llakkuvanar thiruvalluvan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
llakkuvanar thiruvalluvan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூலை, 2025

119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

      11 July 2025      கரமுதல


  • இதுவும் பொய்யே!

ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார்.

“மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமை திண்மை நிலை  உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று.  ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம்முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது” என விளக்குகிறார். (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 22-23) பெண்கள ஒழுக்கத்தையே வலியுறுத்தாத சனாதனம் ஆண்கள் ஒழுக்கத்தைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆடவருக்கு வேண்டிய ஒழுக்கத்தைப் பிறன் மனை விழையாமை மூலம் நாமறியலாம். பேரா.முனைவர் சி.இலக்குவனார் இது குறிப்பத்துப் பின்வருமாறு கூறுகிறார்.

” கற்பு நெறி பெண்டிர்க்குத்தானா? ஆடவர்க்கு வேண்டியதின்றோ  என வினவி ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான் என்கிறார். “ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புகளில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானோயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும் செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்” என்கிறார். (பேரா.முனைவர் சி.இலக்குவனார்வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 25-26)

எப்பிறப்பாயினும் பிரியாது வாழ்தல் வேண்டும் என்பதே தமிழர் இல்லற நெறி. இப்பிறிவியிலேயே பிறருடன் உறவு கொள்ளலாம் என்பதே சனாதனம். எது சிறந்தது என நீங்களே புரிந்து கொள்ளலாம்.

  • (தொடரும்)

வியாழன், 10 ஜூலை, 2025

117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி)

  1. மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர்களும் செல்வர்களும் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பிராமணர்களிடம் மண்டியிட்டதாக எழுதி வைத்தனர். இதைப் பார்த்த சிலரும் அவ்வாறு செய்து வருகின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்.

இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர்.

இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள் கணக்கற்ற திண்பண்டங்களையும் கனிவகைகளையும் மலர்களையும் தேன்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்

அந்த வேள்வியில் பீசுமரும் துரோணரும் துரியோதனன் முதலான கெளரவர்களும் யாதவர்களும் அனைவரும் அடிமைகளாகப் பிராமணர்களுக்கு வேலை செய்தனர்.  தருமர் இந்த வேள்வியில் துணிகளையும் சால்வைகளையும் போர்வைகளையும் பொன் நாணயங்களையும் பொற் பாத்திரங்களையும் நகைகளையும் நிரம்பப் பிராமணர்களுக்குக் கொடுத்தார். அரசர்கள் காணிக்கை யாகத் தந்த மாணிக்கங்கள் முதலானவற்றையும் பிராமணர்களுக்கே கொடுத்தார்.

உயர்நிலை அரசர்கள், சிற்றரசர்கள் என அனைத்து நிலை அரசர்களும் பிராமணர்களுக்கு ஊழியம் செய்வதாகத் தெரிவிப்பதன் மூலம் பிராமணர்கள் யாவருக்கும் மேலானவர்கள் எனப் பாரதம் கூறுகிறது. வருணாசிரமத்தை விதைத்து வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆரிய நூல்களின் நோக்கம்.

(அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை: இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி)

வேதங்கள் வழிச் சனாதனக் கருத்துகள் விதைக்கும் நச்சுக் கருத்துகளில் சில வருமாறு:

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் இம்சிக்த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அதன் மீது் மனம் வைக்கும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன். அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும் உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிர நதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

இவ்வாறு பிராமணர்களை உயர்த்தும் வேதங்களை மனித நேயம் கொண்ட பிராமணர்களும் பின்பற்றத் தேவையில்லை யல்லவா?

  • (தொடரும்)

சனி, 5 ஜூலை, 2025

111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி)

  1. நல்லொழுக்கத்தைக் கூறுவன புராணங்கள். போற்றுதற்குரிய பெருமைக்குரியவர்கள் புராண நாயகர்கள் என்கின்றனர். ஆக இவர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா என்கின்றனரே!
  2. ஆரியர்கள், நல்லொழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொழுது எழுதியவையே புராணங்கள். எனவே அதற்கேற்பவே நல்லொழுக்கமற்ற பாத்திரப் படைப்புகளைப் பார்க்கலாம். எனினும் தமிழர்களுடன் தொடர்பு கொண்ட பின், ஒழுக்கப் பாதைகளில் நடை போடத் தொடங்கினர். அப்பொழுது புராணங்களில் திருத்தம் வேண்டுமென்று  விரும்பிய ஒழுக்கவாணர்கள் அதற்கேற்பக் கதைகளில் மாற்றம் செய்து இடைச்செருகல்கள் மேற்கொண்டனர்; அல்லது அப்படிப்பட்ட பகுதிகளை மக்கள் பார்வையில் படாதவகையில் மறைத்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிலர்.
  3. புராணங்களில் வரும் மாந்தர்களின் பெற்றோர் யாரும் உரியவர்கள் அல்லர். தவறான முறையில் பிறந்தவர்கள் என்பதை மறைக்கத் தெய்வப்பிறவிகளாகக் கதை கட்டி விடுகின்றனர். முனிவரின் அருளாகவோ தெய்வ அருளாகவோ பிறந்தவர்களாகவும் திரித்து விடுவர். சிலரின் பிறப்புகளைப் பார்ப்போம். விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர் பாண்டு. பாண்டு மனைவியர் குந்தி, மாதுரி. பாண்டவர்களில் மூத்தவரான யுதிட்டிரன் என்னும் தருமன் பாண்டு – குந்தி ஆகியோரின் பிள்ளையாக வளர்ந்தவர். ஆனால், குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.  குந்திக்கு வாயுவிடம் பிறந்தவன் வீமன் /பீமன் /பீமசேனன். குந்திக்கு இந்திரனிடம் பிறந்தவன் அருச்சுனன். சரண்யூவிற்குச் சூரியனிடம் பிறந்தவர்கள் அசுவினிகள் அல்லது அசுவினி குமாரர்கள் ஆகிய நாசத்துயா-தசுரா என்னும் இரட்டையர்கள். இவர்களுடன் உறவு கொண்டு மாத்திரி/மாதுரிக்குப் பிறந்தவர்களே நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையர்கள். விசித்திரவீரியன் இறந்த பின் மனைவியரான அம்பிகாவும் அம்பாலிகாவும் வியாசரிடம் குழந்தை பெற்றுக் கொண்டனர். வேலைக்காரிக்கு வியாசரிடம் பிறந்தவன்தான் விதுரன். அதிரத நந்தனன் என்னும் தேரோட்டி – இராதை இணையரால்  வளர்க்கப்பட்ட கருணன் குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன். அஞ்சலைக்கு வாயுவிடம் பிறந்தவன் ஆஞ்சநேயர். திருதராட்டிரன் மனைவி காந்தாரி. ஆனால் காந்தாரிக்கு வியாசரால்தான் கெளரவர் நூற்றுவரும் துச்சலை என்னும் மகளும் பிறந்தனர். வைசியப் பெண்ணிடம் யுயுத்துசு என்னும் ஒரு மகன் பிறந்துள்ளமையால் இவர்களின் பிள்ளைகள் எண்ணிக்கை 102 ஆகும். (வியாசர் தந்த பிண்டத்தால் இவர்கள் பிறந்ததாகக் கூறுவது அறிவிற்கு ஏற்றதாக இல்லை.)

கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது.

கிருட்டிணனுக்கு,  (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன் என்பதில் ஐயமில்லை என்கிறது பாரதம்.

பிரம்மாவின் ஒழுக்கத்தைப்பற்றிப் பார்க்கலாம்.

1. பரமசிவன்- பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து திருமணத்திற்கு ஓமம் வளர்த்தான். பார்வதி ஓமகுண்டத்தை வலம் வருகையில் இடக் கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்து கொண்டு வந்தாள். அவ்வாறு வருகையில் அவளது இடையை ஒட்டிய தொடை பிரம்மாவின் கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்து பிரம்மா காம மயக்கம் கொண்டான். அதனால் விந்து ஒழுகியது.  அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் பிரம்மாவுக்கு அகத்தியன் பிறந்தான்.

2. பிரம்மா மீண்டும் பார்வதியின் தொடையைப் பார்க்க மேலும் விந்து ஒழுகியது. அதை விருட்சபிச்சை போன்ற செடிகளில் விட்டான்.  இதனால் பிரம்மாவிற்கு வால்கில்லியாதி முதலிய அநேக முனிவர்கள் பிறந்தார்கள்.

3. அங்கிருந்து செல்கையில் பிரம்மா ஒரு சுடலைச் சாம்பலில் தனது விந்துவை விட்டான். அதில் பூரிச்சிரவன் என்கிற அரக்கன் பிறந்தான்.

4. அதில் உள்ள எலும்புகளை பொறுக்கி அதில் விந்தினை விட்டான். அதிலிருந்து சல்லியன் என்கிற வலுவானவன் பிறந்தான்.

5. அங்கிருந்து போகையில் சிறிது விந்து ஒழுகிக் கீழே விழ அதை ஒரு பறவை உண்டது. அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் விந்தினை விட்டான். அதைத் தவளை(மண்டூகம்) உண்டது. அதன் மூலம் மண்டோதரி பிறந்தாள்.

7. மிகுந்த விந்துவைக் குளத்தில் உள்ள தாமரையில் விட்டான். அதில் இருந்து பத்மை(சரசுவதி) என்கிற மகள் பிறந்தாள்.

8. மகளான சரசுவதியின் அழகைக்கண்டு அவளுடன் புணர வேண்டுமென பிரம்மன் கேட்டான். அதற்கு அவள் மறுத்தாள். புத்திரப் பாக்கியத்திற்காகத் தாய் தமக்கை பிள்ளை மகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் தவறில்லை என்னும் வேதவாக்கியத்தைச் சொல்லி அவளுடன் உறவு கொண்டான்.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதியை மணந்து கொண்டார் என்றும் ஒரு கதை. அப்படிப் பார்தாலும் மகளான சரசவதியுடன் உடலுறவு கொண்டவனே பிரம்மன்.

9. சரசுவதியைக் கருப்பவதியாக்கியபின் விந்துவைச் சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.

10. மகளான திலோத்தமை மீதும் காமமோகம் கொண்டவன்தான் பிரம்மன்.

11.  பிரம்மன் காடுகளில் அலைந்து திரிந்த போது ஒரு புதருக்குள் இருந்த கரடியைப் புணர்ந்தான். இதனால் கரடி முகத்துடன் கூடிய சம்புவந்தன் என்ற மகன் பிறந்தான்.

12. பின் விந்தினை ஊர்வசி கருப்பத்தில் விட வசிட்டன் என்ற மகன் பிறந்தான்.

இவ்வாறு முறையற்ற, அறிவிற்கு ஒவ்வாத பண்பாடற்ற செய்திகள் கடவுள், முனிவர்கள் பிறப்புகளையும் உடலுறவுகளையும் கூறுகின்றன. சோ போன்றவர்கள் இவற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவது உண்மையென்றால், கடவுள்களாகவும் முனிவர்களாகவும் அரம்பையர் களாகவும் கூறப்படுபவர்கள் உண்மையில் வெறும் புலனுணர்வுகளே. அவர்களை வணங்கவும் போற்றவும் வேண்டிய தேவையில்லையே.

இத்தயை அற்பத்தனத்தை விளக்கியதற்குத்தான் தொல். திருமாவளவனைக் கண்டித்தனர் சனாதனவாதிகள்.

  • (தொடரும்)

புதன், 2 ஜூலை, 2025

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

 

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்



106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி)

  1. தமிழில் நால் வேதங்களையும் நான்மறைகளையும் பாராட்டியுள்ள இலக்கிய வரிகளைக் குறிப்பிட்டுத் தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகப் பரப்புரை மேற்கொள்கின்றனரே!
  2. உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்களும் மறைகளும் தமிழர்களால் தமிழில் எழுதப்பெற்ற நன்னெறி நூல்களாகும். இது குறித்துச் சிலர் எழுதியுள்ளனர். நான் ‘தினச்செய்தி’ நாளிதழில் “சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!” எனச் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டுரை எழுதி உள்ளேன். அகர முதல மின்னிதழில் இது வெளிவந்துள்ளது.

வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் வேதங்களைப்

புரையில்

நற்பனுவல் நால் வேதம்”

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர். இவ்வாறு விளக்குவதன் காரணம் குற்றமுள்ள தீ நெறியாகிய ஆரிய வேதங்களை வேறு படுத்தவே. எனவே, தமிழ் மேற்கோள்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழ் வேதங்களை ஆரிய வேதமாகக் கருதித் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .

    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று

      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்”

என்பதுதான் அப்பாடல்.

ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.” (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!  – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி)

(நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர் பிராமணர் அல்லர். இவரது தந்தையார் பெயர் சிவபாதவிருதயர்; தாயார் பெயர் பகவதி அம்மையார்; இவரின் இயற்பெயர்  ஆளுடையபிள்ளை; இவரின் வேறு பெயர்கள் திருஞானம் பெற்ற பிள்ளை, காழிநாடுடைய பிள்ளை; மனைவி பெயர் சொக்கியார். இப்பெயர்களைப் பார்க்கும் போது இவர் தமிழரே என நன்கு தெரிகிறது. இவரது புகழை ஆரியமயமாக்க இவரைப் பிராமணர் எனக் கற்பித்து அதற்கேற்ற கதைகளையும் கட்டிவிட்டனர்.)

  1. தேர்தலுக்கான தவறான பரப்புரை இது.

(உ)ரூப்புகுவர்பா கன்வார் (Roopkuvarba Kanwar)( 1969 – 4 செட்டம்பர் 1987) என்னும் 18 வயது இளம்பெண் இந்தியாவின் இராசசுத்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள தியோராலா என்ற சிற்றூரில் உடன்கட்டை ஏறுவதாகப் பொய்யாகப் பரப்பி, உயிருடன் எரிக்கப்பட்ட இராசபுத்திரப் பெண் ஆவார். திருமணமான 8 மாதத்தில் கணவர் மால் சிங்கு செகாவத்து இறந்த நிலையில் குழந்தையற்ற இவர் சனாதனச் சாத்திரத்தின் பெயரால் எரியூட்டப்பட்டார். இந்நிகழ்வில் பல்லாயிரவர் பங்கேற்றனர். இவர் சதி மாதா, சதி தாய், தூய தாய் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். எனினும் இக்கொலையானது நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

இதனால், இந்நிகழ்வில் பங்கேற்ற தியோராலாவைச் (Deorala) சேர்ந்த 45பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்பெற்றனர். பின்னர் நடந்த விசாரணையில் உடன்கட்டை ஏற்றுவித்துப் புனிதமாகப் பரப்புரை செய்த 11பேர் மீது குற்றஞ்சுமத்தி வழக்கு நடைபெற்றது. ஆனால் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை அரசு உணர்ந்ததால் 1.10.1987 இல் இராசசுதான் சதி (தடுப்பு) கட்டளையம் என்னும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மத்தியச் சட்டம் வேண்டும் எனப் பல தரப்பாரும் வலியுறுத்தியதால், சதி(தடுப்பு) செயற்பாட்டுச்சட்ட வரைவம்(the Commission of Sati (Prevention) Bill, 1987) நாடாளுமன்ற ஈரவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 21.03.1988 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இராசசுத்தானில் சில பகுதிகளில் பரவலாக இருந்த கட்டாய உடன் கட்டை ஏறுதலை மாநில அரசும் ஒன்றிய அரசும் சட்ட முறைப்படி நிறுத்தியுள்ளனர். இதைத்தான் நரேந்திர(மோடி) இராசசுத்தான் பண்பாட்டிற்கு எதிராகப் பேராயக் கட்சி(காங்கிரசு) இருப்பதாகக் கூறிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இராசசுதானில் உள்ள உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க வேண்டுவது சரிதானே. சனாதனத்தின் பெயரிலான படுகொலையை ஆதரிப்பதுதானே தவறு.

  • (தொடரும்)

ஞாயிறு, 29 ஜூன், 2025

101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102. பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி)

  • ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எல்லா வீரர்களுக்கும் பரிசு கிடைக்கிறதா? முதல் மூன்று வீரர்களுக்குத் தானே, அதிலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற வரிசையில் தானே, பரிசுகள் தரப் படுகின்றன? சனாதனம் இவ்வாறு வரிசைப்படுத்துவதில் என்ன தவறு? என வருணாசிரமுறைக்கு ஆதரவாக – சனாதனத்தை ஆதரித்து -ஆர்.வி.ஆர். என்பவர் தன்வலைப்பூவில் எழுதியுள்ளாரே!
  • முதல்வர் மு.க.தாலின் “இன்னார்க்கு இதுதான் என்று சொல்வது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம்” என்று பேசியதற்கு மறுமொழியாகச் சனாதனவாதிகளின் உளறலைக் கொட்டி உள்ளார்.

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான

இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். (பாண்டியன் பரிசு, இயல் : 56)

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

என்கிறார் கண்ணதாசன் (கருப்புப்பணம் திரைப்படப்பாடல்)

இவ்வாறு சாதி வேறுபாடற்ற பொருளுடைமைதானே நம் இலக்கு. இதன் அடிப்படையில் மிகச் சரியாகச் சுருக்கமாக இலக்கணமாகச் சனாதனம் குறித்து மு.க.தாலின் எடுத்துரைத்துள்ளார்.

 வருண அடிப்படையில் இன்னார்க்கு மட்டுமே இது; மற்றார்க்கு உரிமையற்றது இஃது என்னும் சனாதனத்தைக் குறித்துத் தெளிவாகக் கூறினாலும் வழக்கம்போல் குழப்ப விளக்கத்தைச் சனாதனவாதிகள் முன் வைக்கின்றனர்.

ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொள்ள வருண அடிப்படை பார்க்கப் படுகிறதா? பரிசு வழங்க வருண அடிப்படை பார்க்கப் படுகிறதா? திறமையுள்ளவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்புதானே கொடுக்கப் படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அவர் திறமை அடிப்படையில் ஒன்று, இரண்டு, மூன்று எனப் பரிசுகள் வழங்குவதும், வருண அடிப்படையில் தொழில் வாய்ப்பை வரையறுக்கும் சனாதனமும் ஒன்றாகுமா? 

 “எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் தாலின் அரசு உரிமைத் தொகை ஆயிரம் உரூபாய் அளிக்கிறதா? ‘தகுதியுள்ளவர்களுக்கு’ என்று பாகுபடுத்தித்தானே அவர் அரசு வழங்குகிறது?” என்று வேறு புண் மொழி.

தகுதியுள்ளவர்களில் இல்லாத வருணம் பார்த்து வழங்கவில்லையே. எவ்வருணத்தவராயிருப்பினும் தகுதி இருப்பின் உரிமைத்தொகை வழங்கப்படுகிறதே. சனாதனம் அவ்வாறு சொல்லவில்லையே. தகுதியிருந்தாலும் பிற வருணத்தவருக்குக் கிடையாது. தகுதியில்லா விட்டாலும் பிராமணருக்கு உரித்தது என்பதுபோல்தானே எல்லாவற்றையும் தெரிவிக்கிறது. இவ்வாறிருக்க எவ்வாறு சனாதனத்திற்குக் குரல் கொடுக்கும் வகையில் இவற்றை ஒப்பிட்டுக் கூறுகிறார் அந்த அறிஞர்?

 “சமற்கிருத இலக்கியங்கள் பேரளவினவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலிமொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களை எழுதிவைத்துக் கொண்டு மூலங்களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர்” எனப் பேராசிரியை சுகுமாரி கூறியுள்ளார்.

 “வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன” என்கிறார் வெண்டி தோனிகர்(Wendy Doniger)

“வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது” என்கிறார்  சில்வியன் இலவி (Sylvian Levi)

“சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell

பெண்களை மிகவும் தரக்குறைவாகப் பேசும் பகுதிகள் மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை போன்ற எல்லாச் சமற்கிருத நூல்களிலும்  உள்ளன. இவற்றை எப்படிக் கற்றறிந்த அறிஞர் போற்றுவர். சில பொய் மூட்டைகளைப் பார்த்தால் சனாதனத்திற்குப் பிற நாட்டார் ஆதரவு இருப்பதாகக் கூறுவது பொய்யே எனப் புரிந்து கொள்ளலாம்.

  • (தொடரும்)