பிராமணர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிராமணர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2025

132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்



(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி)

பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில் ஊழல்கள் என்று பேசப் பெறுகின்றவற்றுள் பெரும்பாலானவை ஆரியப் பார்ப்பனர்களால் செய்யப் பெறுவனவே! பிற இனத்தவரை அமைதியாக ஆளவிடக் கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். இவர்களுக்குப் பக்கத்துணையாக நிற்பவை அவர்களிடம் உள்ள ஆங்கில, தமிழ்ச் செய்தித்தாள்களே! அவை பொய்த்துத் தள்ளுவதற்கு ஓர் எல்லையே இல்லை.

பார்ப்பனர்களின் கையுள் வலிவான செய்தித்தாள்கள் இருப்பதாலேயே அவர்கள் பொதுமக்களிடம் தங்களுக்குச் சார்பான கருத்துகளை எளிதாக உருவாக்க முடிகின்றது. இந்து, எக்சுபிரசு, மெயில் போலும் ஆங்கில நாளிதழ்களிலும் சுதேசமித்திரன், தினமணி, தினமலர் போலும் தமிழ் நாளிதழ்களிலும், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தீபம், கலைமகள், துக்ளக் போலும் கிழமை, மாத இதழ்களிலும் அவர்கள் எழுதும் எழுத்துகளே இந்நாட்டை ஒரு நிலையான ஆட்சிக்குக் கொண்டு வரமுடியாமல் செய்கின்றன என்றால் அது மிகையாகச் சொல்லப்பெற்ற தாகாது.

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.

தமிழரிடத்திருந்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” (பக்கம் 33).தமிழ்மொழியின் வரலாறு

இனி. இவ்வாறு தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் முழுவதும் தெளித்து விட்டிருப்பது ஆரியர்தம் திருவிளையாடல்களில் ஒன்று. தமிழர்களுக்குச் சார்பாகவும் நடுநிலையாளர் போலும் சில வரலாற்றுக் கருத்துகளை ஒருபக்கம் எழுதுவது; மறுபக்கம் அவர்களுக்குக் கேடானவும் முற்றும் ஆரியர்களுக்கே ஏற்றந் தருவனவுமான பல கருத்துகளை அதே நூலில் சொல்லி விடுவது. இவ்வாறு அவர்கள் எழுதுவது ஏனெனில், படிப்பவர்கள் தங்களை நடுநிலையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் கருதிக் கொள்ளட்டும் என்பதே! மேலும் திரு. வி.கோ. சூ அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தருமாறு, வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ்மொழி பெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக் கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்! ஆனாலும் அவர் கொட்டிய பிற நச்சுக் கருத்துகளை நாம் நினைவுகூரும் பொழுது, அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத் தானோ அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார் என்றும் கருத வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் அவரினத்துக்குச் சார்பாகவும் ஏற்றம் தரும் வகையிலும் அதே நூலில் கூறிய கருத்துகளையும் தெரிந்துகொள்வது நலம். (அவற்றையும் கீழே காணுங்கள்)

  • – – – – – – – – – – – – – –  –

ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

  • – – – – – – – – – – –

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று

உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது – எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையீரே’என்று வரும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – சிற்சில பகுதிகள்

(நடைநடையாய் நடந்து தமிழ்ச்சுவடிகளைத் தேடி அலைந்த அறிஞர் உ.வே.சாமிநாதனாரே ஆயரியப்பற்ற மேலோங்கத் தவறிழைத்துள்ளார் எனில் எளியவர்களைப்பற்றி என்ன சொல்வது?)

  • (தொடரும்)

பி.கு. இதற்கு மாறாகத் தங்களைத் தமிழராக எண்ணித் தமிழராக நடந்து கொண்ட/கொள்ளும்பிராமணர்களும் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். பிராமணரல்லாதவருக்கு உதவும் பிராமண ஆசிரியர்களும் உள்ளனர். வருணாசிரமத்திற்கு எதிராக அனைவரையும் சமமாகக் கருதும் பிராமணர்களும் உள்ளனர்.

000

வியாழன், 10 ஜூலை, 2025

117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி)

  1. மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர்களும் செல்வர்களும் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பிராமணர்களிடம் மண்டியிட்டதாக எழுதி வைத்தனர். இதைப் பார்த்த சிலரும் அவ்வாறு செய்து வருகின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்.

இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர்.

இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள் கணக்கற்ற திண்பண்டங்களையும் கனிவகைகளையும் மலர்களையும் தேன்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்

அந்த வேள்வியில் பீசுமரும் துரோணரும் துரியோதனன் முதலான கெளரவர்களும் யாதவர்களும் அனைவரும் அடிமைகளாகப் பிராமணர்களுக்கு வேலை செய்தனர்.  தருமர் இந்த வேள்வியில் துணிகளையும் சால்வைகளையும் போர்வைகளையும் பொன் நாணயங்களையும் பொற் பாத்திரங்களையும் நகைகளையும் நிரம்பப் பிராமணர்களுக்குக் கொடுத்தார். அரசர்கள் காணிக்கை யாகத் தந்த மாணிக்கங்கள் முதலானவற்றையும் பிராமணர்களுக்கே கொடுத்தார்.

உயர்நிலை அரசர்கள், சிற்றரசர்கள் என அனைத்து நிலை அரசர்களும் பிராமணர்களுக்கு ஊழியம் செய்வதாகத் தெரிவிப்பதன் மூலம் பிராமணர்கள் யாவருக்கும் மேலானவர்கள் எனப் பாரதம் கூறுகிறது. வருணாசிரமத்தை விதைத்து வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆரிய நூல்களின் நோக்கம்.

(அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை: இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி)

வேதங்கள் வழிச் சனாதனக் கருத்துகள் விதைக்கும் நச்சுக் கருத்துகளில் சில வருமாறு:

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் இம்சிக்த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அதன் மீது் மனம் வைக்கும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன். அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும் உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிர நதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

இவ்வாறு பிராமணர்களை உயர்த்தும் வேதங்களை மனித நேயம் கொண்ட பிராமணர்களும் பின்பற்றத் தேவையில்லை யல்லவா?

  • (தொடரும்)

திங்கள், 16 ஜூன், 2025

80. பிராமணர்கள் அனைவரும் தமிழ்ப்பகைவர்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 79 தொடர்ச்சி)

அப்படியில்லை. எல்லா வகுப்பினரிலும் தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர்; தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் பிராமணர்களில் தமிழ்ப்பகைவர்கள் மிகுதியாக உள்ளனர். இதனடிப்படையில் பிராமணர்களை மூவகையாகப் பிரிக்கலாம்.

அ.) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழன்பர்கள்

ஆ.) சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கருதி, அதற்கடுத்தாற்போல் தமிழை எண்ணும் இருமொழிப் பற்றர்கள். சமற்கிருதத்தை முதன்மைப் படுத்தித் தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவோர் இவர்களில் உள்ளனர்.

இ.) சமற்கிருதமே உயர்வு எனத் தவறாகக் கருதி, அதனை நிலைநாட்ட முயலும் நோக்கில் தமிழ்ப்பகையாகச் செயற்படுபவர்கள்.

மூன்றாம் வகையினர் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழைப் பழிக்கவும் தாழ்த்தவும் சமற்கிருதத்தைத் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் இருக்கச் செய்யவும் வாழ்கிறார்கள். இவர்களின் தமிழ்ப்பகைச்செயல்களே ஒட்டு மொத்த பிராமணக் குலத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

இதனை அறிந்த தமிழ் முரசு பத்திரிகை மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள் என்றும் மலாயா என்ற பெயரே தமிழர்களின் தொடர்பால் உருவானது, அதுமட்டுமின்றி, தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து சிறப்புற விளங்குகின்றது என்று கூறி பல்கலைகழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரான தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் வகையில் அமைவதே சிறந்தது எனும் நிலையில் இலக்கியமும் பண்பாடும்மிக்க தமிழ்ப் பகுதியும் இந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுமாறு நீலகண்ட சாத்திரி அறிவுரை அமைத்தல் வேண்டும் எனச் சாத்திரியாரிடம் வேண்டுகோள் விடுத்தது தமிழ் முரசு பத்திரிக்கை (தமிழ் முரசு, ஏப்ரல், 22, 1953, பக். 08).  சாரங்கபாணியின் முயற்சியில் தமிழர்கள் ஒன்று திரண்டு தனித்தமிழ்த்துறைக்குக் குரல் கொடுத்தனர்.

பேராசிரியர் நீலகண்ட(சாத்திரியா)ர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனி இடம் ஒதுக்க இயலாதென்றும் தமிழுக்கென்று கேட்டால் இந்தி வேண்டும் என்று கிளர்ச்சி அதிகப்படுமென்றும், சமற்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவும் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப்படலாமென்று கூறியுள்ளார். மேலும், அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவு இருக்குமென்றும் மேற்கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.

மலாயாவிலிருந்து நாடு திரும்பிய நீலகண்ட(சாத்திரி) செய்தியாளர்களிடம் தன் தமிழ்ப்கைச் செயல்களை மறைத்து விட்டு,  நேர்மாறான தகவல்களைக் கொடுத்துள்ளார் தினமணிச் செய்தியாளரிடம், மலாயாவில் தென் இந்தியாவில் உள்ள திராவிட கழகத்தைப் போன்று ‘தமிழ்ப் பண்ணை’ என்ற இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய அபத்தமான கோரிக்கையின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1953ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த இந்திய மொழிகள் துறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மட்டும்தான் போதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் எவ்வளவு சொல்லியும் பலன் ஏற்படவில்லை அதனால் தனது மலாயா பயணம் தோல்வியுற்றதாக நீலகண்டர் தெரிவித்துள்ளார்.

“இவாள் இப்படித்தான் இருப்பார்கள்” என்று சொல்லும வகையில் பலரும் செயற்படுவதற்கு மற்றொரு சான்றையும் குறிப்பிடுகிறேன். மொரீசியசு மக்களுக்குத் தமிழிசை கற்றுத் தருவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து இசை ஆசிரியர் ஒருவரைக் கலைபண்பாடடுத் துறை மூலம் அரசு அனுப்பி வைத்தது. அவர் அங்கு சென்று தமிழிசைக் கற்பிப்பதற்கு மாற்றாக நிகழ்ச்சிகளிலும் வானொலிகளுிலும வகுப்புகளிலும் சற்கிருதப் பாடல்களைச் சொல்லி வந்தார். அதே நேரம் இவரது பதவிக்காலம் முடிந்ததும் தாராபுரம் சுந்தரராசனை அனுப்ப முயன்ற பொழுது ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு அனுப்பவிடாமல் செய்து விட்டனர்.

மற்றொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மொரீசியில் தமிழ் கற்பிக்கத் தமிழாசிரியர்களைக் கேட்டிருந்தனர். தேர்வுகளைக் கூட இங்கே வந்து எழுதுவதாகவும் தெரிவிததனர். தமிழரல்லாதவர்களின் குறுக்கீட்டால், 50 ஆண்டுகளைக்கடந்தும் இக்கோரிக்கை நிறைவேறவில்லை. அதேநேரம் தமிழ்ப்பிராமண ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால் உடனே நிறைவேறியிருக்கும்.

இவ்வாறு ஆங்காங்கே சிலர் தமிழுக்கு எதிராக நடந்து கொள்வதால்தான் ஒ்ட்டு மொத்தக் குலத்தினருக்கும் களங்கம் ஏற்படுகிறது.

இவை குறித்து மேலும் அறியப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ‘ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ என்பதில் இருந்து சில பகுதிகளை வினா-விடை 132இல் காணலம்.

  • (தொடரும்)

சனி, 24 மே, 2025

சனாதனம் பிராமணர்களை உயர்த்திச் சொல்வதாகச் சொல்வதைப் பொய் என்னும் பொய்யும் வள்ளலாரை, சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகச் சொல்லும் பித்தலாட்டமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      24 May 2025      கரமுதல



(சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை- இரவி; திருவமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூசரிதானா? – தொடர்ச்சி)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (மனு 1. 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே சீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (மனு , 1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (மனு , 1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்ய வராயுமிருக்கிறார்கள் (மனு , 1 : 101).

இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (மனு  2:31, 32)

பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது (மனு , 2 : 176-178).

தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு:

பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த் தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த் தண்டனையே உண்டு (மனு , 8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (மனு , 8 : 379).

பிரம்மஃகத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (மனு , 8 : 379).

பிராமணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (மனு , 8 : 281).

பிராமணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம் (மனு , 8 : 412).

இவற்றையெல்லாம் படித்த பின் யாரும் சனாதனம் பிராமணர்களை உயர்த்தவில்லை என்று பொய் மூட்டையை அவிழக்கமாட்டார்கள்.

  • ஆரியர் தோற்றமே பத்தாயிரம் ஆண்டுகள் இல்லை என்னும் பொழுது அவர்களின் சனாதனம் மட்டும்  பத்தாயிரம் ஆண்டுப் பழமையாக எப்படி இருக்க முடியும்? கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீதையில் முதன் முறை சொல்லப்பட்ட சனாதனம் பழமையானது அல்ல என முன்னே கூறியிருக்கிறோம். அப்படியே இருந்தாலும் மனித நேயத்திற்கு எதிரான அதனை எப்படித் தமிழ் நெறியுடன் ஒப்பிட இயலும்?

துணிந்து பொய் கூறுவதே ஆரியவாதிகளின் வழக்கம். எனவேதான், சனாதனவாதிகள் இங்ஙனம் கூறுகிறார்கள். சனாதனவாதிக்கு எதிரான வள்ளலார் இராமலிங்க அடிகளைச் சனாதனவாதியாகச் சித்திரிக்கிறார்கள்.

சாதியும் மதமும் சமயமும் பொய்என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

என்றும்

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்

என்றும்

சாதி, மத, சமயத்திற்கு எதிரான வள்ளலாரை,

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என வேண்டிய வள்ளலாரைச் சாதி சமயக் குப்பையில் மூழ்கிய சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகக் கூறுவது தண்டனைக்குரிய செயல் அல்லவா? பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையாகத் திரித்துக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

(தொடரும்)

செவ்வாய், 11 மே, 2021

வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

      11 May 2021      No Comment



வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! 

பேரா.ப.ம.நாயகம் நடுநிலையுடன் ஆராய்ந்து தம் நூல்களைப் படைத்துள்ளார். அவர் சமற்கிருத நூற்கருத்துகள் அடிப்படையிலும் அவை குறித்த சமற்கிருத அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையிலுமே கருத்துகள் தெரிவித்துள்ளார். “அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!” என்பது கடந்த காலம் குறித்தக் கூற்றாக உள்ளது. கடந்த கால உண்மைகளைத் தெரிவிக்கும் பொழுது கடந்த காலச் செய்தியாகவே பார்க்க வேண்டும். பிராமணர்கள் என்பது, பொதுவாக வடபுலப்பிராமணர்களையும் குறிப்பாக வேதகாலப் பிராமணர்களையும் பற்றியே குறிப்பிடுகிறது. அவர்கள் எந்த அளவிற்குப் பெண்களை இழிவாகக் கூறியுள்ளார்களோ அவற்றின் அடிப்படையில்தான் அவர்களைப்பற்றிய மதிப்பீடும் அமையும். இழிவான செய்திகளைக் கூறிவிட்டு உயர்வாகக் கூறுவதை ஏற்றுக்கொண்டால் இவற்றையும் ஏற்றதாக அமையும். பிராமணர்களை மேல்தட்டினராகக் குறிப்பிட்டு மக்களிடையே வேறுபாட்டை விதைத்துப் பரப்புவனவாக வடபுலத்துச் சமற்கிருத நூல்கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டுவதை இலக்கிய வரலாற்று உண்மையாகத்தான் பார்க்க வேண்டும்.

வட ஆரியர்களும் தமிழகப்பிராமணர்களும் வேறு என்பாரும் உள்ளனர். தமிழகப் பிராமணர்களில் சிலர் ஆரியராகச் செயல்படுவதைப் பெருமையாகக் கொள்வதாகவும் பலர் மாறுபட்டுத் தமிழ்ப்பற்றுடன் உள்ளனர் என்று கூறுவாரும் உள்ளனர். என்னதான் மக்களிடையே சமத்துவத்தைக் காணும் பிராமணர்களாக இருந்தாலும் சாதிப்பாகுபாட்டில் கருத்தாக உள்ளவர்களும் இருக்கிறார்கள் எனக் கூறுவாரும் உள்ளனர். வட ஆரியர்களை எதிர்ப்பவர்கள், “தமிழே உயர்தனிச் செம்மொழி” என்று வலியுறுத்திய பரிதிமாற்கலைஞரை ஆதரிக்காமல் இருக்க இயலுமா? “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்னும் பாரதியாரைப் புறக்கணிக்க முடியுமா? வீடுதோறும் சென்று அல்லல்பட்டும் இடர்ப்பட்டும் துன்பப்பட்டும் தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டிய உ.வே.சாவைப் போற்றாமல் இருக்க முடியுமா? எனவே, பொதுவான செய்திகளைப் பொதுவானதாகவே பார்க்க வேண்டும்.

நிறை இருப்பின்  பாகுபாடின்றிப் பாராட்டுவதையும் குறை இருப்பின் வேறுபாடின்றிச் சுட்டிக்காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டவன். எனவேதான், இலக்கிய அறிஞர் இராசம் அம்மையாரின் ‘அயலவரின் முதல் தமிழ்க்கையேடு’ என மார்ச்சு-மே 2015 ‘அகரமுதல’ இதழ்களில் வெளியிட்டிருந்தேன். பாராட்டிற்குரிய அம்மையாரின் அந்நூலை அனைவரும் அறிய  வேண்டும் என்னும் நோக்கத்திற்காகத்தான் வெளியிட்டிருந்தேன். மேலும், இராசம் அம்மையாரின் சிறப்புபற்றிய கட்டுரையை எழுதி அரசின் உயரதிகாரிகள் முதலான பலருக்கும் அனுப்பியுள்ளேன். பிராமணர்கள் எழுதும் வேறு சில படைப்புகளும் ‘அகரமுதல’ இதழில் வெளிவருகின்றது. படைப்பாளர்களில் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. தமிழ் உணர்வாளர்கள் யாவரும் தமிழர்களே! தமிழ் எதிர்ப்பாளர்கள் அனைவரும் தமிழ்ப்பகைவர்களே! அவ்வளவுதான்!

பொதுவாகப் பின்னூட்டக் கருத்திற்கு மறுமொழி அளிப்பதில்லை. அவரவர் கருத்து. அதை மறுக்க வேண்டா என எண்ணுவேன்.  என் பணிச்சூழலில் எனக்கு அவற்றுக்கான நேரமும் அமைவதில்லை.   மிகச் சிலவற்றிற்கு மறுமொழி அளிப்பதுண்டு. அந்த வகையில் என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பேராசிரியர் இராசம் அம்மையார் மனம் புண்பட்டதாகக் கருதுவதால் இவ்விளக்கத்தை அளித்துள்ளேன்.  யாரையும் இழிவு படுத்த வேண்டும் என்றோ் காழ்ப்புணர்ச்சியிலோ எழுதப்பட்டவை அல்ல. அறிஞர்களைப் பற்றி எழுதும் பொழுது அவர்களின் நூல்களைப்பற்றியும் குறிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

பேரா.ப.மருதநாயகம் அவர்களின் நூல்கள் பல இணையத்தில் கிடைத்ததாலும் எஞ்சிய நூல்களை அவரிடமிருந்து பெற முடிந்ததாலும் அச்சிற்கு அளித்துள்ள நூல்களின் தட்டச்சுப்படி கிடைத்தமையாலும் நன்கு படித்துப் பெரு முயற்சியில் விளைந்தது இக்கட்டுரை. இவரது நூற் கருத்துகளில் எவ்வெவற்றை விடுவது, எவ்வெவற்றை  எடுப்பது என்று எண்ண முடியாத அளவிற்குச் சரளமாகப் பல்வேறு உண்மைகளை அடுக்கிச் சென்றுள்ளார். முழுமையாக அவற்றைக் குறிப்பதாயின் நூற்களையே முழுமையாக எடுத்து இயம்புவதாக இருக்கும். உண்மையை உரைக்க வேண்டும் என்னும் ஆய்வு நோக்கில் சமற்கிருத அறிஞர்கள் எழுதிய பல நூற்கருத்துகள் அடிப்படையிலேயே தம் நூல்களை வடித்துள்ளார்.

கட்டுரைத் தொடர் 69 பகுதிகளாக வருவதிலிருந்தே இதன் வினையருமை புரியும். சில நூல்களில் குறிக்கப்படும் மேற்கோள் நூல்களின் தொடர்புடைய பகுதிகளையும் படித்துப்பார்த்தே இந் நெடுங்கட்டுரையைப் படைத்துள்ளேன். 

அவ்வாறிருக்கும் பொழுது அனைத்துத் தரப்பாராலும் படிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவேனே தவிர, காழ்ப்புணர்ச்சிக் கண்ணோட்டத்தைத் திணிக்க மாட்டேன். அதே நேரம், அறிஞர்கள் கூறிய உண்மைகளை மறைக்கவும் கூடாதல்லவா?

 முனைவர் பேரா.ப.மருதநாயகம் நோபள் பரிசு பெறுவதற்குத் தகுதியான ஆராய்ச்சி அறிஞர். எனவே, அவர் குறித்த இந்நூற்கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன். நான் உள்வாங்கி எழுதியதில் அம்மையார் மனம் புண்படும்படி ஏதும் தவறிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால், யாவும் கடந்த கால உண்மைகளே என்பதைப் படிப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்