வருணாசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருணாசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூலை, 2025

116/133 . வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி)

  • ஆம். ஆரிய நூல் எதுவாயினும் அதன் நோக்கம் சனாதனத்தை நிலை நிறுத்துவதுதான்; வரணாசிரமத்தைக் கட்டிக்காப்பதுதான். முதலில் இதிகாசம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறிக்கலாம் எனப் பார்ப்போம்.

தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்  என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே!  மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை  மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம், காவியம், பாவியம் என்பனபோன்று இதைக் கதையியம் எனலாம். இங்கே நாம் கதையியமாகிய மகாபாரதம் சிறப்பான கதையியம் இல்லை என்பதைப் பார்ப்போம்.

வியாசர், 226 முதன்மைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதைப் பின்னலை உருவாக்கித் திறம்பட எழுதியுள்ளார். ஆனால், இடைச்செருகல் மன்னர்களின் கைவண்ணத்தால் இந்நூல் மேலும் பல செய்திகள் சேர்க்கப்பட்டு மிகப்பெரும் கதையியமாக விளங்குகிறது.

மகாபாரதம் எழுதப்பட்ட பொழுது 8800 பாடல்கள் / சுலோகங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் 24000 பாடல்கள் / சுலோகங்கள் கொண்ட கதையியமாக மாறியது. இதில் மூன்று தொடக்கங்கள் உள்ளன. எனவே மூன்று முறை பல இடைச்செருகல்களால் உருமாறி 1,00,000  பாடல்களாகப் பெருக்கப்பட்டுப் பெருங்கதையியமாக மாறியது.

குரு மரபுவழியைச் சேர்ந்தவர்கள் அற வுணர்வும் நற்பண்புகளும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். இவர்களைக் கிருட்டிணன் எனப்பெறும் கண்ணனின் தலைமையில் பாண்டுவின் பிள்ளைகள் பல மோசடிகளைச் செய்து அழித்தார்கள் என்பதே மூலக் கதை. இதைத் தலைகீழாக மாற்றிப் பின்வந்த மகாபாரதம் உருவாக்கப்பட்டது என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இது குறித்து அறிஞர் மக்குடானெல், “பழைய காப்பிய மரபை எவ்வாறு பிராமணச் சாதியின்கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் கதையியமாக மாற்றுவ தென்பதைப் பிராமணர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்” என்று கூறுகிறார்.

பேராசிரியர் ஓல்சுமண்(Prof.Holtzmann) மகாபாரதம் கி.பி.900 ஆண்டுக்குப் பிறகு பிராமணர்களால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது என்றும் அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சி முடிவாகத் தெரிவிக்கிறார். ஆதிசங்கரர் தம் விளக்கவுரையில் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்கக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட சாதியினர் படிப்பதற்காக மகாபாரதம் எழுதப்பட்டது என்கிறார்.

கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு(Dio Chrysostomos) கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம் என்கிறார்.

கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது என்று மகாபாரதம்பற்றி இசுபானிய நூலொன்று குறிக்கிறது. மகாபாரதம் மட்டுமல்லாமல், சமற்கிருத நூல்கள் பலவற்றிலும் கிரேக்க, உரோமானியச் செல்வாக்கு இருப்பதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.

இவ்வாறு மகாபாரதம்பற்றிய செய்திகளைப் பேரா.ப.ம.நா. ‘வடமொழி ஒரு செம்மொழியா’ என்னும் நூலில் அளித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக மகாபாரதக் கதை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவை அடைந்துள்ள கிரேக்க, உரோமானியத் தாக்கங்களையும் கதைப் பாத்திரங்களின் முறையற்ற செயல்களையும தெரிவிக்கிறார். அறிஞர் ஃபெருனாண்டோ உலுஃபு அலான்சோ(Fernando Wulff Alonso)தமது ‘மகாபாரதமும் கிரேக்கத் தொன்மங்களும்’ (The Mahabharata and Greek Mythology) என்னும் நூலில் நிறைவாகத் தாம் கண்டறிந்த உண்மைகளைக் குறிப்பிடுகிறார். அவை மகாபாரதம் பற்றிய அரிய உண்மைச்செய்திகளாக உள்ளன.

ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அலான்சோவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகாபாரதம் வட இந்தியாவிலோ வடமேற்கு இந்தியாவிலோதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. வியாச பாரதம் கூறுவது உண்மையான வரலாற்று நிகழ்ச்சி என்றும் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மொழிக் காப்பியமாகத் தோன்றிய கதையியமென்றும் (இதிகாசமென்றும்) அது பேரளவு கொண்ட மூல நூலென்றும்  சமற்கிருதச் சார்புடையார் சொல்லி வருவன  வெல்லாம் பெரும் பொய்கள் என்பதை இந்த ஆழமான தெளிவான மறுக்க முடியாத ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இழிகாமமான (ஆபாசமான) கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றை விட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது  என்னும் உண்மையையும் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார்.

இத்தகைய, தழுவலான, பொய்யுரையான, இழிகாமமான, நடுநிலையற்ற காப்பியத்தைத் தரமான இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியரின் முடிவு.

ஆரிய நூல்கள் என்றாலே வருணாசிரமத்தை வலியுறுத்துவதும் பெண்ணடிமையை உணர்த்துவதும்தான்.

புனித நூலென்று திரிக்கப்படுகிற இத் தொகுப்பில் பசுக்கள் பிராமணர்கள் ஆகியோரின் பெருமை எடுத்துச் சொல்லப்படுகிறது.

ஆரிய நூல்களுக்கு இல்லாச் சிறப்புகளை ஏற்றிச் சொல்லப்பட்டாலும் அவையாவும் மனிதநேயமற்ற  சனாதனத்தைக் கட்டிக் காப்பனவே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

  • (தொடரும்)

சனி, 5 ஜூலை, 2025

111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி)

  1. நல்லொழுக்கத்தைக் கூறுவன புராணங்கள். போற்றுதற்குரிய பெருமைக்குரியவர்கள் புராண நாயகர்கள் என்கின்றனர். ஆக இவர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா என்கின்றனரே!
  2. ஆரியர்கள், நல்லொழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொழுது எழுதியவையே புராணங்கள். எனவே அதற்கேற்பவே நல்லொழுக்கமற்ற பாத்திரப் படைப்புகளைப் பார்க்கலாம். எனினும் தமிழர்களுடன் தொடர்பு கொண்ட பின், ஒழுக்கப் பாதைகளில் நடை போடத் தொடங்கினர். அப்பொழுது புராணங்களில் திருத்தம் வேண்டுமென்று  விரும்பிய ஒழுக்கவாணர்கள் அதற்கேற்பக் கதைகளில் மாற்றம் செய்து இடைச்செருகல்கள் மேற்கொண்டனர்; அல்லது அப்படிப்பட்ட பகுதிகளை மக்கள் பார்வையில் படாதவகையில் மறைத்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிலர்.
  3. புராணங்களில் வரும் மாந்தர்களின் பெற்றோர் யாரும் உரியவர்கள் அல்லர். தவறான முறையில் பிறந்தவர்கள் என்பதை மறைக்கத் தெய்வப்பிறவிகளாகக் கதை கட்டி விடுகின்றனர். முனிவரின் அருளாகவோ தெய்வ அருளாகவோ பிறந்தவர்களாகவும் திரித்து விடுவர். சிலரின் பிறப்புகளைப் பார்ப்போம். விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர் பாண்டு. பாண்டு மனைவியர் குந்தி, மாதுரி. பாண்டவர்களில் மூத்தவரான யுதிட்டிரன் என்னும் தருமன் பாண்டு – குந்தி ஆகியோரின் பிள்ளையாக வளர்ந்தவர். ஆனால், குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.  குந்திக்கு வாயுவிடம் பிறந்தவன் வீமன் /பீமன் /பீமசேனன். குந்திக்கு இந்திரனிடம் பிறந்தவன் அருச்சுனன். சரண்யூவிற்குச் சூரியனிடம் பிறந்தவர்கள் அசுவினிகள் அல்லது அசுவினி குமாரர்கள் ஆகிய நாசத்துயா-தசுரா என்னும் இரட்டையர்கள். இவர்களுடன் உறவு கொண்டு மாத்திரி/மாதுரிக்குப் பிறந்தவர்களே நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையர்கள். விசித்திரவீரியன் இறந்த பின் மனைவியரான அம்பிகாவும் அம்பாலிகாவும் வியாசரிடம் குழந்தை பெற்றுக் கொண்டனர். வேலைக்காரிக்கு வியாசரிடம் பிறந்தவன்தான் விதுரன். அதிரத நந்தனன் என்னும் தேரோட்டி – இராதை இணையரால்  வளர்க்கப்பட்ட கருணன் குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன். அஞ்சலைக்கு வாயுவிடம் பிறந்தவன் ஆஞ்சநேயர். திருதராட்டிரன் மனைவி காந்தாரி. ஆனால் காந்தாரிக்கு வியாசரால்தான் கெளரவர் நூற்றுவரும் துச்சலை என்னும் மகளும் பிறந்தனர். வைசியப் பெண்ணிடம் யுயுத்துசு என்னும் ஒரு மகன் பிறந்துள்ளமையால் இவர்களின் பிள்ளைகள் எண்ணிக்கை 102 ஆகும். (வியாசர் தந்த பிண்டத்தால் இவர்கள் பிறந்ததாகக் கூறுவது அறிவிற்கு ஏற்றதாக இல்லை.)

கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது.

கிருட்டிணனுக்கு,  (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன் என்பதில் ஐயமில்லை என்கிறது பாரதம்.

பிரம்மாவின் ஒழுக்கத்தைப்பற்றிப் பார்க்கலாம்.

1. பரமசிவன்- பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து திருமணத்திற்கு ஓமம் வளர்த்தான். பார்வதி ஓமகுண்டத்தை வலம் வருகையில் இடக் கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்து கொண்டு வந்தாள். அவ்வாறு வருகையில் அவளது இடையை ஒட்டிய தொடை பிரம்மாவின் கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்து பிரம்மா காம மயக்கம் கொண்டான். அதனால் விந்து ஒழுகியது.  அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் பிரம்மாவுக்கு அகத்தியன் பிறந்தான்.

2. பிரம்மா மீண்டும் பார்வதியின் தொடையைப் பார்க்க மேலும் விந்து ஒழுகியது. அதை விருட்சபிச்சை போன்ற செடிகளில் விட்டான்.  இதனால் பிரம்மாவிற்கு வால்கில்லியாதி முதலிய அநேக முனிவர்கள் பிறந்தார்கள்.

3. அங்கிருந்து செல்கையில் பிரம்மா ஒரு சுடலைச் சாம்பலில் தனது விந்துவை விட்டான். அதில் பூரிச்சிரவன் என்கிற அரக்கன் பிறந்தான்.

4. அதில் உள்ள எலும்புகளை பொறுக்கி அதில் விந்தினை விட்டான். அதிலிருந்து சல்லியன் என்கிற வலுவானவன் பிறந்தான்.

5. அங்கிருந்து போகையில் சிறிது விந்து ஒழுகிக் கீழே விழ அதை ஒரு பறவை உண்டது. அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் விந்தினை விட்டான். அதைத் தவளை(மண்டூகம்) உண்டது. அதன் மூலம் மண்டோதரி பிறந்தாள்.

7. மிகுந்த விந்துவைக் குளத்தில் உள்ள தாமரையில் விட்டான். அதில் இருந்து பத்மை(சரசுவதி) என்கிற மகள் பிறந்தாள்.

8. மகளான சரசுவதியின் அழகைக்கண்டு அவளுடன் புணர வேண்டுமென பிரம்மன் கேட்டான். அதற்கு அவள் மறுத்தாள். புத்திரப் பாக்கியத்திற்காகத் தாய் தமக்கை பிள்ளை மகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் தவறில்லை என்னும் வேதவாக்கியத்தைச் சொல்லி அவளுடன் உறவு கொண்டான்.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதியை மணந்து கொண்டார் என்றும் ஒரு கதை. அப்படிப் பார்தாலும் மகளான சரசவதியுடன் உடலுறவு கொண்டவனே பிரம்மன்.

9. சரசுவதியைக் கருப்பவதியாக்கியபின் விந்துவைச் சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.

10. மகளான திலோத்தமை மீதும் காமமோகம் கொண்டவன்தான் பிரம்மன்.

11.  பிரம்மன் காடுகளில் அலைந்து திரிந்த போது ஒரு புதருக்குள் இருந்த கரடியைப் புணர்ந்தான். இதனால் கரடி முகத்துடன் கூடிய சம்புவந்தன் என்ற மகன் பிறந்தான்.

12. பின் விந்தினை ஊர்வசி கருப்பத்தில் விட வசிட்டன் என்ற மகன் பிறந்தான்.

இவ்வாறு முறையற்ற, அறிவிற்கு ஒவ்வாத பண்பாடற்ற செய்திகள் கடவுள், முனிவர்கள் பிறப்புகளையும் உடலுறவுகளையும் கூறுகின்றன. சோ போன்றவர்கள் இவற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவது உண்மையென்றால், கடவுள்களாகவும் முனிவர்களாகவும் அரம்பையர் களாகவும் கூறப்படுபவர்கள் உண்மையில் வெறும் புலனுணர்வுகளே. அவர்களை வணங்கவும் போற்றவும் வேண்டிய தேவையில்லையே.

இத்தயை அற்பத்தனத்தை விளக்கியதற்குத்தான் தொல். திருமாவளவனைக் கண்டித்தனர் சனாதனவாதிகள்.

  • (தொடரும்)

புதன், 18 ஜூன், 2025

82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி)

  • இதற்குப் பேரறிஞர் அண்ணாவின் உரைகளைக் காண்போம். (மே பதினேழு இயக்கம், வினவு,18.09.2023)

“ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் எனக் கருதி, சென்னை நீதிமன்ற நீதிபதிகள் 1941-இல் கொடுத்த தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறோம்” – எனப் பேரறிஞர் அண்ணா மனுதருமப் பிரிவுகளையும், அதன்படி அமைந்த தீர்ப்பையும் விளக்குகிறார்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை என்கிறது மனுதருமம்”. பிராமணர் உருவாக்கிய சாத்திரத்தின் மேல் இந்துச் சட்டம் கட்டப்பட்டிருந்தது என்பதற்கு  1941-இல் நடந்த வழக்கை எடுத்துக் கையாள்கிறார் பேரறிஞர் அண்ணா.

 வழக்குரைஞராக இருந்த சானகி இராமமூர்த்தி என்னும் பார்ப்பனருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பிராமணப் பெண். இரண்டாம் மனைவி சூத்திரப் பெண். அவர் இறந்து விடுகிறார். அதனால் இரண்டாவது மனைவி, தன் இரண்டு குழந்தைகளுக்கும், தனக்கும் லாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கொடுக்குமாறு முதல் மனைவி மீது வழக்குத் தொடர்ந்தார். மாவட்ட நீதிபதி சூத்திர மனைவிக்கு உரூ 20 வாழ்க்கைப்படி கொடுக்கவும் தீர்ப்பளிக்கிறார். முதல் மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். பிராமண நீதிபதிகள் விசாரித்து இந்தத் திருமணம் செல்லாது என மனுதருமப்படி தீர்ப்பு கூறுகின்றனர்.

 “பிராமணனால் சூத்திரப் பெண்ணிடத்தில் பிள்ளை பிறந்தால், அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை” என்பது மனுதரும சாத்திரம். இந்த மனுசாத்திரத்தின் மேல் கட்டப்பட்டதே அப்போதைய நீதியாக இருந்தது என்பதைச்  சுட்டிக் காட்டுகின்றார்.

பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகம் ஆகாததால், அந்தப் பிள்ளை உயிரோடிந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” இதனால் தந்தையின் கருமத்தில் சூத்திர மகனால் பங்கு பெற இயலாது. அதனால் அவனால் சொத்து பெற இயலாது. நான்கு பிரிவுகளிலே பெண்களையும் சேர்க்காததால் பெண்களினமும் சொத்து பெற முடியாத நிலையை விளக்கிக் கூறுகிறார் அண்ணா. நம் பெண் சமூகம் சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடந்ததற்குக் காரணம் ஆரியக் கொடுமையே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பேரறிஞர் அண்ணா.

மனுதருமம் நிகழ்த்திய அநீதியை இன்னொரு வழக்கின் மூலமாகவும் சுட்டிக் காட்டுகிறார். ஒரு சூத்திர ஆணை ஒரு சூத்திரப் பெண் மூன்று மாதக் கருவை சுமக்கும் போதே ஏமாற்றி மணந்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்ததும் திருமண விடுதலைக்கு அந்த ஆண் வழக்கு தொடுக்கிறார். ஆனால் நீதிபதி, ஒரு சூத்திரர் பரத்தமை(விபச்சார)க் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமை இல்லை என்று தீர்ப்பளித்து விடுகிறார். இவ்வாறு சூத்திரனுக்கு ஒரு நீதி, பிராமணனுக்கு ஒரு நீதி என்பதையே மனுதருமம் நிலைநாட்டி வைத்திருந்ததை, அண்ணா இரண்டு வழக்குகளின் ஊடாகவும் மெய்ப்பிக்கிறார்.

இதுவே வினாவிற்கான விடையாகும்.

எனினும் இக்காலத்திற்கேற்ற மற்றொன்றையும் பார்க்கலாம்.

பசுக்கொலை புரிவோருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர்வேதம் கூறுகிறது. ஆனால், திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு உணவாகப் படைக்கப்பட்டதாக இரிக்கு வேதம் கூறுகிறது. இந்திரனுக்குக் காளைகள் படைக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உணவாக அளிக்கப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன. அப்படியானால் மரணத்தண்டனை என்பது பிராமணர் அல்லாதாருக்கு மட்டுமே என்பதைப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காகவும் விற்பனைக்காகவும் கொண்டு செல்லும் பசுமாடுகளை வதை செய்வதாகக் கூறி அப்பாவி மக்களைக் குறிப்பாக இசுலாமியர்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் செய்கின்றனர் இந்துப் பயங்கரக் கட்சியினர். அதே சமயம் அவர்களின் இந்திய அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே  முதலிடத்தில் உள்ளது. அஃதாவது பிற வருணத்தார் பசுவை என்ன செய்தாலும் தண்டனை. அதே நேரம் பாசக அரசு மாட்டிறைச்சியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போற்றுதற்குரியது. மாடுகளைக் கொல்லாமலா இறைச்சி கிடைக்கிறது?. காலங்கள் மாறினாலும் சனாதனம் மாறவில்லை என்பதற்கு இதுவே சான்று. எனவே, அப்பொழுது அப்படி இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை என்றெல்லாம் சொல்வதில் பயனில்லை. தங்களுக்கொரு நீதி. பிற வருணத்தாருக்கொரு நீதி என்னும் அநீதிதான் வருணாசிரமம்.

சனாதனம் இப்போதும் உள்ளது என்பதற்கான உண்மை நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்.

குசராத்து மாநிலத்தின் தகோத்து (Dahod or Dohad) வட்டத்தைச் சேர்ந்தவர் பில்கிசு பானு(Bilkis Bano) இப்பெண்மணி தன் 3 அகவைக் குழந்தையுடனும் குடும்பத்தினருமாக 16 பேர், சபர்வாத்து என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, 03.03.2002 அன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கும்பல், பில்கிசு பானுவின் 3 வயது குழந்தை சலீகா முதலான  14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. பால்மணம் மாறா 3 அகவைக் குழந்தை சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கருவைச் சுமந்திருந்த பில்கிசு பானுவை, 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது .

இது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்திருந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குசராத்தில் உள்ள கோத்துரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சனாதன அரசால் சனாதன வாதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது பாசக சனாதன வாதிகள் அவர்களுக்கு  மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே “அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று பாசக ச.ம.உ. ஒருவர் அறிக்கை வெளியிட்டார்.

இவையாவும் சனாதனம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு அடையாளங்களே.

  • (தொடரும்)