காவிரி உரிமை மீட்புக் குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிரி உரிமை மீட்புக் குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 செப்டம்பர், 2021

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! – பெ. மணியரசன்



ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை!

தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு முடிந்துவிட்டது.

ஆனால், நாளேடுகள் பலவற்றில் கருநாடகம் தமிழ்நாட்டிற்கு 33.7 ஆ.மி.க. (TMC) தண்ணீர் திறந்துவிடக் காவிரி ஆணையம் “உத்தரவு” என்று செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்குசேனா தலைமையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கடந்த 2021 சூன் மாதத்திலிருந்து செட்டம்பர் 26 வரை கருநாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. (TMC) பாக்கி உள்ளது. அதை உடனே திறந்துவிடச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் காவிரி ஆணையக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய எசு.கே. அலுதார் அவ்வாறு ஆணையிடவில்லை. அவர் என்ன கூறினார் என்பது ஆங்கில இந்து நாளேட்டில் (28.09.2021) வந்துள்ளது.

அந்த ஏட்டின் மூத்த செய்தியாளர் டி. இராமகிருட்டிணன் தொலைப்பேசியில் எசு.கே. அலுதாரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன விடை அப்படியே இதோ :

“குறிப்பாக எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடச் சொன்னீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டும் அவர் (எசு.கே. அலுதார்) அது பற்றிச் சொல்ல மறுத்துவிட்டார்.

ஆனால், அவர் ஒரு தகவலைச் சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்பிட்டால், மேட்டூரில் இந்த நாளில் இருக்க வேண்டிய நீர் இருப்பு இல்லை. இக்காலத்தில் சராசரியாக 40 முதல் 45 ஆ.மி.க. (TMC) வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பற்றாக்குறை (deficiency) இருக்கிறது. அதையாவது கருநாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்” என்று ஆங்கில இந்து ஏடு கூறுகிறது.

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தண்ணீரின் அளவில், உச்ச நீதிமன்றம் ஓரளவு குறைத்து 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரைக் கருநாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. பற்றாக்குறை உள்ளது. ஆனால் காவிரி ஆணையத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தாகக் கூறியது அதற்கும் குறைவான குத்துமதிப்பான அளவுத் தண்ணீர். ஆணையத்தின் இந்தக் குத்துமதிப்பான “பரிந்துரையையும்” கருநாடக அரசு செயல்படுத்தப் போவதில்லை.

ஏற்கெனவே ஒரு தடவைகூட காவிரி ஆணையத்தின் “பரிந்துரையை”க் கருநாடகம் செயல்படுத்தியதில்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை.

தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை; உருப்படியான சனநாயக நடவடிக்கையும் எடுத்ததில்லை!

காவிரியை நம்பி வாழும் பல கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் பொறியமைவாகவே, தன்னாட்சி அதிகாரமோ, தனியான முழுநேரத் தலைவரோ, தனி அலுவலகமோ இல்லாமல் நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இப்போது ஆணையத்தின் முழுநேரத் தலைவராக அதே எசு.கே. அலுதாரை இந்திய அரசு அமர்த்தி இருக்கிறது. அதே அல்தார் வரும் நவம்பர் 30-இல் பணி நிறைவு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஓய்வுக்காலப் பரிசாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளத. இஃது என்ன உள்சூழ்ச்சியோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

இந்த மோசடி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள முழுநேர ஆணையத்தை அமைத்திட இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உடனே கோரிக்கை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து மக்களும் காவிரி மீட்பு எழுச்சி நாள் ஒன்றை உடனடியாகக் கடைபிடித்து, அந்நாளில் குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================

ஞாயிறு, 3 ஜூன், 2018

காவிரி ஆணையம் அமைக்கவில்லை! – பெ. மணியரசன்

 அகரமுதல



காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்!

இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

பெமணியரசன் அறிக்கை!


உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு  அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
இப்பொழுது மூன்றாவது முறையாகச், செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத்தலைவராக அமர்த்துவது என்பதுகாவிரி மேலாண்மை ஆணையம் நடுவண்நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதைஉறுதிப்படுத்துவதாக உள்ளது.
காவிரித் தீர்ப்பாய முடிவுகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண்நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாகக் காவிரி ஆணையத்தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும்முயற்சியாகும்!
யு.பிசிங்கு நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் ‘வெற்றி!’க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளைச் செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery