புதன், 28 டிசம்பர், 2022
சனி, 24 டிசம்பர், 2022
தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை
நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00
இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016
திப்புசுல்தான் சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா
தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார்
துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன்
சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர்
வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர்
ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா
வியாழன், 22 டிசம்பர், 2022
பழனி- குடமுழுக்கைத் தமிழில் நடத்த அரசு மறுப்பதேன்?
பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத்
தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்?
சனவரி 20இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம்!
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு!
பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க் குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அருச்சித்துச் சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து, இன்று தி.பி. 2053 மார்கழி 6 (21.12.2022) அறிவன் கிழமை முற்பகல் 10.45 மணியளவில், சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களும், நானும் விண்ணப்பம் கொடுத்தோம்.
தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி – இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), ஐயா சித்தர் மூங்கிலடியார் (தலைவர் – இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம். பதினெண் சித்தர் பீடம், காரனோடை), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை, தமிழ் வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), தோழர் கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்), வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங் கிணைப்பாளர் திரு. முருகேசன், திருவாட்டி. கலையரசி நடராசன் (தலைவர், தமிழ்ச் சைவப் பேரவை, ஆவடி. சென்னை), முனைவர் ஆசீவக சுடரொளி (நிறுவனர் – ஆசீவகம் சமய நடுவம்), திரு. சிவ வடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர், செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை), வழக்கறிஞர் சுபாசு சந்திரபோசு (செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை, புதுச்சேரி), தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இம்மனுவை ஆணையரிடம் வழங்கினர்.
ஆணையர் அம்மனுவை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ் அருச்சனைக்காக ஒரு குழு போட்டிருக்கிறது. அதன் பரிந்துரை வந்த பிறகுதான் செயல்படுத்த முடியும். நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு அதுதான் என்றார்.
இதற்குரிய சட்டப்படியான மறுமொழியை நான் சொல்ல முயன்றபோது குமரகுருபரன், “உங்களிடம் நான் இதுவரை பேசியது உங்களுக்குப் புரியவில்லை. நான் பேசியது வீண்(waste)” என்றார். எங்கள் கருத்தையும் கேளுங்கள் என்றேன். சிம்மம் சத்தியபாமா அம்மையாரும், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும் விடையளித்துப் பேசியதையும் ஆணையர் செவிமடுக்கவில்லை. “உங்களை உட்கார வைத்துப் பேசியதே தவறு; நீங்கள் வெளியே கிளம்புங்கள்” என்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகாரியாய் இருந்த வெள்ளைக்காரத் துரை கூட குமரகுருபரன் பாணியில் நடந்து கொண்டிருப்பாரா என்பது ஐயமே!
அதன் பிறகு, நாங்கள் அனைவரும் வெளியே வந்து, கலந்து பேசினோம். ஆணையர் சொன்ன விடையும், அவர் நடவடிக்கையும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் கருவறை – வேள்விச்சாலை – கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் இடம்பெறாது என்பது தெளிவானது. இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கை முழுக்க முழுக்க சமற்கிருதத்திலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மேற்பார்வையில் நடத்தினர். அதேநிலை தமிழ்நாடு அரசில் இப்போதும் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம்.
எங்களிடம் மேற்படி ஆணையர் கேட்க மறுத்த சட்டப்படியான பதில் கருத்தை இப்போது பொதுவெளியில் வைக்கிறோம்.
மேற்படி ஆணையர் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பு என்பது 2020 டிசம்பர் 3இல் வந்தது. கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு 04.12.2020 அன்று நடக்கப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அவ்வாறு அறிவிப்பு வந்தவுடன் நமது தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் ஐயா சித்தர் மூங்கிலடியார், 21.11.2022 அன்று உரிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி தமிழ்வழி குடமுழுக்கு கோரினார். அவர் கோரிக்கை ஏற்கப்படாததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் மூங்கிலடியாரும், மற்றவர்களும் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கை விசாரித்து, 04.12.2022 குடமுழுக்குக்கு முன் 03.12.2022 அன்று நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. (W.P. (MD) No. 19115 of 2020).
அதற்கு முன் 05.01.2020 அன்று நடந்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழிலும், சமற்கிருதத்திலும் சரி பாதியாகப் பகிர்ந்து நடத்த அப்போதிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதையே அப்போதைய நீதிபதிகள் துரைசாமி – இரவீந்திரநாத் அமர்வு உறுதி செய்து தீர்ப்பாக அளித்தது. (W.P. (MD) No. 1102, 1126 and 1644 of 2020). அது தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் ஓரளவு செயல்படுத்தவும்பட்டது. வேள்விச்சாலை, கோபுரக்கலசம், புனித நீராட்டல் நிகழ்வுகளில் தமிழ் ஓதுவா மூர்த்திகள் பங்கேற்றுத் தமிழ் மந்திர அருச்சனை செய்தனர்.
கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்தக் கோரிய வழக்கில் 03.12.2020 அன்று வழங்கிய மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்குத் தீர்ப்பு செல்லாது என்றோ, தள்ளுபடி செய்தோ தீர்ப்பளிக்கவில்லை. அதை மீண்டும் உறுதிப்படுத்தியது. தமிழ் மந்திரங்கள் கோபுரக் கலசத்தில் ஒலித்தன. ஆனால், 03.12.2020 தீர்ப்பு ஒரு பரிந்துரை செய்தது.
அதில், புதிது புதிதாக தமிழ் மந்திரங்களைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வருகிறது, இந்த மனுதாரர் (சித்தர் மூங்கிலடியார்) திருமுறைகளுடன், சித்தர் அமராவதி ஆற்றங்கரை கருவூரார் பாடல்களையும் அருச்சனை மந்திரத்தில் தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து புதிதாக என்னென்ன தமிழ் மந்திரங்களைச் தமிழ் வழிபாட்டில் சேர்க்கலாம் என்பதற்கு, தமிழ்நாடு அரசு ஒரு வல்லுநர் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மந்திர வரிசையை முறைப்படுத்தலாம் என்று கூறியது.
ஆனால், ஏற்கெனவே தமிழ் மந்திர அருச்சனைகள் நடந்து வந்ததைத் தடுக்கவில்லை. மேலும், செழுமைப்படுத்திடத் தான் பின்னர் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியது.
இதே தி.மு.க. ஆட்சி, 2021இல் அமைந்த பிறகு 47 முதன்மையான கோயில்களில் “அன்னைத் தமிழில் அருச்சனை”த் திட்டத்தைத் தொடங்கி, அரைகுறையாகவேணும் செயல்படுத்தி வருகிறது. இப்போது, 2020 திசம்பர் 3ஆம் நாள் தீர்ப்புக்கு 2022இல் குழு போட்டிருப்பதாகச் சொல்லும் அரசும், அதிகாரிகளும் “அன்னைத் தமிழில் அர்ச்சனை”த் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்களா? அப்படி எந்த அறிவிப்பையும் இந்து சமய அறநிலையத்துறை இதுவரை வெளியிடவில்லை!
இன்னொரு கேள்வி : கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1997இல் (10.09.1997) இந்து சமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை (சுற்றறிக்கை ந.க. எண் : 73848 / 97 / கே.1) அனுப்பியது. அதில், அறநிலையத்துறையில் உள்ள கோயில்களில் தமிழ் மந்திர அருச்சனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. அத்துடன் தமிழ் மந்திர அருச்சனைப் புத்தகங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதெல்லாம் செல்லாது என்று இதுவரை எந்தத் தீர்ப்பும் கூறவில்லை. இவ்வாண்டு (2022) கூட, தமிழ்நாடு அரசு தமிழ் மந்திர அருச்சனை நடத்தும் அருச்சகர்களுக்குப் பயிற்சிப் பள்ளிகள் திறந்துள்ளது.
ஆனால், தமிழ்க்குமரன் கோயிலான பழனி முருகன் கோயிலில் 27.01.2023 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் தமிழ்வழியில் இப்போது நடத்த முடியாது – வல்லுநர் குழுவின் அறிக்கை வரட்டும் என்ற ஆணையர் குமரகுருபரன் மறுப்பதன் மருமம் என்ன?
பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கை 27.01.2023 அன்றும் அதற்கு முன்பும் பின்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் – குடமுழுக்கு உட்பட அனைத்திலும் சரி பாதியாகத் தமிழ் மந்திரம் இடம் பெற வலியுறுத்தி, வரும் 20.01.2023 அன்று, பழனியில் காலையிலிருந்து மாலை 6 மணி வரை உண்ணாப் போராட்டத்தைத் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்துவது என்று செயற்குழு முடிவு செய்கிறது. தமிழ் மந்திரக் குடமுழுக்கு கோரும் இந்த அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்!
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
வியாழன், 15 டிசம்பர், 2022
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 31, 32 & 33:இணைய அரங்கம்
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 31,32 & 33 : இணைய அரங்கம்
நிகழ்ச்சி நாள்: மார்கழி 03, 2053 ஞாயிறு 18.12.2022 காலை 10.00
“தமிழும் நானும்” – உரையாளர்கள்:
மூத்த இதழாளர் கோவி.இலெனின்,
பொறுப்பாசிரியர், நக்கீரன்
மூத்த இதழாளர் பொன்.தனசேகரன்
கல்வி மலர் வெ.சதீசுகுமார், துணைஆசிரியர், தினமலர்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: மாணவர் கு.பாலாசி, சென்னைப் பல்கலைக்கழகம்
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி ந. காருண்யா,
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி, பெரம்பலூர்
பதிவு இணைப்பு: தோழர் மகிழன்
செவ்வாய், 13 டிசம்பர், 2022
தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன்
தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
(அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351)
பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும்.
உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த பிறப்பாக அமையும்.. இல்லையென்றால் நம் பிறப்பு மாண்பில்லாததாகி விடும்.
மக்களில் சிலர் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களாக இல்லை; பொய்ப்பொருளை உண்மையென்று நம்புகின்றனர். இத்தகு நம்பிக்கைகள் அவர்களை மூடர்களாக்கி விடுகின்றன.
“ஆறறி வதுவே அவற்றொடு மனனே”
என்கிறது தொல்காப்பியம். எது சரி, எது பிழை, எது மெய் , எது பொய் என்பதை ஆறாம் அறிவாகிய பகுத்தறிவால் ஆராய்ந்து அறிய வேண்டும். இவ்வாறு ஆராய்வது மெய்ப்பொருளைக் கண்டறிய உதவும்; இவ்வாறு மெய்ப்பொருளைக் கண்டறிந்து தெளிவடைந்தவர்களே மெய்யறிஞர்கள் எனப்படுகின்றனர். அவர்கள் பெற்றுள்ள உணர்வு மெய்யுணர்வு எனப்படும்.
நம்முள் மருள் என்னும் மயக்கம் தோன்றுவதற்கும் நீங்காமல் இருப்பதற்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலான அறக்கேடுகள் ஒரு வகையில் கரணியமாக அமைந்து விடுகின்றன.
அறியாமை இயல்பாக இருப்பதே; அந்த அறியாமை அறிவின் விரிவால் விலக வேண்டும். ஆனால் தொடர்ந்து அறிவில் தெளிவில்லாதவர்களாகவும் அறியாமையை உடைமையாகக் கொண்டவர்களாகவும் மாந்தர் இருப்பாராயின் அவர்கள் மெய்யுணர்வாளராக இருக்கவியலாது. இதனால்தான் பலர் மூடத்தனங்களில் மூழ்கி உண்மையை அறிய முடியாமல் தங்கள் வாழ்நாளைக் கடக்கின்றனர். மூடத்தனங்கள் மாந்தரை மிக மிக இழிவானவர்களாக்கி விடுகின்றன.
கயிற்றையும் பாம்பையும் பார்த்து கயிற்றைப் பாம்பு எனக் கருதுவதும் கழுதையையும் குதிரையையும் பார்த்து கழுதையைக் குதிரை என்பதும் எடுத்துக்காட்டுக்குரியவை. அதே போல் மக்களில் உலக நலனுக்கும் மக்கள் நலனுக்கும் எதிர்ப்பான முரணான நூல்களைப் பின்பற்றிச் செல்வதும் மாந்த வாழ்வுக்கும் நலத்திற்கும் ஒற்றுமைக்கும் எதிர்ப்பான நெறிகளைப் பின்பற்றுவதும் பொய்யின் பாற்படும் மருட்சியை உருவாக்குவதாகும்.
மாந்த மாண்பை உணர்த்தி மாந்த நேயத்தைப் பேணுவது தமிழ்மறையாம் திருக்குறள் மெய்ப்பொருள் உணர்த்தும் உண்மை நூலின் அடையாளமாகும். மாந்தருக்குள் பாகுபாட்டை விளைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என மாந்தப் பண்புக்கு எதிரிடையான இழிவுகளை ஊட்டும் மனுமிருதி பொய்ப்பொருள் உணர்த்தும் பொய்மை நூலின் அடையாளமாகும்.
புடை பரப்பி வீற்றிருக்கும் இயற்கை நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப் பூதப்பொருள்களாக இயைந்து கிடக்கின்றது. இவ்வியற்கை கூறுகள் இயைந்து, இயங்கிக் கொண்டிருப்பதுதான் இயற்கை அமைப்பு முறை. அந்த இயக்கத்தையும் அதன் பேராற்றளையும் மாந்த மனத்துள் உணர்கின்றோம். இதனை உணர உணர மாந்தன் மிக மிகச் சிறிய நுண்ணிய அற்ப உயிரியாகி விடுகின்றான். நான், நீ என்று செருக்கியும் தருக்கியும் திரியும் ஆணவப் போக்கிலிருந்து அகன்று அடங்கி ஒடுங்கி தன்னடக்கம் பெறுகின்றான்.
மரத்தால் செய்யப்பட்ட யானையைப் பார்த்து யானை என்பதும் மரத்தைப் பார்த்து மரம் என்பதும் இவை ஒன்றுக்குள் ஒன்று இயைந்திருப்பதை அறியாததாகும். பரந்திருக்கும் இயற்கைக்குள் மூலக்கூறுகள் ஐம்பூதங்களாகவும் அவ்வைம்பூதங்கள் யாவும் பரம்பொருளாகவும் கிடப்பதை ஆய்ந்துப் பார்த்தால் உணரலாம். இவற்றுள் இயங்கும் இயக்கம் ஒன்றே. அதனை ஆராய்வதும் அறிவதும் அறிவியலாகவும் மெய்யறிவியலாகவும் கிடக்கின்றது. எனவே இந்தப் பேராற்றலை ஆராயாமல் அறியாமல் வெறும் கலையுரைத்த கற்பனைகளுக்குள் ஆழ்ந்திருப்பது தெளிவைத் தராது. எனவே மெய்ப்பொருளை அறிய முற்படுவோம்; பிறப்பினைப் பொருளுடையதாக்குவோம்.
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:351)
சொல் விளக்கம் :
பொருளல்லவற்றை = மெய்ப்பொருள் அல்லாதவற்றை / உண்மை அல்லாதவற்றை
பொருளென்றுணரும் = உண்மையெனக் கருதும்
மருளானாம் = அறியாமை உடையதாம் / மயக்கம் உடையதாம்
மாணாப் பிறப்பு = மாண் ஆகாத பிறப்பு ; மாண்பும் உயர் அறிவுச் சிறப்பு இல்லாத வாழ்வு
கருத்து :
உண்மையை உணராமல் பொய்மையை நம்பிச் சீரழிவது மாண்புடைய வாழ்வாகாது.
இரா. திருமாவளவன் மலேசியா
வெள்ளி, 9 டிசம்பர், 2022
என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு
என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு
என் அம்மா பூபதி அம்மாள்(92), குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அறைகூவல்களை எதிர்கொண்டார். தன் பாதையிலிருந்து புறங்காட்டவே இல்லை. மக்களுக்குத் தொண்டாற்றவே செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து, செவிலியர் கல்வியில் சிறந்து விளங்கினார்.
பிரித்தானியர் காலத்தில் ஆயுதப்படையில் சேர்ந்தார்; நாயகன்(catain) நிலைக்கு உயர்ந்தார். கிளாசுகோ, மெடிசின் ஆட்டு(கனடா, Medicine Hat, Canada), இலங்கை போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் அவரது பணி இருந்தது.
தாயகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி மீதான அவரது பற்றும் ஈடுபாடும் மிகவும் உயர்ந்தது. என் தாய் கத்தோலிக்கரான மைக்கேல் என்பவரை மணந்தார். அவரும் படைவீரரே. இருவரின் ஒரே மகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கட்டுப்பாடும் தமிழ் உணர்வும் காலூன்றின. அந்த நாட்களில், படைப்பெண்ணிற்குத் திருமணம் நடந்தால், அவள் ஆயுதப்படைத்துறையிலிருந்து விலக வேண்டும். அதன்படி என் தாயாரும் படைத்துறையிலிருந்து விலகினார். இருப்பினும் செவிலியராக மக்கள் பணியாற்றினார்.
என் இளம் பருவத்தில் தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த வலிமையான ஒட்டுறவைக் கண்டேன். இதுவே, பின்னர் என் உள்ளத்தில் தமிழ்ப்பற்றை விதைக்கக் காரணமாக இருந்தது. வைகறை 4.00 மணிக்கெல்லாம் இறைப்பாடல்களில் சில பகுதிகளை மனனம் செய்யச் செய்தார்.
அவர் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பெருமளவு உதவினார். அவர் எப்பொழுதும் பெண்களையும் நலிந்தவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தார்.
என்னிடம் நல்ல குணங்கள் இருந்தால் அவை என் தாயிடமிருந்து எனக்கு வந்தவையே. அவர் 1988 இல் மறைந்தாலும், அவரது நினைவுகள் என்றும் நீடித்தவையாகவும் அன்றலர்ந்தன போலவும் நிலைத்து நிற்கின்றன.
– மைக்கேல் (இ)யூபருட்டு
புதன், 7 டிசம்பர், 2022
களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 07 December 2022 No Comment
“தொன்மை! தொடக்கம் ! தொடர்ச்சி!” குழுவின்
இணையவழிக் கூட்டம்
தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்?
தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள் கொண்டு களப்பிரர் காலத்தின் இருளைப் போக்க ஒளி பாய்ச்ச உள்ளார்.
களப்பிரர் என்போர் யார்?
அவர்கள் காலத்தில் மக்கள் நிலை என்ன?
அவர்கள் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்ன?
களப்பிரர் ஆட்சியின் தோற்றமும் மறைவும் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?
போன்ற பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் “தொன்மை! தொடக்கம்! தொடர்ச்சி!” குழுவின் இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற புத்தகம் தமிழ் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தையும் , விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு: களப்பிரர் காலம் இருண்ட காலமா?
கூட்ட இணைப்பு / Zoom Link: http://www.tinyurl.com/tttfetna
அணுக்கி எண் /Zoom Meeting ID: 859 8002 6724
கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 10:30 காலை (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 9:00 இரவு (இந்திய நேரம்)
அன்புடை நெஞ்சம்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை