சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூலை, 2013

47 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த இலங்கை உறவுகள்

இலங்கையில் பிரிந்து மதுரையில் சந்தித்த உறவுகள் :47 ஆண்டுகளுக்கு ப் பின் நெகிழ்ச்சி

புதூர் : இலங்கையில் குடும்பச் சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார்.பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. 1966ல், கண்ணையா இறக்க, செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரணமாக, வள்ளியை தவிர்த்து, மற்ற பிள்ளைகளுடன் மீண்டும் இந்தியா திரும்பினார். காலப்போக்கில், வாரிசுகள் திருமணம் செய்துகொண்டு, தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் குடியேறினர். மகள் வள்ளியின் ஞாபகம் தினமும் குருவம்மாளை வாட்டினாலும், பண வசதி இல்லாததாலும், தகவல் தொடர்பு விழிப்புணர்வு அறியாததாலும், இலங்கையில் வசிக்கும் அவரை தொடர்புகொள்ள முடியாதமல் அவரது உயிரும் பிரிந்தது. விளைவு... இலங்கையில் இருக்கும் வள்ளி, தனது சகோதர, சகோதரிகளை 47 ஆண்டுகள் பிரிய நேரிட்டது. மீண்டும் தொப்புள்கொடி உறவு: வள்ளியின் சகோதரிகளில் ஒருவரான கிருஷ்ணம்மாள்,56, பாளையங்கோட்டையில் வசிக்கிறார். இங்கு உறவினரை சந்திக்க, இலங்கையை சேர்ந்த சரஸ்வதி, 2 மாதங்களுக்கு முன்பு வந்தார். இவர், வள்ளி வசிக்கும் பகுதியை சேர்ந்தவர். அப்போது, யதார்த்தமாக கிருஷ்ணம்மாளுடன் பேசும்போது, வள்ளி பிரிவை சொல்லி வருந்தினார். ""இலங்கை சென்று, வள்ளியை தேடி உங்களுடன் சேர்த்து வைக்கிறேன்,'' என நம்பிக்கையூட்டிய சரஸ்வதி, இலங்கை சென்று, வள்ளியை கண்டுபிடித்து, கிருஷ்ணம்மாளுக்கு தகவல் தெரிவித்தார்.47 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கிடைத்த சொந்தங்களை பார்க்க துடித்த வள்ளி, விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை வந்தார். ஆத்திக்குளத்தில் உள்ள கிருஷ்ணம்மாள் மகள் மோகனம்பாள்,32, வீட்டில், சகோதர, சகோதரிகளை (ஜெயலட்சுமி,65, கிருஷ்ணம்மாள் 56, தேவி,52, பரமேஸ்வரி,48, மாணிக்கம்,61, வசந்தகுமார்,58, அருணாசலம்,50) சந்தித்து, ஆனந்த கண்ணீர் வடிக்க, உறவுகள் தேற்ற, பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.வள்ளி கூறுகையில், ""வாழ்க்கையில் எனது தங்கை, தம்பிகளை பார்ப்பேன் என, கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் பேரன், பேத்தி உட்பட மொத்தம் 65 பேர் ரத்த பந்தங்கள். அனைவரையும் பார்த்தபிறகே, இலங்கை திரும்ப முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

கலைஞருடன் மத்திய அமைச்சர் மூவர் சந்திப்பு - பயன் இன்று தெரியும்





http://img.dinamalar.com/data/gallery/gallerye_00150098_669961.jpg




சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், குலாம்நபிஆசாத் ஆகிய மூவரும் நேற்று மாலை இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர். நீண்ட நேரம் பேசியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடந்த இந்த, "டிராமா' இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 .

இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். "இந்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும்' என, குலாம்நபிஆசாத் கூறி விட்டு, டில்லிக்கு பறந்ததால், இந்த சந்திப்பு, "புஸ்ஸ்' ஆகிவிட்டது. இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க்குற்றம், இனப்படுகொலை என, அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா. மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தனித்தனியாக தி.மு.க., தலைவர் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

இலங்கைக்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., நீடிப்பது சந்தேகம் என, கருணாநிதி மிரட்டல் விடுத்தார். மேலும், தன்னை சமரசம் செய்வதற்கு, டில்லி மேலிடம் சாபில் தூதர் யாரும் வரவில்லை என்பதால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, சோனியா சார்பாக, கருணாநிதியை சமரசம் செய்து, ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., வை நீடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம்நபிஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் வந்தனர். கருணாநிதியுடன், மத்திய அமைச்சர்கள் மூவரும், இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர்.


அவர்களின் சந்திப்பு முடிந்த பின் வெளியே வந்த குலாம்நபிஆசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி, இரு கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்களில் உள்ள விவரங்கள் குறித்து கருணாநிதியிடம் விவாதித்தோம். தீர்மானங்களில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி முன் வைத்தார். அவரது கோரிக்கையை பிரதமர், சோனியாவிடம் எடுத்துச்சொல்லுவோம். அவர்கள் இது குறித்த முடிவை அறிவிப்பர், என்றார்.
கருணாநிதி கூறியதாவது: இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக பிரகடனப்படுத்த வேண்டும். இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றி, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை தேவை ஆகிய, இரு கோரிக்கைகளை பார்லிமென்டில் உடனடியாக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களுடைய ஒப்புதல் நிறைவேற்றினால் தான் காங்கிரசுக்கும், தி.மு.க., வுக்கும் உள்ள இறுக்கம் குறையும், என்றார்.


மத்திய அரசு முடிவு எப்போது? "இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் இறுதி வரைவு தீர்மானத்தை படித்த பின், இந்த விஷயத்தில், மத்திய அரசு, தன் முடிவை அறிவிக்கும்' என, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார். அவர் தெரிவித்ததாவது: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலை எடுக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது. தீர்மானத்தின் நகல், இன்று கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம், அவர் விளக்குவார். இதன்பின், அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
அரசுக்கு ஆபத்து இல்லையாம்: ""அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என்ற, தி.மு.க.,வின் அச்சுறுத்தலால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரசு நிலையாக உள்ளது. ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிக்கும்,'' என, காங்., தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி நேற்று கூறினார். டில்லியில் அவர் மேலும் கூறுகையில், ""தி.மு.க.,வுடன் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது தீர்க்கப்படும் என, நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான, தீர்மான விவகாரத்தில், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே, மத்திய அரசு முடிவெடுக்கும்,'' என்றார். இதற்கிடையில், இலங்கை தமிழர் விவகாரம், தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளதால், இலங்கையுடனான, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான, செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை, வரும், 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.