(தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் – தொடர்ச்சி)

நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

இனிய அன்பர்களே!

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரு பழ,நெடுமாறன் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி என்னிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அஃதாவது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடனிருப்பதாக அவர் சொல்வது உண்மைதானா? என்று கேட்கின்றனர். உண்மையா? என்று தெரியாது. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி என்பதுதான் என் விடை.

பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச்சாவடைந்து விட்டார் என்று ஏற்கெனவே நான் சொல்லி வருகிறேன். எனக்குக் கிடைத்த செய்திகள் அடிப்படையில்தான் பெருமாவீரன் பிரபாகரனுக்கு வீர வணக்கம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். பிரபாகரனுடன் இறுதி வரை களத்தில் நின்ற வீரர்கள் எனக்குச் சொன்ன செய்தி இதுதான். குறிப்பாக பிரபாகரனின் மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் – போரில் ஒரு காலை இழந்தவர் – எமதியக்கப் பாதுகாப்பில் இருந்த போது இதை உறுதி செய்தார்.

பிரபாகரன் சாகவில்லை என்று தொடக்கத்திருந்தே சொல்லிக் கொண்டிருப்பவர் நெடுமாறன். பிரபாகரன் உயிருடனில்லை என்று சொல்கிறவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொல்லி மறுதலித்து வந்தார் என்பதை அறிவேன். நெடுமாறன் தன் உள்மன விருப்பத்தையே மெய்ம்மையாக நம்பி முன்வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஈழப் போருடன் ஆழ்ந்த அறிமுகம் கொண்ட தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரிடம் பேசியதில் புதிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. நெடுமாறன் சொல்கிறார், உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி! என்பதோடு நிறுத்திக் கொண்டனர். தோழர் கொளத்தூர் மணி மட்டும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தார்.

2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பின் அட்டோபர் 11ஆம் நாள் சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டுத் தீர்மானங்களில் முன்வைத்த கோரிக்கைகளில் சில:

·        வதைமுகாம்களிலிருந்து தமிழீழ மக்களைச் சிறைமீட்க…

·        தமிழீழ மக்கள் துயர்துடைப்புக்கு ஐநா மன்றமே பொறுப்பேற்க…

·        தமிழீழத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க…

·        பொதுசன வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழத்தின் அரசியல்

வருங்காலத்தை முடிவு செய்ய…

·        தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவைச் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மீட்க…

·        தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்திட…

இந்தக் கோரிக்கைகளைத் தமிழ்நாடெங்கும் பரப்புரை செய்வதற்காகப் பல ஊர்களில் பொதுக் கூட்டம் நடத்தினோம். விழுப்புரத்தில் அப்படி ஒரு கூட்டத்தில் பேசி முடித்து விட்டு இரவு விடுதியறையில் நானும் தோழர் கொளத்தூர் மணியும் தங்கியிருந்த போது நான் அவரிடம் கேட்டேன்: தலைவர் பிரபாகரன் குறித்து உங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை. நெடுமாறன் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையா? அவர் சொன்னார்: உண்மையில் தெரியாது தோழர். ஆனால் தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே களத்திலிருந்து வெளியேறியிருந்தால் என்ன செய்திருப்பார் எனபது மட்டும் உறுதியாகத் தெரியும்.  

போர் எப்படி முடியும் என்று கணித்து, பிரபாகரன் அதற்கு வீரர்களை அணியமாக்கிக் கொண்டிருந்தார் என்பது நானும் கேள்விப்பட்ட செய்திதான். 300 என்றொரு படத்தை அனைவர்க்கும் காட்டி இறுதி வரை களத்தில் நின்று உயிரீகம் செய்த 300  பாருட்டா நகர(Spartans) வீரர்களின் நிலை நமக்கும் ஏற்படலாம் என்று சொல்வாராம்.

போரின் இறுதிக் கட்டத்தில் புலிப் படை ஒரு குறுகலான நிலப்பரப்பில் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்ட பின் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை எனபதுதான் மெய்யான கள நிலவரம். தப்பிச் செல்வதுதான் சரி என்றால் இறுதிக் கட்டத்துக்கு முன்பே தப்ப முயன்றாவது இருக்கலாம்.

ஆனால் எது வரினும் இறுதிவரை களத்தில் நிற்பதுதான் போராட்டத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் புலிப்படைத் தலைமையின் முடிவு. வெளியேறுவதுதான் போராட்டத்துக்கு நல்லது என்று பிரபாகரன் கருதியிருப்பாராயின் வீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு செய்தி விடுக்காமல் அவர் வெளியேறியிருக்க மாட்டார் என்று தோழர் கொளத்தூர் மணி எனக்கு விளக்கினார். ஒளி ஒலிப் பதிவாகவோ, எழுத்து வடிவிலோ தான் வெளியேறும் முடிவை விளக்கிச் சொல்லாமல் தலைவர் பிராபகரன்  தப்பியோடுவார் என்பது நம்ப முடியாததாக உள்ளது என்றார். தோழர் மணியின் விளக்கம் எனக்கும் பொருத்தமாகவே பட்டது.

இந்த நாட்டிலோ அயல் நாடுகளிலோ விவரமறிந்தவர்கள் என்று நான் சந்தித்த யாரும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்பவில்லை. தலைவருக்கு வீர வணக்கம் சொல்லி விட்டு அவர் பெயரால் மீளுறுதி ஏற்றுப் போராட்டத்தைத் தொடர்வதே அவருக்குச் செய்யும் மரியாதை என்றனர். இதைத் தடுக்கிறவர்களில்  சிலர் விடுதலைப் போரின் சமூக அறிவியலே தெரியாமல் இதை மக்களின் போராட்டமாகப் பார்க்காமல்  தலைவரின் போராட்டமாகவே பார்த்துப் பழகியவர்கள். அவர்களைப் பொறுத்த வரை தலைவர் இல்லையேல் போராட்டமே இல்லை. இன்னும் சிலர் இயக்கத்துக்குச் சொந்தமான, ஆகவே நாட்டுக்குச் சொந்தமான செல்வத்தைக் கையில் வைத்துக் கொண்டு யாருக்கும் தர மாட்டார்கள். “தலைவர் வந்து கேட்டால் தந்து விடுகிறோம்” என்று சொல்லி அவர் வர மாட்டார் என்று சொல்லி விடுவார்கள். வர மாட்டார் என்ற நம்பிக்கைதான்!

பிரபாகரன் வீரச் சாவடைந்து விட்டார் என்று உறுதியாக நம்பி அவருக்கு முதலில் வீரவணக்கம் செலுத்திய “குலம்” என்ற மூத்த விடுதலைப் புலி சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். 2010 மாவீரர் நாளுக்காக நான் அங்கே போயிருந்த போது என் ஓம்புநர்கள் அவர் என்னைச் சந்தித்து விடாமல் பார்த்துக் கொண்டனர். நாட்டின் சொத்தைத் தேட்டை போடவே வீரச் சாவடைந்து விட்ட தலைவரை உயிருடனிருப்பதாகக் கதை விடுகின்றனர் என்பது குலத்தின் குற்றச்சாட்டு.

இப்போது நெடுமாறனின் இந்த அறிவிப்புக்குப் பிறகும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் நம்பவில்லை. அவர் சொல்வதற்கு – ஏமாறவோ ஏமாற்றவோ இல்லை என்பதற்கு – சரியான சான்றை அவர்தான் இந்த நாட்டுக்குத் தர வேண்டும். பிரபாகரனைப் பார்த்ததாகவோ அவர் பேசக் கேட்டதாகவோ நெடுமாறன் இப்போதும் சொல்லவில்லை. சொன்னாலும் சரியான சான்றுடேன் சொல்ல வேண்டும். (பிரபாகரன் குரலில் பேசுவது பெரிய காரியமில்லை என்பதால் அவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.)

நெடுமாறன் அறிவிப்பு குறித்து “இருந்தால் மகிழ்ச்சி” என்றுதான் தமிழகத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மட்டும் “ஈழ விடுதலைப் போர்க்களத்தில் நின்ற போராளிகள்  சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்; என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்று கூறியிருப்பதை (இன்றைய இந்து தமிழ் பக்கம் 2) முகன்மையாகக் கருதுகிறேன்.

உண்மை ஒருநாள் வெளியாகும் என்று ஒதுக்கி விட்டு ஆகவேண்டியதைச் செய்வோம். பிரபாகரன் உயிருடனிருப்பது பற்றிய தகுநிலை 2009க்குப் பிறகான போராட்டச் சூழலில் எவ்வித அடிப்படைத் தாக்கமும் கொள்ளவில்லை. இனியும் அதே நிலைதான் தொடரும். அவர் உயிருடனிருந்து இந்த நிலைமைகள் குறித்து இவ்வளவு நீண்ட காலம் மௌனம் சாதித்திருப்பார் என்றால் அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். இப்போதுதான் காலம் கனிந்தது என்று நெடுமாறன் சொல்லும் விளக்கம் ஏற்புடைத்தன்று. பிரபாகரனின் பார்வையும் இதுதான் என்றால் நம்ப முடியவில்லை.

ஊக அடிப்படையில் இந்த உரையாடலை வளர்த்திக் கொண்டிராமல் நன்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் நம் பணிகளைத் தொடர்வோம்.

மறுபுறம், நெடுமாறன் கொடுத்த செவ்வியை விடவும் அவர் ஊடகங்களுக்குக்  கொடுத்த அச்சிட்ட செய்திக் குறிப்புதான் இந்த அறிவிப்பு குறித்து நம்மை ஐயங்கொள்ளச் செய்கிறது. இதோ அந்தக் குறிப்பு:

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு

I. சருவதேசச் சூழலும்இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும்தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

2. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும்ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

3. தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும்உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

4. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எனதயும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும்எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும்இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்துஅதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

5. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தமிழக அரசும்தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும்தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அன்புடன்

நாள்: 13.02.2023 – திங்கள்

(பழ நெடுமாறன்)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்

இந்த அறிவிப்பில் நான்காவது பத்தியைக் கவனமாகப் படித்துப் பாருங்கள் தெற்காசியாவில் இந்திய-சீன ஆதிக்கப் போட்டியில் தமிழீழ மக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இந்திய வல்லரசின் பகடைகளாக மாற்ற விரும்புகிறார்கள் நெடுமாறனும் காசி ஆனந்தனும். அதற்கு நம்மிடம் சீனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

இந்தியா, சீனா இரண்டு வல்லரசுகளுமே தமிழினவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாக இருந்ததையும், இன்றளவும் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெற விடாமல் தடுத்து வருவதையும் மறைக்கின்றார்கள். ஐயோ இராசதந்திரமே!

இந்தியப் பாதுகாப்புக்குத் தமிழீழ விடுதலையை ஆதரிக்க வேண்டும் என்று மோதிக்கு எடுத்துச் சொல்ல பிராபகரன்தான் வர வேண்டுமென்பதில்லை. இந்தியா ஈழத்தில் கால் வைத்த போது அந்தக் காலை ஒடித்து அனுப்பியவர் பிராபகரன் என்பதை மறவாதீர். சிறிலங்காப் படை தவிர தமிழ்மக்களைக் கொன்று குவித்த மற்றொரு படை இந்தியப் படைதான் என்பதைத் தமிழீழ மக்களும் தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் ஒருநாளும் மறவோம்!

இந்தியப் பாதுகாப்பு என்ற பெயரிலும் சீன எதிர்ப்பு என்ற பெயரிலும் நரேந்திர மோதியின் இந்துத்துவ பாசிசப் பேராசைக்குத் தமிழீழ மக்களை இரையாக்கும் முயற்சிக்கு எப்போதோ காசி ஆனந்தன் துணை போய் விட்டார். இப்போது நெடுமாறனும் சேர்ந்திருக்கிறார். ஒரே ஒரு கேள்விதான்: இந்தியப் பாதுகாப்பில் இவர்களும் தமிழ் மக்களின் நீதியில் அண்ணாமலை – செய்சங்கர் – மோதியும் மெய்யாகவே அக்கறை கொண்டவர்கள் என்றால் முதலில் இந்திய அரசு தமிழீழ இனவழிப்பு உண்மை என்று ஒப்புக் கொள்ளட்டும். கனடா ஒப்புக் கொண்டது போல் ஒப்புக் கொள்ளட்டும். ஒப்புக் கொண்டு வெளிப்படையாக அறிவிக்கட்டும். ஐநாவிலே போய்ச் சொல்லட்டும். இப்படி ஒரு கோரிக்கை – வேண்டுகோளாவது – முன் வைப்பீர்களா? அல்லது இதற்கும் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டுமா?

 நெடுமாறன் அவர்களின் அறிவிப்பை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை:

நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

(தொடரும்)
தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 97