(தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமாதொடர்ச்சி)

நாற்றங்கால்

தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்:

நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள்.

0

நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன்.

ஒருசிலர் மட்டும்தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு சிலர் படிக்க நேரமில்லை என்கின்றனர். பிறகு படிப்பதற்காகச் சேர்த்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். சேர்த்து வைத்துப் படிப்பதா? படித்து விட்டுச் சேர்த்து வைப்பதா? என்பது அவரவர் முடிவு. ஆனால் இப்படிச் சொல்கிறவர்கள் பெரும்பாலும் படிக்கப் போகின்றவர்களே அல்லர். இன்று நேரமில்லை, நாளை படிக்கிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். மொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிப்பதாகச் சொல்வதை நம்புவதற்கில்லை. அதனால் பெரிய பயனும் இல்லை. ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதான்.

இயக்கத் தோழர்களிலும் கூட தாழி மடல் படிப்பது, அதில் வரும் உரையாடல்களில் பங்கேற்பது என்பதில் அக்கறை இல்லாமல் முகநூலில் வேறு எதெதற்கோ நேரம் செலவிட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தாழியில் எழுதியதைப் படிக்காமல் அதே பொருள் குறித்து என்னிடம் தொலைபேசியில் ஐயந்தெளியும் முயற்சி எனக்கு எரிச்சலூட்டவில்லை. இனிமேலாவது படியுங்கள் என்றுதான் பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உரையாடித்தான் தெளிவுண்டாக்க வேண்டுமென்றால் தாழி எதற்கு?

தாழி என் அரசியல் முயற்சிகளின் இறுதிக் களம். படிக்கவும் புதிதாக ஒருசிலவற்றைக் கற்கவும் விரும்புகிறவர்களுக்காகத்தான் எழுதுகிறேன். பொழுது போகாமல் இந்த வேலையைச் செய்யவில்லை. பொழுதுபோக்கிற்காகப் படிக்கிறவர்களுக்கும் தாழி பொருத்தமில்லை. கொல்லன் பட்டறையில் வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதில்லை.     

நான் கேட்க விரும்புவது: எனக்கு எழுத நேரம் கிடைக்கிறது. உங்களுக்குப் படிக்க நேரமில்லையா? தோழர் சமந்தாவுக்கு நாள்தவறாமல் எழுத நேரம் கிடைக்கிறது. தாழி அணியில் என்னோடிருந்து உழைக்கும் தோழர்கள் மகிழனுக்கும் தமிழ்க் கதிருக்கும் நேரம் கிடைக்கிறது. உங்களுக்குப் படிக்க நேரமில்லையா?

எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும்: “நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை” என்று கண்ணதாசனைப் போல் என்னால் பாட முடியாது. பாரதியைப் போல் காலனை அருகில் கூப்பிட்டு எட்டி உதைக்கவும் என்னால் முடியாது. உயிருள்ள வரை, உடலில் தெம்புள்ள வரை என் கடமையை ஆற்ற வேண்டும் என்றுதான் மீண்டு வர முடியாத தாழிக்குள் என்னை அமர்த்திக் கொண்டு வேலை செய்கிறேன். இந்த உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது இல்லையேல் எப்போதுமில்லை ()NOW OR NEVER. இல்லையேல் பிறகு ஒரு நாள் “இவன் வாழ்ந்த போது பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோம்” என்று வருந்தும் நிலை உங்களில் ஒருசிலருக்காவது வரும்.

தாழி மடல் அனுப்புங்கள் என்று கேட்டு மின்னஞ்சல் முகவரி கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் அனுப்புகிறோம். படிப்பதில் ஆர்வமில்லாதவர்கள் இந்தப் பட்டியலிலிருந்து விலகிக் கொள்ளலாம். சும்மாதானே கிடைக்கிறது? வரட்டுமே! என்ற மனநிலை வேண்டா.

தாழி மடலைப் படித்து இலட்சம் பேர், ஏன், ஆயிரம் பேர் சரியான நிலைப்பாடுகளுக்கு வந்து சேருவார்கள் என்ற மயக்கம் எனக்கு இல்லை. ஒரு நூறு பேர், அல்லது பத்துப் பேராவது தாழி படித்துக் குமுக உணர்வும் குமுக அறிவும் பெற்று நம் தமிழ்க் குமுகத்தையும் அதன் வழி உலகையும் மாற்றுவதற்கு அறிவும் துணிவும் ஈக உணர்வும் பெறுவார்கள் என்றால் அதுவே தாழியின் வெற்றியாக அமையும்.

வயல் பெரிது என்றாலும், நாற்றங்கால் சிறிதே

நான் மக்களை நம்புகிறேன். வரலாற்றின் ஏரணத்தை நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடும் தெளிவோடும் இணைந்து செல்ல முன்வருகிறவர்களுக்காக உழைக்கிறேன். எஞ்சிய வாழ்நாளெல்லாம் உழைக்கவும் காத்துள்ளேன். “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று வருந்தும் நிலை ஒருநாளும் எனக்கு வந்ததில்லை, இனியும் வராது.

என் சிறைவாழ்க்கை உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கும். தனிமைக் கொட்டடியிலும் நான் தனிமைப்பட்டதில்லை. நடைமுறையில் தனிமைப்படுத்தப்பட்டதுண்டு. கருத்தியலில் ஒருபோதும் இல்லை.     

மக்களிடம் குற்றமில்லை, அவர்களுக்கு உண்மைகளை உணர்த்தும் நமது முயற்சியில்தான் குறை உள்ளது என்று அரை நூற்றாண்டுக்கு மேல் மனம் பயின்றுள்ளேன்.   

தொடர்வோம் தாழி! முதல் நூறு முடிந்தது என்று ஓய்வு கொள்ளப் போவதில்லை. நீருக்கு மேல் அழகாகவும் அமைதியாகவும் மிதந்து செல்லும் வாத்தின் பாதத் துடுப்புகள் நீருக்கடியில் விரைந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். இல்லையேல் மூழ்க நேரிடும்.       

என்ன செய்யலாம்?

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல், 102