புதன், 1 ஜனவரி, 2020

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

 நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!

2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம்.
கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்று அழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர், மருத்துவர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
தாம் வடிவமைத்த ஆண்டுமுறையை உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அலோசியசு கனவு கண்டார். எனினும் அவர் வாழ்நாளில் இக்கனவு நனவாகவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.

அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII,  07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறித்துவ ஆண்டு அல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது  பொதுமுறை ஆண்டு என்றும் இதனை அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு  எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழக் கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100, 2200, 2300 ஆகியன மிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400, 2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
இந்த ஆண்டுப் பகுப்பு அறிமுகமாகிய காலக்கட்டத்திலும் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற காலப்பகுப்பும், கோள்களுக்கான அறிவியல் அடிப்படையிலான பெயர்களும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றளவில் தொடர்கின்றன. பொதுமுறை ஆண்டு  அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். கோயில்களில் வழிபாடு, ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தல், கணக்கு தொடக்கம், முதலான பலவற்றையும் ஆங்கில ஆண்டு எனச் சொல்லப்பட்டு வரும் நடைமுறை ஆண்டுத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுத்துகிறோம்.
பழஞ்சிறப்பு வாய்ந்த .தமிழ் ஆண்டு முறையைத்தா்ன புறக்கணிக்கிறோமே! வாழ்த்துகளையாவது தமிழில் தெரிவிக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. இனிமேலாவது, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதும் புத்தாண்டு முதலான சிறப்பு நாள்களின் பொழுதும் ஆங்கிலத்தில் வாழ்த்துவதைக் கைவிடுவோம். உதடுகள் உதிர்க்கும்  அவற்றை விட உள்ளத்தில் இருந்து தமிழில் வாழ்த்தினால் எண்ணங்கள் கைகூடி மகிழலாம். நம் சங்கப்புலவர்கள் வாழத்திய வாழ்த்து வரிகளை நாம் புத்தாண்டுகளில் தெரிவிக்கலாம். அவை இவைதாம்.
1.) நெல்பல பொலிக!
    பொன்பெரிது சிறக்க!
2.) பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
3.) நன்றுபெரிது சிறக்க! தீதில் ஆகுக!
4.) அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
5.) அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
6.) பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
7.) மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
8.) பசியும் பிணியும் பகையும் நீங்கி
   வசியும் வளனும் சுரக்க! ..
9.) மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் “
கிடைத்திடுக!
10.) நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புக!
11.) ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க;
 நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க!
12.) நல்லன இனியன சொல்லி அறம் பெருக்குக!
13.) வையை மணலினும் பல்லாண்டு வாழ்க!
இவையெல்லாம் உலக நலனுக்கான பொதுவான வாழ்த்துகளாகும். இதனால் நாடும் நலம் பெறும். நாமும் நலமுறுவோம்.
இந்த நடைமுறைப் புத்தாண்டில் இருந்தாவது, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என எண்ணி நாம் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்! தமிழ்நலன் மறவாது பொதுநலம் பேண உறுதி கொள்வோம்!
அவரவர் காணும் புத்தாண்டுக்கனவுகள் நனவாகட்டும்! நானிலம் சிறக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!


 திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது.
திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து படிக்கத் தொடங்கிய பொழுதுதான் இப்பிரிவும் ஒப்புயர்வற்ற இலக்கியச் சுவை உடையது என்பதை உணர்ந்தாராம். அதன் பின்னரே அவர் முழுமையும் மொழிபெயர்த்தார்.
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “திருக்குறள் இன்பத்துப்பால் பால்(Sex) பற்றிய நூலாயினும் ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை” எனச் சிறப்பித்துக் கூறுவார்.
தலைவன் தலைவி அல்லது கணவன் மனைவி இடையே உள்ள உள்ளன்பின் வெளிப்பாடாக இவை உள்ளனவே தவிர எதுவும் கொச்சையாக இல்லை.
திருக்குறளுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காமச்சூத்திரா என்னும் நூலைப் பார்த்துக் காமத்துப்பால் எழுதியதாக ஆரிய அன்பர் தவறாகக் கூறுவர். ஆனால், திருக்குறளின் காமத்துப்பால் போல் எந்த இலக்கியத்திலும் அன்பின் உறவு நயமாகக் கூறப்படவில்லை. எனவே, இவற்றை நாம்  இச் சிறு தொடரில், ஒவ்வொரு வரியில்  உணரலாம்.
 அதிகாரம் 109 தகை அணங்கு உறுத்தல்

  1. அணங்கோ? மயிலோ? பெண்ணோ? அறியாமல் நெஞ்சம் மயங்குகிறது. (குறள் 1081)
  2. படைகொண்டு தாக்குதல் போல் பார்க்கின்றாளே! (1082)
  3. முன்பு அறியா எமனைப் பெண்ணின் விழிகளால் அறிந்தேன். (1083)
  4. அழகாக இருந்தாலும் இவள் கண்கள் பார்த்தவர் உயிரை உண்ணுகிறதே!(1084)
  5. எமனோ? கண்ணோ? மானோ? பார்வை மூன்றையும் காட்டுகிறதே! (1085)
  6. புருவம் கண்ணை மறைத்திருந்தால், எனக்கேது நடுக்கம்?(1086)
  7. மார்புத் துகில் மதயானையின் முக மறைப்பு போன்றதே!(1087)
  8. பகைவர் அஞ்சும் என் வலிமை இவள் நெற்றி முன் தோற்றதே!(1088)
  9. மான்விழியும் நாணமும் உடைய இவ்வழகிக்கு அணிகலன் எதற்கு?(1089)
  10. உண்டால்தான் கள்ளால் மகிழ்ச்சி. காதலோ கண்டாலே மகிழ்ச்சி!(1090)

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

  1. காதல் நோய் தரும் பார்வையே மருந்தைத் தருகிறதே! (1091)
  2. கடைக்கண்பார்வையோ சிறிது! தரும் காதலோ பெரிது! (1092)
  3. பார்த்ததும் தலை தாழ்த்தினாள் அதுவே காதல் பயிருக்கு நீராகும். (1093)
  4. பார்த்தால், நிலம் பார்க்கிறாள். பார்க்காவிட்டால் பார்த்துப் புன்னகைக்கிறாள்.(1094)
  5. பார்க்காததுபோல் பார்த்துத் தலைசாய்த்து நகுவாள்.(1095)
  6. உதடு சுடுமொழி பேசும். உள்ளம் காதலை உணர்த்தும்.(1096)
  7. கடுஞ்சொல்லும் பகைப்பார்வையும் அன்பை உணர்த்தும் குறிப்பே! (1097)
  8. பரிவுப் பார்வையுடன் நகுவது அவளுக்கு அழகு தரும்.(1098)
  9. அயலார் போன்ற பார்வை காதலரிடமே உள்ளன.(1099)
  10. கண்ணும் கண்ணும் பேசுகையில் வாய்ச்சொல் எதற்கு?(1100)

அதிகாரம் 111.புணர்ச்சி மகிழ்தல்


  1. காணுதல், தீண்டுதல் என்ற வகையில் ஐம்புல நுகர்வு இன்பங்களும் இவளிடம் உள்ளன. (1101)
  2. இவள் தரும் காம நோய்க்கு இவளே மருந்து.(1102)
  3. திருமால் உலகம் தலைவி தரும் இன்பத்தினும் இனியதோ? (1103)
  4. விலகினால் சுடும், அணுகினால் குளிரும் தீயை எங்கே பெற்றாள்? (1104)
  5. விரும்பும் பொழுது கிடைக்கும் இன்பத்தைத் தலைவியின் தோள்கள் தருகின்றனவே! (1105)
  6. சேரும்பொழுதெல்லாம் உயிர் தழைக்கச்செய்யும் இவள் தோள்கள் அமிழ்தத்தால் ஆயின. (1106)
  7. தலைவியைத் தழுவும் இன்பம் உழைத்துப் பகிர்ந்து உண்ணும் இன்பம் போன்றது. (1107)
  8. காற்றிடைப் புகாத் தழுவல் இருவர்க்கும் இனிதே! (1108)
  9. ஊடல், உணர்தல், புணர்தல் இல்வாழ்வின் பயன்களாம். (1109)
  10. அறிதோறும் புலப்படும் அறியாமைபோல் கூடுந்தோறும் இன்பம் புலப்படுகிறது. (1110)

அதிகாரம் 112 நலம் புனைந்து உரைத்தல்

  1. அனிச்ச மலரே! நின்னினும் மெல்லியள் என் தலைவி. (1111)
  2. தலைவியின் கண் பூவைப்போன்றதால் பூக்களைக் கண்டுமயங்குகிறாயே நெஞ்சே! (1112)
  3. மூங்கில் தோளினளுக்குத் தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணம், வேல் கண். (1113)
  4. குவளைப்பூக்கள் இவள் கண்களுக்கு இணையில்லை என முகம் தாழ்த்தி நிலம் பார்க்கும். (1114)
  5. காம்பினைக் கிள்ளாமல் அனிச்சப்பூவைச் சூடினால் இவள் இடை ஒடியும்.(1115)
  6. தலைவியின் முகமா? நிலவா? என அறியாமல் விண்மீன்கள் கலங்குகின்றன.(1116)
  7. நிலவின் களங்கம் தலைவியின் முகத்திற்கு இல்லையே! (1117)
  8. நிலவே! தலைவி முகம்போல் ஒளிவீசினால் நீயும் விரும்பப்படுவாய்! (1118)
  9. தலைவியின் முகம்போல் இருக்க விரும்பினால் நிலவே, பலரறியத் தோன்றாதே! (1119)
  10. அனிச்சப் பூவும் அன்னச்சிறகும் தலைவியின் மென்பாதத்தை வருத்தும். (1120)

அதிகாரம் 113. காதல் சிறப்பு உரைத்தல்

  1. தலைவியின் வாயமுதம், பாலும் தேனும் கலந்த சுவையானது.(1121)
  2. உடலும் உயிரும் போன்றது தலைவிக்கும் எனக்கும் உள்ள உறவு.(1122)
  3. கண்ணின்பாவையே விலகி விடு! அங்கே தலைவி வருகிறாள்! (1123)
  4. உயிர் சேர்தலும் நீங்கலும் போன்றன தலைவியின் கூடலும் பிரிதலும். (1114)
  5. தலைவியை நான் மறந்ததில்லை! எனவே நினைத்ததும் இல்லை! (1115)
  6. நுட்பமான காதலர் கண்ணிலிருந்து நீங்கார் இமைத்தால் வருந்தார். (1126)
  7. கண் மை தீட்டும் பொழுது தலைவர் மறைவார் என்பதால் கண்ணுக்கு மை இடேன். (1127)
  8. நெஞ்சில் காதலர் உள்ளதால் சுடுபொருள் உண்ண மாட்டேன். (1128)
  9. இமைத்தால் மறைவார் என விழித்திருக்கிறேன். தலைவரைப் பழிக்கின்றனரே! (1129)
  10. உள்ளத்துள் உள்ள தலைவரைப் பிரிந்துள்ளதாக ஊரார் இகழ்கின்றனரே! (1130)

-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)

இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3

இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ 

எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன்

1/3

மார்கழி 09, 2050  / 25.12.2019 அன்று இரசியப் பண்பாட்டு மையத்தில் எசு.இராமகிருட்டிணனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இராமகிருட்டிணனின் “சொற்களின் புதிர்ப்பாதை ” என்ற நூல் குறித்து முனைவர் பாரதிபாலன் ஆய்வுரை ஆற்றினார். இதன் எழுத்து வடிவம் வருமாறு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மாபெரும் கடலில் இறங்குகிறார்கள்,  நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள்  திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்!
எசு. இராமகிருட்டிணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘இரசிய இலக்கியங்கள்’.
இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட இரசிய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எசு. இராமகிருட்டிணன்!
பின்னர்ப் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் திசைகளை விரிவுபடுத்திக் கொண்டவர்.
இடையறாத வாசிப்பு, தொடர் சந்திப்புகள் முடிவுறாப் பயணங்கள் என்று கற்ற பாடங்களைப், பெற்ற பட்டறிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் விரிந்த மனம்! இதுவே எசு. இராமகிருட்டிணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது! இதனை இவர் மனம் விரும்பிச் செய்கிறது.
“செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்கள் உண்டு; பேச்சும் எழுத்தும், ஊர் சுற்றுவதும் தான் என் வாழ்வு! என்பது அவரிகன் பிரகடனம்!
 “நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு பகுதியே நான்”  என்பார் தியோடர் உரூசுவெலட்டு!  இதேபோன்று, , “இதுவரை நான் உண்ட உணவின் ஒரு பகுதியாக என் உடலும், என் வாசிப்பின் ஊடாக உருவான என் மனமும் சேர்ந்த வைதான் நான்”    என்று குறிப்பிடுகிறார் எசு.இராமகிருட்டிணன்!
ஆழ்ந்த வாசிபிப்பின் வழியாக அடையும் உன்னதம்!
 ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமே நாம் பார்க்காத, புது உலகத்தைப் பார்க்க முடியும்! புத்தக வாசிப்பு என்பது நம்மை வேறொரு மனநிலைக்கு, வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது!
“இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம்! நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது! அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனிக் கண்கள் வேண்டும்! ”
அப்படியான தனிக் கண்கொண்டு பார்த்த பார்வை தான்  “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! இந்தப் பாதை செல்லும் தொலைவு என்னவோ சிறிதுதான்! என்றாலும் அது தரும் அனுபவமும் சுகமும் விரிவானது
எசு. இராமகிருட்டிணன் படைப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் அவருடைய இலக்கிய உரைகளுக்கும் கிடைத்துள்ளது! இப்படி அமைவது அபூர்வம்! தமிழில் செயயகாந்தனுக்கு  அப்படி வாய்த்தது!
 “சொற்களின் புதிர் பாதை”  என்ற இந்த நூல்! 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல்!  புற வடிவ நிலையில் வேண்டுமானால் இது கட்டுரையாக இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் மன உணர்வு  என்பது ஒரு கவிதையைப் போல, ஒரு சிறுகதையைப் போல, ஒரு புதினத்தைப் போல வாசிப்பு இன்பத்தைத் தந்து விடுகிறது. நம் மனநிலையை வெவ்வேறு நிலைக்கு அப்படியே உயர்த்திச் சென்று விடுகிறது. 
இந்தக் கட்டுரைகள் வெறும் தரவுகளால் மட்டும்  எழுதப்பட்டவையல்ல மனத்தால் எழுதப்பட்டவை.  காலத்தின் குரலாக ஒலிக்கிறது!
“இவர் துல்லியமாகக் கவிதைக் கண்கொண்டு பார்க்கிறார்”  என்று இரசிய எழுத்தாளர் இவான் துர்கனேவு பற்றி ஓர் உரையில் எசு. இராமகிருட்டிணன் குறிப்பிடுகிறார்.
      அப்படியான கவிதைக்  கண்பார்வையில் தான் இந்தச் சொற்களின் பாதை விரிகிறது. பல முகங்களையும், பல புதிய திசைகளையும் இந்தப்  பாதை நமக்குக் காட்டுகிறது !. இந்தப் பாதையில் நடக்கின்ற சுகமும், நடக்கின்ற போது நாம் காண்கின்ற காட்சிகளும் அந்தக் காட்சிகள் வழியாக விரிகின்ற உலகங்களும்  நமக்கு தனி அனுபவமாக வாய்த்து விடுகிறது.
சிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் குறிப்பாக நவீனக் கவிதைகளின் நுட்பங்கள் குறித்தும் குறும்புதினங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகள் குறித்தும் சில நிகழ்வுகளைக் குறித்தும் அவர் சந்தித்த எழுத்தாளர்களைப்பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் வாசித்த,  பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், இத்துடன் தன் தனிப்பட்டறிவுநலன்கள் குறித்த மனப் பதிவாகவும் இந்த நூல் அமைகிறது!  இந்திய எழுத்தாளர்களைப்பற்றி குறிப்பாக,  மலையாள படைப்பாளிகள் குறித்து மிக நுட்பமாக,  அவர்களுடைய தனித்தன்மைகளைத் தனித்த பண்புகளை அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைக் குறித்தும், ஒரு படைப்பாளனுக்கு கிடைத்திருக்கும் பரந்த வெளிகளைக் குறித்தும் பரவசத்தோடு பேசுகிறார்.
இதேபோன்று அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் கற்றவைகளையும் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் பெற்றவைகளையும் நமக்குத் தருகிறார்.   மிக சுருக்கமாகச் சொல்வதென்றால்,  “சொற்களின் புதிர் பாதை“  என்ற  இந்த நூல் ஓர் எளிமையான நேர்மையான உரையாடல்!.
இந்த உரையாடல் நமக்குப் பல புதிய சொற்களைத் தருகிறது. அந்தச் சொற்கள் பல புதிய பொருள்களைத் தருகிறது. அந்தப் பொருள்கள் வாழ்வனுபவத்தால் பெற்றவை!
இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.எசு. இராமகிருட்டிணனின் மொழி அலாதியானது! தனித்துவம் மிக்கது! இந்தக் கட்டுரையில் அவர் வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட வாக்கிய அடுக்குகளில் வீசும் ஒளியும், மனத்தை ஈர்க்கும் மொழிகட்கும் முதன்மையானதாகிறது. அந்த மொழி தரும் சுவை தான் இந்த நூலின் சிறப்பு! ஒருவிதமான வசீகர மொழி!
(தொடரும்)

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

தாய்மொழிச் சொற்களைப் பயன்படுத்தாதீர்! – இரகீம் பொன்னாடு

அகரமுதல

[ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டுமென்றும், அந்தப் பொது மொழியாக இருக்கத் தகுந்தது இந்தியே என்றும் 14.09.2019, 2019 அன்று அறிவித்தார். நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, வடக்கு கேரளா,மலப்புரத்தைச் சார்ந்த  கவிஞர், பேராசிரியர் இரகீம் பொன்னாடு எழுதிய இக்கவிதை. மொழித்தடை என்ற பெயரில அவர் எழுதியதை, ‘தாய்மொழிச்சொற்களைப் பயன்பாடுத்தாதீர்’ என்னும் தலைப்பில் நான்  மொழிபெயர்த்து அளிக்கின்றேன்.
இந்தியப் பண்பாட்டு அவையத் தளத்தில்  indianculturalforum.in  மலையாளக் கவிதையுடன், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘விடுதலை’ நாளிதழில் தமிழ் மொழி பெயர்ப்பு வந்துள்ளது.  ஆங்கிலத்திலிருந்து அக்கவிதை மொழி பெயர்க்கபட்டுள்ளதால் நான் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்துத் தருகின்றேன்.
 பணத்தாள் மதிப்பைச் செல்லாததாக ஆக்கியமத்திய அரசின் அறிவிப்பால் எழுந்த அவலங்களை நினைவூட்டி இவர் இக்கவிதையைச் சிறப்பாகப் படைத்துள்ளார். இதனைக் கற்பனை என்று புறந்தள்ள இயலா நிலையில்தான் நாடு உள்ளது.
– இலக்குவனார் திருவள்ளுவன் ]

உங்கள் சொற்களுக்கு இடமில்லை இனிமேல்!

நள்ளிரவு ஒன்றில் அவர்கள்
 மொழிகளைத் தடை செய்தனர்
“இன்று முதல்
ஒரு மொழியை  மட்டுமே பேச வேண்டும்
உங்கள் மொழிக்கு வேலையில்லை
அஞ்சலகத்தில் பழைய மொழிச் சொற்களைக் கொடுத்தால்
புதிய சொற்கள் கிட்டும்”
இந்த அறிவிப்பே எங்கும் கேட்டது !

உறக்கத்தில் எழுந்த மக்கள்
அவசரக் கதியில் ஓடினார்கள்
புதிய சொற்களைத் தேடி!

எங்கும் அமைதி! அமைதி! அமைதி மட்டுமே!
குழந்தைகளின் வாய்களை அன்னையர் பொத்தினர்
வயதானவர்களின் வாய்களில் துணிகளைத் திணித்தனர்
கோயில்களில் பாடலும் இசையும் நிறுத்தப்பட்டன
 பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பும்தான்
வானொலிகளில் வீணை யொலி மட்டுமே
தொலைக்காட்சிளில் சைகை மொழி மட்டுமே
செய்தித்தாள்களாக வெள்ளைத்தாள்கள் மட்டுமே
 விசைப்பலகைகளில் அமைதி மட்டுமே
அலைபேசித் திரைகளில் சின்னங்கள் மட்டுமே

அஞ்சலக வரிசைகளில் வாய் மூடி இருந்தனர்
நாளொன்றுக்கு இரு சொற்கள் மட்டுமே
கொடுக்கப்படும் என்பதே ஆணை!

 சிலர் கோணிப்பைகளில் சொற்களைக் கொண்டு வந்தனர்
புத்தகப் பைகளிலும் சோற்றுப் பாத்திரங்களிலும்
சொற்களை அடைத்துப் பிள்ளைகளும் இருந்தனர்
‘அம்மா’ எனும் சொல்லைக் கொடுத்தவர்கள்  
‘மா’ எனும் சொல் பெற்றார்கள்
அப்பா’ எனும் சொல்லை அளித்த வர்களுக்குப்,
‘பாபா’ எனும் சொல்லைத் தந்தனர்.
‘சாக்லெட்டு’, ‘கேம்’, சொற்களை மாற்ற
வரிசைகளில் காத்திருந்த சிறுவர்கள்
திருப்பி அனுப்பப் பட்டனர்.
நாட்டுச் சொற்களை மட்டுமே மாற்ற முடியுமாம்!
ஏனெனில் பிறவற்றிற்கு மாற்றுச் சொற்கள் இல்லை!
‘தொந்தரவு’ , ‘இடையூறு’ சொற்களையும்
மாற்ற முடியவில்லை
‘கத்தி’ என்னும் சொல்லை மாற்ற வந்தவர்
விரட்டி யடிக்கப்பட்டார்
‘கஞ்சா’ சொல்லை மாற்றவந்தவர்
காவலரால் கைது செய்யப்பட்டார்

வரிசையில் நின்ற வயதானவர் ஒருவர்
களைத்துத் தளர்ந்து விழுந்தார்
வாய்க்குக் கேட்டார் தண்ணீர்!
வாயில் விழுந்தன குண்டுகள்!
பிற மொழி பேசலாமோ?

செல்லாச் சொற்களின்
பொல்லாக் காட்சியால்
நொந்து வீடு திரும்பினேன்
முற்றமெங்கும் சொற்களின் குவியல்
மாற்றுச் சொற்களுக்காக வீட்டிலுள்ளவர்களால்
புறத்தே தள்ளப்பட்டவை
பழைய புதிய சொற்கள்
எழுதப்படாச் சொற்களும்

தந்தையின் தலையணைக்கு அடியில்
மறைந்திருக்கும் சொற்களை மாற்ற இயலுமா?
தாயின் நீர்ச்சீலைகளில் நான் கேட்டிராத
சொற்கள் உள்ளனவே! மாற்ற இயலுமா

மனைவி அடுப்படிக்குள் அழைத்துச் சென்றாள்
சமையல் சொற்கள் எல்லாம் நிறைந்து இருந்தன
மகளின் புத்தகப் பை முழுவதும்
வீட்டுப்பாடச் சொற்கள் அடைந்திருந்தன
மகனின் பெட்டியிலோ விளையாட்டுச் சொற்கள்
மறைந்து போகத்தான் இவையா?
எப்படிச் சொல்வேன் இவர்களிடம்
இரு சொற்களை மட்டுமே மாற்ற முடியுமென்று

எந்த இரு சொற்களை மாற்றுவது?
தேடினேன் தேடினேன் நெடுநேரம் தேடினேன்!
இறுதியில் ஒவ்வொரு கையிலும்
தடுத்தாட் கொண்ட வலிய சொல் ஒவ்வொன்று!  .
முழு வலிமையை ப் பயன்படுத்தி
அவற்றை வெளியே இழுத்தேன்
.
அவை ‘சனநாயகம்’, ‘பன்முகத்தன்மை’!

இரண்டு சொற்களை எடுத்துக் கொண்டு
மாற்றுச்சொற்கள் நாடியே
அஞ்சலகம் ஓடினோம்
அதற்குள் இருட்டி விட்டது.
மாற்றுச்சொல் மாடத்தில் இருந்தவன்
கைகளில் இருக்கும் சொற்களைப் பார்த்தான்
உறைந்து நின்றான்; முறைத்துப் பார்த்தான்
கைகளில் இருந்த சொற்கள் கீழே விழுந்தன
யார் யாரோ ஓடினார்கள், கூடினார்கள்
அடையாளம் தெரியாத சிலர் சுற்றி நின்றார்கள்
மூடு காலணி உதை ஒலிகளே எதிரொலித்தன

“தேசத் துரோகி”, “கொல் அவனை”
இந்த மாற்றுச்சொற்களே
பயத்தில் நான் உறைந்த பொழுதும்
நினைவு மங்கும் அந்த நேரத்தில்
தெளிவாகக் கேட்டன!
– இரகீம் பொன்னாடு (மலையாளத்தில்)
இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழில்)