thamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஏப்ரல், 2012

thamizh thaay award to madurai thamizh chankam

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு விருது : தமிழக அரசு




சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்ற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கபிலர் விருது பேராசிரியர் மணவாளனுக்கும், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் விருது புலவர் ராசுவுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்த்தாய் விருது மதுரை தமிழ்சங்கத்துக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் சிறந்த நூல்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயும், பதிப்பகத்தாரர்களுக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய், 8 கிராம் தங்க நாணயம், தகுதிச்சான்று வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும், தமிழ் அறிஞர்களுக்கு பரிசுத்தொகையாக 5 லட்ச ரூபாயும், கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

வியாழன், 5 ஏப்ரல், 2012

பழந்தமிழர் விளையாட்டுகள்


பழந்தமிழர் விளையாட்டுக்கள்


Saibaba SV svsaibaba@yahoo.com to only-for-tamil


   


விளையாட்டு என்றவுடன் மட்டைப்பந்து, உதைப்பந்து ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது. நம் நாட்டில் உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா? என்றால் நிட்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

 விளையாட்டு என்றால் என்ன? நாம் விளையாட்டை எவ்வாறு கருதுகிறோம் ? பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நாம் கருதி வருகின்றோம். பணத்திற்காக விளையடுபவர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர் இந்நிலையில் நம் நாடு எப்படி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும்?

 சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

 ஆனால் பழந்தமிழர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். விளையாட்டு என்பது பொழுது போக்க மட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வதாக கொண்டு அதை ஒரு நெறியாக மதித்து வந்தனர்.

                                               பழந்தமிழர்கள் மரபு வழி வந்த விளையாட்டுக்கள் சில காண்போம்
Join Only-for-tamil


1.அசதியாடல்(இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல்.

2.அம்புலி அழைத்தல்(இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல்.

3.அலவன் ஆட்டல்(இருபாலர்) நண்டைப் பிடித்து       விளைளயாடுதல்.
                   
 4.உலாவல்(இருபாலர்) இயற்கையான சூழலில் நடந்து செல்லுதல்.

 5.ஊசல்(இருபாலர்) மரத்தில் கயிறு கட்டி முன்னும் பின்னும் ஆடி விளையாடுதல்.

 6.எதிரொலி கேட்டல்(பெண்) மலைப்பகுதிகளில் ஒலி எழுப்பித் திரும்பிக் கேட்கும் ஒலி கேட்டு விளையாடுதல்.

7.எண்ணி விளையாடல்(இருபாலர்) ஒன்று,இரண்டு என்று மரத்தையோ,விலங்குகளையோ எண்ணிப் பொழுது போக்காக ஆடுதல்.
Join Only-for-tamil

8.ஏறுகோள்(ஆண்) மாடு பிடித்தல். இன்று ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் வலிமையான மாட்டைஅடக்குபவனையே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என்கிறது கலித்தொகை வலிமையான காளையை அடக்கிய ஆடவனையே சங்க காலமகளிர் திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு காளையை அடக்க முடியாத ஆடவனை அடுத்த மறுபிறவியிலும் விரும்ப மாட்டேன் என்கிறாள் இந்தப் பெண்.

9.கண் புதைத்து விளையாடல்(பெண்) இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

10.கவண்(பெண்) கிளைத்த கம்புகளில் வாரைக்கட்டி அதில் கல்லை வைத்து எறிந்து விளையாடுதல்.

11.கழங்கு(பெண்) சொட்டாங்கி என்று கிராமங்களில் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.
Join Only-for-tamil
 12.குதிரையேற்றமும், யானையேற்றமும்(ஆண்)
குதிரை, யானை ஆகியவற்றை அடக்குவதாகவும், தம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் இவ்விளையாட்டு அமைந்தது.

13.குரவை(பெண்) இது ஒரு வகையான கூத்து. பெண்கள் ஆடுவது மரபு.

14.சாம விளையாட்டு(ஆண்) இரவில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு.

15.குறும்பு விளையாட்டு (இருபாலர்) நகைச்சுவையாக விளையாடுவது.

16.சிறுசோறு(பெண்) பெண்கள் சோறு சமைப்பது போல விளையாடுவது.

17.சிறுதேர்(ஆண்) முக்காற்சிறு தேர் உருட்டி விளையாடுவது.

18.சிறுபறை(ஆண்) பறை என்பது தோலால் ஆன இசைக்கருவி. இதனை இசைத்து மகிழ்வது இவ்விளையாட்டாகும்.

19.சிற்றில் சிதைத்தல்.(ஆண்) பெண்கள் கட்டிய சிறு வீட்டை ஆண்கள் இடித்து விளையாடுவது.

20சுண்ண விளையாட்டு(பெண்) நறுமணம் வீசும் பல நிறப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது.
 Join Only-for-tamil
 21.சூது(இருபாலர்) ஏதாவது ஒரு பொருளை ஈடாக வைத்து விளையாடுவது.

22.செடி கொடி வளர்ப்பு(பெண்) சங்க கால மக்கள் இயற்கையோடு இயைபுற்று வாழ்ந்தார்கள். செடி கொடி வளர்ப்பதையே பெண்கள் ஒரு விளையாட்டாகச் செய்தனர்.

23.நீர் விளையாட்டு(இருபாலர்) நீரில் குதித்து விளையாடுதல், அங்கு வரும் நண்டுகளைப் பிடித்து விளையாடுதல்.

24.பந்து(இருபாலர்) பந்தினை வைத்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.

25.பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும்(இருபாலர்)

 மொழியின் தோற்றக்கூறுகளுள் போலச் செய்தலும் ஒன்றாகும். சங்ககாலத்தில் பெண்கள் பறவைகளைக் கண்டு அவற்றின் ஒலியைப் போலச் செய்து மகிழ்ந்தனர்.
  Join Only-for-tamil
 26.பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்(பெண்) பறவை, விலங்குகளை வளர்ப்பதை சங்க கால மகளிர் ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

27.பறவை விலங்குகளுடன் விளையாடுதல்(இருபாலர்) பறவை, விலங்குகளோடு விளையாடுவதை இருபாலரும் விளையாட்டாகக் கொண்டனர்.

28.பாவை விளையாட்டு(பெண்) பொம்மை போல செய்து விளையாடுவது.

29.பிசி நொடி விளையாட்டு(பெண்) விடுகதை கூறி விளையாடுவது.

30.மணற்குவியலில் மறைந்து விளையாடல்(பெண்)
பெரிய மணற்குவியல்களில் மறைந்து ஒருவரை ஒருவர் கண்டு விளையாடினர்.
Join Only-for-tamil
 31.மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்(பெண்)
பல விதமான மலர்களையும் கொய்து மாலையாக்கி மகிழ்ந்தனர்.

32.மல்(ஆண்) ஆடவர் இருவர் ஒருவரை ஒருவர் தம் வலிமையால் அடக்க முற்படுதல் இவ்விளையாட்டின் அடிப்படையாகும்.

33.வட்டு (ஆண்) வட்டமான இரும்பு போன்ற பொருளை எறிந்து விளையாடுதல்.

34.வள்ளை(பெண்) பெண்கள் கூடி பாடல் பாடி ஆடுவது இவ்விளையாட்டின் பண்பாகும்.

35.வில் விளையாட்டு(ஆண்) நரம்பால் செய்த வில்லை குறிவைத்து எறிந்து விளையாடுவது. வில்லில் இருந்து எழுந்த ஒலியே யாழ் என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமானது. யாழுள் வில்யாழ் என்னும் ஒரு யாழும் உண்டு.
Join Only-for-tamil
 36.வேட்டை. (ஆண்) விலங்குகளை வேட்டையாடித் தம் வீரத்தை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது.


   பழந்தமிழரின் விளையாட்டுச் சுவடுகள் இன்றும் பல வடிவங்களில் உள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் நூலைக் காணலாம்.
Join Only-for-tamil

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

Tamil imprints in New Zealand :நியூ சீலாந்து கடற்பரப்பில் ஒலித்த தமிழ் மணி!

நியூ சீலாந்து கடற்பரப்பில் ஒலித்த தமிழ் மணி! -க.வீமன்

கடல் கடந்து சென்ற தமிழர்கள் வெகு தூரத்தில் இருக்கும் நீயூ சீலாந்து நாட்டுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இது மேற்கு நாட்டவர்களின் நீயூ சீலாந்துக் குடியேற்றத்திற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சி.
14ம் 15ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கப்பலில் தொங்க விடப்படும் வெண்கல மணி பற்றிய செய்தி 1836ம் ஆண்டு வெளியாகியது. செம்பும் தகரமும் உருக்கிக் கலந்து வார்க்கப்பட்ட மணியில் “முகைய்ய தீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி”என்ற தமிழ் வாக்கியம் காணப்படுகிறது.
மணியின் வார்ப்பின் போது இந்த எழுத்துக்களும் மணியின் வெளிப்புறத்தில் வார்க்கப்பட்டன. எழுத்துக்கள் இன்றும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இந்த மணி முகைய்ய தீன் வக்குசு என்ற தமிழ் இஸ்லாமியரின் கப்பலுக்குரியது என்பது இந்த எழுத்துக்கள் மூலம் தெரிகிறது.
இந்த மணிக்குரிய கப்பல் கடலில் சேத மடைந்ததால் மணியும் கப்பலும் வெவ்வேறாகின. நீயூ சீலாந்தின் பூர்வ குடிகளான மாஓறி (Maori) இனத்தவர்கள் மணியைக் கடலில் இருந்து மீட்டதாக நம்பப்படுகிறது. மணி பற்றிய மேலதிகத் தகவல் இவ்வாறு. மாஓறி இனத்தவர்களிடம் இந்த மணி இருந்ததைக் கிறிஸ்தவப் பாதிரியார் வில்லியம் கொலென்சோ (William Colenso) 1836ல் கண்டுபிடித்தார்.
நீயூ சீலாந்தின் டியூனெடின் நகரில் 1862ம் ஆண்டு அதே மணி காட்சிப் படுத்தப்பட்டது. மேற்கூறிய வில்லியம் கொலென்சோ பாதிரியார் மாஓறிகளிடம் இருந்து மணியைப் பெற்றுக் காட்சியை ஒழுங்கு படுத்தினார்.
சில காலத்தில் அதே மணி நீயூ சீலாந்து வெலிங்ரன் (Wellington) தே பாப்பா (Te Papa) அரும் பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டது. ஈழத்து தமிழார்வலரும் 1961ல் மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியரும் 1966ல் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் நடத்திய வருமான தனிநாயகம் அடிகள் இந்த மணி பற்றி முதன் முதலாக உலகிற்கு அறிவித்தார்.
நீயூ சீலாந்தில் தமிழ் அடையாளங்கள் (Tamil imprints in New Zealand) என்று தலைப்பிட்ட சிறு நூல் 2007ம் ஆண்டு தமிழில் வெளி வந்தது. இதை எழுதியவர் நீயூ சீலாந்துக் குடியுரிமை பெற்ற ஏ.ரி ஆறுமுகம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த நூல் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டு 2012ல் வெளியீடு காண்கிறது. நூலாசிரியர் ஆறுமுகம் யாழ் புன்னாலைக் கட்டுவனில் பிறந்தவர், தெல்லிப்பளையில் வளர்ந்தவர், மாதகலில் வாழ்ந்தவர். இவர் ஆசிரியராகவும் கல்லூரி அதிபராகவும் பணியாற்றிய பிறகு 1996ல் நீயூ சீலாந்தில் குடும்பத்தோடு கால் பதித்தவர். அவருக்கு இப்போது வயது 87.
நீயூ சீலாந்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான பன்நெடுங்காலத் தொடர்பு பற்றிய ஆய்வுக்கு இந்த 52 பக்க நூல் உதவுமென்று நம்பப்படுகிறது. இந்த மணியிலுள்ள தமிழ் எழுத்துக்களைப் போன்றவை நீயூ சீலாந்தின் கன்ரர்பெறி (Canterbery) வேக்கா கணவாய்ப் (Weka pass) பாறைகளில் பொறிக்கப்பட்ட நிலையில் காணலாம்.
மேலும் றகலன், மானு குடாவிலும் (Raglan Manu Bay) அதே வகைத் தமிழ் எழுத்துக்களைக் காணமுடியும். பசுபிக் மாகடல் பிராந்தியத்திலும் தூர கிழக்குக் கடல்களிலும் 14ம் 15ம் நூற்றாண்டுகளில் தமிழ்க் கடலோடிகள் சஞ்சரித்துள்ளனர். இந்த மணியில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கு நிகரானவை சீனா, கொரிய தீபகற்பம் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
மேற்கில் எகிப்து வரையும் கிழக்கில் வியற்நாம் வரையும் பழங் காலத்தில் தமிழ்க் கப்பல்கள் சென்றதற்கான சான்றுகள் புதைபடிவ ஆய்வில் பெறப்பட்ட தமிழ் பிரம்மி எழுத்துக்கள் மூலம் அறியப்படுகிறது.
மேலும் தமிழ் பிரம்மி, தென் இந்திய கிரந்த எழுத்துக்கள் தான் தாய்லாந்து, வியற்நாம், இந்தோனேசியத் தீவுகள் ஆகியவற்றில் மீட்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்களாகும்.
தமிழ் வர்த்தகர்களின் குடியேற்றங்கள் சீனாவில் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. சீன மொழி, கொரிய மொழி, ஜப்பான் மொழி ஆகியவற்றில் தமிழ்ச் சொற்கள் இருப்பது பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரிய மக்களின் உணவு வகைகளில் தமிழர் உணவு வகைகளும் இருப்பதை இத்துறை சார்ந்த ஆய்வுகள் நீருபிக்கின்றன.
இந்த மணியின் சொந்தக்காரர் ஒரு இஸ்லாமியர் என்றபடியால் தமிழ் மொழியைத் தம்மொழியாக வரித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் பற்றிய ஆய்வும் அவசியமாகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் மிகவும் அழகாகச் சொன்னார், “உருது என் தாய், தமிழ் என் காதலி”
கடல் வணிகம் செய்த இஸ்லாமியர்கள் தெரிவு செய்த மிகப் பழமை வாய்ந்த தெற்கு ஆசிய மொழி தமிழ் தான். மத்திய காலத்தில் (Medieval Period) பாரசீக மொழி அல்லது அரபு மொழியில் ஹன்சுநாம் அல்லது அஞ்சுநாம் (Hagngunam Agnjunam) என்று பெயரிடப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகக் குழுக்கள் தென்னிந்தியாவில் செயற்பட்டன.
யாழ் மாவட்டத்தில் அஞ்சனந்தாழ்வு என்ற கிராமம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தோடு தொடர்புடைய இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களை தமிழ் மயமாக்கியுள்ளனர். இதற்கு மணிக்குச் சொந்தக்காரர் தனது பெயரை மணியில் வார்பிட்ட விதம் சான்றாக அமைகிறது.
கன்யாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டணம் என்ற ஊர் இருக்கிறது. அங்கு 1,400 வருடம் பழமை வாய்ந்த கருங்கல்லால் கட்டப்பட்ட மசூதி இன்றும் காணப்படுகிறது. தேங்காய்ப் பட்டணத்தில் நிறையத் தேங்காய் மரங்கள் இருக்கின்றன. அங்கு இயற்கைத் துறைமுகமும் இருந்திருக்கிறது. அரபு வணிகர்கள் தேங்காய் வாங்கிச் செல்ல அடிக்கடி வருவார்கள்.
கடல் வாணிபமும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட தேங்காய்ப்பட்டணத்தில் அரபுக்கள் மேற்கூறிய மசூதியை அமைத்து மதப் பரபரப்பலை மேற்கொண்டனர். இவ்வாறு இஸ்லாமுக்கும் தமிழுக்கும் இணைப்பு ஏற்பட்டது.
மாஓறி இனத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வு ஆரம்ப கட்டத்தில் மாத்திரம் இருக்கிறது. மாஓறி இனத்தின் முன்னோர்கள் பொலினீசியன் (Polynesian) இனக் குடும்பத்தைச் சேர்ந்த தென் கிழக்கு ஆசிய நாட்டவர்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் அவர்கள் சீனாவில் தோன்றியவர்கள் என்று கூறுகின்றனர்.
எப்படிச் சொல்லப்பட்டாலும் அவர்கள் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து தென் பசுபிக் மாகடல் மார்க்கமாக நீயூ சீலாந்திற்கு வந்து குடியேறியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. நோர்வே நாட்டவரான ஆய்வாளர் டோர் ஹெயர்தால் (Thor Heyerdhal)தனது சொந்த கடற் பயணத்தின் மூலம் மாஓறிகள் தென்னமரிக்காவில் இருந்து நீயூ சீலாந்து வந்ததாகக் கூறுகிறார்.
இவருடைய கூற்றை பெரும்பாலான ஆய்வுகள் நிராகரித்துள்ளன. கடந்த 50 வருட காலமாக மாஓறிகள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இருந்து பயணித்து நீயூ சீலாந்து வந்தனரா அல்லது சிறு சிறு குழுக்களாக வௌ;வேறு இடங்களில் இருந்து வந்தனரா என்ற கோணங்களில் ஆய்வுகள் நடக்கின்றன.
இந்து மாகடல் கடலோடித் தமிழர்களின் ஏரி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் பசுபிக் மாகடலையும் சேர்க்க வேண்டும். 10ம் நூற்றாண்டு ராஜ ராஜ சோழன் போன்றோருக்கு முன்பும் பின்பும் தமிழர்கள் கடலை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டிருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.


வெள்ளி, 26 நவம்பர், 2010

கலிபோர்னியா மாநிலத் தலைமை வழக்குரைஞராகிறார் தமிழ் மரபுப்பெண்

அமெரிக்க அரசின்  தலைமை வழக்குரைஞராகப் பொறுபபேற்றுள்ள கமலா ஆரிசு அவர்களுக்குப் பாராட்டுகள். உண்மைக்குக் குரல் கொடுத்தும்   தமிழர்க்குக் குரல் கொடுத்தும் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவனஅமெரிக்க அரசின்  தலைமை வழக்குரைஞராகப் பொறுபபேற்றுள்ள கமலா ஆரிசு அவர்களுக்குப் பாராட்டுகள். தமிழ்  நலனில் கருத்து செலு்த்தி  தமிழர்க்குக் குரல் கொடுத்துச் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாகிறார் தமிழ் வம்சாவளிப் பெண்

First Published : 26 Nov 2010 04:29:12 AM IST


வாஷிங்டன், நவ. 25: அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அட்டார்னி ஜெனரலாக (அரசு தலைமை வழக்கறிஞர்) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். சியாமளா, அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆப்பிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார். இந்த, தம்பதிகளின் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.