I.I.T. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
I.I.T. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூன், 2012

தொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை

தினமலர்

உங்களின் சட்டையோ அல்லது கவுனோ, இலைகளைப் போல, வெளியில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடை உள்ளே இழுந்து, உங்களின் உடலுக்கு ஆக்சிஜனை தரும் என்ற தகவலை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒளிச்சேர்க்கை போன்ற செயலைச் செய்யும் இத்தகைய உடையை கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி-ஜி) மாணவர் உருவாக்கியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பலர் தொட்டு விளையாடி இருக்கும் தொட்டால் சிணுங்கி இலைகளுடன் நூலை ஒன்றிணைத்து இத்தகைய ஆடையை உருவாக்கியுள்ளார். விளையாடும்போது அணிவதற்கும், மிக சிக்கலான காலநிலைகளில் அணிவதற்கும் இந்த உடை மிகவும் ஏற்றது.

விருது: உயிரியல் தொழில்நுட்பத்திலான இத்தகையை ஆடையை தயாரித்ததற்காக, ராஜதேஷ் நாத் பார்பூயியா, 27, என்பவரும், கவுகாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு பேராசிரியர் பிரதீப் யம்மியாவரும், "சில்வர் டிசைன் விருதை' பெற்றுள்ளனர். டிசைனர்களுக்காக, ஐரோப்பிய டிசைன் சங்கம் இத்தாலியின் கோமோ நகரில் நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது. 36 பிரிவுகளில் புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளவர்களும், நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "தங்களின் தயாரிப்பான "உயிரி ஆடை'யானது, தொட்டால்சிணுங்கி தாவரத்துடன் வழக்கமான நூலைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிக செலவிலானது அல்ல' என்கிறார் கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் இந்த ஆண்டு வடிவமைப்பு பிரிவில் முதுகலைப் பட்டம் முடிக்கும் பார்பூயியா. "இந்த ஆடையானது வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மை கொண்டது. இந்த வகை ஆடையை அணிபவர், வியர்வையில் நனையாமல் இருப்பதோடு, ஆக்சிஜன் குறைவான இடங்களில், அதை சீர் செய்யும் வகையில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் தரும் தன்மையும் கொண்டது' என்றும் அவர் மேலும் கூறினார்.

நோக்கம் என்ன? பார்பூயியாவுக்கு இந்த ஆடை தயாரிக்க உதவிய யம்மியாவர் கூறுகையில், ""மாறும் தொழில்நுட்பத்திலான இந்த ஆடையைத் தயாரிக்க எங்களுக்கு ஆறு மாதம் ஆனது. கடந்த ஆண்டு மே மாதம்தான் இதைத் தயாரித்தோம். இயற்கையான முறைகளில் உள்ள அடிப்படையான மற்றும் புதுமையான விஷயங்களையும், செயற்கையான முறையில் அவற்றை எப்படி இணைத்து அமல்படுத்துவது என்பதையும் வெளிப்படுத்துவதே தயாரிப்பின் நோக்கம்,'' என்றார். பார்பூயியாவுடன் படிக்கும் மஞ்சுநாத் பூட்டா என்பவர், தெரு வியாபாரிகள் மற்றும் பொருட்களை கூவி விற்பவர்களுக்கான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய, மடக்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான அலமாரி ஒன்றைத் தயாரித்து, தேசிய புதிய கண்டுபிடிப்புகள் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- திலீப்குமார் சர்மா -

புதன், 8 ஜூன், 2011

எதற்கெடுத்தாலும்


எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட்டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே!...


இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதி இந்து ஏட்டில் ஒரு செய்தி.

சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன் அந்தத் தற்கொலை? படிப்பில் அக் கறையில்லையா? புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது.

பட்டமேற்படிப்பில் இறுதியாண்டு பயிலும் இந்த மாணவர் படிப்பில் படுசுட்டி - ஒரு பாடத்தில் கூடத் தோல்வி அடைந்த தில்லை.

கெட்டிக்கார மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டானாம்?

மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் பிரச்சினையே!. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே என்ற ஆத்திரம்.

எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட் டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே! என்னும் உயர்ஜாதி பார்ப்பனப் பேராசிரியர் களின் கேலி - கிண்டல்!

மாணவன் மன உளைச்சலுக்கு ஆளானான். அதன் விளைவுதான் இந்தத் தற்கொலை! அந்த மாணவன் பெயர் ஜஸ் பிரித்சிங். அண்ணன் மாண்டான் என்ற வுடன் அவரது தங்கையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணும் கணினி பாடப் பட்டதாரி.

இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பால்முகுந்த். டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் படிக்க வந்தவர். 2010 மார்ச்சில் தற்கொலை செய்து கொண்டார்-_ காரணம் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட அதே நிலைப்பாடுதான். உயர் ஜாதி பார்ப்பனர்களின் கீழிறக்கமான பேச்சுகள் -சாடல்கள்தான்.

எய்ம்சில் ஜாதி பார்த்து மதிப்பெண் போடுகிறார்கள் பார்ப்பனப் பேராசிரியர்கள் என்று குமுறும் உள்ளத்துடன் மாணவர் கள் கூறியதுண்டு. தாழ்த்தப்பட்ட மாண வர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 18 பேர் என்று இன்சைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டில்லி உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடிசைவாசி. ஜாதி நாகம் கொட்டிய நஞ்சால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் அய்.அய்.டி. என்ற ஒரு பெரிய அக்ரஹாரம் இருக்கிறது. அங்கும் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை. ஆந்திராவைச் சேர்ந்த நிதின்குமார் (சித் தூரையடுத்துள்ள குத்தளம்பட்டு சொந்த ஊர்.)

பெங்களூருவில் வளாக நேர் தேர்வில் (கேம்பஸ் இன்டர்வியூ) நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் தன் திட்ட அறிக்கையை முடித்துக் கொடுத்துவிட்டு பெங்களூருவுக்குச் சென்று சேர்ந்திடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான்.

ஆனால் பார்ப்பனப் பேராசிரியர் என்ன சொன்னாராம்? உன் பிராஜக்ட் ரிப்போர்ட் சரியில்லை. இன்னும் ஆறு மாதம் தங்கி யிருந்து அறிக்கையைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்கிறார். மாண வனின் ஆசைக் கோட்டை அடியோடு நொறுங்கி விழுந்தது.

கடந்த மார்ச் 24 ஆத் தேதிதான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டு, பெற்றோர்கள் அதிர்ந்து ஓடி வருவதற்குள் நிதின் தன் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளான்.

நிதினின் மனக்கோட்டை மட்டுமல்ல; அவரின் பெற்றோர்கள் தங்கள் மனதில் நீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கிற கனவுகள் எல்லாம் அனலில் பட்ட பட்டாசாக வெடித்துச் சிதறிவிட்டதே!

இட ஒதுக்கீடு வாகனத்தில் ஏறியா எங்கள் கோட்டைக்குள் நுழைகிறீர்கள்? நீங்கள் எப்படி படித்து, எப்படி தேர்வு எழுதி, எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் பாணியில் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் ஆதிக் கம் செலுத்தும் பார்ப்பனப் பேராசிரியர்கள் நடந்து கொள்கிறார்கள்.

போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்கள் நயவஞ்சகமாக நசுக்கி வருகிறார்கள்.

இந்தியா முழுமையும் இயங்கி வரும் அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய். எம். போன்ற கல்வி நிறுவனங்களின் செயல் பாடுகள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துப் படிக்கும் மாணவர்களுக் கான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழுவின் சிபாரிசு கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்களை - திறந்த போட்டியில் இடம் அளிக்காமல், அவர் களுக்கான எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவுகளில் இடம் அளித்து, ஏற்கெனவே இந்தப் பிரிவுகளில் இடம் பெற்றவர்களை வெளியேற்றும் சமூக அநீதி பல ஆண்டு காலமாக நடை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதி மன்றம் இப்பொழுதுதான் இதில் தெளிவான வழியைக் காட்டியிருக்கிறது. இதன் காரணமாக இடைப்பட்ட காலங் களில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் சூழ்ச்சியால் பறிக் கப்பட்டனவே. இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? விதிகளை மீறி நடந்து கொண் டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் படவில்லை?

டில்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் மார்க்) நிர்ணயத்துள்ள முறை மிகக் கொடுமையானது -_ விஷமத்தனமானது!

திறந்த போட்டியில் கடைசி மதிப்பெண் ணிலிருந்து 10 மதிப்பெண்களைக் குறைத்து, அதுதான் இவர்களுக்கான கட்ஆஃப் மார்க் என்று அவர்களாகவே எந்த வித விதிமுறைகளுக்கும் ஆட் படாமல் ஆரிய அட்டகாசமாக நடந் துள்ளனரே!

டில்லி உயர்நீதிமன்றம் தலையில் குட்டியதற்குப் பிறகுதானே சரியான இடத் துக்கு சமூக நீதித் தேர் நகர்ந்து வந்துள்ளது.

இடைக்காலத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களுக்கு என்ன நட்ட ஈடு - என்ன பரிகாரம்? தவறு செய்த நிருவாகி களுக்கு என்ன தண்டனை?

சட்டங்களையும், விதிமுறைகளையும் குழியில் தள்ளி நயவஞ்சகமாக ஆதிக்கம் செலுத்தலாம் என்ற ஒரு போக்கு ஆரியப் பார்ப்பனர்களிடம் குடி கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. புரிந்து கொள்ளும் தன்மையோ போராடும் உணர்வோ இல்லை.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்; திராவிடர் கழகத்தின் பணியும் அப்படியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இயக்க ஏடுகளும், இதழ்களும் பரவியாக வேண்டும். வெளி மாநிலங்களில் தி மாடர்ன் ரேஷனலிஸ்டு அதிக அளவில் பரவும் வகை செய்தல் பெருக வேண்டும்.

தோழர்களே, நமது கழகத்துக்கு, நமது தொண்டர்களுக்கு நமது தலைவருக்கு பணி மேலும் மேலும் கூடிக் கொண்டே போகின்றது. தயாராவீர்! தயாராவீர்!!

----------- மின்சாரம்,விடுதலை ஞாயிறு மலர், 04-05-2011



வியாழன், 21 ஏப்ரல், 2011

Mis-allotment of I.I.T.Land : ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?


யாருடைய ஆட்சியில் யாருடைய தலையீட்டில் தாரை வார்க்கப்பட்டது எனத் தெளிவாகக் கூறலாம் அல்லவா? வேண்டியவர்கள் என்றால் மறைப்பது; வேண்டாதவர்கள் என்றார் ஊதிப்பெருக்குவது என்னும் நடைமுறையைத் தினமணி பின்பற்றுகிறது என்னும் அவப்பெயர் தினமணிக்கு வரக்கூடாது அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?

சென்னை, ஏப். 20: சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.  இந்த இடத்தில் தற்போது பல்வேறு நவீன அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், வணிக வளாகமும் கட்டப்பட இருக்கின்றன.  கடந்த 1993-ம் ஆண்டு சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. பெயரில் தரமணியில் உள்ள 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தமிழக அரசு தன்னிச்சையாகக் கையகப்படுத்தியது. பிறகு ஐ.ஐ.டி.யின் கோரிக்கையை ஏற்று ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்காக சுமார் 11 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பியளித்திருப்பதாகத் தெரிகிறது.  கையகப்படுத்தபட்ட 40 ஏக்கர் நிலமும் உண்மையில் தங்களுக்கே சொந்தமானது என ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கே தெரியாது என்கிற அதிர்ச்சிகரமான தகவலும் அம்பலமாகியிருக்கிறது.  கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டது. மீதி நிலம் காலியிடமாகக் கிடந்தது.  இந்த நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் ஐ.ஐ.டி. ஈடுபட்டது. இதற்காக சுமார் 10 ஏக்கர் இடம் தேவை என்று கடந்த 2001-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஐ.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  ஐ.ஐ.டி. கேட்ட நிலம் அந்த 40 ஏக்கர் நிலத்துக்குள்தான் வருகிறது. இந்த விவரமும் ஐ.ஐ.டி.க்குத் தெரியாது.  கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரலில் அந்த 40 ஏக்கரில் அடங்கிய 24.78 ஏக்கரில் பல்வேறு ஆய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில் எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இது எம்ஜிஆர் திரைப்பட நகரை ஒட்டி அமைந்திருக்கிறது. இதில்தான் சுமார் 10 ஏக்கர் நிலத்தை ஐ.ஐ.டி. கேட்டது.  இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா தொடர்பாக அரசு அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நில ஆவணங்களின் படி கனகம் கிராமத்தில் உள்ள அந்த 40 ஏக்கர் நிலமும் ஐ.ஐ.டிக்கு சொந்தமானது என்பதை தனது கடிதத்தில் அவர் குறிபிட்டிருக்கிறார்.  ஐ.ஐ.டிக்கு தெரியாமலேயே இந்த நிலம் எப்படி குத்தகைக்கு விடப்பட்டது என்றும் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த நிலத்தில் 10 ஏக்கரை ஐ.ஐ.டியின் பயன்பாட்டுக்கு ஒதுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் தரமணியில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. முன்பு சென்னையின் ஒதுக்குப்புறமாக இருந்த இந்த இடம் இப்போது கிழக்குக் கடற்கரை சாலை பகுதி அடைந்துள்ள பிரமாண்ட வளர்ச்சியால் சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.  வருவாய்த் துறையின் ஆவணப் பதிவுகளின்படி கனகம் கிராமத்துக்கு உள்பட்ட இந்த நிலம் இப்போது வரை சென்னை ஐஐடி-க்கு சொந்தமானதாகவே இருக்கிறது. ஆனால் அரசு அதனை தன்னிச்சையாக கையகப்படுத்தியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் அது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று ஐஐடி நிர்வாகத்திற்கே தெரியாமல் இருந்ததுதான்.  இந்த நில விவகாரம் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் 2001 ஆகஸ்டு முதல் 2007 அக்டோபர் வரை அரசுக்கு பலவேறு கடிதங்களை எழுதியுள்ளது.  கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி, சுமார் 11 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் 6 ஆண்டுகள்வரை போராடியிருப்பதாகவும் தெரிகிறது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஐ.ஐ.டி.க்கு அந்த நிலம் கிடைத்திருக்கிறது. அந்த இடத்தில்தான் 12 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்களுடன் கூடிய போஷ் ஆராய்ச்சிப் பூங்காவை ஐ.ஐ.டி நிறுவியிருக்கிறது.  அந்த 40 ஏக்கரில் சுமார் 25.27 ஏக்கர் நிலம் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ட்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் ராமானுஜம் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்துக்காக 99 ஆண்டு குத்தகைக்கு விட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் பிரமாண்டமான 150 குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுர அடி பரப்புள்ள வணிக வளாகம், 100 சேவைக் குடியிருப்புகள், 1500 பேர் அமரக்கூடிய சர்வதேச மையம் ஆகியவை அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.  சென்னை ஐ.ஐ.டி.க்கு தனக்கு சொந்தமான நிலம் எது என்பது தெரியாமல் ஒருபுறம் இருக்கட்டும். சென்னை ஐ.ஐ.டிக்கு சொந்தமான இடத்தைத் தமிழக அரசு, ஐ.ஐ.டி.யின் ஒப்புதல் பெறாமலே, 25.27 ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ராமனுஜம் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 99 ஆண்டு குத்தகைக்கு எப்படி வழங்கியது?  24.27 ஏக்கர் நிலம் என்பது 460 கிரவுண்டு. தரமணியில் இன்று ஒரு கிரவுண்டு நிலத்தின் சந்தை விலை குறைந்தது 3 கோடி ரூபாய். அப்படிப் பார்த்தால் இடத்தின் மதிப்பு மட்டுமே ஏறத்தாழ 1380 கோடி ரூபாய்!  கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்திடும் விசித்திரம் சென்னையில் தமிழக அரசால் அரங்கேற்றப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் செயலை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.  நாங்கள் ஐ.ஐ.டி மாணவர்கள் என்று பெருமை தட்டிக்கொள்பவர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்களே, தங்களது கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் தனியாருக்கு குடியிருப்புகளும் வணிக வளாகமும் கட்டி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக தாரை வார்க்கப்பட்டிருக்கிறதே, இதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவார்களா?  இந்தப் பிரச்னை இப்போதாவது வெளிவந்திருக்கிறதே, ஐ.ஐ.டி. நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக தமிழக அரசு தனியாருக்குக் கொடுத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்குமா?  இன்றைய சந்தை விலையில் அந்த இடம் விற்கப்படுமேயானால், இரண்டு மூன்று ஐ.ஐ.டி.களை உருவாக்கலாமே, அதைப்பற்றி யாராவது கவலைப்படப்போகிறார்களா?  இந்த தாரை வார்ப்பு முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது அதிகாரிகள் மட்டும்தானா, இல்லை அரசியல்வாதிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் கூடவா?