(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி)

  1. தமிழில் நால் வேதங்களையும் நான்மறைகளையும் பாராட்டியுள்ள இலக்கிய வரிகளைக் குறிப்பிட்டுத் தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகப் பரப்புரை மேற்கொள்கின்றனரே!
  2. உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்களும் மறைகளும் தமிழர்களால் தமிழில் எழுதப்பெற்ற நன்னெறி நூல்களாகும். இது குறித்துச் சிலர் எழுதியுள்ளனர். நான் ‘தினச்செய்தி’ நாளிதழில் “சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!” எனச் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டுரை எழுதி உள்ளேன். அகர முதல மின்னிதழில் இது வெளிவந்துள்ளது.

வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் வேதங்களைப்

புரையில்

நற்பனுவல் நால் வேதம்”

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர். இவ்வாறு விளக்குவதன் காரணம் குற்றமுள்ள தீ நெறியாகிய ஆரிய வேதங்களை வேறு படுத்தவே. எனவே, தமிழ் மேற்கோள்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழ் வேதங்களை ஆரிய வேதமாகக் கருதித் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .

    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று

      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்”

என்பதுதான் அப்பாடல்.

ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.” (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!  – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி)

(நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர் பிராமணர் அல்லர். இவரது தந்தையார் பெயர் சிவபாதவிருதயர்; தாயார் பெயர் பகவதி அம்மையார்; இவரின் இயற்பெயர்  ஆளுடையபிள்ளை; இவரின் வேறு பெயர்கள் திருஞானம் பெற்ற பிள்ளை, காழிநாடுடைய பிள்ளை; மனைவி பெயர் சொக்கியார். இப்பெயர்களைப் பார்க்கும் போது இவர் தமிழரே என நன்கு தெரிகிறது. இவரது புகழை ஆரியமயமாக்க இவரைப் பிராமணர் எனக் கற்பித்து அதற்கேற்ற கதைகளையும் கட்டிவிட்டனர்.)

  1. தேர்தலுக்கான தவறான பரப்புரை இது.

(உ)ரூப்புகுவர்பா கன்வார் (Roopkuvarba Kanwar)( 1969 – 4 செட்டம்பர் 1987) என்னும் 18 வயது இளம்பெண் இந்தியாவின் இராசசுத்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள தியோராலா என்ற சிற்றூரில் உடன்கட்டை ஏறுவதாகப் பொய்யாகப் பரப்பி, உயிருடன் எரிக்கப்பட்ட இராசபுத்திரப் பெண் ஆவார். திருமணமான 8 மாதத்தில் கணவர் மால் சிங்கு செகாவத்து இறந்த நிலையில் குழந்தையற்ற இவர் சனாதனச் சாத்திரத்தின் பெயரால் எரியூட்டப்பட்டார். இந்நிகழ்வில் பல்லாயிரவர் பங்கேற்றனர். இவர் சதி மாதா, சதி தாய், தூய தாய் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். எனினும் இக்கொலையானது நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

இதனால், இந்நிகழ்வில் பங்கேற்ற தியோராலாவைச் (Deorala) சேர்ந்த 45பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்பெற்றனர். பின்னர் நடந்த விசாரணையில் உடன்கட்டை ஏற்றுவித்துப் புனிதமாகப் பரப்புரை செய்த 11பேர் மீது குற்றஞ்சுமத்தி வழக்கு நடைபெற்றது. ஆனால் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை அரசு உணர்ந்ததால் 1.10.1987 இல் இராசசுதான் சதி (தடுப்பு) கட்டளையம் என்னும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மத்தியச் சட்டம் வேண்டும் எனப் பல தரப்பாரும் வலியுறுத்தியதால், சதி(தடுப்பு) செயற்பாட்டுச்சட்ட வரைவம்(the Commission of Sati (Prevention) Bill, 1987) நாடாளுமன்ற ஈரவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 21.03.1988 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இராசசுத்தானில் சில பகுதிகளில் பரவலாக இருந்த கட்டாய உடன் கட்டை ஏறுதலை மாநில அரசும் ஒன்றிய அரசும் சட்ட முறைப்படி நிறுத்தியுள்ளனர். இதைத்தான் நரேந்திர(மோடி) இராசசுத்தான் பண்பாட்டிற்கு எதிராகப் பேராயக் கட்சி(காங்கிரசு) இருப்பதாகக் கூறிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இராசசுதானில் உள்ள உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க வேண்டுவது சரிதானே. சனாதனத்தின் பெயரிலான படுகொலையை ஆதரிப்பதுதானே தவறு.

  • (தொடரும்)