deepavali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
deepavali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2011

கனடிய மண்ணில் தீபாவளிப் பண்டிகையும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சி வலையும் !

கனடிய மண்ணில் தீபாவளிப் பண்டிகையும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சி வலையும் !



கனடாவில் உள்ள சிறிலங்காவின் தூதரக ஆணையம் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி  பெருமெடுப்பில் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கைத்தீவின் பல்லின மக்களின் ஒன்றுபட்ட நிகழ்வென பிரச்சாரப்படுத்தியவாறு கனடிய ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கனடிய அரசியல் மட்டங்கள் ஏற்பட்டு வரும் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த நிகழ்வினை சிறிலங்காவின் தூதரகம் ஆராரவத்துடன் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவே கருதப்படுகின்றது.
இந்நிலையில் சிறிலங்கா அரசின் இந்த சூழ்சியைக் முடியடிக்கும் நோக்கில் அமைதிவழியிலான போராட்டம் ஒன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடிய தமிழ் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து 27-10-2011 அன்று நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையயொன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முழுவிபரம் :
சர்வதேச நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சிறீலங்கா அரசு, தமிழ் மக்களுடன் நல்லிணக்க உறவுடன் இருப்பதான ஒர் தோற்றத்தை சர்வதேசத்திற்கும், கனடாவிற்கும் எடுத்துக் காட்டும் நோக்கில் சிறீலங்காத் தூதுதரக ஆணையத்தினால் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்று பெருமொடுப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி  ரொரன்ரோவில் உள்ள கொரியன் கலாச்சார மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான தொடர்சியான இனவழிப்பை மூடிமறைத்தவாறு, கனடாவில் உள்ள தமிழர்களையும், கனடிய அரசியல் பிரதிநிதிகளையும் இந்த தீபாவளி  கொண்டாட்டத்துக்கு அழைத்துள்ள சிறிலங்கா அரசு, தமிழர்களை மட்டுல்ல உலகத்தினையும் ஏமாற்றும் ஒரு வித்தையே இதுவாகும்.
தமிழர்களை ஒன்றிணைத்ததான தோற்றப்பாடடிக் கொண்;ட இத்தகைய நிகழ்வுகள் மூலம் தமிழர்களின் இரத்தக்கறை படிந்த தனது பேரினவாத முகத்தை மறைக்க முனைவதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை சிறிலங்கா அரசு நிராகரிக்கின்றது.
இச்சூழலில், கனடிய மண்ணில் சிறிலங்கா அரசு அரங்கேற்றும் தீபாவளிப் பண்டிகை நிகழ்வினை புறக்கணிக்க வேண்டுவதோடு, தமிழர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினைக் வெளிக்காட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  வலியுறுத்தி நிற்கின்றது.
இந்நிகழ்வுக்கு ஒன்றுபட்ட எதிர்ப்பினை தெரிவிப்பதோடு,; சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை யும் ஏற்படுத்தும் நோக்கில் அமைதிவழி போராட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் சர்வதேச மனித நேய அமைப்புகளும், கனடிய தமிழ் அமைப்புகளும் தோழமையுடன் நடாத்தவுள்ளனர்.
இது குறித்ததான மேலதிக விபரங்கள்  விரைவில் அறியத்தருவதோடு, இந்த அமைதி வழி போராட்டத்தில் அனைத்து கனடியத் தமிழ் மக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம் இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை

Short URL: http://www.ethirinews.com/?p=21056

வியாழன், 27 அக்டோபர், 2011

பெரியார் : தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு

தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு..

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு.
மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.
உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.
உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? “எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
————————
- ஈ.வெ.ரா.
குடி அரசு கட்டுரை 01.11.1936


வியாழன், 14 அக்டோபர், 2010

பட்டாசு விற்பனை: காவல்துறைக்கு விதிவிலக்கா?


நவம்பர் 5-ல் தீபாவளி. தீபாவளியைக் கொண்டாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, தீபாவளி வருகிறது, வருகிறது என்பதில்தான் அதிக மகிழ்ச்சி.  ÷தீபாவளி விடுமுறை நாள்களை தன் உடன்பிறப்புகளுடன், உறவுகளுடன் கொண்டாட, சொந்த ஊருக்கு பஸ் மற்றும் ரயில் முன்பதிவுக்கு முண்டியடிக்கும் வெளியூரில் வேலை செய்வோர், மகளுக்குத் தலை தீபாவளி சீர்செய்ய நிதி ஆதாரத்தைத் தேடும் நடுத்தரக் குடும்பத்தின் பெற்றோர் என்று அவரவர் நிலைக்கு ஏற்ப வரவிருக்கும் தீபாவளிக்குத் தயாராகி வருகின்றனர்.  ÷இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், என்னதான் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்தாலும், புகையைக் கக்கும் பட்டாசு இல்லாமல் தீபாவளியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதால், வியாபாரிகளுக்குப் பட்டாசு விற்பனை உரிமம் வழங்குவது குறித்து பல மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான மனுக்களைப் பெற்றுப் பரிசீலித்து வருகின்றன.  ÷உரிமம் பெறுவதில் "இன்னபிற செலவுகளும்' உள்ளதாகக் கூறப்படுகிறது. அது இல்லாமல் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற முடியாது. இவர்களின் தடையில்லாச் சான்று இல்லையென்றால் உரிமம்பெற முடியாது. தீபாவளிக்குப் பட்டாசுக் கடைவைக்க வெடிமருந்து சட்ட விதிகள் 1983 படிவம் 24-ன் கீழ் உரிமம் பெற விரும்புவோர், விண்ணப்பங்களை வெடிமருந்து சட்டவிதிகள், படிவம் 4-ல் (6 நகல்கள் ) பூர்த்தி செய்து ரூ. 2-க்கு நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டியும், உரிமக் கட்டணம் ரூ. 500 கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியும், அசல் சலானுடன் நீலவண்ண வரைபடம் (ஆறு நகல்கள்) மற்றும் பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம், சொந்தக் கட்டடம் எனில் வீட்டு வரி ரசீது மற்றும் கிராமக் கணக்கு நகல்கள் ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதிக்குள், மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  பின்னர் இந்த விண்ணப்பங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்படும். விண்ணப்பித்தவர்கள் பட்டாசுக் கடைவைப்பதாகக் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து, தகுதி இருக்கும்பட்சத்தில், உரிமம் வழங்கலாம் என்று சான்று அளிக்கப்படும். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு விற்பனை உரிமம் வழங்குவார்.  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், காவல்துறை சார்பில் போலீஸ் நல கேண்டீன்கள் இயங்கி வருகின்றன. இங்கு போலீஸôருக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், சீருடை தொடர்பான பொருள்கள், டீ, காபி, பிஸ்கட் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளி நெருங்கும்போது, புத்தகக் கடையில் தொடங்கி, மளிகைக் கடை, பூக்கடை வரை பட்டாசுக் கடைகளாக மாறுவதுபோல, போலீஸ் நல கேண்டீனும் அவ்வாறே மாறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனிநபர் விற்பனை செய்யும் பட்டாசைவிட, போலீஸ் நல கேண்டீன்கள் விற்கும் பட்டாசுகள்தான் அதிகம். ஒவ்வோராண்டு தீபாவளியின்போதும் லாரியில் குறைந்தது 4 லோடாவது விற்பனைக்காகப் பட்டாசுகள் இறக்கப்படுகின்றன. பட்டாசு விற்க பாமரன்தான் உரிமம் பெற வேண்டும் என்பது விதிமுறை. போலீஸ் கேண்டீன் எந்த ஆண்டும் பட்டாசு விற்பதற்காக உரிமம்பெற மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்ததே இல்லை.  ÷இதுகுறித்து மாவட்ட போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் காவலர்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்கிறோம் என்றார். போலீஸôருக்கு விற்பனை செய்யும் பட்டாசுக் கடை என்றால் உரிமம்பெறத் தேவையில்லை என்று எந்த அரசாணையும் இல்லை என்ற நிலையில் ஒரு மாவட்ட போலீஸ் உயரதிகாரி அப்பாவியாகப் பதில் அளிப்பது கேலிக்குரியதாக உள்ளது.  ÷யாருக்கு விற்றால் என்ன? விற்பனை என்றாலே உரிமம் பெற்றுத்தானே ஆக வேண்டும். காவல்துறை மட்டும் விதிவிலக்கா? பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறை அலுவலகமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அருகருகில்தான் இருக்கின்றன. கேண்டீனில் விற்கப்படும் பட்டாசின் விலை வெளிச்சந்தையைவிடக் குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல், அவர்களின் உறவினர், போலீஸôரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அனைவரும் அங்குதான் பட்டாசு வாங்குகின்றனர்.  சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க யாருக்கும் கேண்டீனில் ரசீது வழங்கப்படுவதில்லை. இவ்வாறு விற்கப்படுவதால், முதலீடு செய்து, இன்னபிற செலவுகளும் செய்து, பட்டாசுக் கடை வைத்தவர்களுக்கு, வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். சாதாரண நாளில் "இன்று அவருக்குத் தீபாவளி' என்று சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு. போலீஸôர் இவ்வாறு மலிவு விலையில் வெளி ஆள்களுக்கு விற்பதால், தீபாவளிநாள் கூட, பட்டாசு வியாபாரிகளுக்குத் தீபாவளியாக இல்லாமல் போய்விடுகிறது.  ÷பட்டாசுகளை விற்பனை செய்யும் போலீஸôரும் ஓர் உயிர்தான். அவரைப் பாதுகாப்பது போலீஸ் உயரதிகாரிகளின் கடமையும்கூட. விற்பனை செய்யப்படும் இடத்தில் தீயணைப்புக் கருவிகளோ, மணல், தண்ணீர் உள்ளிட்டவையோ வைக்கப்படுவதில்லை. தமிழகத்தில் இன்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு போலீûஸக் காட்டி சோறு ஊட்டி வளர்த்து வருவதால், குழந்தைகள் வளர்ந்த நிலையிலும் அதே பயத்தில் இருக்கின்றனர். இதனால் யாரும் காவல்துறை மீது புகார் தெரிவிப்பதில்லை. காவல்துறையினருக்கு உரிமம்பெற வேண்டும் என்று தெரிந்திருந்தும், "நம்மை யார் கேட்டுவிடப்போகிறார்கள்' என்ற எண்ணத்தால் உரிமம் பெற முயற்சிப்பதில்லை.  ÷இதுகுறித்து பட்டாசுக் கடை உரிமம் வழங்க வேண்டிய மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, "அப்படியா! போலீஸ் நல கேண்டீனில், பட்டாசு உரிமம் இல்லாமல் விற்கப்படுகிறதா? உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிடுகிறேன்' என்றார்.  பாமரன் உரிமம் இன்றி விற்றால் வெடிமருந்து சட்டத்தின்படி நடவடிக்கை. காவல்துறை விற்றால் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! இது எப்படி இருக்கு?    
கருத்துக்கள்

ட்டுரையாளர் நல்ல வினா தொடுத்துள்ளார். அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 16 அக்டோபர், 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி



தீபாவளி நமது கலாசாரத்தோடு ஒன்றி தொன்றுதொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்தச் சமயத்தவரது பண்டிகை என்றாலும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துகள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ள வேண்டும். தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல், விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாகக் கழியும் நாள்கள். வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதைக் காணலாம். தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாள்கணக்கில் தையல்காரரிடம் அலைவது, கூட்டுச்சேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதைக் காப்பாற்றி வெதுவெதுப்பாகப் பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சிப் பெட்டி முன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. "இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே' என்று ஏங்கத் தோன்றும். தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துகள். மாறிவரும் சமுதாயச் சூழலில் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது. குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் குறைவில்லாமல் தொடர்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20,000 தீ விபத்து சம்பந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008-ம் ஆண்டு 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் 393. சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008-ம் ஆண்டு பட்டாசு வெடி தீ விபத்தால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய நாளில், வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை. விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விதிகளையும் மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குத் தீ பாதுகாப்புத் தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்துக்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெற வேண்டும். 200 கிலோவுக்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக பட்டாசுப் பொருள்கள் தயாரித்தலுக்கும் 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக் கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர். பட்டாசுத் தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத ரசாயனப் பொருள்களை உயயோகிக்கக் கூடாது. ரசாயனக் கலவைகளைத் தேவையான அளவு தயார் செய்ய வேண்டும். மிதக்கலவைகளை ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக வைத்தல் கூடாது. ஒவ்வொரு ரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை தொடங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்புக் கிடங்கு, தயாரிக்கும் அறைகளைப் பார்வையிட வேண்டும். வேண்டாத பொருள்களும், விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலையைத் தொடங்கக்கூடாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. ஓர் அறையில் நிர்ணயிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாசுப் பொருள்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலர வைக்க வேண்டும். இரும்புப் பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இரும்பு ஆணிகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இடி மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடிச்சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும். 2004-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் வரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 225 பேர் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ.68.60 லட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும் விதிகளைப் பின்பற்றாததாலும் ஏற்பட்டவை. பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்தபட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண், தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24-9-09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டடமும் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு காவல் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசுக் கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அவை: கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவுக்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்க வேண்டும். தாற்காலிகக் கடைகள் தீப்பிடிக்காத பொருள்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். 1998-ல் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஒலி, மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக்கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளைப் போட வேண்டும். அடுக்கு மாடிக் கட்டடத்தில் ராக்கெட் போன்றவற்றைக் கொளுத்தக்கூடாது. குடிசைப்பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம். பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிடக் கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும். பட்ட இடம் விகாரம் அடையும். எனவே, பாதுகாப்பு நமது கையில்தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது. வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டைப் பாதுகாப்பாக வைப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, தீ விபத்துகளைத் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உல்லாசமான தீபாவளி துன்பமில்லாத இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.
கருத்துக்கள்

இந்நிலப்பகுதி முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்குப் பல கதைகள் கட்டப்பட்டன. இராமர் அயோத்திக்குத் திரும்பிய பொழுது விளக்கேற்றி வரவேற்ற நாள் என்றனர் ஒரு சாரார். மகாவீரர் முழுத் துறவு அடைந்த நாளை விளக்கேற்றிக் கொண்டாடுவதாகச் சமணர் கொண்டாடினர். நரகாசுரன் கதை முற்றிலும் கட்டுக்கதையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *