பார்ப்பனப் பெருவாழ்வு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனப் பெருவாழ்வு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8

 

தோழர் தியாகு எழுதுகிறார் 172 : 

பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8



(தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8

 இதையெல்லாம் செய்யாமல் அவர்கள் மொழி அரசியல் செய்தார்கள் என்று புலம்பினால்? வயிற்றில் குத்திக் கொண்டாளாமே! குந்தி தேவி அம்மிக்குழவியை எடுத்து, அப்படிக் குத்திக் கொள்ள வேண்டுமா? இது அவ்வளவு எளிதல்ல.

 இரண்டாவதாக இன்னொன்றைப் புரிந்து கொள்ளுங்கள்: மொழி அரசியல் என்பது வெறும் மொழி அரசியல் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்கான அரசியல். தமிழ் ஆளாமல் தமிழர்கள் ஆள முடியாது. தமிழர்கள் என்றால், உழைக்கும் தமிழர்கள், ஒடுக்குண்ட தமிழர்கள்! உண்மையான தமிழர் ஆட்சி என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுடைய ஆட்சி! தொழிலாளர்கள் உழவர்களுடைய ஆட்சி! அவர்கள்தான் தமிழர்கள்! அவர்களுக்குத்தான் தமிழ் தேவை, மற்றவர்களுக்கு அல்ல. பார்ப்பனர் கலிபோர்னியாவிற்குப் போகலாம், வேறு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போகலாம். அந்தந்த ஊரின் மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.

 ஆற்காடு நவாபுகளிடம் மந்திரிகளாக இருந்தது யார்? ஐதராபாத்து நிசாமிடம் மந்திரி வேலை பார்த்தது யார்?  உருது மொழியை கற்றுக் கொண்டு மந்திரி வேலை பார்த்தவர்கள் பார்ப்பனர்கள்! நவாபுகள் இடம் சென்று பாரசீகம் கற்றுக்கொண்டு மந்திரி வேலை பார்த்தவர்கள் பார்ப்பனர்கள்! பிரித்தானியரிடம் சென்று ஆங்கிலம் கற்றுக்கொண்டு அவனுக்குத் தொண்டு செய்தவர்கள் பார்ப்பனர்கள்! அவர்களால் எந்த மொழிக்கும் போக முடியும். ஆனால் எங்களுக்கு இது தாய் மண்! தாய் மொழி! இது தாய் நிலம்! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்கிற பாடல் எங்களுடைய பாடல். ஏன் கையை ஏந்த வேண்டும் வடநாட்டில்? இந்த மண்ணை உன்னிடம் விற்று விட்டு நாங்கள் வெளிநாடு சென்று பிழைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

 அதனால்தான் சொல்கிறோம், பார்ப்பானுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு நீ மொழி அரசியல் செய்ய முடியாது. இந்திய அரசுக் கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, இந்தியத் தேசியத்திற்குக் காவிச் சாயம் பூசி வைத்துக் கொண்டு நீ மொழி அரசியல் நடத்த முடியாதுமொழிவழி மாநிலங்களைக் கலைத்து விடுவதை மனதிற்குள்  சதித் திட்டமாக வைத்துக் கொண்டு 2024ஆம் ஆண்டிற்கான தேர்தலுக்குச் செல்கிறார்கள். இராமர் கோவில் கட்டி அதைப் புனிதத் தலம் ஆக்கி எல்லோரையும் அங்கே திரட்டி கொண்டு வந்து செய் னுமான் என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த இராசு பவனில் ஒரு காவி வந்து உட்கார்ந்து இருக்கிறது, ஆர்.என். ரவி என்று. அவர் சொல்கிறார். இராமன், சிரீராமன்… அவனை இந்த நாட்டு மக்கள் நெஞ்சில் வைத்துத் தொழுகின்றார்களாம்! எங்கள் கம்பர் இராமன் என்று எழுத மாட்டார் இராமன் என்றுதான் எழுதுவார். சீதா என்று எழுத மாட்டார் சீதை என்றுதான் எழுதுவார். னுமான் என்று எழுத மாட்டார் அனுமன் என்று தான் எழுதுவார். அவர்களின் பெயரைக் கூட தமிழ்ப் படுத்தியவர் எங்கள் தமிழ்ப் புலவர்.  ஆனால் நீ என்ன சொல்கிறாய்!  இந்தியாவில் இந்தியாம்! இந்து மதமாம்! தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சிரீராமனை நெஞ்சில் வைத்துத் தொழுகிறார்களா? என்றால் இல்லை. இந்த ஊரின் முசுலிம் எல்லாம் இந்தியர்கள் இல்லையா? கிறித்துவன் எல்லாம் இந்தியன் இல்லையா? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பகுத்தறிவாதிகள் எல்லாம் இல்லையா? இராமனை வழிபடும் இந்துக்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்று சொல்ல வருகிறார் இரவி. இந்தக் கருத்தை பரப்பிக் கொண்டு இருக்கின்ற உனக்கு மொழி அரசியல் வேறு வேண்டுமா?

வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி அவரை உங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ள முயல்கிறீர்கள். எல்லாருக்கும் வேசம் கட்டி விடுகிறீர்கள். எனவே நண்பர்களே, இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டை, தமிழ் மண்ணை, தமிழ் மொழியை, தமிழ் நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் இதை அரசு பார்த்துக் கொள்ளும், அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் ஒதுங்கி இருந்தால், நாம் விழித்துப் பார்க்கிற போது எதுவும் மிச்சம் இருக்காது. எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு சென்று விடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருப்போம். நாம் குரல் கொடுப்போம். குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக நிற்போம். பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம். இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநிலத்துக்கு வேண்டும். இந்த ஈடபிள்யூஎஸ்-ஐத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது, செயல்படுத்துவது இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய இந்திய அரசின் அலுவலகங்களில் அது செயல்படுத்தப்படும்.

 நீங்கள் இந்தத் தெருவில் இருக்கக் கூடிய ஒரு மாநில அரசு  அலுவலகத்தில் சென்று பார்த்தால் பொ.ந.பி(E.W.S.) இருக்காது ஆனால் இதே தெருவில் இருக்கக் கூடிய இந்திய அரசு நிறுவனத்தில் அது செயல்படும். அப்படி என்றால், அண்ணனுக்கு ஒரு நீதி தம்பிக்கு இன்னொரு நீதியா? இதுதான் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான ஆதாரமா? அவர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பானி அதானிகள் கொண்டு  தமிழ்நாட்டை முழு வேட்டைக்காடாக்கி கொண்டு இருக்கிறார்கள் எனவே இட ஒதுக்கீட்டு உரிமை தமிழ்நாட்டுக்கே வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் போராடுவோம்! இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற கனவை மெய்ப்படச் செய்வோம்!

 நன்றி!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

  தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8

 நமக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வழி தெரியுமா? தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடே முடிவு செய்து கொள்ளும் என்கிற கோரிக்கைக்காகப் போராடி வெற்றி பெறுவது ஒன்றுதான் இதற்கு வழி. ஏனென்றால் தமிழ்நாட்டில் எவனும் எதிர்க்க மாட்டான்! வெளியில் வந்து பேச மாட்டான். மண்டல்குழு வந்த போது  பாச கவே எதிர்க்கவில்லை. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயலலிதா பாதுகாத்ததற்காக சமூக நீதி காத்த வீராங்கனை என்று ஆசிரியர் வீரமணி ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிற போது அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பாசக தலைவர் இல. கணேசன்! ஏனென்றால் தமிழ்நாட்டினுடைய தன்மை என்பது வேறு.

 ஆனால் இந்தத் தமிழ்நாட்டிலும் இதை நியாயப்படுத்துகிற ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது. அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா? உங்களுக்கு இந்தத் திட்டம் வந்த புதிதில்  இடபிள்யுஎசு என்றால் அது பார்ப்பனர்களுக்கு என்று உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டார். இது பார்ப்பனர்களுக்கு அல்ல, வேறு எந்த சாதிக்கும் அல்ல, பொருளியலில் நலிந்த எவருக்குமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும், எசுசி எசுடியாக இருந்தால் நீங்களும் இதற்குள் வரலாம், பிசியாக இருந்தால் நீங்களும் இதற்குள் வரலாம் என்றார். இவையெல்லாம் அண்ணாமலை கொடுத்த பேட்டி.  இதற்குச் சான்றாக தமிழக பாசகவின் தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி இணையத்தில் வலையொளிக் காட்சிகளாக இருக்கிறது. இதே போன்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று? அண்ணாமலை இப்போது எப்படி பதில் சொல்கிறார்? தெளிவாகச் சொல்லி விட்டார்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பிலே சொல்லி விட்டார்கள். இது எசுசி எசுடி பிசி-க்குப் பொருளியலில் இந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது என்பது மட்டுமல்ல, பொருந்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்தச் சட்டமே வந்துள்ளது. எனவே இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும்

மிழ்நாட்டின் உரிமைக்காக நாம் போராட வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்காக, சமூக நீதி உரிமைக்காக, இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்காக, நாம் போராடுவதற்கு மிகப்பெரும் தடையாக மிகப் பெரும் ஆபத்தாக இன்றைக்கு எழுந்து நிற்பது இந்தியப் பாசக அரசு, பார்ப்பன பாசிச அரசு, மோடி அமித்துசாவின் அரசு!

தோழர் செந்தில் அவர்கள் மொழி தொடர்பாக அரசு எடுத்துள்ள திட்டத்தைப் பற்றி சொன்னார். எப்படி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற கட்டளைகளை மீறிச்  செல்கிறார்கள் என்பதைப் பற்றிச் சொன்னார். ஒரே ஒரு கட்டளைதான்! மீண்டும் அதை நாம் சொல்ல வேண்டா.

1963ஆம் வருட இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தின்படி இந்தியை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவது, ஆட்சி அலுவலகங்களில் பயன்படுத்துவது எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்று ஆராய்வதற்கு என்று ஒரு குழு அமைப்பார்கள். அந்த குழு என்ன செய்யும்? ஆங்கிலத்தின் இடத்திற்கு இந்தி எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதனை ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார்கள். இதுதான் அவர்களுடைய வேலை. அந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிற காலத்தில் 1963ஆம் வருடம் அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். அந்த சட்டத்தின் இரண்டாவது பிரிவிலேயே சொன்னார்கள்: இந்தி ஆட்சி மொழி ஆனதற்குப் பிறகும், 1965இல் இந்தி ஆட்சி மொழி ஆகிவிடும், அதற்குப் பிறகும் ஆங்கிலம் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை தொடரலாம் என்று இருந்தது. May continue என்று இருந்தது.

 அதற்கு அண்ணா கேட்டார்: “நேரு அவர்களே, எதற்கு இந்த may continue? Shall contine  என்று மாற்றுங்கள். ஆங்கிலம் நீடிக்க வேண்டும்” என்று எழுதச் சொன்னார். நேரு சொன்னார் “சட்டத்தில் may, shall இரண்டும்  ஒன்றுதான்” என்று! அதற்கு அண்ணா சொன்னார்: “இரண்டும் ஒன்றுதான் என்றால், shall  என்றே  வைத்துக் கொள்ளலாம்,  ஏன் may போட வேண்டும்?” என்று. இன்றைக்கும் அது may என்றுதான் இருக்கிறது. Shall ஆகவில்லை. இந்தத் தீர்மானத்தின்படிதான் இந்தக் குழு அமைக்கப்படுகிறது – உள்துறை அமைச்சர் அமித்துசா குழு! 

இவர் என்ன சொல்கிறார்?  சென்னை ஐஐடி-லிருந்து சண்டிகர் எய்ம்சு அல்லது பெங்களூரில் இருக்கிற ஐஐஎம்… இந்த உயர்ந்த நிறுவனங்களில் எல்லாம் ஆங்கிலத்தை எடுத்து விட்டு இந்தியைக் கொண்டு வந்து விடலாம் என்று! இந்தியைப் பயிற்று மொழி ஆக்க முடியும் முடியாது என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்.

 இதற்கும் ஆட்சி மொழிக்கும் என்ன தொடர்பு? பள்ளிகளில், கல்லூரிகளில் தாய் மொழியைப் பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்றால், அது நம்முடைய கோரிக்கை. மாநில அரசோ மத்திய அரசோ இதைச் செய்யவில்லை என்று நாம் குறை சொல்கிறோம் செய்யச் சொல்லிக் கேட்கிறோம். இதற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்போது அண்ணாமலை கேட்கிறார். அவர்கள் கட்சிக்காரர்கள் மாறு வேடங்களோடு தொலைக்காட்சிகளில் வந்து உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஆர்வலர், வலது சாரியாளர், பத்திரிகையாளர் என்றெல்லாம் பல பெயரில் பேசுகிறார்கள் அவர்களெல்லாம் சொல்கிறார்கள்: “தமிழைச் சொல்லிக் கொண்டு நீங்கள் மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டுமா? நாங்கள் செய்யக் கூடாதா? “என்று

 நான் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் அண்ணாமலைக்கும் பாரதிய சனதா கட்சியின் தலைமைக்கும் கேட்டுக் கொள்கிறேன். திமுக மட்டும் தான் அரசியல் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை நீங்களும் செய்யுங்கள். ஆனால் திமுக செய்தது போல் செய்து காட்டுங்கள்

 திமுக என்ன செய்தது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியைத் தீயிட்டு சாம்பலாக்கியது உங்களால் முடியுமா? செய்து காட்டுங்கள். இதுதான் தமிழ் அரசியல், இதுதான் மொழி அரசியல். 1964ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் திருச்சி இரயில் நிலையத்தில் பக்தவத்சலத்தை எதிர்த்துக் கேள்வி கேட்ட கீழப்பழூர் சின்னச்சாமி ஊருக்குப் போய் தீக்குளித்தானே சிங்கத்தமிழன் சின்னச்சாமி. அண்ணாமலையே! நீ தீக்குளிப்பாயா தமிழுக்காக

 உங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கிறீர்களே! திருச்சி சூர்யா சிவா, காயத்திரி இரகுராம் இன்னும் யார் யாரோ? அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு காயத்திரி இரகுராம் தமிழுக்காகத் தீக்குளிக்கட்டும், ஒரு சிலை வைத்து விடலாம். அதைக் கமலாலய வாசலிலேயே வைத்து விடலாம். மொழி அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல பையா! இங்கே இருந்து கொண்டு நீங்கள் காஞ்சிக்கும் வாரணாசிக்கும்  தொடர்பு படுத்தி விட்டால், உடனடியாக மொழி அரசியல் வந்துவிடுமா இந்தப் பரதேசிகளை எல்லாம் கூட்டிக் கொண்டு போய் உங்களுக்கு சால்ரா அடிக்க வைத்தால் அதுதான் மொழி அரசியலா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 Mவது பகுதியைத் திருத்துவதற்கு உங்களுக்கு துப்பு உண்டா? சொன்னீர்களே, 103ஆவது திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று! பார்ப்பானுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு! ஏன் தமிழுக்கு அரியணை கொடுப்பதற்கு இந்தியோடு சரியணை கொடுப்பதற்கு நீங்கள் 17ஆவது பகுதியைத் திருத்துங்கள். திருத்த மாட்டார்கள் என்றால் திருத்தக் கோரி தமிழ்நாடு பாரதிய சனதா கட்சி போராடும் என்று அறிவிப்புக் கொடுங்கள். முடியுமா உங்களால்?

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

சனி, 5 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8

இந்திய அரசு வங்கியில் தேர்வு வைத்து எடுக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் சுசி எசுடி பிசிக்கு எல்லாம் 80 மதிப்பெண் 90 மதிப்பெண் வந்தால் இந்த பொ.ந.பி (E.W.S.) யில் பார்ப்பனர்களுக்கு 28 மதிப்பெண் வருகிறது

 ஒரே ஒரு கேள்விதான் நண்பர்களே இந்த இட ஒதுக்கீடு என்கிற பேச்சு எழுந்தாலே பார்ப்பனர்கள் அவர்களுடைய அறிவாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தகுதி திறமை போய்விட்டது என்பார்கள். இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் மருத்துவரானால் எப்படி சிகிச்சை செய்வான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் பேராசிரியர் ஆனால் எப்படிப் பாடம் நடத்துவான்? இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஓட்டுனரானால் எப்படி விபத்தில் இல்லாமல் தொடர்வண்டி ஓடும்? அவர்கள் எதை மறைத்தார்கள் தெரியுமா? இட ஒதுக்கீட்டில் தகுதியுள்ளவன் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும். பொறியியல்   படிக்காமல் இட ஒதுக்கீட்டால் மட்டும் ஒருவன் பொறியாளர் ஆக முடியாது தகுதி திறமை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அவன் அப்படி வாதம் செய்வான்

 எழுத்தாளர் சுசாதா விகடன் பத்திரிக்கையில் ஒரு கேள்வி பதிலில் இப்படி எழுதினார்; ஒருவர் வந்து சொல்வார்: “மாமா ஒரு இடத்திற்கு நான் சென்றிருந்தேன், சென்ற இடத்தில் எல்லா கேள்விகளுக்கும் நான் நன்றாக தான் பதில் சொல்லி இருந்தேன், ஆனால் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை” என்பார்

 உடனே  சுசாதா கேட்பார்: “பாச்சா நீ என்ன முன்னேறிய வகுப்பா? என்று.” முன்னேறிய வகுப்பாக இருந்தால் நீ ஒழுங்காகவே பதில் சொன்னாலும் வேலை கிடைக்காதாம்! அதாவது அவர் முன்னேறிய வகுப்பாக இருந்தால் அவர் சரியாகப் பதில் சொல்லி இருந்தாலும் அவருக்கு வேலை கிடைக்காது என்கிறார் சுசாதா.

 அப்போது பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வேலை இல்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், மணி அடித்துக் கொண்டு! உண்மையா இது? ஆனால் இப்போது ஒரே ஒரு கேள்விதான்:

 சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் தகுதி திறமை குலையும் என்றால் பிசி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான், எசுசி எசுடி என்றால் தகுதி இல்லாதவன் வந்து விடுவான் என்றாய். ஆனால் இந்த முற்படுத்தப்பட்டவனுக்கு, ஏனைய சாதிகளுக்கு, ஏனைய வகுப்புகளுக்கு, பணக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அப்போது தகுதி திறமை பாதிக்குமா பாதிக்காதா? தகுதிதிறமைதான் உங்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு என்றால் யாருக்குமே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று கேள். அதை நாடு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளட்டும்

 உண்மையிலேயே நம்முடைய சமூகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்கக் கூடிய வாய்ப்பு, அனைவருக்கும் ஆன வேலை உரிமை, எல்லோருக்கும் சம வாய்ப்பு வந்து விட்டால் ஏன் இட ஒதுக்கீடு தேவைப்படப் போகிறது? அது தானாகவே மறைந்து விடும். அது இருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. யாரும் அது இருக்க வேண்டும் என்று கேட்கவே மாட்டார்கள். ஆனால் இப்போது ஏன் தேவைப்படுகிறது?  உரிமை ஏற்றத்தாழ்வாக இருக்கிறது வாய்ப்பில் சமத்துவம் இல்லை. அதனால்தான் நண்பர்களே, இந்த இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு கொடுத்தால் மட்டும் தகுதிதிறமை பாதிக்காது, அதுவே மற்றவர்களுக்கு என்றால் தகுதியும் திறமையும் போய் விடும் என்றால் என்ன நியாயம்?

மிகவும் தந்திரமாக ஒன்றைச் செய்கிறார்கள். அது என்னவென்று  தெரியுமா? சண்டைக்குப் போகிறவன் சுற்றிலும் நான்கு பேரை சேர்த்துக் கொண்டு போவான். காரணம் அங்கிருந்து விழுகிற கல் ஒன்று நம் மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காக! அது போல் இந்த பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறோம் தெரியுமா? என்கிறார்கள் முசுலிம்கள் இருக்கிறார்கள்! கிறித்தவர்கள் இருக்கிறார்கள்! பல சாதிகாரர்கள் இருக்கிறார்கள்! இந்தப் பல சாதிகள் இவ்வளவு காலமும் பிசியில் இல்லை  எசுசி யில் இல்லை. பிறகு எப்படி இங்கே வந்தார்கள்?

 சரி யாருடா அது என்று எடுத்துப் பார்த்தோம் என்றால் முசுலிம்களில்  யார் தெரியுமா? நவாபுகள்! யார் அது நவாபு குடும்பம்? ஆற்காடு நவாபு குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு! இந்த இராயப்பேட்டையில் அவர்களுக்கு  இருக்கின்ற  அரண்மனையிலேயே நான்கு கல்லூரிகள் வைத்து நடத்திக் கொள்ளலாமே! அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? அவர்களுக்குப் போய் இவர்கள் வாங்கிக் கொடுக்கிறார்களாம்! எனவே இவை அனைத்தும் மோசடி, நண்பர்களே! இது முறியடிக்கப்பட வேண்டும்   

தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆளுங்கட்சி இதை எதிர்க்கிறது விடுதலைச் சிறுத்தைகள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் பொதுவுடைமைக் கட்சியினர் பார்ப்பனர்களுக்கு சாதகமாக பேசுகிறார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். மாநிலங்கள் அவையில் இந்த சட்டத் திருத்தத் தீர்மானம் கொண்டுவருகிற போது டி கே இரங்கராசன் அதை ஆதரித்துப் பேசினார். கனிமொழி அவர்கள் ஓடோடிப் போய், “என்ன தோழரே நீங்கள் போய் இதை ஆதரிக்கிறீர்களே?” என்று கேட்டார். “இல்லை இல்லை. நீங்கள் அமைதியாக இருங்கள், எங்கள் கட்சியின் உத்தரவுப்படி நாங்கள் ஆதரித்தோம்” என்றார். நான்  அவரைப் பார்ப்பனர் என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். நான் அதனால் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்மானம் யாருக்கான தீர்மானம்? பார்ப்பனர்களுக்கான தீர்மானத்தை ஆதரிக்கிறாரே! இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கின்ற யோசனையை முதன்முதலாகச் சொன்னவர்களே நாங்கள்தான் என்று பெருமையோடு அறிவித்துக் கொள்கிறார்கள்! தாலின் பேசிய கூட்டத்தில் அவர்களும் இருந்தார்கள்! தோழர் பாலகிருட்டிணன் அங்கேதான் இருந்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக மண்டல் குழுவின் பரிந்துரையை ஆதரித்து, சாதிக்கு மண்டல் வைத்த நெருப்பு என்ற புத்தகத்தை எழுதியவர் தோழர் ஞானைய்யா!

 இன்றைக்கு அது என்னாயிற்று? இப்போது வந்திருப்பது ஒரு புதிய இட ஒதுக்கீடு மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்ப்பதற்கான ஒரு திட்டம்! அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அவர்களால் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றால் அதை காங்கிரசு பொதுவுடைமைக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும் என்றால், நாளைக்கு இட ஒதுக்கீடு தேவையற்றது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தாலும் அவர்களால் நிறைவேற்ற முடியும்

-தெருமுனைக் கூட்டம்கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8

 ஆனால் விபிசிங்கு அவர்கள் பதவி போனால் போகட்டும் என்று இதைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அப்படி அவர் உறுதியாக இருந்ததால் மண்டல்குழு பரிந்துரை செயலுக்கு வந்தது. நீதிமன்றத்தில் போய் வழக்குப் போட்டார்கள். அதுதான் இந்திரா சாகுனி வழக்கு. அதில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றார்கள். ஒரு சிறுபான்மையினர் செல்லாது என்றார்கள். விபிசிங்கு அரசைக் கவிழ்த்து விட்டு நரசிம்மராவு  வந்தார். ஆந்திரத்தின் சூழ்ச்சிமிக்க பார்ப்பன நரி! அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே என்ன செய்தார் தெரியுமா?

 ஏற்கெனவே நம் சிபிஎம் தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். “ஏழைப் பார்ப்பனர்களைக் கொஞ்சம் கவனிக்க மாட்டீர்களா? அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமே” என்று பேசினார்கள். உடனே அவர் பார்த்தார், “10 விழுக்காடு இந்தா எடுத்துக் கொள்” என்றார்.

ஏழைப் பார்ப்பனர்களுக்கு ஓடு வைத்திருந்தால் சோறு போடு! வங்கிக் கணக்கில் பணம் போடு! கடை வைத்துக் கொடு! அல்லது வேதம் கற்றுக் கொடு! மந்திரம் சொல்லிப் பிழைத்துக் கொள்ளட்டும்! இட ஒதுக்கீடு எதற்கு? வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இடம் இல்லையா? கல்லூரியில் அவர்களுக்கு இடம் இல்லையா? பொறியியல் கல்லூரி,  மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்லூரிகளிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மருத்துவர் என்றாலே அவர்கள் மருத்துவ சாதிதான். ஏன்?  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாத மக்கள்! ஆனால் பார்ப்பனர்கள் அங்கே போக மாட்டார்கள். ஏன் போக மாட்டார்கள் என்றால், மருத்துவன் என்றால் நோயாளியைத் தொட்டுப் பார்க்க வேண்டும், கட்டி இருக்கும்  சீழ் துடைக்க வேண்டும், இந்த வேலைக்கு நாம் எப்படிப் போவது? எனவே  பார்ப்பனர்கள் போக மாட்டார்கள். ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்? மருத்துவர் என்றால் நோய்  போக்குவது அல்ல காசு குவிப்பதே நோக்கம். எனவே இப்போது எல்லாம் அதை விட்டு விட்டார்கள். அந்தத் தீண்டாமை எல்லாம் வேண்டா, நானே தொட்டு வைத்தியம் செய்கிறேன், இதய அறுவை சிகிச்சையா? நானே செய்கிறேன் என்று வந்து விட்டார்கள். இப்போது மருத்துவக் கல்லூரியில் போட்டி! ஒரு காலத்தில் என்ன செய்தார்கள்? நீங்கள் சமற்கிருதம் படித்தால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்றார்கள். சமற்கிருதத்தை யார் படிப்பார்கள் யார் வீட்டுக் குழந்தை படிக்கும்? காயத்திரி மந்திரம் சொன்னால்தான் உனக்குக் கல்வி என்றால், யார் போய்ச்சொல்வது? 

 முதலில் மண்டல் குழுவிலும் வெறும் வேலைவாய்ப்புதான்! 2006ஆம் ஆண்டு அருசுன் சிங்கு கல்வி அமைச்சராக இருக்கிற போதுதான் புதிதாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து 2008இல் இருந்து கல்வியிலான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது இந்திய உச்ச நீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்கிற நீதிபதிகள் உயரமான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கேள்வி கேட்டார்கள் தெரியுமா? இதற்கு என்ன அவசரம்? எதற்கு? இட ஒதுக்கீட்டிற்கு என்ன அவசரம்? என்று கேட்டார்கள். பொறுத்துக் கொள்ளக் கூடாதா? பிறகு பார்ப்போமே? ஏன் இந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு முன்பு சாதிவாரிக்  கணக்கெடுப்பு நடத்தி விட்டீர்களா? பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை விழுக்காடு? என்ற கணக்கு இருக்கிறதா?  அரசு வழக்குரைஞர் சொல்வீர்களா? என்று கேட்டார்கள். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பிறகு பார்ப்போம் என்றார்கள். 

 ஐயா, இந்தக் கணக்கை எல்லாம் மண்டல் எடுத்தார், கணக்கெடுப்பு செய்தார். அப்படியானால் இந்தக் கணக்கே எடுக்காமல் நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்? நீதிபதிகள் எந்த ஆய்வுமே இல்லாமல் நிறுத்தி வைத்தார்கள். பிறகுதான் வெற்றி பெற்று அந்த வழக்கு வந்தது கல்விக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற போது மருத்துவக் கல்விகளில் ஒரு பொது ஒதுக்கீட்டை உருவாக்கினார்கள். ஏன்? இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை, எனவே தொடங்கு என்று சொல்வதற்குப் பதிலாக இருக்கின்ற இடங்களில் இந்தியா முழுவதிலிருந்தும் ஆட்களைச் சேர்த்துக் கொள். நீ இந்திக்காரரா குசராத்தியரா மராட்டியரா இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் இடம் கொடு. இது அனைத்திந்திய ஒதுக்கீடு!

 சரி, கொடுப்போம். அடுத்த கேள்வி என்ன தெரியுமா? அதில் இட ஒதுக்கீடு உண்டா?

 எசுசி எசுடிக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லவா? நீதிபதிகள் சொன்னார்கள் – அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் போய்ச் சேர்த்துக் கொள் என்றார்கள். அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் கழித்துப் போராடித்தான் அதற்குள்ளே இட ஒதுக்கீடு பெற முடிந்தது நம்மால்! இவ்வளவு வரலாற்றுப் பின்னணிகள் இந்த இடஒதுக்கீட்டிற்குப் பின் இருக்கிறது.

நண்பர்களே! இது நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. நம்முடைய எதிர்காலக் குழந்தைகள் பேரன் பேத்திகள் மகன் மகள் என அவர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த செய்தி இது நம் மூதாதையர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை ஒரு மோதியும் அமித்துசாவும் சட்டென்று பறித்துக் கொண்டுசெல்ல முயல்கிறார்கள் மொத்தத்தில் அவர்களுடைய திட்டம் இவ்வளவுதான்! பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான்!

 பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன பொருள் தெரியுமா? இட ஒதுக்கீட்டிற்கு சமாதி கட்டுவது என்று பொருள்.

நீங்கள் நோயற்றவனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் நோயுள்ளவனுக்கு மருந்து கிடைக்காது என்று பொருள். புளிச்ச ஏப்பக்காரனுக்குத்தான் விருந்து என்றால் பசி ஏப்பகாரனுக்குப் பட்டினி போகாது என்று பொருள். இதுதான் உண்மை. இந்தத் திட்டம்தான் பார்ப்பனர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு. சமூக வழியில், கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு என்று தீர்ப்பு இருப்பதால் நரசிம்மராவு கொண்டு வந்த திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அப்போது என்ன செய்தார்கள்பெயரை மாற்றிக் கொண்டார்கள் மிகத் திறமையாக மாற்றி விட்டார்கள். பொருளாதரத்தில் பின் தங்கியோர் (‘Economically Backward‘) என்ற வார்த்தையே இல்லை. அப்படி இருந்தால் செல்லாது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது அப்படியெல்லாம் கொடுக்கவே முடியாது. ஒரு சாதிக்குத் தனியாகக் கொடுக்க முடியாது சமூகத்திலும் பொருளாதரத்திலும் பின் தங்கியோர் (Socially and ecomomically backward‘)’க்குக் கொடுக்க முடியாது என்று எல்லாம் தெளிவாகி விட்டது நீதிமன்றத்தில். எனவே இந்த வார்த்தையை அப்படியே மாற்றி பொ.ந.பி.- பொருளாதரத்தில் நலிந்த பிரிவு (E.W.S – Economically weaker section)– என்று புதுக் கதை எழுதுகிறார்கள். யார் அவர்கள்? ஆண்டு ஒன்றுக்கு எட்டு இலட்சம் உரூபாய் சம்பாதிப்பவர்கள்! தினமும் 2,200 கல்லா கட்டுபவர்கள்! இவர்கள்தான் ‘எக்கனாமிக்கலி வீக்கர் செக்சன்’ அப்போது உண்மை என்ன? பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதுதான்!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8

சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் –  இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள்  ‘பிசி’ என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன சாதி என்பதைக் கேட்டால்தான் நீங்கள் ‘பிசி’யா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். என்ன சாதி என்று கேட்டால்தான் ‘எசுசி’ அல்லது ‘எசுடி’ என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அப்போது இந்தச் சாதி என்பதை வைத்து அந்த சாதிச் சான்றிதழ் வைத்துத் தான் உங்களை ‘பிசி’யில் சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக நாம் போய் நின்றோம் என்றால் சாதியைச் சொல்லிச் சாதிக்குக் கொடுக்கவில்லை இட ஒதுக்கீடு! ஆனால் அந்தச் சாதி என்பதை வைத்து என்ன ‘கிளாசு’ என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.

 அப்போது இந்த அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. அதாவது சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு என்பது சாதிக்குத்தான்! தாழ்த்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தைப் பற்றி அவரவர் நண்பர்களின் குடும்பத்தைப் பற்றி அவரவர் உறவுக்காரர்களை பற்றி அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம் குழந்தைகள் படிக்கிறார்கள். நம் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்கள். வடநாட்டைப் போல் இங்கு இல்லை, வங்காளத்தைப் போல் இல்லை, ஏன் இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! 

இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இவ்வளவு படிப்பறிவு வந்திருக்காது. இவ்வளவு வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது. இது போதும் என்று நாம் நிறைவடையவில்லை. ஆனால் இதுவாவது வந்தது என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! இதனால் என்ன பார்ப்பனர்களுக்குப் பங்கு குறைந்து போய் விட்டதா? அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய் விட்டதா? எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள்‘இரயில்வே’யில் மேலாளர்கள் யார்? வங்கிகளில் யார் உட்கார்ந்திருப்பது? ஒன்று, பார்ப்பனர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்த எசுசி எசுடியாக இருப்பார்கள். மண்டல் குழுவின் பரிந்துரையால் வந்தவர்கள் இன்னும் போதிய எண்ணிக்கையில் வரவில்லை. இவையெல்லாம் கருதித்தான் இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எசுசி எசுடி அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், அதாவது ஓபிசி-க்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது அந்தக் கோரிக்கைக்கு உருவம் கொடுப்பதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சட்டத்திலே அம்பேத்துகர் எழுதி வைத்தார். ஆனால் நேருவும் வல்லபாய் பட்டேலும் அந்த ஆணையத்தை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள் அம்பேத்துகர் பொறுத்துப் பொறுத்து பார்த்தார், இந்தப் பதவி வேண்டா என்று பதவியை விட்டு விலகி விட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத்தான் அம்பேத்துகர் பதவி விலகினார். இரண்டு காரணம்: ஒன்று பெண்களுக்காக! இன்னொன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! அவர் பதவியை விட்டு விலகி வந்தார் அதற்குப் பிறகு காக்கா கலேல்கர் ஆணையம் போட்டார்கள். அதைச் செயல்படுத்தவில்லை, அப்படியே கிடப்பில் கிடந்தது.

 1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை ஓய்ந்து, ஒரு புதிய சனதா அரசாங்கம் வந்தது.  அந்த கட்சியில் பல பேர் சோசலிசுட்கள் இருந்தார்கள் அவர்களுடைய முயற்சியினால் முதன்முதலாக மண்டல் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. யாரெல்லாம் ஏனைய பிற்படுத்தப்பட்டவர்கள்? இந்திய அளவில்? தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. அந்தக்குழு தான் இந்தப் பரிந்துரையை வழங்கியது: 27 விழுக்காடு! ஏன் வழங்கியது? தெளிவாக அந்தக் குழு கணக்கெடுத்தது. வெறுமனே தெருவில் போகிறவர் வருபவர்களைக் கொண்டு எல்லாம் முடிவு செய்யவில்லை. இந்திய அரசுப் பணிகளில் என்ன சாதிக்கு என்ன இடம் இருக்கிறது? என்று கணக்கெடுத்து அவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்றால், 60%ஆவது இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் நாலு விழுக்காடுதான் இடம் இருக்கிறது. நூற்றுக்கு 15 பேர் எசுசி எசுடியாக இருக்கிறார்கள் நூற்றுக்கு நான்கு பேர் எம்பிசியாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சிய அத்தனை பேரும் யாராக இருக்கிறார்கள்? பார்ப்பனரும் உயர் சாதியினருமாக இருக்கிறார்கள் 

இவர்களுடைய வாழ்க்கை எப்போது முன்னேறும்? காலமெல்லாம் நிலத்தில் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். காலமெல்லாம் பரம்பரைத் தொழிலைச் செய்து கொண்டே இருப்பார்கள். சாதி வீராப்பு பேசி மீசையை முறுக்கிக் கொண்டு ஊருக்குள் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள். குடிசையைக்  கொளுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவனுக்குக் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் வராது என்று, அவர்களுக்கு 27 விழுக்காடு வழங்கியது, வேலைவாய்ப்பில் வழங்கியது மண்டல் குழு. ஆனால் 27 விழுக்காடு கொடுத்தாகி விட்டது என்றால் அது நடைமுறைக்கு வந்த உடனேயே, கொடுக்கத் தொடங்கி விட்டால் 25 விழுக்காடு அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் அவர்களுக்கு ஆகும் என்று மண்டல் கணக்குப் போட்டார் உடனடியாகப் போக முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டுக்குக் கொஞ்சம், ஆண்டுக்கு கொஞ்சமாகக் கொண்டு போக வேண்டும். இதை அப்படியே கிடப்பில் போட்டார்கள். சனதா ஆட்சி போனது, காங்கிரசு ஆட்சி திரும்பி வந்தது, யாரும் எதுவுமே செய்யவில்லை.

 1991இல் விபி சிங்கு அறிவித்தார்,  நான் மண்டல் குழுவைச் செயல்படுத்துகிறேன் என்று. எங்கே மண்டல் குழு அறிக்கை என்றார். பாராளுமன்றத்தின் பரணில் கிடந்தது, ஒட்டடை படிந்து கிடந்தது. எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். இதை நான் செயல்படுத்துகிறேன் என்று அறிவித்தார். மண்டல் குழுவைச் செயல்படுத்தக் கூடாது என்று இரண்டு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. ஒன்று காங்கிரசு கட்சி. இராசீவு காந்தி நாடாளுமன்றத்தில் 8 மணி நேரம் பேசுகிறார். மண்டல் குழு கூடவே கூடாது என்று. மண்டலை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடியது ஆர்எசுஎசு-ம் பாசகவும். கொளுத்தினார்கள் மற்றவர்களை! தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள். மக்களைத் தூண்டி விட்டார்கள். இதற்கு எதிராக ஊருக்கு ஒரு சாதியைக் கிளப்பி விட்டார்கள். மண்டல் குழு கூடவே கூடாது என்று!

தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153