(தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 தொடர்ச்சி)
குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002:
வேண்டும் தற்சார்பான பன்னாட்டு வினவல்
பி.ஒ.நி. / பிபிசி “இந்தியா: மோதி வினா” என்ற ஆவணப்படத்தை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது. நெருக்கடிநிலைக்காலச் சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி மோதி அரசு இந்தப் படத்தை சுட்டுரை(‘டுவிட்டர்’), வலையொளி (‘யூட்யூப்’) போன்ற குமுக ஊடகங்களில் வெளியிட விடாமல் தடுத்துள்ளது. சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற கல்வி வளாகங்களில் இப்படத்தைத் திரையிட விடாமல் மாணவர்களைத் தடுத்துள்ளனர். அதே போது குடியியல் உரிமை அமைப்புகள் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகிலேயே காவல்துறை அனுமதியோடு இந்தப் படம் திரையிடப்பட்டது. கேரளத்தில் காங்கிரசுக் கட்சியே இந்தப் படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இந்த ஆவணப்படத்தைத் தமிழாக்கம் செய்து அம்பேத்துகர் திடலிலேயே திரையிட்டிருப்பதைப் பாராட்டுகிறோம்.
திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இந்தப் படத்தைப் பற்றி ஓங்கிப் பேசாமல் முடிந்த வரை மௌனமாய்க் கடக்க முற்படுவதற்குக் காரணம் உண்டு. அப்போது அடல் பிகாரி வாசுபேய் அமைச்சரவையில் சேர்ந்து, பாசக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்தக் கட்சிகள் குசராத்து இசுலாமியர் இனக் கொலையைக் கண்டிக்கத் தவறியது மட்டுமல்ல, மோதிக்கு ஆதரவாகக் குசராத்துக்கே சென்று மோதியின் குருதிக் கறை படிந்த கையோடு கைசேர்த்துப் பேரணியிலும் பங்கேற்றதை மறக்க இயலாது.
குசராத்து இசுலாமியர் இனக்கொலைக்கு இதற்கு முன்பே நிறைய சான்றுகள் வந்து விட்டன. மக்கள் தீர்ப்பாய விசாரணை அறிக்கை உள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் சிலவற்றில் குற்றத்தீர்ப்பும் பெறப்பட்டது. முன்னாள் உயர் காவல் அதிகாரிகள் வெளியிட்ட செய்திகள், தீசுதா செதல்வாடு(Teesta Setalvad) முதலானவர்களின் அயரா முயற்சியால் வெளிப்பட்ட உண்மைகள், மோதி மீதும் அமித்சா மீதுமே சொல்லப்பட்ட நம்பகமான குற்றச்சாற்றுகள்… எல்லாவற்றுக்குப் பிறகும் திமுக முதலான கட்சிகள் குசராத்து இசுலாமியர் இனவழிப்பு பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை நம்புவது கடினமாயுள்ளது. அது வரை இல்லா விட்டாலும் 2007ஆம் ஆண்டு தெகல்கா செய்தியாளர் அசீசு கேத்தன் குசராத்துக்கே சென்று, உடையில் மறைத்து வைத்த பொத்தான் அளவிலான இரு படக் கருவிகளை மட்டுமே ஆய்தமாய்க் கொண்டு உண்மையை மீட்டு வந்து உலகின் பார்வைக்கு வைத்த பிறகாவது இந்தக் கட்சிகள் தங்கள் 2002 மோதி ஆதரவு நிலைப்பாட்டிற்காக வருந்தியிருக்க வேண்டும்.
[தெகல்கா செய்திக்குப் பின் தமிழ்த் தேசம் திங்களேட்டின் 2007 நவம்பர் இதழில் “கொலை முதல்வன் குசராத்து மோதியைச் சிறை செய்க” என்ற தலைப்பில் விரிவான ஆசிரியவுரை எழுதினேன். அடுத்த சில நாளில் அதைத் தாழி மடலில் மீள்வெளியீடு செய்வோம்.]
இப்போது திமுக மதிமுக பாமக தலைவர்கள் பி.ஒ.நி. / பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன். 2002 குசராத்தில் இசுலாமியர் இனக்கொலை செய்யப்பட்டதில் நரேந்திர மோதியின் வகிபாகம் குறித்து இனியும் அவர்களுக்கு ஐயமிருக்க முடியாது. இப்போதாவது அவர்கள் அந்த நேரத்திய – இதுவரை மாற்றிக் கொள்ளாத – மோதி ஆதரவு – இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்து, தங்கள் தவற்றினை ஏற்றுக் கொண்டு இசுலாமிய மக்களிடமும், சமூக அமைதியை விரும்பும் குடியாட்சிய ஆற்றல்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனால் இந்தக் கட்சிகளின் மாண்பு உயருமே தவிர தாழ்ந்து விடாது. நமக்கு இதில் உள்ள கூடுதலான அக்கறை: மோதியின் காவி பாசிசத்தை எதிர்த்துக் குடியாட்சிய ஆற்றல்கள் ஒன்றுபடுவதற்கு இது பெரிதும் பயன்படும்.
தேசபக்தியின் பெயராலோ இந்திய இறைமையின் பெயராலோ மோதி கும்பல் நீதியின் பிடியிலிருந்து தப்ப விட மாட்டோம்!
ஆர்எசுஎசு கொலைக் கும்பல் மீண்டும் ஓர் இசுலாமிய இனக் கொலைக்கு அணியமாகி வரும் நேரத்தில் நடந்து முடிந்த இனக்கொலைக்கு நீதி பெறுவதற்கான போராட்டத்தில் பாசிச எதிரப்பு ஆற்றல்கள் கொள்கைவழி ஒன்றுபட்டுப் பன்னாட்டு அரங்கில் தெளிவான கோரிக்கைகளை எழுப்ப வேண்டிய தருணம் இது. இதைச் சொல்லித் தேர்தலில் வென்றால் போதும் என்ற குறுநோக்கில் நீதிக்கான போராட்டத்தை அலட்சியம் செய்து விடக் கூடாது. ஈழத் தமிழர் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெற எழுப்பிய அந்தக் கோரிக்கைகளையே குசராத்து இசுலாமியர் இனவழிப்புக்கு நீதி பெறவும் உலகின் முன்வைப்போம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 97
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக