அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
- (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
33
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:399)
கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும் இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர்.
இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும் மேலும் கற்பர் என்று விளக்குவோரும் உள்ளனர். எவ்வாறு கூறினாலும் இறுதி விருப்பம் தொடர் கல்வியின் மீதுதான்.
தனக்குத் துன்பம் தரக்கூடிய கல்வியால் பயனில்லை. தனக்கு இன்பம் தரும் நற் கல்வியையே நாட வேண்டும். கல்வியின் பயனால் தான் மட்டும் இன்புற்றால் போதுமா? அப்பயன் பிறருக்கும் கிடைத்து அவர்களும் இன்பம் அடைதல் வேண்டும். எனவே, கல்வி தன்னலமற்றதாக இருக்க வேண்டும். தனக்கு மட்டும் நன்மை விளைவித்துப் பிறருக்குக் கேடு தருவது கல்வியே அல்ல. அதனைக் கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்க விரும்புவர்கள் விரும்ப மாட்டார்கள்.
அறிவியல், முதலான பல துறை அறிஞர்களின் கல்வியின் பயன்தானே பிற மக்கள் அடையும் இன்பங்கள்.
நாம் பிறரால் பயனுற்று இன்புறாமல் நம்மால் பிறர் பயனுற்று இன்பம் அடையும் வகையில் பழுதறக் கற்க வேண்டும்.
கற்பதன் பொது இன்பப்பயன் உணர்ந்து இன்புறுபவர்கள் மேலும் மேலும் கற்கவே விரும்புவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக