திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 30

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:396)
மணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
நீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணறும் மணற்கேணியும் அமைகின்றன. மணற்கேணியில் நீர் சுரக்கும் அறிவியல் உண்மை அடிப்படையில் திருவள்ளுவர் இக்குறளை அளிக்கிறார்.
தொட்டனைத்து ஊறும் = தோண்டும் அளவு ஊறும். இதுபோல்  கற்க கற்க அறிவு பெருகும் என்பதால் தொடர்ந்து இடையீடு இன்றிக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை), கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊறுவதைப்போல் எவ்வளவுக் கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அறிவு பெருகும். எனறு விளக்குகிறார்.
கல்வி என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நிலத்தைத் தோண்டப் பயன்பட்டதால் அதற்குக் கல் என்று பெயர் வந்தது. எனவே,இதற்குத் தோண்டுதல் என்றும் பொருள்.  மனத்திலுள்ள அறியாமை இருளைத் தோண்டி வெளியே எடுப்பதால் கல்வி என்றனர். காலிங்கர் ‘ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது” என்று கிணற்றில் தோண்டுவதைக் கல்லுதல்’ என்று கூறுகிறார். இதன் மூலம்காலிங்கர் கல்லுதல் முயற்சிக்கும் கல்வி என்ற முயற்சிக்கும் ஒற்றுமை காண்கிறார்.
“கல்வி கரையில; கற்பவர் நாள் சில” எனத் தொடங்கும் நாலடியார்(135) பாடல் மூலம் சில நாளிலும் பிணிநாள் பல உள்ளமையால் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனக் கூறுகிறது. நாம் காலத்தை வீணாக்காமல் வேண்டப்படும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்.
 மக்கள் அனைவருமே கற்று அறிவைப் பெருக்க வேண்டும். அரசதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரம் இருக்கும் பொழுது கல்வி எதற்கு? என்று எண்ணக்கூடாது சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செயலாற்ற எப்பொழுதும் படிக்க வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 28.08.2019