சென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஆளுநர் பர்னாலா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் சமுதாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த சிந்தனைவாதியாகவும், ஆசிரியராகவும் விளங்கி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். கற்பித்தலில் புதிய கோணத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அவர். அவரது கொள்கைகள், கோட்பாடுகள் இன்றளவும் ஆசிரியர் மற்றும் இளைய சமுதாயத்துக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆசிரியர் தினமான இந்த நாளில் நம்மை தகுதிவாய்ந்த குடிமக்களாக உருவாக்கிக் கொடுத்த நமது குருக்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்று பர்னாலா கூறியுள்ளார்.முதல்வர் கருணாநிதி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் சீரிய முறையில் கல்வித் துறையில் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு என பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணிபுரிந்துவரும் இந்த வேளையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின விழா சிறப்புடன் நிகழவும், ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழவும் உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: கல்விக் கண் திறக்கும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ-மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள். இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணிதான். ஏழை, எளிய மாணவ-மாணவியர் கல்வி பயில தடையாக இருப்பது வறுமை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும். ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும் என்று ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 4:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/5/2010 4:43:00 AM
(எடுக்கப்பட்ட செய்தியை மீண்டும் பதிகிறேன்.)
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 2:57:00 AM
9/6/2010 2:57:00 AM