செவ்வாய், 10 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும்

 அகரமுதல







(தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்! தொடர்ச்சி)

மா இலெனின் என்பதில் மா என்பது முன்னெழுத்தா?

இல்லை. வி.இ. என்பதுதான் இலெனினின் முன்னெழுத்துகள். விளாதிமிர் இலியிச்சு உல்யானவு இலெனின் என்பது முழுப்பெயர். உல்யானவு குடும்பப் பெயர். இலெனின் என்பது இலேனா ஆற்றின் பெயரால் அவர் சூடிய எழுத்துப் பெயர். மா என்பது மாபெரும் என்பதன் சுருக்கம். மகா அலெக்குசாந்தர், மகா அசோகன் என்பது போல் மகா இலெனின்! மகா என்பதே மா ஆகிறது. தோழர் இலெனின்! புரட்சித் தலைவர் இலெனின்! மாமேதை இலெனின்! மா இலெனின்! எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல்

இன்று கனடா நாட்டுத் தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு நடத்திய இணையவழி நினைவேந்தலில் பேராசிரியர் நெடுஞ்செழியன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தேன். அவரைப் பற்றியும் அவரது பணிகள்-படைப்புகள் பற்றியும் சொல்ல வேண்டியவை ஏராளம். அவரைக் கருநாடகச் சிறையில் ஓராண்டுக்கு மேல் அடைத்து வைத்திருந்தார்கள் அல்லவா? அது பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை இதோ:

பொய் வழக்கு போட்டு

என் புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டியெனை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமை செய்தாலும்

நான் வீழ்ந்து விட மாட்டேன்

வஞ்சகத்தின் முன்னே

நான் மண்டியிட மாட்டேன்” 

ஒரு குறிப்பு: பேராசிரியர் நெடுஞ்செழியன் அந்த வழக்கில் சிறைப்படாமல் இருந்திருப்பின் பல்கலைக்கழகத் துணைவேந்தராகியிருப்பார், மேலும் பெருமை பெற்றிருப்பார் என்று ஒரு கருத்துண்டு. சிறைப்பட்டமையை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பள்ளமாகக் கருதுவர். நான் அப்படிக் கருதவில்லை. அது அவர் சூடிய மகுடம் என மதிக்கிறேன். அவரைச் சிறையிலடைத்த நாட்டுக்கு அது சிறுமை, வீழ்ச்சி! இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை நண்பராக, தோழராகப் பெற்றது எனக்கு, நமக்குப் பெருமை!

தரவு: தியாகுவின் தாழி மடல் 9

திங்கள், 9 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்!

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி)

புவித்தாய்க்குக் காய்ச்சல்!

சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்:

“காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.” 

புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள்.   

அரசியல் நெருக்கடியையும் பொருளியல் நெருக்கடியையும் விஞ்சக் கூடியவாறு காலநிலை மாற்ற நெருக்கடி முற்றி வருகிறது.

இந்த உண்மையை அறிந்தேற்காமல் அதற்கு முகங்கொடுத்துத் தீர்வு காண முடியாது. துவாலு உள்ளிட்ட பசிபிக்கு தீவுகள்  வலிக்க வலிக்க இந்த நெருக்கடியோடு போராடி வருகின்றன.

ஆனால் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? புவி வெப்பமாதலைத் தணிப்பது எப்படி? தனியாட்கள் முயன்று மட்டும் இதனைச் செய்ய முடியாது என்னும் நிலையில் அரசுகள் முன்முயற்சி எடுத்தால்தான் புவி வெப்பமாதலைக்  கட்டுப்படுத்த முடியும் என்பதால்தான் உலக நாடுகள் 2015 திசம்பரில் பாரிசு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டன. ஏட்டளவில் அது பெருஞ்சாதனை! பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெப்பமாதலை 1.5 பாகை (டிகிரி) என்னுமளவுக்குள் நிறுத்த வேண்டும் என்பது உடன்பாடு.

தொழிற்புரட்சி என்பது மாந்தக் குல வரலாற்றில் பெரியதொரு பாய்ச்சல்தான். ஆனால் அதே தொழிற்புரட்சிதான் புவியின் தட்ப வெப்ப நிலையில் முன்காணாத மாற்றத்தையும் தொடங்கி வைத்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு புவி வெப்பத்தை மீட்க முடியுமா? முடியாது. ஆனால் அந்த முந்தைய நிலைக்கு மேல் 2 பாகைக்குள் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த முடிந்தாலே பெரிய நன்மை விளையும்.

பாரிசு ஒப்பந்தத்தை அடுத்தடுத்துப் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு விட்டன. ஆனால் எல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய்தான்! புதைபடிவ எரிபொருள் ஆக்கம் குறையவில்லை என்பதோடு கூடிக் கொண்டே போகிறது. தானாகக் கூடவில்லை, அரசுகள் திட்டம் போட்டுக் கூட்டுகின்றன என்பதே மெய். கடந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் கரியமில வாயு(கார்பன்-டை-ஆக்சைடு) உமிழ்வுகளில் 86 விழுக்காடு… பெற்றோல், எரிவாயு, நிலக்கரி காரணமாக ஏற்பட்டுள்ளது என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா குழு தெரிவிக்கிறது.

நிலத்தடிக் கனிமங்களில் கறுப்புத் தங்கமாக மதிக்கப்படும் நிலக்கரி, எரிநெய் (பெற்றோல்) போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தவே கூடாதா? என்ற கேள்வி எழும். மாந்தக் குலம் அப்படி ஒரு கூட்டு முடிவு எடுத்தாலும் தவறில்லை என்பேன். தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்வோமா? வயிரம் என்பதால் வாய்க்குள் போட்டுக் கொள்வோமா?

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இன்று முடிவெடுத்து நாளை முதல் கைவிட முடியாது என்பதே மெய். அப்படியானால் முதற்கட்டமாகக் கட்டுப்படுத்தலாமே? இந்தப் பயன்பாடு மேலும் பரவாமல் தடுக்கலாமே?

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தாமல் பாரிசு ஒப்பந்தம் போல் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் புவிக் காய்ச்சலைத் தணிக்க முடியாது.

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் போதே பொருளியல் கட்டமைப்பைப் பன்மயப்படுத்தும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இந்த முயற்சிகளுக்கு முதலாண்மை (முதலாளித்துவ) வளர்ச்சிப் பாதையும், அதனைக் கைப்பிடித்துள்ள அரசுகளும் பெருந்தடைகள் என்பதால் மக்கள்-போராட்டங்கள் வழியாகவே முன்னேற்றம் காண முடியும்.

மூன்றாம் உலகப் போர் பற்றி அடிக்கடிப் பேசுகிறோம். இந்த மூன்றாம் உலகப் போர் காலநிலை மாற்றத்தின் மீதான போராக அமைய வேண்டும். ஒரு வகையில் ஏற்கெனவே அந்தப் போர் தொடங்கி விட்டது. அந்தப் போரின் முனைமுகத்தே துவாலுவும் அதையொத்த பசிபிக் தீவுகளும் நிற்கின்றன.

நாம் எங்கே நிற்கிறோம்?

இன்று (15/11/2022) தி இந்து ஆங்கில நாளேட்டின் 7ஆம் பக்கத்தில் “Climate change debates while the Earth heats up” (புவி வெப்பமாதல் கூடும் போதே காலநிலை மாற்ற விவாதங்கள்) என்ற தலைப்பில் வந்துள்ள எழுத்துரையை வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இந்தோனேசியாவில் பாலி சென்றுள்ளார். இருபது நாடுகள் குழு (G-20) சந்திப்புக்காகச் சென்றுள்ளார். உலகத்தின் கவலைக்குரிய சிக்கல்களைப் பற்றி விவாதிக்கப் போகின்றார்களாம். அவற்றுள் ஒன்று சுற்றுச்சூழல். காலநிலை மாற்ற நெருக்கடி குறித்தும் பேசுவார்கள். ஆமாம், பேசுவா…ர்…க…ள்! பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 9

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

புத்தகக் கண்காட்சியில் என்னூல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





சென்னையில் நடைபெறும் 46ஆவது புத்தகக் கண்காட்சியில் களம் – அரங்கு எண் 272 இல் என்னூல்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழார்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்லாகத்கதிலும் அறிவியல் தமிழிலும் ஈடுபாடு மிக்கவர்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயனுற வேண்டுகிறோம். விவரம் வருமாறு:-

பழந்தமிழ்(விலை உரூ 100.00)

நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல்.

பல ஆண்டுகள் தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல்.

மொழியின் சிறப்பு, மொழிகளும் மொழிக்குடும்பங்களும், பழந்தமிழ், மொழி மாற்றங்கள், பழந்தமிழ்ப்புதல்விகள், பழந்தமிழ் இலக்கியம், பழந்தமிழ் நிலை, பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், பழந்தமிழ்ச் சொல்லமைப்பு,பழந்தமிழும் தமிழரும், தமிழ் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புகளில் நம் தமிழ்மொழியின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளார். தமிழ்மொழியின் ஏற்றத்தை நிலைநாட்ட ஆங்காங்கு மேலைநாட்டு மொழியறிஞர்களின் உரைகளை எடுத்தாண்டுள்ளார். “தமிழ் இந்நாட்டு மொழியே. இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலைநாட்டியுள்ளார்.

பணித்தேர்வு எழுதுநருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் செம்மொழித் தமிழின் சிறப்புகளை அறிவதற்கும் உணர்வதற்கும் உரிய நூல்.

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் – சங்கக்காலம்(விலை உரூ 65.00)

 நான் பதிப்பித்துள்ள பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நூல்.

தமிழ் மாணாக்கர்களுக்குப் பாடமாக இருந்த நூல்.

சிங்கப்பூரிலும் கடந்த சில ஆண்டுகள் பாடமாக இருந்தது.

தமிழ்நாடு, தமிழ் நகரங்கள், மக்கள், அரசு, கல்வி,இல்லறம், கடவுட் கொள்கை,மெய்யுணர்வுக் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பொழுதுபோக்கு, பழக்க வழக்கங்கள்,வாணிகம், போர்கள், புலவர்கள் குறித்து விளக்கியுள்ள நூல். சங்கத்தமிழின் சிறப்புகளை விளக்க வந்த முதல் நூல்.

ஆய்வாளர்களும் பணித்தேர்வுகள் எழுதுநருக்கும் உற்றுழி உதவும் நூல்.

***

இலக்குவனார் திருவள்ளுவன் நூல்கள்

அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்

சங்கத்தமிழ் இலக்கியங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் மண்டிக்கிடப்பதை எடுத்துரைக்கும் நூல்.

உயிரறிவியல், சேமக்குடுவை, சுற்றுப்புற அறிவியல், புவிச் சுழற்சி, மாற்றுச் சக்கரம், புவியில் இருந்து சூரியன் பிரிந்தது, மழையியல், முகிலறிவியல், காற்றின் வகைமை, காற்று வழங்காத விண், தாழிமரம், வழித்துணைப் பெயர்ப்பலகைகள், பதிவறிவியல், வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல, நீச்சல் உடையியல், பொற்காசுகள், பாசன அறிவியல், புலம் பெயர் பறவைகள், பொருளறிவியல், எழுத்துக் காப்பு, மணிப்பாெறி, சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, சனி ஆகிய கோள்களின்  தன்மைகள், யானையியல், காலணி, கட்டட வகைகள் முதலியவை பற்றிச் சங்க இலக்கியங்கள் உரைப்பதை விளக்கும் நூல்.

சங்கத்தமிழ் ஆர்வலர்களும் அறிவியல் தமிழ் ஆர்வலர்களும் பொது அறிவில் நாட்டம் கொண்டவர்களும் படிப்பதற்கேற்ற நூல்.

***

படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் இலக்குவனார்விலை உரூ 90.00)

தமிழ்ப்போராளி பேரா. முனைவர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழறிஞர்களும் தமிழ்ப்படைப்பாளர்களும் பாராட்டித் தெரிவித்த கருத்துகள். அவரின் நூல்கள் குறித்தும் தமிழ்ப்பணிகள் குறித்தும் இந்தி எதிர்ப்புப் போர் குறித்தும் கூறப்பட்டவை அக்கால வரலாற்றை அறியவும் உதவியாக உள்ளன.

தொல்காப்பியப்புலமையாளர், குறள்நெறி பரப்பிய சான்றோர், கவித்திறனில் சிறந்தவர், மொழி ஆராய்ச்சியாளர், பன்முகப்பாங்கினர், தமிழ்த்தாய், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், தமிழ்ப்புரட்சி ஏற்படுத்திய தமிழியக்கம், முத்தமிழ்ப் போர்வாள்,ஆற்றற் களஞ்சியம், புரட்சியாளர்,தமிழ் ஞாயிறு, இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், கூண்டிலே அடைக்க முடியாத சிங்கம், தன்மானப் பெரும்புலவர், தமிழ்க்கென வாழ்ந்து தமிழாய்ச் சிறந்தவர், தமிழுக்கு இலக்கு, தமிழுக்காகத் தன் வாழ்வையே பணயம் வைத்த அஞ்சா நெஞ்சர், இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி, திராவிட இயக்க வெற்றிகளுக்கு வித்திட்டவர், தமிழுக்காகச் சிறை சென்ற செம்மல், முத்திரை பதித்த இதழாளர், தமிழியக்கத் தலைவர், புரட்சிப் பேராசிரியர், தமிழர்க்கான கருவூலம் முதலியவாறாகப் பல்வேறு வகைகளில் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் குறித்து படைப்பிலக்கிய அறிஞர்கள் கூறுவதை எடுத்துரைக்கும் நூல்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க., தந்தை பெரியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ., மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்,  பேரறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி,  முத்தமழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவியோகி சுத்தானந்த பாரதியார், உவமைக் கவிஞர் சுரதா, அண்ணலார் பு.அ.சுப்பிரமணியம், புலவர் வி.பாெ.பழனிவேலனா், புலவர் மணி இரா.இளங்குமரன், முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ்ப்பெரும்புலவர் கி.வா.சகந்நாதன், முனைவர் மா.இராசமாணிக்கம் முதலிய அறிஞர்கள் பலரின் கருத்துரைகள் இடம் பெற்றுள்ளன.

***

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்(விலை உரூ 50.00)

திருக்குறள் கருத்துகளை மாணாக்கர்கள் உள்ளத்தில் பதியும் வகையில் கட்டளைகளாகத் தரும் நூல்.

***

அறிவியல் வகைமைச் சொற்கள் 3000(விலை உரூ 500.00)

அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப்பெயர்கள், பயிர் அறிவயிலின் சொல் வளம், எத்தனை எத்தனை மலர்கள், இலை அறிவியல், இலை வகைகள், நிற வகைகள், மூமா(டயனோசர்), தனிமங்கள், நோக்கிகள், காலிகள், உண்ணிகள், நுண்ணோ்ககிகள் எனப் பன்னிரு வகைகளில் அறிவியல் சொற்களை வகுத்துத் தமிழில் தரப்பட்டுள்ள நூல்.

சொல்லாக்க ஆர்வலர்களுக்கும் அறிவயில் ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழும் நூல்.

+++

அறிவியல் சொற்கள் ஆயிரம் (விலை உரூ 250.00)

சொல்லாக்க ஆர்வலர்களும் அறிவியல் துறையினரும் பயன்படும் வகையில் அறிவியல் சொற்களைத் துறைவாரியாகப் பகுத்தும் ஒரு பொருளுக்கு ஒரு சொல் என வகைப்படுத்தியும் அறிவியற் களஞ்சியத்திற்கு இணையான அகராதி நூல்..

கொழுப்பும் நிணமும் (fat and cholesterol), பொரித்தலும் வறுத்தலும் (hatching and frying ), உணவும் சாப்பாடும் (food and meal), தோலும் அதளும் (skin and leather), உயரும் உம்பரும் (height and elevation), மூதாளர் ( senior citizen), மலையியல் கலைச்சொற்கள், கோளி(cryptogam), அதிரி(vibrio), வளரியம்(cambium), மரவியம்(xylem), கற்றை(fascicular), காழ நீர்(coffee), உலவி(moon. satellite), உழலி(wanderer), அந்தர ஊர்தி(hovercraft), ஏணறை(lift),மிகைப்பி முதலிய 90க்கு மேற்பட்ட அறிவியல் சாெற்களை விளக்கங்களுடன் எடுத்துரைக்கும் நூல்.

***

கட்டுரை மணிகள் (விலை உரூ 120.00)

சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் நான்மறைகளும் நால் வேதங்களும் தமிழே, சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப்போரிலா?,சொன்ன சொல் தவறாதே, சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு.ஆயிரத்திற்கு முற்பட்டது, புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன், புறநானூறு சொல்லும் வரி நெறி முதலிய  ஆராய்ச்சிக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல்.

சொல்லாக்கம்-நெறிமுறையும் வழிமுறையும் (விலை உரூ. 120.00)

கலைச்சொல் விளக்கம், சொல்லாக்க நெறிமுறைகள், சங்க இலக்கியக் கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும், ஒரு சொல் பல பொருள்- கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல், அருந்தமிழ்ச்சொற்கள் அனைத்தும் அறிவியலே, இன்றைய தேவை குறுஞ்சொற்களே, திருக்குறளில் கலைச்சொற்கள், செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை, எல்லாச் சொல்லும் தமிழ் குறித்தனவே எனப் பல்வேறு தலைப்புகளில் கலைச்சொற்களைச் சுருக்கமாகவும் செறிவாகவும் தந்து விளக்கியுள்ள நூல்; கலைச்சொல் விளக்கக் கட்டுரைகளும் கலைச்சொல் நெறிமுறைகளும் அடங்கிய நூல்.

உலகக் கருத்தரங்கங்களிலும் உள்ளூர்க் கருத்தரங்கங்களிலும் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. தமிழால் சொல்ல இயலும ்தமிழில சொல்ல  இயலும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நூல்.

கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடும் கலைச்சொற்களும் (விலை உரூ. 150.00)

கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடு, இயல்பான கணிணி மொழிபெர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன, கணிணியிலில் நேர் பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத கலைச்சொல் பெருக்கம் முதலிய கணிணியியல் தொடர்பான கலைச்சொற்கள் குறித்த ஆய்வு நூல். கணிணியன்பர்களும் தமிழன்பர்களும் படிக்க வேண்டிய நூல்.

தமிழார்வலர்கள் கணிணியறிவையும் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். கணிணி வல்லுநர்கள் தமிழறிஞர்களின் கருத்துகளுக்கு முதன்மை கொடுத்துச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல்.

***

இலக்குவனார் இதழுரைகள்(விலை உரூ 600.00)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 1960-70 களில் தமிழ்நலம் தொடர்பாகவும் தமிழ்க்காப்பிற்காகவும் குரல் கொடுத்த தலையங்கங்கள் தொகுப்பு. அவர் கூறும் அறிவுரைகள் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன. அன்றைய தமிழக நிலையையும்  இன்றைக்கு நாம் தமிழுக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் நாம் அறிவதற்கு உதவும் நூல்.

இலக்கு, தமிழ் வழிக்கல்வி, இந்தி முதன்மை எதிர்ப்பும் தமிழ்த்தேசியக் காப்பும், திருவள்ளுவரைப் போற்ற், அனைவருக்குமான கல்வி, நினைவுரைகளும் புகழுைகளும், உரிமை வாழ்வு, அரசியலும் மன்பதையும், பிற என்னும் தலைப்புகளின் கீழ்  இலக்குவனாரின் இதழுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.இணைப்பாகப் பேராசிரியர் சி்.இலக்குவனார் தமிழ்க்காப்புப்பணிகளுக்காக இந்தி எதிர்ப்புச் செயற்பாடுகளுக்காகக் கைது செய்யப்பட்ட பொழுது தலைவர்கள் கண்டித்து பேசிய,எழுதிய சில செய்திகளின் தொகுப்பு தரப்பட்டுள்ளது.

தமிழக அரசியலைப்பற்றி மட்டுமல்லாமல், பிற மாநில, ஒன்றிய அரசியல் குறித்தும் மக்கள் நல நோக்கில் எழுதப்பட்டவை அரசியல் மாணாக்கர்களும் தமிழ் மாணாக்கர்களும் ஆய்வாளர்களும் படிக்கப்பட வேண்டியவை.

***

வேண்டவே வேண்டா இந்தி (விலை உரூ 300.00)

இந்தியைத் திணிக்கவில்லை என எல்லாவகையிலும் இந்தியைப் புகுத்திக்கொண்டுதான் உள்ளனர். எனவே, இந்தி வேண்டவே வேண்டா என வலியுறுத்தும் நூல்.

பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் குறள்நெறி இதழில் எழுதி வந்த இந்தி எதிர்ப்புக் கட்டுரைகளும் அவ்விதழில் வெளிவந்த பிறரின் கட்டுரைகளும் அண்மையில் அகரமுதல மின்னிதழில் வெளிவந்த இந்தி எதிர்ப்புக் கட்டுரைகளும் இலக்குவனார் திருவள்ளுவன் இந்தி எதிர்ப்பு குறித்து அளித்த செவ்விகளும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ள நூல்.

இந்தி மொழியைப் பெரும்பான்மையர் பேசுவதாகக் கூறுவது தவறு என்பதை விளக்கும் நூல்.

இந்தியைப் பிற தேசிய மொழியாளர்களின் பகுதிகளில் பிற தேசிய மொழியாளர்களின் பணத்தைக் கொண்டு விருப்பப் போர்வையில் திணிப்பதால் இந்தி வேண்டவே வேண்டா என வலியுறுத்தும் நூல். அரசியலாளர்கள் ஆழமாகவும் தொலைநோக்கிலும் சிந்திக்காமல் இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறும் அறியாமையைப் புரிய வைக்கும் நூல்.

***

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்(விலை உரூ. 300.00)

பன்மொழிப்புலவராகவும் ஒப்பிலக்கிய அறிஞராகவும் திகழும் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் அவர்களின் ஏறத்தாழ 50 நூல்களின் திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்.  

பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் அவர்கள் தம் நூல்களில் தெரிவித்துள்ள 201 ஆய்வு முடிவுகளை நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் இதில் தொகுத்து அளித்துள்ளார். கி.பி.முதல் நூற்றாண்டிலேயே மேனாட்டறிஞர்கள் திருக்குறளின் சிறப்பைக் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறார். சமற்கிருதத்திற்கு எனக் காட்டப்படும் பே்ாலியான சிறப்புகளையும் தமிழ் இலக்கியங்களில் இருந்து சமற்கிருத நூல்கள் எடுத்தாண்டுள்ள கருத்துகளையும் தமிழ்நூல்களைப் பிராமணர்கள் சிதைத்துக் கெடுத்த முறைகளையும் வள்ளுவத்தின் சிறப்புகளையும் தொல்காப்பியப் பார்வை, அறநெறி கூறும் தமிழ் நூல்கள், அறமற்ற நெறிகளைக் கூறும் சமற்கிருத நூல்கள், சங்கக்காலக் கவிதைகளிலிருந்து இக்காலக் கவிதைகள் வரையிலான கவிதைச்சிறப்புகள், ஒப்பிலக்கியக் கருத்துகள், திறனாய்வுக் கருத்துகள், சமற்கிருதத்திற்குச் செம்மொழித் தகுதியின்மை  முதலிய பல சிறப்புகளையும் இந்நூலில் காணலாம்.

***

இலக்குவனார் நூறு (விலை உரூ 40.00)

செந்தமிழ்மாமணி இலக்குவனார் நூல்களில் இருந்து மேற்கோள்களும் அவர் குறித்து அறிஞர்களும் ஆன்றோர்களும் நூற்றுவர் கூறிய மேற்கோள் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு நூல்.

***

வெருளி அறிவியல் –  தொகுப்பு(விலை உரூ 4000.00)

வெருளி(அச்சநோய்) குறித்து உலகிலேயே ஐந்து தொகுதிகள் வந்த சிறப்பான நூல் இது ஒன்றே. கலைச்சொற்களுக்கான விளக்கங்களும் நோய்வகைகள் குறித்த விளக்கங்களும் பொதுஅறிவு தொடர்பான செய்திகளும் அடங்கிய நூல். கலைச்சொற்களில் உள்ள மூலக் கிரேக்கச் சொற்களுக்கும் இலத்தீன்சொற்களுக்கும் ஏற்ற பொருத்தமான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. பழந்தமிழ்ச் சொற்களும் மீளாக்கம் செய்யப்பட்டுள்ளன.

+++

கனவல்ல தமிழீழம் (விலை உரூ.260)

தமிழீழம்  தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்க்கான இரட்டை அளவுகோலை நிறுத்துதல், எழுவர் விடுதலை தொடர்பான கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய நூல்.

000






தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 7: முனைமுகத்தே துவாலு- இன் தொடர்ச்சி)

கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!

ஒல்லாந்து (Holland) நாட்டின் வீரச் சிறுவன் பீட்டரின் கதை பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தில் படித்த நினைவுள்ளது. நீங்களும் படித்திருக்கலாம்.

அந்தச் சிறுவன் ஒரு நாள் அந்தி சாயும் நேரம் தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சியைப் பார்த்தான்: கடல்நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த அணையில் சிறிய ஓட்டை வழியாகத் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் வேகமும் கூடிக் கொண்டிருந்தன. இப்படியே போனால் அணை உடைந்து கடல்நீர் ஊரையே (அல்லது நாட்டையே) மூழ்கடித்து விடும். பீட்டர் சுற்றுமுற்றும் பார்த்தான், யாருமில்லை. கத்தினாலும் கேட்காது.

உடனே அவன் ஒன்று செய்தான்: அணையோரத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அந்த ஓட்டைக்குள் விரலை நுழைத்தான். தண்ணீர் வரத்து நின்று விட்டது. விரலை எடுத்தால்… மீண்டும் வைக்க முடியாது. அதற்குள் வெள்ளம் புகுந்து விடும், அணை உடைந்து விடும். எனவே வலியையும் கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அப்படியே இருந்து விட்டான். விடியும் வரை யாரும் அந்தப் பக்கம் வரவில்லை. இரவெல்லாம் நடுக்கும் குளிரில் ஒற்றை விரலால் ஊர் காத்தான் பீட்டர்.

பீட்டரின் கதை மெய்யோ புனைவோ (இ)டச்சு மக்களின் தொன்மங்களில் ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட வீரச் சிறுவனுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் கதை. கடல்நீரோ ஆற்று நீரோ ஊருக்குள் நுழைந்து விடாமல் அணைகட்டிக் காக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் பீட்டரின் கதை தெரிந்திருக்க வேண்டும். துவாலு நாட்டு மக்களுக்குத் தெரியுமா?

துவாலுவைக் கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க பீட்டர்கள் இருந்தாலும் முடியாது. அணை இருந்து அதில் ஒரு துளை இருந்தால்தானே பீட்டர் விரல் நுழைத்து நீர் தடுத்து ஊர் காக்க முடியும்?

துவாலு நாட்டின் தீவுகளில் கடல்நீர் கரையேற விடாமல் அணை கட்டலாம் அல்லவா? தலைநகரின் ஆட்சி மையத்தைக் காக்கக் கடல் சுவர் கட்டும் பணி ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நிதியுதவி கொண்டு தொடங்கப்பெற்று நிறைவடையாமல் இருக்கிறது.

ஆசுதிரேலியச் சுரங்கங்கள் வெளியேற்றும் கழிவை இறக்குமதி செய்து தீவுகளை வளைத்து ஆற்றல்-மதில் (energy wall) கட்டி கடலின் தாக்குவலியைக் கட்டுப்படுத்தலாம் என்பதோர் ஆசைத் திட்டம். இது நிறைவேறுவதாகவே கொண்டாலும் பவழப் பாறைசார் சுற்றுச் சூழலை அடியோடு சிதைத்து விடும்.

தலைநகரம் ஃபாங்கஃபேலுக்குத் தெற்கே கடல் விழுங்கிய நிலத்தை மீட்டு நிலமட்டத்தை 10 பேரடி உயர்த்தி வலுவான வீடுகள் கட்டவும் நகர மன்றம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்காகும் செலவு 300 பேராயிரம்(மிலியன்) அமெரிக்க தாலருக்கு எங்கே போவது? யாராவது நிதியளித்தால்தான் உண்டு. அளிக்க யாரும் முன்வரவில்லை.

மற்றுமொரு கனவுத் திட்டம் மிதக்கும் தீவு கட்டி நாட்டையே தெப்பம் போல் கடலில் மிதக்க விடுவது! இதெல்லாம் கவைக்குதவாது என்பதால், துவாலு கடலின் வயிற்றுக்குள் போவதற்குள் தீவுகளை விட்டு மக்களை வெளியேற்றி விடலாம்! துவாலுவர்கள் பசிபிக்கு அண்டை நாடுகளில் ஏதிலியராகத் தஞ்சம் புகுவார்கள்! போர் ஏதிலியர் போல் காலநிலை மாற்ற ஏதிலியர்!

வேறு வழியே இல்லை என்றால்தான் வெளியேறுவோம் என்கிறார்கள் அம்மக்களும் ஆட்சியாளர்களும்.

மக்கள் அனவரையும் 1,200 அயிரைப் பேரடிதெற்கே கொண்டுவந்து குடியமர்த்த நிலம் தருகிறோம் என்று பிசி நாடு திரும்பத் திரும்ப அழைக்கிறது, துவாலு அரசு இதை ஏற்கவில்லை. அரசே ஏற்றுக் கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! எந்த ஊர் ஆனாலும் சொந்த ஊரைப் போலாகுமா?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே”  (பாரதியார்)

சொந்த நாட்டைக் கடலுக்கு இரையாக்கி விட்டு ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து புலம்பித் திரிய துவாலுவர்கள்தாம் கிடைத்தார்களா? அட, போங்கையா!

ஆசுதிரேலியாவின் முன்னாள் தலைமையமைச்சர் கெவின் உருத்து முன்மொழிந்தார்: துவாலு நாட்டின் கடல்சார் வளங்கள், மீன் வளங்கள் மீதான உரிமைகளுக்கு மாற்றாக அந்நாட்டின் குடிமக்களுக்கு ஆசுதிரேலியா முழுக் குடியுரிமை வழங்கலாம். எப்படி இந்தப் பண்டமாற்று!

துவாலுவின் அப்போதைய தலைமையமைச்சர் சொபோகா “இது பேரரசுச் சிந்தனை” என்று சொல்லிப் புறந்தள்ளி விட்டார்:  

“துவாலு மக்களை வெளியே அழைத்துப் போய் விட்டால் காலநிலை மாற்றச் சிக்கல்கள் தீர்ந்து விடுமா? இந்த மக்களைத் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளில் கொண்டுபோய் இருக்கச் செய்தால், அந்த நாடுகளிலும் நுகர்வு பெருகிப் பசுங்குடில் வாயு உமிழ்வுகள் கூடுதலாகும்.”

தாழ்நில நாடுகளில் இவ்வாறு இடர்ப்பட்டிருக்கும் மக்களையெல்லாம் பெயர்த்து வெளியே அனுப்புவது தோல்வி மனப்பான்மை என்கிறார் சொபோகா. இந்தச் சிக்கல் அந்த நாடுகளின் சிக்கல் மட்டுமன்று. இது உலக முழுமைக்குமான சிக்கல். அதன் விளைவுகளைப் புரிந்து கொண்டால் இப்படிக் குறுக்கு வழித் தீர்வுகள் தேட மாட்டோம்.

துவாலு மட்டுமல்ல, பசிபிக்கு தீவுகள் பலவும் இன்று நாளை என்று மூழ்கிப் போகும் இடர்நிலையில்தான் உள்ளன. அதே பசிபிக்கின் கரைகளில் அமெரிக்கா, ஆசுதிரேலியா போன்ற நாடுகள்  வளர்ச்சியின் பெயரால் களிபேருவகையுடன் நிலக்கரியை எரித்துப் புவியைச் சூடாக்கிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன. ஈட்டமே பெரிதென்று கொட்டமடிக்கும் இந்த நாடுகளின் குரலாகத்தான் அமெரிக்கக் குடியரசுத் தலைவரான போது தொனால்டு துரும்பு ஒலித்தார்:

“காலநிலை மாற்றமா? அப்படி ஒன்று இருப்பதாக நம்ப மாட்டேன்.”

துரும்பு மட்டும்தானா? மற்றத் தலைவர்கள் நம்புகிறார்களா? பிடன் நம்புவதாகச் சொல்கிறார். சொன்னால் மட்டும் போதுமா?

என்ன செய்தால் துவாலுவைக் காக்கலாம்? தவறு, உலகைக் காக்கலாம்? பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 8