வியாழன், 3 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் –  இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள்  ‘பிசி’ என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன சாதி என்பதைக் கேட்டால்தான் நீங்கள் ‘பிசி’யா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். என்ன சாதி என்று கேட்டால்தான் ‘எசுசி’ அல்லது ‘எசுடி’ என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அப்போது இந்தச் சாதி என்பதை வைத்து அந்த சாதிச் சான்றிதழ் வைத்துத் தான் உங்களை ‘பிசி’யில் சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக நாம் போய் நின்றோம் என்றால் சாதியைச் சொல்லிச் சாதிக்குக் கொடுக்கவில்லை இட ஒதுக்கீடு! ஆனால் அந்தச் சாதி என்பதை வைத்து என்ன ‘கிளாசு’ என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.

 அப்போது இந்த அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. அதாவது சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு என்பது சாதிக்குத்தான்! தாழ்த்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தைப் பற்றி அவரவர் நண்பர்களின் குடும்பத்தைப் பற்றி அவரவர் உறவுக்காரர்களை பற்றி அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம் குழந்தைகள் படிக்கிறார்கள். நம் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்கள். வடநாட்டைப் போல் இங்கு இல்லை, வங்காளத்தைப் போல் இல்லை, ஏன் இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! 

இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இவ்வளவு படிப்பறிவு வந்திருக்காது. இவ்வளவு வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது. இது போதும் என்று நாம் நிறைவடையவில்லை. ஆனால் இதுவாவது வந்தது என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! இதனால் என்ன பார்ப்பனர்களுக்குப் பங்கு குறைந்து போய் விட்டதா? அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய் விட்டதா? எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள்‘இரயில்வே’யில் மேலாளர்கள் யார்? வங்கிகளில் யார் உட்கார்ந்திருப்பது? ஒன்று, பார்ப்பனர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்த எசுசி எசுடியாக இருப்பார்கள். மண்டல் குழுவின் பரிந்துரையால் வந்தவர்கள் இன்னும் போதிய எண்ணிக்கையில் வரவில்லை. இவையெல்லாம் கருதித்தான் இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எசுசி எசுடி அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், அதாவது ஓபிசி-க்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது அந்தக் கோரிக்கைக்கு உருவம் கொடுப்பதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சட்டத்திலே அம்பேத்துகர் எழுதி வைத்தார். ஆனால் நேருவும் வல்லபாய் பட்டேலும் அந்த ஆணையத்தை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள் அம்பேத்துகர் பொறுத்துப் பொறுத்து பார்த்தார், இந்தப் பதவி வேண்டா என்று பதவியை விட்டு விலகி விட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத்தான் அம்பேத்துகர் பதவி விலகினார். இரண்டு காரணம்: ஒன்று பெண்களுக்காக! இன்னொன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! அவர் பதவியை விட்டு விலகி வந்தார் அதற்குப் பிறகு காக்கா கலேல்கர் ஆணையம் போட்டார்கள். அதைச் செயல்படுத்தவில்லை, அப்படியே கிடப்பில் கிடந்தது.

 1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை ஓய்ந்து, ஒரு புதிய சனதா அரசாங்கம் வந்தது.  அந்த கட்சியில் பல பேர் சோசலிசுட்கள் இருந்தார்கள் அவர்களுடைய முயற்சியினால் முதன்முதலாக மண்டல் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. யாரெல்லாம் ஏனைய பிற்படுத்தப்பட்டவர்கள்? இந்திய அளவில்? தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. அந்தக்குழு தான் இந்தப் பரிந்துரையை வழங்கியது: 27 விழுக்காடு! ஏன் வழங்கியது? தெளிவாக அந்தக் குழு கணக்கெடுத்தது. வெறுமனே தெருவில் போகிறவர் வருபவர்களைக் கொண்டு எல்லாம் முடிவு செய்யவில்லை. இந்திய அரசுப் பணிகளில் என்ன சாதிக்கு என்ன இடம் இருக்கிறது? என்று கணக்கெடுத்து அவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்றால், 60%ஆவது இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் நாலு விழுக்காடுதான் இடம் இருக்கிறது. நூற்றுக்கு 15 பேர் எசுசி எசுடியாக இருக்கிறார்கள் நூற்றுக்கு நான்கு பேர் எம்பிசியாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சிய அத்தனை பேரும் யாராக இருக்கிறார்கள்? பார்ப்பனரும் உயர் சாதியினருமாக இருக்கிறார்கள் 

இவர்களுடைய வாழ்க்கை எப்போது முன்னேறும்? காலமெல்லாம் நிலத்தில் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். காலமெல்லாம் பரம்பரைத் தொழிலைச் செய்து கொண்டே இருப்பார்கள். சாதி வீராப்பு பேசி மீசையை முறுக்கிக் கொண்டு ஊருக்குள் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள். குடிசையைக்  கொளுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவனுக்குக் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் வராது என்று, அவர்களுக்கு 27 விழுக்காடு வழங்கியது, வேலைவாய்ப்பில் வழங்கியது மண்டல் குழு. ஆனால் 27 விழுக்காடு கொடுத்தாகி விட்டது என்றால் அது நடைமுறைக்கு வந்த உடனேயே, கொடுக்கத் தொடங்கி விட்டால் 25 விழுக்காடு அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் அவர்களுக்கு ஆகும் என்று மண்டல் கணக்குப் போட்டார் உடனடியாகப் போக முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டுக்குக் கொஞ்சம், ஆண்டுக்கு கொஞ்சமாகக் கொண்டு போக வேண்டும். இதை அப்படியே கிடப்பில் போட்டார்கள். சனதா ஆட்சி போனது, காங்கிரசு ஆட்சி திரும்பி வந்தது, யாரும் எதுவுமே செய்யவில்லை.

 1991இல் விபி சிங்கு அறிவித்தார்,  நான் மண்டல் குழுவைச் செயல்படுத்துகிறேன் என்று. எங்கே மண்டல் குழு அறிக்கை என்றார். பாராளுமன்றத்தின் பரணில் கிடந்தது, ஒட்டடை படிந்து கிடந்தது. எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். இதை நான் செயல்படுத்துகிறேன் என்று அறிவித்தார். மண்டல் குழுவைச் செயல்படுத்தக் கூடாது என்று இரண்டு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. ஒன்று காங்கிரசு கட்சி. இராசீவு காந்தி நாடாளுமன்றத்தில் 8 மணி நேரம் பேசுகிறார். மண்டல் குழு கூடவே கூடாது என்று. மண்டலை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடியது ஆர்எசுஎசு-ம் பாசகவும். கொளுத்தினார்கள் மற்றவர்களை! தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள். மக்களைத் தூண்டி விட்டார்கள். இதற்கு எதிராக ஊருக்கு ஒரு சாதியைக் கிளப்பி விட்டார்கள். மண்டல் குழு கூடவே கூடாது என்று!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

புதன், 2 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8

உயர்நீதிமன்றத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள்? 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற வரை வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக இன்னொருவர் நீதிபதியாக இருந்தார்கள். அவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான். வேறு யாரவது ஒரிருவர் இருந்திருக்கலாம்.

இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கம்யூனல் அரசாணையோ செல்லாது என்று சொல்லி விட்டார்கள். திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள் உச்ச நீதிமன்றத்திலும் உச்சிக் குடுமி இது செல்லாது என்று சொல்லி விட்டார்கள்

30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், ஒடுக்குண்ட மக்கள் அனுபவித்து வந்த ஒரு சிறிய சலுகை பறிக்கப்படுகிறது. அதை உரிமையாக அனுபவித்தார்கள், இனி அது கிடையாது என்ற உடனே தந்தை பெரியார் கொதித்து எழுந்தார். போராட்டம் அறிவித்தார். இதைத் திரும்பப் பெறாமல் விட மாட்டோம் வகுப்பு உரிமை எங்களிடம் திருபிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று போராடினார் அன்றைக்கு அண்ணல் அம்பேத்துகர் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் சட்டத் துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில்தான் சவகர்லால் நேரு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவந்தார்.  செண்பகம் துரைராசு வழக்கின் விளைவை முறியடிப்பதற்குத் தான் முதல் திருத்தம் (First Amendment).

கேட்டார்கள் நாடாளுமன்றத்தில், ஐயா எதற்கு இந்தத் திருத்தம் என்று.  நேரு என்ன சொன்னார்?  சென்னையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சென்னையில் நடைபெறுகிற போராட்டங்களைக் கருதித்தான் இந்த திருத்தத்தை கொண்டு வருகிறோம் என்றார். அந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டு சட்டத்தைத் திருத்தினார்கள்

அந்தத் திருத்தம் கொண்டுவருகிற போது ஐந்து ஆறு பேர் தனியாக ஒரு தீர்மானம் கொடுத்தார்கள். என்ன தீர்மானம் தெரியுமா? 

இந்த கம்யூனல் அரசாணையில் சாதி பார்க்கிறீர்கள், மதம் பார்க்கிறீர்கள், என்ன சமூகம் என்று பார்க்கிறீர்கள்,  கம்யூனிட்டி பார்க்கிறீர்கள்; அப்படிப் பார்க்காமல் பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும். ஏழையா பணக்காரரா என்று பார்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 250 பேரில் ஆறு பேர் கொண்டுவந்த திருத்தத்தை 244 பேர் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்தார்கள். அன்றைக்குத் தோற்றுப் போன அந்தத் திருத்தத்தைதான் இப்போது  மோடியும் அமித்துசாவும் கொண்டுவந்திருக்கிறார்கள் 

அப்போதிலிருந்து இவர்களுக்கு ஒரு கனவு! இதை எப்படியாவது திரும்பக் கொண்டுவந்து விட வேண்டும் என்று! ஏன்? ஒருவர் படிப்பதற்கும் படிக்காமல் இருப்பதற்கும், கல்லூரி வாய்ப்பைப் பெறுவதற்கும் பெறாமல் இருப்பதற்கும் ஏழை பணக்காரன் என்பதுதான் காரணமா? அவன் பிறந்த சாதியினுடைய கல்வித் தகுநிலை காரணமா? அவனுடைய சமூகத் தகுநிலை (SOCIAL STATUS) காரணமா?

 ஒரு ஏழை பிராமணன் கூட கல்வியில் விழிப்புற்று தன் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை, நன்றாகப் படிக்கட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பாம்பு பிடிக்கிற மூப்பனார் ஆகவும் இருக்கலாம். பண்ணை நடத்துகிற மூப்பனராகவும் இருக்கலாம். இந்த இருவர் குழந்தைகளும் ஐஐடி பக்கம் போக முடியாது – இன்றைய வரை!

 நம் கிண்டியில் ஐஐடி இருக்கிறது. அதில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள்? யாருக்கு அங்கே இருக்கிறது இடம்? நூற்றிற்கு 50க்கும் மேல் அங்கே பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் அனைத்தையும் கைகளில் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் பொறுப்பா, மேலாளர் பொறுப்பா என எல்லாம் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது. இன்றைக்கும் மாவட்ட ஆட்சியர்கள், அரசுச் செயலர்கள், தணிக்கையாளர்கள், நூறு விழுக்காடு அவர்கள் கைகளில் இருக்கிறது. எப்படி இலஞ்சம் வாங்கினால் ஏமாற்றலாம் என்று கற்றுக் கொடுப்பதற்கான ஒரு வேலைதான் தணிக்கையாளர் வேலை. பொறுப்புகளில் அனைவரும் அவர்கள்தான் நிறுவனச்செயலாளர்கள், த.செ.(சிஎசு) அவர்கள்தான். எப்படி வந்தார்கள்? இது ஏழை பணக்காரன் என்கிற பிரச்சனையா? சாதிப் பிரச்சினையா?

 இப்போது சாதி தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவன் ஏழை இல்லையா? அவன் குடிசையில் இருக்கிறானே? சேரியில் இருக்கிறானே? சேரியில் என்ன இரும்புப் பெட்டிக்குள் பணத்தைப் பூட்டிப் வைத்து இருக்கிறானா? அவனும் ஏழைதான்! சாதிக்குள்ளே ஏழை பணக்காரன் என்பது மறைந்திருக்கிறது. பணக்காரன் என்றால் அது ஒரு பணக்கார சாதி. நடுத்தர வர்க்கம் என்றால் அது ஒரு நடுத்தர சாதி. ஒடுக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் என்றால் அவன் பரம ஏழை. இதுதான் உண்மை. ஊ்ர்ப்புறத்தில் விவசாயத் தொழிலாளிதான் பறையன் பள்ளன் சக்கிலியனாக இருக்கிறான். கள்ளர் முதலியார் வன்னியராக இருப்பவர்கள் நடுத்தர விவசாயிகள். சிறு நில விவசாயிகள். நிலக் கிழார்கள் உயர் சாதிக்காரர்கள். இதுதானே உண்மை? அப்போது சமூக வழியில் பிற்படுத்தப்பட்டோர் என்றால் அதற்குள்ளே பொருளாதாரம் இல்லையா? இருக்கிறது.

 சமூகம் என்றால் ஒன்று பொருளாதாரத்தைப் பார்க்க வேண்டும், இரண்டாவது பழக்க வழக்கங்களைப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு ஆளாகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டமே தீண்டாமையை ஒழித்து விட்டதாக சொல்கிறது. ஆனால் இன்றைக்கும் எசுசி எசுடி சட்டம் இருக்கிறதா இல்லையா? இன்றைக்கும் கோகுல்ராசு போன்ற ஒரு வழக்கு நடைபெறுகிறதா இல்லையா? இன்றைக்கும் ஆணவப் படுகொலை நடைபெறுகிறதா இல்லையா? அப்படி என்றால் சாதி ஒழிந்து விட்டதா? தீண்டாமை ஒழிந்து விட்டதா? ஆனால் தீண்டாமை ஒழிந்து விட்டது என்று சொன்னார்கள். என்ன சொல்லவில்லை? சாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்லவில்லை.  அப்போது என்ன அருத்தம் நச்சுச் செடி அப்படியே இருக்கிறது, அதன் இலைதழைகள் வெட்டப்பட்டுள்ளன. அது திரும்பத் திரும்பத் துளிர்க்கிறது 

அம்பேத்துகர் சொன்னார்: சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. அவரால் முடிந்தது இவ்வளவுதான் சரி தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று எழுதிக் கொள். அதனால் என்ன செய்தார்கள் என்றால், சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்மானித்தார்கள்.

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8

இப்போது இந்தக் கூட்டத்தைக் கேட்டுக்  கொண்டு தெருவில்  நின்று கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் ஒரு கணக்கெடுத்துப் பார்ப்போம் எவருக்காவது 8 இலட்சம் உரூபாய் வருமானம் இருக்கிறதா? இல்லை, 8 இலட்சத்திற்குக் கீழே இருந்தால் நீங்கள் எல்லாம் ஏழைகளாம்! எட்டு இலட்சம் வந்தால்தான் நீங்கள் ஏழை இல்லை. அதற்கு மேலே போக வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தாலின் அவர்கள் இந்த நவம்பர் 12ஆம் நாள் கோட்டையில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி வைத்து இந்த இடஒதுக்கீடு குறித்துப் பேசினார். அவர் கேட்டார்: ஐயா, 8 இலட்சம் உரூபாய் ஆண்டு வருமானம் என்றால், மாத வருமானம் எவ்வளவு? 66 ஆயிரம் உரூபாய்! ஒரு நாளைக்கு எவ்வளவு? 2,200 ரூபாய்! இந்த 2,200 வரவில்லை, 2,100தான் வருகிறது என்றால் அவர் ஏழை! மாதம் 66 ஆயிரம் இல்லை, 65 ஆயிரம்தான் வருகிறது என்றால் அவர் ஏழை! என்ன நியாயம் இது? எந்த ஊர் நியாயம் இது? இதைத்தான் மோதியும் அமித்துசாவும் நமக்குச் சொல்கிறார்கள்! இதற்குத்தான் அண்ணாமலை இங்கே சால்ரா அடிக்கிறார். எங்கள் மோதி ஆட்சி ஏழைகளுக்கு எல்லாம் நன்மை செய்கிறது. எந்த ஏழைகளுக்கு எல்லாம்? வருடத்தில் 8 இலட்சம் உரூபாய்க்கு கீழே வருபவர்களுக்கு

சரி, இந்த எட்டு இலட்சம் உரூபாய்க்குக் கீழே வருகிறார்கள், இவர்கள்தான் ஏழை என்று வைத்துக் கொள்வோம். இந்த ஏழை எந்தச் சாதியில் இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா, இல்லையா? இல்லை, எட்டு இலட்சத்திற்கும் கீழே இருப்பவர் எசுசி-யாக இருந்தால் கிடையாது, எசுடி-யாக இருந்தால் கிடையாது, பிசி-யாக இருந்தால் கிடையாது எம்பிசி- யாக இருந்தால் கிடையாது. ஓபிசி-யாக இருந்தால் கிடையாது. அவர் எஃப்சி-யாக இருந்தால் மட்டும்தான் உண்டு. இதுதான் இந்த ஈ.டபிள்யூ.எசு. இட ஒதுக்கீடு! அவர்களுக்கு மட்டும்தான் இந்த இட ஒதுக்கீடு!

முக தாலின் நன்றாகச் சொன்னார்: அப்படியானால் இது முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்பது உண்மை அல்ல. ஏதோ குருக்களுக்குக் கொடுக்கிறார்கள், சவுண்டிப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள், உஞ்சவிருத்திப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது. இது எந்த மாதிரிப் பார்ப்பனர்களுக்கு? பணக்காரப்  பார்ப்பனர்களுக்கு! அவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பணக்காரப் பார்ப்பனர்கள்! அவர்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு!

அப்போது வெளிப்படையாக நீங்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும். என்ன சொல்ல வேண்டும்? பாரதிய சனதாக் கட்சி பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறது. பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத்தான் நாங்கள் இடபிள்யுஎசு என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்திற்கு 103ஆவது திருத்தம் கொண்டுவந்திருக்கிறோம். வாருங்கள், அப்படி வெளிப்படையாக! இது நியாயமா இல்லையா என்று பேசுவோம்

சரி, பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உங்களுக்கு என்ன? என்று கேட்கலாம். எங்கள் இடத்தை எடுத்துக் கொண்டுதான் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது.

ஒரு தந்தி அலுவலகத்தில் 100 பேர் வேலை செய்கிறார்கள். இட ஒதுக்கீடு எசுசி, பிசி என எல்லோருக்கும் சேர்த்து 69 விழுக்காடு என்றால் மிச்சம் 31 விழுக்காட்டில் எல்லோரும் போட்டி போடலாம். ஆனால் அதில் பத்து விழுக்காட்டை அவர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறீர்கள். மக்கள்தொகையில் 69 விழுக்காடு இருக்கக் கூடிய பிசிக்கு 27 விழுக்காடுதான் மண்டலக் குழு ஒதுக்கீடு! 29 விழுக்காடு இருக்கக் கூடிய எசுடி, எசுசி-க்கு 19 விழுக்காடுதான் ஒதுக்கீடு! ஆனால் மூன்று விழுக்காட்டுப் பார்ப்பனர்களுக்கு 10% ஒதுக்கீடு! இது நியாயமா? 

இட ஒதுக்கீட்டில் வரலாறு படைத்த நாடு நம் தமிழ்நாடு. 1909ஆம் ஆண்டு இங்கே ஒரு மாகாண ஆட்சி உருவாகியது அதற்கு இரட்டை ஆட்சி என்று பெயர். ஆளுநர் ஆட்சி செய்வார், அவரோடு கொஞ்சம் பேர் மற்றவர்களும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள். அப்போதுதான் முதன்முதலாகத் தேர்தல் தொகுதிகளில் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு வந்தது. இதுதான் முதல் இட ஒதுக்கீடு 1920ஆம் ஆண்டு இதே இரட்டை ஆட்சியில் நீதி கட்சி அமைச்சர்கள் இருந்த போது. அவர்கள் ஒரு ஆணை பிறப்பித்தார்கள் அதற்குப் பெயர் ‘கம்யூனல் அரசாணை’! வகுப்புவாரி உரிமைக்கான அரசாணை! அவர்கள் என்ன செய்தார்கள்? கல்வி, பதவி, வேலைவாய்ப்பு எதுவாக இருந்தாலும் இன்னின்ன வகுப்பினருக்கு இன்னின்ன இடம் என்று ஒதுக்கி விட்டார்கள். அவர்கள் ஒன்றும் பார்ப்பனர்களை விட்டு விடவில்லை அவர்களுக்கும் கொடுத்தார்கள். எல்லாச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு. இது 1920 முதல் 1950 வரை செல்லுபடி ஆனது. இதை வைத்துத்தான் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள். இதை வைத்துத்தான் தலைமைச் செயலகத்திற்குப்  போனார்கள். இதை வைத்துத்தான் அரசு வேலைவாய்ப்புகளுக்குப் போனார்கள். பிரித்தானியர் காலத்திலும் சரி, 1947 நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சரி இதுதான் வேலையை, கல்வியைப் பிரித்துக் கொடுக்கிற வாய்ப்பு

ஆனால் 1950ஆம் வருடம் செண்பகம் துரைராசு என்கிற ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். கம்யூனல் அரசாணை செல்லாது என்று! ஏன்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் – அம்பேத்துகர் வரைந்த அரசமைப்புச் சட்டத்தில் – 14ஆவது உறுப்பு எல்லோரும் சமம் என்று சொல்லி விட்டது. 15ஆவது உறுப்பு யாரையும் சாதி பார்த்து, மதம் பார்த்து, பிறந்த இடம் பார்த்துப் பாகுபாடு செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டது இதற்கு மாறாக இந்த கம்யூனல் அரசாணை இருக்கிறது, எனவே இது செல்லாது என்று வழக்கு போட்டார்கள். சமம் அல்லாதவர்களைச் சமமாக மதிக்க முடியாது, ஊனமுற்றவரையும் நல்ல கால்களோடு இருப்பவரையும் ஒரே பந்தயத்தில் ஓட விட முடியாது இளவருக்கும்(சூனியருக்கும்)முதுவருக்கும் (சீனியருக்கும்) சேர்த்து ஒரே அணியா  வைத்திருக்கிறோம்? எல்லாமே வித்தியாசப்படும். பார்வை இழந்தவருக்கு பேருந்தில் உட்காருவதற்கு இடம் கொடுத்தால் அவருக்கு மட்டும் ஏன் கொடுக்கிறாய்? எனக்கும் கொடு என்று கேட்க முடியுமா? எனவே சமூக ஊனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இது நியாயம். உலகமெங்கும் இருக்கிற நியாயம். மைக்ரோசாஃப்ட்டில் கருப்பர்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. பெரிய பெரிய குழுமங்களில் கொடுக்கிறார்கள். ஏன்? எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் இருப்பார்கள். எல்லோரையும் வேலையில் சேர்த்து எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லோரையும் சுரண்ட வேண்டும். இல்லை என்றால் எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பார்கள்? அன்று 30 வருடங்களாக இயங்கி வந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டார்கள்

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

  தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

திங்கள், 31 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4. தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

இது போன்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தை இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன?  இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் இலாவணிகளுக்கு நடுவே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே, கொள்கை சார்ந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

ஒன்று, இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ் மொழி காப்போம்! இரண்டு, பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம், சமூக நீதி காப்போம்! என்ற இரண்டு முழக்கங்களையும் அடிப்படையாக வைத்துத் தமிழ்நாட்டு மக்களிடம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  ஒரு கருத்துப் பரப்புரையை  மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன்னால் இன்றைக்கு இரண்டு ஆபத்துகள் வந்திருக்கின்றன. இந்த இரண்டு ஆபத்துகளுக்கும் மூல ஊற்றாக இருப்பது மத்தியில் ஆளுகிற நரேந்திர மோதியின் தலைமையிலான பாசக ஆட்சி. இந்த பாசக ஆட்சியினுடைய ஒரு பெரிய வேலைத்திட்டம், அந்தத் திட்டத்தின் இரண்டு முனைகள்தான் இந்த இரண்டும்.  ஒரு ஆபத்து வருகிறது, அதை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிற போதே இன்னொரு ஆபத்தும் வருகிறது. கடைசியாக வந்திருக்கிற ஆபத்துதான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிற ஒரு தீர்ப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26இல் இயற்றப்பட்டு 1950 சனவரி 26 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் வந்து விட்டன. 2019ஆம் ஆண்டு ஒரு திருத்தம் வந்தது. அதுதான் 103ஆவது திருத்தம். இந்தத் திருத்தம் செல்லுமா செல்லாதா என்று மூன்றாண்டுகளாக ஒரு சர்ச்சை இருந்தது. அதற்கு ஒரு முடிவு கட்டி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்

அந்தத் தீர்ப்பு என்ன  சொல்கிறது?

பொருளியலில் நலிந்த பிரிவினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்கிறது. இது ஒரு புதிய திட்டம். சுருக்கமாகச் சொன்னால், ஏழைகளுக்கு வழங்கலாம். யார் அந்த ஏழைகள்? அட்டவணைச் சாதி எனப்படுகிற பறையர் பள்ளர் சக்கிலியர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனப்படுகிற வன்னியர் முக்குலத்தோர் மற்றச்  சாதிகள் அல்ல. வேறு யார் இப்படி வந்திருக்கிறார்கள்? இந்த இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறாத, எசுசி, எசுடி அல்லாத, ஓபிசி அல்லாத, அதாவது பிசி, எம்பிசி அல்லாத மற்றவர்கள்! அவர்கள் எஃப்.சி. (forward communities) அல்லது ஓசி (other communities). 

இதில் யார் யார் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டில் மிக முக்கியமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள். ஐயர்கள், ஐயங்கார்கள், இவர்களைத் தவிர சின்னச் சின்னப் பிரிவினர்கள் இருக்கிறார்கள். சைவ முதலியார், சைவ வேளாளர் இன்னும் சில சாதியினர் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இவர்கள் மொத்தத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 10%க்குக் குறைவு, 100 சதவீதத்தில் பத்திற்கும் குறைவு. அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள் 20 விழுக்காட்டிற்கு மேல். பிற்படுத்தப்பட்டவர்கள் 60%க்கு மேலே ஆனால் முன்னேறிய சாதியினர் இருப்பது வெறும் பத்து விழுக்காடு. இவர்களுக்கு இந்திய அரசு ஒரு இட ஒதுக்கீடுத் திட்டம் கொண்டுவருகிறது. என்ன சொல்லிக் கொண்டுவருகிறது? ஏழைகளுக்கு என்று சொல்லி!

சரி, அது ஏழைகளுக்கு என்றால், அவர்கள் எந்த வகையில் ஏழைகள்?

வீடில்லாதவர்கள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள், மாற்று உடையில்லாதவர்கள், வங்கிக் கணக்கில்லாதவர்கள்… இவர்களெல்லாம் ஏழைகளாக இருக்கலாம் அரசாங்கத்திலேயே ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள். வறுமைக் கோடு என்று ஒரு கோடு இருக்கிறது நிலநடுக்கோடு போல் வறுமைக் கோடு, அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்காகச் சிலபல திட்டங்கள்!

வறுமைக்கோடு என்றால் என்ன? ஒரு நாள் வருமானம் ஊர்ப்புறம் என்றால் 27 உரூபாய், நகர்ப்புறம் என்றால் 33 உரூபாய்… இதுதான் அரசாங்கக் கணக்கு. 33 உரூபாய்க்கு மேலே சென்றால் அவர்கள் பணக்காரர்கள் என்று பொருளில்லை. ஆனால் அவர்கள் பரம ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை என்று பொருள். இந்த 33 உரூபாயை வைத்துக் கொண்டு நகரத்தில் யார் வாழ்கிறார்களோ அவர்கள் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள். ஊர்ப்புறத்தில் 27 உரூபாய்க்கு உள்ளேதான் வருமானம் என்றால் அவர்கள் வறுமைக்கோடு.

இவர்களுக்கு அரசு பார்த்து ஒரு நன்மை செய்தால் யார் வேண்டா என்று சொல்லப் போகிறோம்? தாராளமாகச் செய்யலாம்? எந்தச் சாதியாக இருந்தாலும் செய்யலாம். பசியோடு இருப்பதில் சாதி இருக்கிறதா? தாகம் தவிப்பதில் சாதி இருக்கிறதா? இல்லை, என்ன சாதியாக இருந்தாலும் ஏழைச் சாதி, அவ்வளவுதான். இவர்களுக்குத்தான் இந்த இடஒதுக்கீட்டுத் திட்டமா என்று கேட்டால் இல்லை.

அல்லது, அடுத்தாற் போல் வருமான வரி என்று ஒரு வரி இருக்கிறது. நாம் யாரும் வருமான வரி கட்டுவதில்லை, அவ்வளவு வருமானமே இல்லை. இருந்தால் வந்து எடுத்துக் கொண்டு போகலாம். அவ்வளவு வருமானம் நமக்கில்லை. இந்திய அரசாங்கம் வருமான வரிக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறார்கள். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேல் மாத வருமானம் இருக்க வேண்டும் நீங்கள் கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம் அல்லது வணிக நிறுவனம் வைத்து இருக்கலாம். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேலே இருந்தால் அவர்கள் வருமான வரி கட்டுகிறார்கள். வருமான வரி கட்டுபவர்களுக்கு ஏழை என்று பெயர் உண்டா? அரசாங்கம் சலுகை கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய ஏழைகளா அவர்கள்?

நம் நடிகர்கள் எல்லாம் வருமான வரி கட்டுகிறார்கள் அல்லது கட்டாமல் ஏய்க்கிறார்கள். திரைப்படம் எடுப்பவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். தொலைக்காட்சி நடத்துபவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். அவர்களெல்லாம் ஏழை இல்லை. அவர்களெல்லாம் வருமான வரி கட்டுபவர்கள், அதற்கு வரம்பு என்ன? 27 ஆயிரம் உரூபாய். சரி, வருமான வரி கட்டாதவர்களையெல்லாம் அரசாங்கம் ஏழைகளாகக் கருதுகிறது. அவர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஏன் கொடுக்க வேண்டும் என்று கூட நாம் கேட்கவில்லை.

ஆனால் இந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசாங்கம் கொண்டுவந்திருக்கிற திட்டம் இருக்கிறதே… இந்தத் திட்டம்  வருடம் 8 இலட்சம் உரூபாய், அதற்குக் கீழே இருந்தால் ஏழைகளாம்!

  • தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

ஞாயிறு, 30 ஜூலை, 2023

 

நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல



நூலாய்வு:
சமற்கிருதம் செம்மொழியல்ல


வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது


தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்பதையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.


– தினத்தந்தி, 30.07.2023, பக்கம் 14
(ஆசிரியர்: இலக்குவனார் திருவள்ளுவன்; வெளியீடு: நியூ செஞ்சுரி புக்கு அவுசு;  விலை: உரூ.100; பேசி : 044 26251968)

நன்னன் நூற்றாண்டு நிறைவு

 





நாள் : ஆடி 14, 2054 / 30.07.2023 ஞாயிறு மாலை 6.00

வயவர் பிட்டி தியாகராயர் கலைமன்றம்
சென்னை 600 017

மாப்புலவர் மானமிகு மா.நன்னனுக்கு நூற்றாண்டு நிறைவு
நன்னன்குடி நடத்தும் பரிசளிப்பு விழா
மானமிகு இரா.செம்மல் நினைவாகக்
குழந்தைகளுக்காகச் சிறுகதைப்போட்டி-பரிசளிப்பு விழா

தலைமை : ஆசிரியர் வீரமணி
சிறப்புரை : முதல்வர் மு.க.தாலின்







தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி)

ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.

1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

புலவரும் வள்ளுவனும் தூக்குக் கைதிகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நானும், என் வழக்குத் தோழர்கள் இலெனின் – குருமூர்த்தியும் தூக்குக் கைதிகளாக உடன் இருந்தோம்.

அப்போது 1972 அட்டோபர் 20ஆம் நாள் நாங்கள் நடத்திக் கொண்டிருந்த ஒரு போராட்டத்தை ஒட்டிச் சிறை அதிகாரிகள் எங்கள் மீது ஒரு கொடுந்தாக்குதலை நடத்தினார்கள். புலவர், நான், குரு, வள்ளுவன் உட்பட 11 பேர் இருந்தோம். அவர்கள் 100 சிறைக் காவலர்களும் 100 குற்றக் காவலர்களும் திரண்டு வந்து எங்களை அடித்து நொறுக்க முயன்றார்கள். அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்த நாங்கள் தீர்மானித்தோம்.

தாழ்வாரத்தின் இருபக்கக் கதவுகளையும் மூடி அடைத்துக் கொண்டு அவற்றைத் திறக்கவிடாமல் தடுத்தோம். ஒரு பக்கத்துக் கதவை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றவர் புலவர். தட்டு குவளைகள், கஞ்சி, மின்விளக்குகள், மோதலின் போது உடைந்த சட்டங்கள் என்று ஒவ்வொன்றையும் ஆயுதமாகப் பயன்படுத்தி  நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். தாக்கியவர்களின் தடிகள் சிலவற்றையும் பிடுங்கித் திருப்பி அடித்தோம். ‘ஆயுதப் போராட்டம் வெல்க’, ‘அடித்தால் திருப்பி அடிப்போம்’, ‘புரட்சி ஓங்குக’ என்றெல்லாம் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகியும் அவர்களால் எங்களை வீழ்த்த முடியவில்லை. அப்போது அண்டா நிறைய மிளகாய்த் தண்ணீர் கரைத்து வந்து, எங்கள் மீது வீசியடிக்க ஆரம்பித்தார்கள். புலவர் கண்களை இறுக மூடிக் கொண்டார். ஆனால் அவரின் கைகள் மட்டும் கதவை உறுதியாகத் தள்ளிக் கொண்டு நின்றன.  அவர் என்னிடம் “ஒரு துண்டை எடுத்து தலையில் போடுங்கள்” என்றார். அவ்வாறே செய்தேன். மிளகாய்த் தண்ணீரில் தொப்பலாக நனைந்த பிறகும் அவர் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. அவரது பிடியும் கொஞ்சங்கூடத் தளரவில்லை.

அடுத்து வந்தது கொதிக்கும் நீரிலான மிளகாய்க் கரைசல். இந்த மிளகாய்க் கொதிநீர் மேலே வந்து அடித்த பிறகுதான் புலவரின் பிடி தளர்ந்தது. அவர் கீழே சாய்ந்தார். கதவு திறந்து கொண்டது. அவர்கள் உள்ளே நுழைந்து எங்களை மூர்க்கமாய் அடித்து நொறுக்கினார்கள். நெற்றியிலிருந்து பிடரிவரை புலவரின் மண்டை பிளப்பதை நானே பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்த பிறகும் சிவதாசு, கிருட்டிணப்பிள்ளை என்ற இரு தோழர்களை மொத்தமான கம்பளிப் போர்வையில் சுருட்டி இருபுறமும் நின்று கொண்டு தடியால் அடித்து எலும்புகளை  நொறுக்கினார்கள். இதற்குக் ‘கம்பளி பரேடு’ என்று பெயர்.

தாக்குதல் முடிந்து எங்கள் ஒவ்வொருவரின் கைகளையும் பின்புறமாக இறுக்கிக் கட்டித் திறந்த வெளியில் கிடத்தியிருந்தார்கள். நான், குரு, புலவர் மூவரைத் தவிர மற்றவர்கள் உணர்வற்றுக் கிடந்தார்கள். புலவருக்கு ஒரு பக்கம் வள்ளுவன், மறுபக்கம் நான். வள்ளுவனின் வாயிலிருந்து நுரை தள்ளிக் கொண்டிருந்தது. புலவர் என்னிடம் மெதுவாகச் சொன்னார்: “வள்ளுவன் பிழைக்க மாட்டான்னு நினைக்கிறேன்.” அவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இதை ஒரு செய்தியாகச் சொன்னார்.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் முடமாகிப் போனார். மற்றபடி அனைவரும் பிழைத்துக் கொண்டோம். அடுத்து வந்த காலத்தில் புலவரின் தலைமையில் நாங்கள் வெளிப்படுத்திய இந்தப் போக்குணம்தான் சிறையில் ‘நக்குசலைட்’ என்றாலே ஒரு தனி மரியாதையை ஈட்டிக் கொடுத்தது. இந்த மரியாதை இன்றுவரை நீடிக்கிறது.

புலவரை என் நீண்டகால நண்பர் என்று சொல்வது சரியாக இருக்காது. எனக்கு அவர் உடன்பட்ட நண்பராக இருந்தது போலவே முரண்பட்ட ‘பகைவராக’ இருந்த காலமும் உண்டு. இந்தப் ‘பகைமை’ கருத்தியல் வேறுபாடுகளால் மட்டுமே எழுந்த ஒன்று. இதில் இம்மியளவும் சொந்தக் காரணம் எதுவுமில்லை.

முரண்பாடுகள் முற்றி எங்களுக்குள் பேச்சுவார்த்தையே இல்லாத ஒரு காலத்தில்தான் 1974 மே மாதத்தில் திருச்சி மத்திய சிறையில் தோழர் ஏ.சி.கே. (அ.கோ. கத்தூரிரங்கன்) தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் வகித்த பங்கிற்காக என்னைச் சிறைக் கண்காணிப்பாளரின் அறைக்குக் கொண்டுசென்று அடித்து நொறுக்கி இழுத்து வந்து கொட்டடியில் போட்ட போது புலவர்தாம் எனக்காக முதல் குரல் கொடுத்தார். சிறை அதிகாரிகளை அவர் கடுமையாக எச்சரித்தார். “உங்களைச் சும்மா விட மாட்டோம்!” என்றார். அவர்கள் எங்களுக்கிடையிலான முரண்பாட்டை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய போது…

“அது வேறு, இது வேறு. நாங்கள் வேறுபட்டு இருப்பதால் அவரை அடிக்கும் போது வேடிக்கை பார்ப்பேன் என்று நினைத்துவிட வேண்டா” என்றார்.

என்னைத் தொடர்ந்து மற்றத் தோழர்களையும் அடித்து நொறுக்கப் போட்டிருந்த திட்டத்தைப் புலவரின் எச்சரிக்கைக்குப் பிறகு சிறை அதிகாரிகள் கைவிட்டார்கள்.

எங்களைப் போன்ற புரட்சிக் கைதிகளுக்காகவும் போராட்டக் கைதிகளுக்காகவும் மட்டுமல்ல, சாதாரணக் கைதிகளுக்காகவும் கூடப் புலவர் பல முறை போராடியிருக்கிறார்.

புலவரின் மூத்த மகள் தமிழரசி “அப்பா முன்னிலையில்தான் திருமணம்” என்று உறுதியாகக் கூறிவிட்ட பின், திருச்சி மத்திய சிறையில் பழைய கண்டத்தில் புலவரும் நாங்களும் அந்தத் திருமணத்தை நடத்தி வைக்க சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். அவர்கள் முதலில் அனுமதிப்பதாகச் சொல்லி பிறகு ஏமாற்ற முற்பட்டனர். அப்படி இருந்தும் தமிழரசி – அமிர்தலிங்கத்தை உறுதிமொழி எடுக்கச் செய்தார் புலவர்சிறை அலுவலர் மாதவையா அதைத் தடுக்க முயன்ற போது, அவரது சட்டையைப் பிடித்து இழுத்துக் கடுமையாக எச்சரித்தார். நாங்கள் தனிக்கொட்டடிகளில் இருந்தபடி மணமக்களை வாழ்த்தினோம். நான் எழுதிய ‘சிறையிலேயே திருமணம்’ என்ற பாடலை குருமூர்த்தி பாடினார்.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 152