இடம் இருந்தது. சிறையில் ‘இந்தியப் புரட்சி’ பற்றி என் பார்வையில் மாற்றம் வந்த போது 47 குறித்து ஒரு கட்டுரை எழுதித் தோழர்களிடம் சுற்றுக்கு விட்டேன். அது பெரிய கருத்து மோதலுக்கு விட்டது.

2010ஆம் ஆண்டு காவிரித் தீரத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் என் தலைமையில் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் எடுத்தோம். இயக்க வரலாற்றில் அது ஒரு பெருநிகழ்வு. எத்தனை நாள் என்று கணக்கிட்ட போது 47 நாள் வந்தது. சனவரி 25ஆம் நாள் காலை கோடியக்கரையில் உப்புநீரில் கால் நனைத்துப் பயணம் புறப்பட்ட போது “இது 47 நாள் நடைப்பயணம், நமக்கொரு 47 தேவை என்பது நினைவிருக்கட்டும்” என்று சொல்லித் தொடங்கினேன். 47 நாள் நடந்து குடந்தை சென்றடைந்த போது 1,047 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) கடந்து முடித்திருந்தோம்.

நமக்கொரு 47 தேவை என்ற நினைப்பில் பிழை இல்லை. ஆனால் அது இந்திய 47 போல் ஏமாற்றி விடாமலிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் தேவை.

இலெனின் என்ன சொன்னார்?

தேசிய இனச் சிக்கலில் மார்க்குசியப் பார்வைக்காக ஒரு காலத்தில் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் போராடி அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இப்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவராக இருக்கும் தோழர் பெ. மணியரசன். இப்போது நிறையவே மாறி விட்டார்.

தேசிய இனச் சிக்கலில் மார்க்குசியப் பார்வை குறித்து இப்போது அவர் சொல்கிறார்:

”சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. என்பது நமது திறனாய்வு. அயர்லாந்து போன்ற தேசங்களில் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது காரல் மார்க்குசு அதை ஆதரித்தார். தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார். சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக, புறநிலை உண்மையாக தேச விடுதலைப் போராட்டம் இருக்கிறது என்பதை மார்க்குசும் இலெனினும் கூறவில்லை. ஒரு தேசிய இனம் தனக்கு முரண்பட்ட பிற தேசிய இனங்களிடமிருந்து பிரிந்து போகும் உரிமையான தன்னுரிமையை ஒரு சனநாயக உரிமையாக மட்டும் இலெனின்  வரையறுக்கிறார்.”

(பெ. மணியரசன், திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? பக்கம் 15.)  

மார்க்குசியத்தின் மீதான இந்தத் துணிச்சலான திறனாய்வுக்கு விரிவாக விடை சொல்லத்தான் வேண்டும். அதற்குமுன், இலெனின்  குறித்து பெ.ம. சொல்வது மெய்தானா? என்று பார்த்து விடுவோம்.

“தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார்” என்று ‘திறனாய்வு’ செய்யும் பெ.ம. இதற்குச் சான்று ஏதும் தரவில்லை. எடுத்துக்காட்டு என்று எதுவும் குறிப்பிடவில்லை.

ஏதாவது ஒரு தேச விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, அந்தப் போராட்டத்தை எந்தெந்தக் கட்டங்களில் இலெனின்  ஆதரிக்க மறுத்தார் என்பதைப் பெ.ம. சுட்டிக்காட்டட்டும். தேசியத் தன்னுரிமையை (தேசியத் தன்-தீர்வுரிமையை) ஆதரிக்கக் கூடாத கட்டங்கள் என்று இலெனின்  சொன்னவற்றையும் அவர் நம் பார்வைக்கு வைக்கட்டும்.

நான் சொல்கிறேன்: தேச விடுதலைப் போராட்டத்தை,  தேசியத் ‘தன்னுரிமையை’  இலெனின்  எப்போதும் ஆதரித்தார். எந்தக் கட்டத்திலும் ஆதரிக்க மறுத்ததில்லை.

பெ.ம. சொல்வதன் பொருள்: ஒரு போராட்டத்தைத் தேச விடுதலைப் போராட்டம் என்று ஏற்றுக் கொண்டாலும் இலெனின்  அப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு; தேசியத் ‘தன்னுரிமை’ என்று தெரிந்தே இலெனின்  அவ்வுரிமையை ஆதரிக்க மறுத்த கட்டங்கள் உண்டு என்பதாகும். பெ.ம.வின் இந்தத் ‘திறனாய்வு’க்கு அடிப்படை ஏதும் உண்டா? பார்ப்போம்.

தேசியத் தன்னுரிமை என்று பெ.ம. குறிப்பிடுவதும், தேசியத் தன்-தீர்வுரிமை என்று நான் குறிப்பிடுவதுமான தேசிய தன்தீர்வு(சுயநிருணய) உரிமை குறித்து இலெனின்   ஏராளமாக எழுதியுள்ளார். இவற்றுள் முதன்மையான இரு நூல்கள்:1914இல் எழுதிய தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை [THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION]; 1916இல் எழுதிய குமுகியப் புரட்சியும் தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமையும் [THE SOCIALIST REVOLUTION AND THE RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION].

இந்த இரு நூல்களையோ, வேறெந்த இலெனின்  எழுத்தையுமோ எடுத்துக்காட்ட பெ.ம. தமது திறனாய்வை — “தேச விடுதலைப் போராட்டம், தேசியத் தன்னுரிமை, (Self-Determination) ஆகியவற்றை எந்தெந்தக் கட்டத்தில் ஆதரிக்கலாம், எந்தெந்தக் கட்டங்களில் ஆதரிக்கக் கூடாது என்று இலெனின்  சொன்னார்” என்ற திறனாய்வை – உரிய சான்றுகளுடன் மெய்ப்பிக்க முற்படவில்லை. இனியாவது அந்த முயற்சியை அவர் செய்தால் நன்று.

இலெனின்  “தேசியத் தன்னுரிமையை” முழுமையாக ஆதரித்தார், அட்டி யின்றி ஆதரித்தார் என்பதே என் நிலைப்பாடு. இதற்கான சான்றுகள் இதோ:

1896ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பன்னாட்டுப் பேராயத்தின் தீர்மானத்தை இலெனின்   எடுத்துக்காட்டுகின்றார்:

“இந்தப் பேராயம் அனைத்துத் தேசிய இனங்களின் முழு அளவிலான தன்-தீர்வுரிமையையும் ஆதரிப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறது; படை வகை, தேசிய வகை அல்லது பிறவகை முற்றாதிக்க நுகத்தடியின் கீழ் அல்லலுற்று வரும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்கள் பாலும் பரிவு தெரிவித்துக் கொள்கிறது….”

தேசியத் தன்-தீர்வுரிமையின் அரசியல் உள்ளடக்கமாகிய பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமைக்கும் பிரிவினைக்குமான தொடர்பை இலெனின்   இவ்வாறு வரையறுக்கிறார்:

“அனைவருக்குமான பிரிந்து போகும் உரிமையை அறிந்தேற்றல், உருத்திட்டமான பிரிவினைச் சிக்கல் ஒவ்வொன்றையும் அணுகும் போது ஏற்றத்தாழ் வனைத்தையும், சிறப்புரிமைகள் அனைத்தையும், தனித்தொதுக்கம் அனைத்தையும் அகற்றும் கண்ணோட்டத்திலிருந்து மதிப்பிடுதல்.”

மார்க்குசியத்தின் தேசியத் திட்டம் என்ன? என்ற வினாவிற்கு விடையிறுக்கும் போது இரத்தினச் சுருக்கமாக இலெனின்  முடிவுரைக்கிறார்:

“அனைத்துத் தேசிய இனங்களுக்கும் முழுமையான உரிமைச் சமத்துவம்; தேசிய இனங்களுக்குத் தன்-தீர்வுரிமை; அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமை – மார்க்குசியமும் உலகமுழுவதன் பட்டறிவும், உருசியாவின் பட்டறிவும் தொழிலாளர்களுக்குக் கற்றுத்தந்துள்ள தேசியத் திட்டம் இதுவே.”

ஆக, இலெனின்  தேசியத் தன்-தீர்வுரிமையை (தன்னுரிமையை) ஆதரித்த கட்டங்கள், ஆதரிக்காத கட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெ.ம. அவர்களே! இலெனின் இந்தக் கட்டத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை, தேசியத் தன்னுரிமையை ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார் என்று ஒரே ஒரு சான்றாவது காட்டுங்கள், பார்ப்போம்! ஒரு சான்றுமே இல்லாமல் உங்கள் மனத்தில் பட்ட எதையோ இலெனின் மேல் சாற்றுகிறீர்கள் என்றால்,  இது திறனாய்வு அன்று, அவதூறு! அவலை நினைத்து உரலை இடிக்கும் வேலை!

அன்று மணியரசனையும் பிற்காலத்தில் என்னையும் மறுப்பதற்கு பி.ஆர். பரமேசுவரன் முதலான தலைவர்கள் கையாண்ட முறைதான் மேற்கோள் உருவல்! அன்பர் கதிரவன் எடுத்துக் காட்டியது போன்ற சில மேற்கோள்களைப் புரியாத்தனமாக எடுத்துக் காட்டி அணிகளை மயக்குவது!

ஒரு முறை உமாநாத்து என்னைக் கேட்டார்; “நீங்கள் தன்தீர்வு(சுய நிருணய)வுரிமை வேண்டும் என்கிறீர்களா? நாங்கள் தன்தீர்வு(சுய நிர்ணய) உரிமை கூடாது என்கிறோம். மணியரசன் சொல்வதை நீங்கள் சொல்கின்றீர்கள்.”

“இல்லை, நான் இலெனின் சொல்வதைச் சொல்கிறேன்.”

அன்று இலெனின் எழுதியதை அடிப்படையாகக் கொண்டு வாதிட்ட பெ, மணியரசன் இப்போது அதே இலெனினை அவதூறு செய்யப் புறப்பட்டுள்ளார்.

அவர் மனத்தில் கொண்டுள்ள மேற்கோள்களில் ஒன்று அன்பர் கதிரவன் எடுத்துக் காட்டியதாக இருக்கக் கூடும்.  

நாளை தொடர்கிறேன்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  47

திங்கள், 17 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 73

      17 April 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு தொடர்ச்சி)

அன்பர் கதிரவன் தாழி மடல் 45இல் இரு செய்திகளை முன்வைத்து விளக்கம் கோரியிருந்தார்:

1.   வியத்துநாம் வரலாறு தொடர்பான ஒரு செய்தி;

2.   தேசங்களின் தன்-தீர்வுரிமை தொடர்பாக இலெனினிடமிருந்து ஒரு நீண்ட மேற்கோள்.

வியத்துநாமைப் பொறுத்த வரை இந்தோ- சீனா(INDO – CHINA) என்ற ஏட்டின் 1970 சூன் இதழின் படப் படி ஒன்றை அன்பர் கதிரவன் அனுப்பியுள்ளார். கருத்துக்குரிய வரலாற்றுச் செய்திகள் அதில் காணக் கிடைக்கின்றன. அவர் நேற்று அனுப்பியதோடு சேர்த்து இதையும் நாம் பிறகு எடுத்துக் கொள்வோம்.

இப்போது அந்த இலெனின் மேற்கோள்களைப் பார்ப்போம்:—

___“உருசியாவில் இதைப் போல ஏதாவது உண்டா? இன்னும் மோசமான தேசிய இன ஒடுக்கு முறை அபாயத்தை எதிரிட வேண்டுமே என்ற அச்சத்தால் “வேற்று இனத்தவர்கள்” மகா உருசியர்களுடன் ஒற்றுமை வேண்டுமென்று நமது நாட்டில் முயற்சி செய்கிறார்களா?

“தேசிய இனங்களின் தன் தீர்வுரிமை பற்றிய சிக்கலில் உருசியாவையும் ஆத்திரியாவையும் ஒப்பிடுவது பொருளற்றது, வெற்றாரவாரமானது, அறிவில்லாதது என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தக் கேள்வியை எழுப்பினால் போதும்.

 “தேசிய இனச்சிக்கல் தொடர்பாக உருசியாவில்  காணப்படும் தனிப்பட்ட நிலைமைகள் ஆத்திரியாவில் நாம் காணும் தனிப்பட்ட நிலைமைகளுக்கு நேர் எதிரானவை. மகாஉருசியா எனும் தனியொரு தேசிய இன மையத்தைக் கொண்டதான அரசாகும் . மகாஉருசிய இனத்தவர் பரந்ததான இடைமுறிவு இல்லாத நிலப்பரப்பில் வாழ்கின்றனர், அவர்களின் தொகை ஏறத்தாழ  7,00,00,000 ஆகும். இந்தத் தேசிய இன அரசின் தனிப்பட்ட சிறப்பியல்புகளாவன: முதலாவதாக, “வேற்று இனத்தவர்கள்” (இவர்கள் மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மையினர்—57 %) எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கிறார்கள்; இரண்டாவதாக, இந்த வேற்று இனத்தவர்கள் அண்டை நாடுகளைக் (ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல) காட்டிலும் இங்கு அதிகக் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்; மூன்றாவதாகப், பல இடங்களில் எல்லைப்புறப் பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சக இனத்தவர்கள் எல்லைகளுக்கு அப்பால் வாழ்கிறார்கள், அதிக தேசிய இன சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் (மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளில் உள்ள ஃபின் இனத்தவர், சுவீடிசு காரர்கள், போலந்துக் காரர்கள், உக்குரேனியர்கள்,     உருமேனியர்கள் ஆகியவர்களைக் குறிப்பிட்டாலே போதும்); நான்காவதாக உருசியரல்லாதார் வாழும் எல்லைப்புறப் பகுதிகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், கலாசாரத்தின் பொதுத் தரமும் மத்தியப் பகுதியைக் காட்டிலும் அடிக்கடி உயர்ந்தவை. இறுதியாக, அண்டையிலுள்ள ஆசிய நாடுகளில்தான் பூர்சுவா புரட்சிகள், தேசிய இன இயக்கங்களின் வளர்ச்சிப் படியின் துவக்கத்தைக் காண்கிறோம், அவை உருசியாவின் எல்லைகளுக்குள் வாழும் சில சக உறவுடைய தேசிய இனங்களிடையே பரவி வருகின்றன.

“இவ்வாறாக, உருசியாவின் தேசிய இனச்சிக்கலின் திட்டவட்டமான வரலாற்றுச் சிறப்பியல்புகள்தான் இன்றைய காலப் பகுதியில் தேய இனங்களின் தன்-தீர்வுரிமை அங்கீகரிக்கப்படுவதை நமது நாட்டில் தனி அவசர முக்கியத்துவமுடைய ஒரு காரியமாக ஆக்கியுள்ளன.

“தவிர, முற்றும் மெய்விவரங்களைக் கொண்ட கோணத்திலிருந்து பார்த்தால் கூட, ஆத்திரிய சமூக-சனநாயகவாதிகளின் வேலைத் திட்டத்தில் தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை பற்றிய அங்கீகாரம் எதுவும் காணப்படவில்லை என்னும் உரோசா (உ)லுக்குசம்பர்க்கின் கூற்று தவறானது.

“தேசிய இன வேலைத் திட்டத்தை ஒப்புக் கொண்ட புரூயூன் காங்கிரசு குறிப்பேடுகளைத் திறந்து பார்த்தால் போதும், உக்குரேனிய (உருதீனிய) சார்பாளர் குழு முழுவதன் சார்பில் உருதீனிய சமூக-சனநாயகவாதியான கன்கேவிச்சும் (குறிப்பேடுகள், பக்கம் 85) போலிசு சார்பாளர் குழு முழுவதன் சார்பில்…”___

[இந்த மேற்கோளைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை கருதி ஆங்கிலத்திலும் தருகிறேன்.]

Is there anything like this in Russia? Is there in our country a striving of the “subject peoples” for unity with the Great Russians in face of the danger of worse national oppression?

One need only pose this question in order to see that the comparison between Russia and Austria on the question of self-determination of nations is meaningless, platitudinous and ignorant.

The peculiar conditions in Russia with regard to the national question are just the reverse of those we see in Austria. Russia is a state with a single national centre— Great Russia. The Great Russians occupy a vast, unbroken stretch of territory, and number about 70,000,000. The specific features of this national state are: first, that “subject peoples” (which, on the whole, comprise the majority of the entire population—57 per cent) inhabit the border regions; secondly, the oppression of these subject peoples is much stronger here than in the neighbouring states (and not even in the European states alone); thirdly, in a number of cases the oppressed nationalities inhabiting the border regions have compatriots across the border, who enjoy greater national independence (suffice it to mention the Finns, the Swedes, the Poles, the Ukrainians and the Rumanians along the western and southern frontiers of the state); fourthly, the development of capitalism and the general level of culture are often higher in the non-Russian border regions than in the centre. Lastly, it is in the neighbouring Asian states that we see the beginning of a phase of bourgeois revolutions and national movements which are spreading to some of the kindred nationalities within the borders of Russia.

Thus, it is precisely the special concrete, historical features of the national question in Russia that make the recognition of the right of nations to self-determination in the present period a matter of special urgency in our country.

Incidentally, even from the purely factual angle, Rosa Luxemburg’s assertion that the Austrian Social-Democrats’ programme does not contain any recognition of the right of nations to self-determination is incorrect. We need only open the Minutes of the Brünn Congress, which adopted the national programme,[1] to find the statements by the Ruthenian Social-Democrat Hankiewicz on behalf of the entire Ukrainian (Ruthenian) delegation (p. 85 of the Minutes), and by the Polish Social-Democrat Reger on behalf of the entire Polish delegation (p. 108), to the effect that one of the aspirations of the Austrian Social-Democrats of both the above-mentioned nations is to secure national unity, and the freedom and independence of their nations. Hence, while the Austrian Social-Democrats did not include the right of nations to self-determination directly in their programme, they did nevertheless allow the demand for national independence to be advanced by sections of the party. In effect, this means, of course, the recognition of the right of nations to self-determination! Thus, Rosa Luxemburg’s reference to Austria speaks against Rosa Luxemburg in all respects.

தமிழில் இந்த மேற்கோள் அரைகுறையாக முடிவது போல் அல்லாமல் ஆங்கிலத்தில் முழுமைப்படுத்தியுள்ளேன். தோழர் கதிரவன் அனுப்பியுள்ள திரைப்பிடியில் “போலிசு சார்பாளர் குழுவின் சார்பில்…” என்று அரைகுறையாக நிற்கிறது. இதற்குப் பிறகு வரும்

….. by the Polish Social-Democrat Reger on behalf of the entire Polish delegation (p. 108), to the effect that one of the aspirations of the Austrian Social-Democrats of both the above-mentioned nations is to secure national unity, and the freedom and independence of their nations. Hence, while the Austrian Social-Democrats did not include the right of nations to self-determination directly in their programme, they did nevertheless allow the demand for national independence to be advanced by sections of the party. In effect, this means, of course, the recognition of the right of nations to self-determination! Thus, Rosa Luxemburg’s reference to Austria speaks against Rosa Luxemburg in all respects

என்ற இறுதிப் பகுதியின் முக்கியத்துவத்தை             

இந்த விவாதத்தின் இறுதியில் நான் சொல்கிறேன்.

சரி, இந்த மேற்கோள் இலெனின் எழுதிய “தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை [சுய-நிர்ணய உரிமை]” (RIGHT OF NATIONS TO SELF-DETERMINATION) என்ற நூலின் 3ஆம் அதிகாரத்திலிருந்து எடுத்தளிக்கப்படுகிறது. இந்த அதிகாரத்துக்கு இலெனின் கொடுத்த தலைப்பு: “உருசியாவில் தேசியஇனச் சிக்கலின் உருவியல் கூறுகளும் உருசியாவின் முதலியக் குடியாட்சியச் சீர்திருத்தமும்” [THE CONCRETE FEATURES OF THE NATIONAL QUESTION IN RUSSIA, AND RUSSIA’S BOURGEOIS-DEMOCRATIC REFORMATION]

[என் தமிழாக்கமும் அச்சில் வந்துள்ள மொழிபெயர்ப்பும் சற்றே வேறுபடலாம். என் கையில் தமிழ் மொழிபயர்ப்பு நூல் இல்லாமல் போய் விட்டது.]

இந்த நீண்ட மேற்கோளில் இலெனின் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த மேற்கோளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்துத் தலையைப் பிய்த்துக் கொள்ளாமல், மொத்த நூலின் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு இந்த மேற்கோளின் இடம்பொருள்ஏவல் கருதிப் பொருள் கொள்ள வேண்டும். 

உரோசா (உ)லுக்குசம்பர்க்கு எழுதிய “தேசிய இனச் சிக்கலும் தன்னாட்சியும்” என்ற கட்டுரையை மறுத்து 1914 பிப்பிரவரி – மே காலத்தில் இலெனின் இந்த நூலை எழுதினார். நூலின் முதல் அதிகாரம்: தன்-தீர்வு (சுய நிர்ணயம்) என்றால் என்ன? 1903ஆம் ஆண்டின் உருசியக் கட்சித் திட்டத்துக்கு முன்பே 1896இல் இலண்டனில் நடந்த பன்னாட்டுப் பேராயம் தன்-தீர்வு பற்றிப் பேசியதை இலெனின் எடுத்துக் காட்டுகிறார்:

“இந்தப் பேராயம் அனைத்துத் தேசிய இனங்களின் முழு அளவிலான தன்-தீர்வுரிமையையும் ஆதரிப்பதாகப் பறைசாற்றிக் கொள்கிறது; படைவகை, தேசியவகை அல்லது பிறவகை முற்றாதிக்க நுகத்தடியின் கீழ் அல்லலுற்று வரும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்கள் பாலும் பரிவு தெரிவித்துக் கொள்கிறது….” (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

அனைத்துத் தேசிய இனங்கiளின் தன்-தீர்வுரிமை என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மார்க்குசியத்தின் தேசியத் திட்டம் என்ன? என்ற வினாவிற்கு விடையிறுக்கும் போது இரத்தினச் சுருக்கமாக இலெனின்  முடிவுரைக்கிறார்:

“அனைத்துத் தேசிய இனங்களுக்கும் முழுமையான உரிமைச் சமத்துவம்; தேசிய இனங்களுக்குத் தன்-தீர்வுரிமை; அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒற்றுமை – மார்க் குசியமும் உலகமுழுவதன் பட்டறிவும், உருசியாவின் பட்டறிவும் தொழிலாளர்களுக்குக் கற்றுத்தந்துள்ள தேசியத் திட்டம் இதுவே.”

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இலெனின் அனைத்துத் தேசிய இனங்களுக்குமான தன்-தீர்வை வலியுறுத்தவில்லை, அவர் கூறியது உருசியாவுக்கு மட்டும் பொருந்தும், இந்தியாவுக்குப் பொருந்தாது என்று நீண்ட காலமாகவே ஒரு திரிபு பேசப்படுகிறது. இதற்கு இலெனின் மேற்கோள்களைத் தந்திரமாக உருவி வந்து பயன்படுத்தும் போக்கு உள்ளது. சிபிஎம் தலைவர்கள் சிலர் இந்த வேலையில் சமர்த்தர்கள். கடைசியாக இந்தத் திரிபில் இணைந்திருப்பவர் தோழர் பெ. மணியரசன். அவருக்கு மறுப்பாக நான் எழுதிய “ஆய்வின் பெயரால் அவதூறு” நாளை தாழியில் இடம்பெறும்.

அன்பர் கதிரவனும் சரி, இந்த உரையாடலைத் தொடரும் மற்றவர்களும் சரி, சட்டு புட்டென்று முடிவு காண அவசரப்பட வேண்டா. பலருக்கு இந்த உரையாடல் சலிப்பூட்டவும் செய்யக் கூடும். ஆனால் பொறுமையாக அணுகிக் கூர்மையாகக் கவனித்து வந்தால் புரிந்து கொள்ள முடியும், என்னால் புரிய வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். தொடர்வோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 46

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு – தொடர்ச்சி)

நலங்கிள்ளியின் பின்னூட்டம் மெல்ல, இல்லை, விரைந்து

தமிழினிச் சாகும்?

தமிங்கில விளம்பரம்பற்றி,  தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது பற்றி உங்களின் பதிவு கண்டேன். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை. இன்னும் 15 ஆண்டில் நாம் அடிக்கும் துண்டறிக்கைகளையும் இந்தப் பாணியில் அடித்தாக வேணடும். இது நடக்கப் போவது உறுதி. 

இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பகிரியில்(வாட்சப்பில்) தட்டச்சு செய்து மாறி மாறி உரையாடிக் கொள்வதைப் பாருங்கள். முழுக்க ஒலிபெயர்ப்புதான். அண்மையில் கல்லூரி மாணவர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளக் காண்கிறோம். அவர்கள் எழுதி வைக்கும் தற்கொலைக் கடிதத்தில் ஒலிபெயர்த்துதான் எழுதுகிறார்கள். 

இன்று இந்தத் தலைமுறை இந்த மொழிக் கொலைக்கு எதிராகப் போராடா விட்டால், நான் கூறியதுதான் நடக்கும். நாமே மேடைகளில் தமிங்கிலத்தில் பேசுவோம், தமிங்கிலத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்வோம். 

எப்படிச் சுற்றுச்சூழல் சிக்கல் உலககுக்குக் கடைசி எச்சரிக்கை மணி அடிக்கிறதோ, அதே நிலைதான் இப்போது தமிழுக்கும். 

தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு

இனிய அன்பர்களே!

வரலாறு என்பது 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். நேற்றைய செய்தி இன்றைய வரலாறு என்பர்.

 50-60 ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்திகளில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு. ஏனென்றால் அப்போதே செய்தித் தாள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்தது. அப்போதெல்லாம் திருவாரூரில் நிறைய படிப்பகங்கள் உண்டு. பள்ளிக்கு அருகிலேயே திரு.வி.க. நூலகம் இருந்தது, இப்போதும் இருக்கிறது. படிப்பகங்களில் ஏட்டை முழுமையாக விரித்து அதன் மேல் கவிழ்ந்து படிப்பேன். அரசியல் செய்திகள் மட்டும்தான்.

வலங்கைமான் வந்த பிறகு அரசு நூலகத்தில் பல புதிய ஏடுகள் அறிமுகமாயின. கருமுத்து தியாகராசர் நடத்திய ‘தமிழ்நாடு’ என்ற நல்ல தமிழ் நாளேடு. தமிழரசுக் கழகக் கொள்கைகள் தாங்கிய மபொசி யின் ‘செங்கோல்’. கண்ணதாசனின் ‘கண்ணதாசன்’.

வலங்கைமான் கம்பிக்காரத் தெருவில் என் அறிவுத் தந்தை அமீர்சான் தனது எழிலகத்துக்கு வெளியே பந்தல் போட்டு, சொந்தச் செலவில் முக்கிய நாளேடுகள் வாங்கிப் போட்டு விடுவார். படிப்பகத்தின் பெயர் “நாணய நிரூபணப் படிப்பகம்” – கண்காணிக்க யாரும் இல்லை, எதையும் எடுத்துச் செல்லாமல் படித்து விட்டு வைத்துச் சென்று விடுவார்கள் என்பதுதான் நாணய நிரூபணம். அவரது இறுதிக் காலம் வரை இந்தப் படிப்பகம் இயங்கி வந்தது. அங்கு போகும் போதெல்லாம் படிப்பகத்தில் சிறிது நேரம் படித்து விட்டுத்தான் அழைப்பு மணியை அழுத்துவேன்

கல்லூரிக் காலத்தில் அரசியல் ஈடுபாடு முழுமை பெற்று விட்டதால் பாடப் புத்தகப் படிப்பை விட ஏடுகள், அரசியல் நூல்கள் படிப்பதுதான் கூடுதல்.

1970இல் சிறைப்படும் நேரம் வியத்துநாம் விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க வான் குண்டு வீச்சு பற்றிய செய்திகள், பிறகு பாரிசு பேச்சுவார்த்தை, கிசிங்கருடன் (இ)லீடக்குதோ பேச்சு ….  இந்தச் செய்திகளை நான் படிப்பதோடு, ஆங்கில நாளேட்டிலிருந்து மற்றத் தோழர்களுக்குத் தமிழில் படித்துக் காட்டவும் வேண்டும்.

அப்போது படித்த அந்தச் செய்திகளை இப்போது மீண்டும் அதே செய்தி வடிவில் படித்தால் எப்படி இருக்கும்?  

ஆங்கில இந்து நாளேட்டில் 50 ஆண்டு முன்பு என்று சில பழைய செய்திகளை நேற்று நடந்தது போல் வெளியிடுகின்றனர். சென்ற 19.12.2022 இதழில் வியத்துநாம் பற்றிய ஒரு செய்தி – படித்துத்தான் பார்ப்போமே!

+++

வட வியத்துநாம் மீது அமெரிக்கா மீண்டும் முழு அளவிலான 

குண்டு வீச்சு!

வாசிங்குடன், திசம்பர் 18: வட வியத்துநாம் மீது அமெரிக்க அரசு மீண்டும் முழு அளவில் குண்டு வீசத் தொடங்கியுள்ளது. போருக்குத் தீர்வு காண அனோய் ஒப்புக் கொள்ளும் வரை குண்டுவீச்சு தொடரும் என்று வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது. 20ஆம் இணைகோட்டுக்கு வடக்கே மீண்டும் குண்டுவீச்சு நடத்த அதிபர் நிக்குசன் ஆணையிட்டார்.   “பகைவனின் இன்னுமொரு படைக் குவிப்பைச் சமாளிக்கவும் பொதுவுடைமைத் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதால் அதனை வருமுன் தடுக்கவும்” இந்தக் குண்டுவீச்சுக்கு ஆணையிடப்பட்டுள்ளது என்றும் வெள்ளை மாளிகை அறியத் தந்தது. ஆனால் அதிபரின் பத்திரிகைச் செயலர் திரு (உ)ரொனாலுடு சீக்குலர் திரு நிக்குசனின் முடிவை அமைதிப் பேச்சு வார்த்தையில் இப்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையோடு தொடர்பு படுத்த மறுத்து விட்டார். “அமைதிப் பேச்சுகளை மாற்றொரு தாக்குதலுக்கு மறைதிரையாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை” என்று செய்தியாளர்களிடம் திரு ஜீக்லர் கூறினார். “பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பதற்கான பாதை அகலத் திறந்துந்துள்ளது” என்றார். “பூசலுக்குத் துரிதத் தீர்வு காணவே விரும்புகிறோம்”

+++


அன்பர்களே! இந்தச் செய்தியைப் புரிந்து  கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு வியத்துநாம் விடுதலைப் போரின் வரலாறு உருவரையாகவேனும் தெரிந்திருக்க வேண்டும். ஓசிமின், தளபதி வான் கியாபு, தின்பின்பூ.. இந்தப் பெயர்களைத் தேடுங்கள். அரசறிவியல் வளர்ச்சிக்கு வியத்துநாம் வரலாறு உதவும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 44