: Dr.S.Ilakkuvanar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
: Dr.S.Ilakkuvanar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

புரட்சியாளர்கள் - பெரியார் Periyar by Dr.S.Ilakkuvanar



புரட்சியாளர்கள்

பெரியார்

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

இன்று பெரியார் எனின், யாவரும் அவர் ஈரோட்டு வே. இராமசாமி என அறிவர். பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாரதியார் பாடினாலும் அது நிறைவேறியது பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் என்பது உலகறிந்த உண்மை. நான்கு வகை வருணமுறை நிலை நாட்டப்பட்டு இந்நாட்டுத் தொல்குடிப் பெருமக்கள் எல்லாரும் சூத்திரர் என்று அழைக்கப்படும் இழிநிலை வேரூன்றி இருந்தது. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டத் தமிழ்ப் பெருமக்கள் சாதி வேறுபாடுகளால் அலைப்புண்டு தீண்டாமை, பாராமை முதலியவற்றிற்குப் பெருமதிப்புக் கொடுத்து நாயினும் கடையராய் நலிந்து வாழ்ந்தனர். பிராமணியம் மேலோங்கித் தனியாட்சி புரிந்தது. மூடப்பழக்க வழக்கங்கள் எதிர்ப்பின்றி எங்கும் எத்துறையினும் இறுமாந்து கோலோச்சின. அறியாமை இருள்  மறைந்திருந்தது. பெரியார் அவர்கள் பிறவிப் புரட்சியாளர். நாட்டுரிமைக்காகக் குடும்பத்தோடு போராடி வந்த அவர், சாதிவேறுபாட்டுக் கொடுமைகளை ஒழிக்கப் போர்க்கோலம் பூண்டு தன் மதிப்பு இயக்கம் கண்டு அயராது உழைத்தார். அவர் உழைப்பின் பயனே இன்று பிராமணணும் பறையனும் ஓரிடத்தமர்ந்து உரையாடி உண்ணும் காட்சி.

  பெரியார் அவர்களின் பெரும் புரட்சி  தோன்றிலதேல் இன்று தொடர் வண்டிகளில் சாதிக்கொரு பெட்டிகள் சேர்க்கப்பட் டிருக்கும். ஆட்சித்துறை தலைவர்களும், ஆசிரியர்களும் பிராமண குலத்தையே சார்ந்தவர்களாயிருப்பர். உயர்திரு. பக்தவச்சலனார் முதல் அமைச்சராகவும், உயர்திரு. காமராசர் அ.இ. காங்கிரசு தலைவராகவும் ஆகி இருக்க முடியாது. இன்று எங்கு நோக்கினும் பிராமணர் அல்லாதவர்களே தலைமை இடங்களில் வீற்றிருக்கும் காட்சியைக் காண இயலாது. புத்தரால் அழிக்க முடியாத பிராமணியம் பெரியாரால் செல்வாக்கு ஒழிந்தது. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று அறவுரை மொழிந்தார், உலகப் பொதுமறையருளிய திருவள்ளுவர். அவ்வறவுரையைச் செயலுக்குக் கொண்டுவந்தார் நம் பெரியார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதியார். அக் கூற்றை நிறைவேற்றும் அரும் பணியில் தலைமை பெற்றார் தமிழர் தலைவராம் பெரியார். இன்று சாதிகள் முழுவதும் ஒழியிவில்லையாயினும் சாதிப் பாகுபாடுகள் ஆங்காங்குத் தோன்றி மக்களாட்சியை மாசுபடுத்தினும் இனி அவை என்றும் நிலைத்திருக்க இயலாத நிலை தோன்றி விட்டது. இதற்குக் காரணம் பெரியார் அவர்களின் பெரும் புரட்சியேயாகும். அப் பெரியாரின் புகழ் மக்கள் உள்ளவரையில் மறையாது. மன்பதைப் புரட்சி செய்த மாபெரும் வீரர் வாழ்க.
[தண்டமிழைப் போற்றிய பாரதி இன்றில்லை; ஆயினும் அவர் கனவு நனவாகி வருகின்றது. பெரியார் தோற்றுவித்த மன்பதைப் புரட்சி மக்களாட்சி வெற்றி பெறத் துணைபுரிந்து வருகின்றது. அறிஞர் அண்ணா தொடங்கியுள்ள மொழியுரிமைப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்திய அரசியல் தலைவர்களை எண்ணிப் பார்த்துச் செயலாற்றத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. புரட்சியாளர்கள் பெருந் தொண்டுகள் நம்மைப் புத்துலகுக்கு அழைத்துச் செல்வதாக. நம் நாடு புதுமை நலம் பெற்றுப் பழமையைப் போற்றிப் பாரில் ஈடு இணையற்று வாழ்வதாக. ஓங்குக புரட்சி. உயர்க தமிழ் நலம். மக்களினம் ஒன்றுபட்டுமாண்புடன் வாழ்வதாக.
            செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
            நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
            செய்த புரட்சிகளைச சீர்தூக்கிப் போற்றுமின்
            எய்துமின் இன்பமெலாம் இங்கு. ]
குறள்நெறி(மலர்1 இதழ்17): 15.09.1964

சனி, 17 நவம்பர், 2012

பேராசான் இலக்குவனாரே !

பேராசான் இலக்குவனாரே !

பதிவு செய்த நாள் : 17/11/2012
நட்பு இணைய இதழ்

அய்யா.வணக்கம்.
” நம் செந்தமிழைச் சிறை பிடிப்பதை விடுத்து
என்னைச் சிறை பிடியுங்கள் ; அதுவே நான் பெறும்
பேறு ஆகும் ” எனக்கூறி சிறைஏகிய மொழிப் போராளி
டாக்டர் இலக்குவனாரின் பிறந்தநாள் நாளை (17)அவர்
பற்றிய கவிதை ஒன்று தங்களுக்கும் நண்பர்களுக்கும்
அனுப்பியுள்ளேன்.
அவரைச் சிறை பிடித்தபோது புலவர் மணி
இளங்குமரனார் ” கன்னித் தமிழ் காக்க கால்நடைப்
பயணம் செய்தால் தமிழ்ப் புலவர் காலை வெயில் சுட்டு
விடும். பட்டுப் போகும் ஆட்சி எனச்சிறை பிடித்து
விட்டனரோ?” என்னும் பொருளில் எழுதியது என்
நினைவுக்கு வருகிறது.
பெ. ஆ. 134 தொ. ஆ. 2877 தி. ஆ. 2043
நளி ( கார்த்திகை ) 02 ( 17 – 11 – ‘ 12 )
நெஞ்சம் நினைக்கிறது !
சீர்பெற் றிலங்கும்நம் செந்தமிழ் வளர்ச்சிக்கு
வேர்ஆக இருந்தபன் னூறு அறிஞர்களில்
தூர்ஆக விருந்து துலங்கச் செய்தாரில்ஆணி
வேர்ஆக விளங்கிமொழிப் போராளி ஆனார்!
வாய்மை மேடு வளர்ந்த தூய்மையாளர்
காய்(மை )க் கருத்தைக் கனவிலும் நினையார்
பொய்மை மனத்தாரை புறமொதுக்கும் மெய்மையாளர்
தாய்மை குணம் தாங்கும் தகைமையாளர்!
வாழும்தம் வாழ்க்கை கீழ்ஆயினும் தாழார்
சூழும்புகழ்த் தமிழுக்கு சூழும் தாழ்வையோ
ஆழக்குழி புதைக்க வேழமென விளங்குவார்
தாழாத் தமிழ்க்குருதி பாலாகப் பாய்வதால்!
தொங்கிச் சுழலுமிப் பூ நிலத்தில்
தங்கி வாழும் மங்காத் தமிழர்பேசிய
இங்கித மானமுதன் இன்மொழி தமிழேஎன
மங்கிய அறிவுடையோர் மனதில் பதியவைத்தார்!
காசுக்காக இத்ழ்நடத்தும் காரிகை மனத்தாரிடையே
கூசாமல் நடத்தினாரே குறள் நெறியிதழ்
ஏசாமல் ஏசினர் ஏத்திபபிழைப் போர்சிலர்
காசு பெரிதல்ல கனித்தமிழே பெரிதென்றாரே !
இருநான்கு ஆண்டுகள்அப் பெருமகனுடன் நெருக்கம்
இருக்க மாயிருந்த இன்தமிழ் உணர்வைப்
பெருக்க வைத்தார்: பெருக்கிடச் சொன்னார்
உருக்கமுடன் அன்னார் உரைத்ததை மறவேன் !
எத்தனையோ அறிஞர்கள் சத்தனைய புத்தகங்கள்
மொத்தமாக எழுதினும் சித்தம் ஈர்க்கும்
சத்தானதொல் காப்பியத்தை சரிமொழி யாக்கம்
முத்தமிழ்ப் பேராசான் முழுதாய்ந்து எழுதினாரே !
” ஏல்”பல்கலைக் கழகத்திற்கே ஒல்காப்புகழ் நம்அண்ணா
தொல்கிழவன் காப்பியத்தை இல்கிழவன் படைத்தையே
நல்கி அவர்தம் நல்லறிவு பெருக்கவும்நம்
நந்தமிழ் வரலாற்றை நன்குணர வைத்தாரே !
நூறோடு ஈராண்டு நிறைவுற்ற பிறந்தநாள்
வேர்ஆக விருந்து விளங்குகின்றார் யார்?தமிழ்ப்
போராளி யாகவாழ்ந்து சீராகததமிழ் நெஞ்சக்குருதி
நீராகஇலங்கி ஓடும் பேராசான் இலக்குவனாரே !
என்றும் நினைக்கும் நெஞ்சம்
மா. கந்தையா – செயம்
மதுரை .