அகரமுதல
அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய
அறிஞருக்கு அஞ்சலி!
தமிழறிஞர் அ.அ.மணவாளன்
(ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018)
தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம்பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத் திருமதி சரசுவதி என்ற மனைவியும், சீனிவாசன் (46) சகன்மோகன் (45), பிருந்தா (52) என்ற மக்களும் உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த மணவாளன் இந்தி மொழியையும் நன்கு அறிந்திருந்தார். ஒப்பியல் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வு முதலியவை குறித்து அவர் எழுதியவை 12 நூல்களாக வெளிவந்துள்ளன. நான்கு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஐந்து நூல்களின் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி அமெரிக்காவின் ஆறு பல்கலைக்கழகங்களில் அவர் மதிப்புறு பேராசிரியராக இருந்துள்ளார்.
கே.கே.பிருலா அமைப்பு வழங்கும் உயரிய இலக்கிய விருதான சரசுவதி சம்மான் விருது 2005ல் இவர் எழுதிய ‘இராமகாதையும் இராமாயணங்களும்’ என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூலுக்காக வழங்கப்பட்டது. அந்த நூல், உலகம் முழுதும் வழங்கும் 48 இராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பாகும். பாலி, சம்சுகிருதம், பிராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய சதவா மொழி, சப்பானிய மொழி, தெலுங்கு, அசாமி, தாய், காசுமீரி ஆகியவற்றில் வழங்கப்படும் இராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது அந்த நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக