அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
28
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:394)
மகிழுமாறு கூடி நினைக்குமாறு பிரிதலே கல்வியாளர் தொழில் என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியலில் கல்வி வலியுறுத்தப்படுவதால், கல்வியாளர் இயல்பைத் திருவள்ளுவர் இங்கே கூறுகிறார்.
உவப்ப என்றால் மகிழும்படி, தலைக்கூடி என்றால் ஒன்று சேர்ந்து அல்லது கலந்து பழகி என்று பொருள். புலவர் என்பதற்குக் கற்றறிந்தவர், கற்பிப்பவர், நூற்கல்வி மிக்க புலவர், புலமையாளர், கற்றவர், கல்வியிற் சிறந்த புலவர், சிறந்த கல்வியுடையார், கல்வி அறிவு உடையவர் என வெவ்வேறு பொருள் கொண்டு விளக்குகின்றனர். தொழில் என்னும் சொல், செயல், இயல்பு, பண்பு, வேலை எனப் பல பொருள் தரும்.
சேர்ந்து பழகும் பொழுது மகிழ்ச்சி அடைந்து பிரியும் பொழுது இந்த மகிழ்ச்சியை அடையும் வண்ணம் மீண்டும் சந்திப்பது எப்பொழுது என்று எண்ணுவதே கற்றறிந்தார் இயல்பு ஆகும்.
மகிழுமாறு கூடுவோர் யாவர்? மணக்குடவர் யாராவது இருவர் என்ற பொருளில் ‘மக்களிருவர்’ என்கிறார் பரிதி ‘நல்லோரும் நல்லோரும்’ என்று விளக்குகிறார். காலிங்கரும் பரிமேலழகரும் ‘கற்றவருடன் மற்றவர்’ என்று உரைக்கின்றனர். எவ்வகை விளக்கமாக இருந்தாலும் அனைத்துக்கும் பொருந்துமாறு திருக்குறள் உள்ளது.
பரிப்பெருமாள், இன்பம் நுகரினும் வினை செய்யினும் தமக்கும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியால்தான் என்று விளக்குகிறார்.
தண்டபாணி தேசிகர், “நல்லோரைப் போலக் கல்வியைப் பயிலும் விருப்புடன் பயிலவேண்டும்; பயிற்சியை முடித்துக் கொண்டாலும் மறவாமல் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் எனத் தலைக்கூடுதலையும் பிரிதலையும் கல்விப் பயிற்சிக்கும், பயிற்சியின் முடிவுக்கும் ஆக்குவர்” என்றுஆசிரியர்-மாணாக்கர் இடையே உள்ள தொடர்புபற்றிக் கூறுகிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார், நம் நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களில் பலர் தனித்து வாழ்கின்றனர், பகைத்து வாழ்கின்றனர்; எனவே, கூடி மகிழும் இன்பம் அறியாதவராக உள்ளனர்; பண்பாட்டை அடிப்படையாக இல்லாத குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் கூர்மைப்படுத்தும் கல்வியே அவர்கள் பெற்றுள்ளனர்; எனவே, தமிழ் மரபிற்கேற்ற கல்வித்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.
கல்வியின்பத்தைக் கலவி இன்பத்துடன் ஒப்பிடுவதாகக் கொள்ளலாமா? தலைவனும் தலைவியும் மகிழ்வாகக் கூடுகின்றனர். பிரியும் பொழுது மீண்டும் கூடுவது எப்போது என ஏங்குகின்றனர். கற்றவர்களும் சந்திக்கும் பொழுது மகிழ்கின்றனர். பிரிய நேரும் பொழுது மீண்டும் எப்பொழுது சந்திப்போம் எனக் கவலைப்படுகின்றனர்.
புலவர்கள் சந்திப்பின் பொழுது வரும் கருத்து மோதல்களைப் பகையாக எண்ணாமல் அறிவு இன்பமாகக் கருத வேண்டும்; ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் கேள்வி இன்பமாகக் கருத வேண்டுமே தவிர எதிர்த்துச் சொல்லாடுவதாகக் கருதக்கூடாது. அப்பொழுதுதான் கூடிப்பேசுதல் என்பது மகிழ்ச்சியாக இருக்கும். மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் பங்கேற்போரிடையே இத்தகைய மகி்ழ்ச்சியையும் மறு சந்திப்பு குறித்த எண்ணததையும் காணலாம்.
நமக்குக் கேள்வி இன்பமும் உலகிற்குப் பயன் இன்பமும் விளையும் வகையில் சந்திப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக